2025 மே 19, திங்கட்கிழமை

சந்தர்ப்பவாத அரசியலை மற்றொருமுறை தோலுரித்துக் காட்டிய குற்றப் பிரேரணை

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 16 , பி.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றப் பிரேரணையானது முதலாவதாக எதிர்க்கட்சிக்கே தேவைப்பட்டது என்றும், அவர்களே இதனை ஆரம்பித்தார்கள் என்றும், இப்போது அவரை பாதுகாக்க முன்வந்து இருப்பதும் அந்த எதிர் கட்சிகளே என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் கூறியிருந்தார். அதனை அடுத்து இப்போது அரச ஊடகங்களும் ஜனாதிபதி கூறியதை இடைவிடாது கூறிக் கொண்டு இருக்கின்றன.

சில மாதங்களுக்கு முன்னர் தேசிய சேமிப்பு வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சில முறைகேடுகள் தொடர்பாக அப்போது அவ்வங்கியின் தலைவராக இருந்த பிரதம நீதியரசரின் கணவர் பிரதீப் காரியவசமுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்திய எதிர்க்கட்சிகள், கணவர் அவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகியிருக்கும் நிலையில் பிரதம நீதியரசரும் தமது பதவியில் இருப்பது நாகரிகமல்ல என்று வாதிட்டனர். ஜனாதிபதி அதனை தான் இங்கு நினைவூட்டியிருக்கிறார்.

அன்று பிரதம நீதியரசருக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் இன்று அவரை பாதுகாக்க முன்வந்துள்ளனர் என்ற அர்த்தத்தில் ஜனாதிபதி இதனை கூறியிருந்தால் அது சரி தான். ஆனால், குற்றப் பிரேரணை மூலம் பிரதம நீதியரசரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அப்போதும் கூறவில்லை. பிரதம நீதியரசர் பதவி விலக வேண்டும் என்றே தாம் அப்போது கூறியதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கூறுகிறார்.

குற்றப் பிரேரணை மூலம் பிரதம நீதியரசரை பதவி நீக்கம் செய்வதும் அவர் ராஜினாமா கெய்வதும் பாரிய வித்தியாசமுள்ள இரண்டு விடயங்களாகும். குறிப்பாக நாடாளுமன்ற தெரிவுக் குழுவொன்றின் மூலம் விசாரணை நடத்தி, நீதியரசர்களை பதவி நீக்கம் செய்யும் இலங்கையிலுள்ள முறையும் அவர்கள் ராஜினாமாச் செய்வதும் எவ்வகையிலும் ஒன்றல்ல.

அரசியல் காரணங்களுக்காக அரசியல்வாதிகள் ஒவ்வொரு நேரத்திற்கு ஒவ்வொரு நிலைப்பாட்டைக் கொள்கிறார்கள் என்று தான் ஜனாதிபதி கூற வருகிறார் என்றால் அது முற்றிலும் உண்மை மட்டுமல்ல, அது அவரது கட்சிக்கும் பொருத்தமான உண்மையாகும். பிரதம நீதியரசரின் விடயத்தை மீண்டும் எடுத்துக் கொண்டால், ஆறுமாதத்திற்கு முன்னர் எதிர்க்கட்சிகள் - கலாநிதி பண்டாரநாயக்க பிரதம நீதியரசர் பதவியில் இருக்க தகுதியற்றவர் என்பதைப் போல் கருத்து வெளியிட, அவர் குற்றமற்றவர் என்பதைப் போல் அரசாங்கம் கருத்து வெளியிட்டது. இப்போது இருசாராரும் நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டுள்ளனர்.

இலங்கையின் உயர் நீதிமன்றங்களின் நீதியரசர்களுக்கு எதிரான குற்ற விசாரணை முறை தொடர்பிலும் இரண்டு கட்சிகளும் நேரத்திற்கு ஒரு நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். அதனையும் அரசியல் கண் கொண்டே பார்க்கின்றனர். 1984ஆம் ஆண்டு அன்றைய பிரதம நீதியரசர் நெவில் சமரகோனுக்கு எதிராக ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன குற்றப் பிரேரணையொன்று கொண்டு வந்தபோது தான் நாடாளுமன்ற தெரிவுக் குழுவொன்றின் மூலம் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் முறை முதன் முதலாக விவாதத்திற்கு வந்தது.

அப்போது ஆளும் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி அந்த விசாரணை முறையில் எவ்வித தவறும் இல்லை என்று மட்டுமல்ல அது தான் உலகிலேயே சிறந்த முறை என்பதைப்போல் கருத்து வெளியிட்டது. அது இயற்கை நியாயத்திற்கு முறணானது என்று அப்போது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் இடதுசாரி கட்களும் கூறின. இப்போது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கே குற்றப் பிரேரணை தேவைப்பட்டுள்ளது. எனவே அக் கட்சினர் அந்த விசாரணை முறை சட்டபூர்வமானது என்றும் அது சரியென்றும் கூறுகின்றனர். ஐ.தே.க. அது இயற்கை நியாயத்திற்கு முறணானது என்கிறது. இந்த விசாரணை முறை இயற்கை நியாயத்திற்கு முறணானது என்பதால் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பொதுநலவாய நாடுகளின் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் மூலம் விசாரிக்கப்பட வேண்டும் எனவும் ஐ.தே.க.வின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கேட்டுள்ளார். அது நியாயமான கோரிக்கையாக இருந்தாலும் அது நடைமுறைப்படுத்தப்பட முடியாதது என்றும் அது இலங்கையின் சட்டத்தில் இல்லாதது என்றும் ஐ.தே.குவிற்குத் தெரியும்.

நீதியரசர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பொதுநலவாய நாடுகளின் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் மூலம் விசாரிக்கப்பட வேண்டும் என்ற வாசகமொன்றை உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பு நகல் ஒன்றை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க 2000ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தபோது இதே ஐ.தே.க.வினர் அதன் பிரதிகளை நாடாளுமன்றத்திலேயே தீக்கிரையாக்கினர். அன்று அதனை ஆதரித்த சந்திரிகா குமாரதுங்கவின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் இன்று குற்றச்சாட்டுக்கள் பொதுநலவாய நாடுகளின் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் மூலம் விசாரிக்கப்பட முடியாது என்கின்றனர்.

அன்று ஐ.தே.க. அந்த அரசியலமைப்பு நகலை நாடாளுமன்றத்திலேயே தீக்கிரையாக்கக் காரணம் நீதியரசர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பொதுநலவாய நாடுகளின் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் மூலம் விசாரிக்கப்பட வேண்டும் என்ற வாசகம் அல்ல. அந்த அரசியலமைப்பு நகலில் இருந்த இனப் பிரச்சினைக்கான தீர்வே அதற்கு முக்கிய காரணமாகியது.

இனப் பிரச்சினைக்கான அந்த அரசியல் தீர்வு சமஸ்டி முறையிலானதாக அமைந்து இருந்தது. அதனாலேயே ஐ.தே.க. அதனை அன்று எதிர்த்தது. ஆனால் அதே ஐ.தே.க. அதற்கு ஒன்றரை வருடத்திற்கு பின்னர் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் வைத்து இனப் பிரச்சினைக்கு சமஸ்டி முறையில் தீர்வு காண்பதென புலிகள் அமைப்புடன் இணக்கத்திற்கு வந்தது.

அன்று குமாரதுங்கவோ அவரது கட்சியோ அந்தத் தீர்வை எதிர்க்கவில்லை. தாம் 2000ஆம் ஆண்டிலேயே சமஸ்டித் தீர்வை முன்வைத்ததாகவே குமாரதுங்க அப்போது கூறினார். ஆனால் அவரது கட்சி இன்று அந்தத் தீர்வு நாட்டைக் காட்டிக் கொடுத்த தீர்வு என கண்டிக்கிறது.

அரசியல் காரணங்களுக்காக அரசியல்வாதிகள் ஒவ்வொரு நேரத்திற்கு ஒவ்வொரு நிலைப்பாட்டைக் கொள்கிறார்கள் என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கூற்று இனப் பிரச்சினை விடயத்திலென்றால் முற்றிலும் உண்மையாகும். பண்டாரநாயக்க - செல்வநாயகம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது ஐ.தே.க.வினர் அதனை எதிர்த்தனர். 1966ஆம் ஆண்டு டட்லி- செல்வநாயகம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது இடதுசாரிகளும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரும் அதனை எதிர்த்தனர்.

1980ஆம் ஆண்டுகளில் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன முழு மனதோடில்லாவிட்டாலும் அதிகார பரவலாக்கல் முறையை ஏற்றபோது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் அதனை எதிர்த்தனர். அதனடிப்படையில் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தையும் எதிர்த்தனர். ஜனாதிபதி ஆர்.பிரேமதாச - புலிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளையும் எதிர்த்தனர்.

ஆனால், அதே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் சில இடதுசாரி கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து 1994ஆம் ஆண்டு பதவிக்கு வந்து புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தனர். அப்போது ஐ.தே.கவினர் பேச்சுவார்த்ததைகளை எதிர்க்காவிட்டாலும் பேச்சுவார்த்தைகளுக்காக செய்துகொள்ளப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கையையும் பேச்சுவார்த்தை நடத்தும் முறையையும் எதிர்த்தனர். பின்னர் ஜனாதிபதி குமாரதுங்க 1995ஆம் ஆண்டிலும் 1996ஆம் ஆண்டிலும் முன்வைத்த தீர்வுத் திட்டங்களையும் எதிர்த்தனர்.

1994ஆம் ஆண்டு ஜனாதிபதி குமாரதுங்க புலிகளுடன் செய்து கொண்ட போர் நிறுத்த உடன்படிக்கை மூலம் புலிகளுக்கு நாட்டில் ஒரு பகுதி தாரைவார்க்கப்பட்டுள்ளதாக கூறிய ஐ.தே.க. 2001ஆம் ஆண்டு பதவிக்கு வந்து அந்த போர் நிறுத்த உடன்படிக்கையை பின்பற்றி தாமும் புலிகளுடன் ஒரு போர் நிறுத்த உடன்படிக்கையை செய்து கொண்டது. அப்போது 1994ஆம் ஆண்டு புலிகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி இதோ ஐ.தே.க. நாட்டில் ஒரு பகுதியை புலிகளுக்கு தாரைவார்த்துவிட்டது என்று கூச்சலிட்டது.

இவ்வாறானதோர் வரலாறு தான் இலங்கையிலுள்ள அரசியல் கட்சிகளுக்கு இருக்கிறது. எனவே நேரத்திற்கு ஒரு கொள்கையை கடைப்பிடிப்பதாக ஜனாதிபதி சுமத்தும் குற்றச்சாட்டு ஒரு கட்சிக்கு மட்டும் எதிரானதாக கருத முடியாது.

அதேவேளை இந்த வாதத்தின் மூலம் தற்போதைய குற்றப் பிரேரணையின் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் முறை நியாயமானது என்றோ, எதிர்க் கட்சியின் தேவையை நிறைவேற்றுவதற்காகவே அரசாங்கம் இந்தக் குற்றப் பிரேரணையை கொண்டு வந்துள்ளது என்றோ கூற முடியாது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X