2025 மே 19, திங்கட்கிழமை

இந்து சமுத்திரத்தில் தொடரப்போகும் ஆதிக்கப் போட்டி

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 20 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.சஞ்சயன்


இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிக்ரம் சிங் நான்கு நாள் இலங்கைப் பயணத்தை நேற்று ஆரம்பித்துள்ளார். இந்திய இராணுவத்தின் தலைமைத் தளபதியாக கடந்த ஜூன் முதலாம் திகதி பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், ஜெனரல் பிக்ரம் சிங் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணம் இதுவாகும்.

இவர் இந்திய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட பின்னர், இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை விரிவுபடுத்திக்கொள்வதற்காக நேபாளம், பூட்டான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

அவையெல்லாம் இந்தியாவுடன் தரைவழி எல்லைகளைக் கொண்ட நாடுகள் என்ற வகையில், தரைவழி எல்லைகளைப் பாதுகாக்கும் பொறுப்பிலுள்ள இராணுவத்தின் தளபதி என்ற வகையில் அதற்கு அதிக முக்கியத்துவம் இருந்தது.

ஆனால், இலங்கையுடன் தரைவழி எல்லை எதையும் இந்தியா கொண்டிராத நிலையில், இந்திய இராணுவத் தளபதியின் இந்தப் பயணம் அதைவிட முக்கியத்துவம் வாய்ந்ததாக புதுடெல்லியால் பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக, 2010 செப்டெம்பரில், அப்போதைய இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் வி.கே.சிங் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். அதற்குப் பின்னர் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்தே, இந்திய இராணுவத் தளபதி ஒருவர் இலங்கைக்கு வந்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் வி.கே.சிங் - கொழும்பு வந்தபோது இருந்த சூழலை விடவும் வித்தியாசமானதொரு சூழ்நிலையில் தான் இப்போதைய இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிக்ரம் சிங் இங்கு வந்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசெம்பரில் இலங்கை இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய - புதுடெல்லிக்கு பயணம் மேற்கொண்டதை அடுத்து, இந்திய இராணுவத் தளபதி மேற்கொள்கின்ற ஒரு சம்பிரதாய ரீதியான பயணமாக மட்டும் இதைக்கொள்ள முடியாது.

ஏனென்றால், இந்திய இராணுவத் தளபதியின் வருகையின் நோக்கம், சம்பிரதாய விடயங்களுக்கு அப்பாற்பட்டது என்பதை புதுடெல்லியில் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வெளியிட்ட தகவல்களில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது.

கடந்த வாரம், காலியில் நடந்த 28 நாடுகள் பங்கு கொண்ட கடற்பாதுகாப்புக் கருத்தரங்கில், பாதுகாப்புச்செயலர் கோட்டாபய ராஜபக்ஷ, இந்து சமுத்திரத்தில் சீனாவின் தலையீட்டை நியாயப்படுத்திக் கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளில் சீனாவின் இராணுவ, பொருளாதார, அரசியல் தலையீடுகள் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளால் அச்சுறுத்தலுடன் பார்க்கப்படுவதாகவும் அவர் சாடியிருந்தார்.

இந்தியத் தரப்பினால் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் அமைந்திருக்க முடியாத அந்த உரை நிகழ்த்தப்பட்ட சில நாட்களில், இந்திய இராணுவத் தளபதியின் வருகை நிகழ்ச்சி நிரல் பொருந்திப் போனது ஆச்சரியமானதே.

சீனா தொடர்பாக பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்ட கருத்துக்கும் இந்திய இராணுவத் தளபதியின் இந்தப் பயணத்துக்கும் எவரேனும் முடிச்சுப் போட முடியாது. இரண்டும் வேறுபட்ட நிகழ்ச்சி நிரலுக்குட்பட்டவை.

ஆனால் சீனா, இந்தியா என இரண்டு நாடுகளின் இராணுவ ஒத்துழைப்பு, உதவிகளையும் பெற்றுக்கொள்வதில் இலங்கை உறுதியாகவே உள்ளது. இப்போதைய நிலையில் அரசியல், இராஜதந்திர ரீதியாக புதுடெல்லிக்கும் கொழும்புக்கும் இடையில் ஒருவித ஊடல் இருந்தாலும், பாதுகாப்பு ஒத்துழைப்பு என்ற விவகாரத்தில் அத்தகைய நிலை இல்லை என்றே கருதலாம்.

ஏனென்றால், சீனாவுடன் நெருக்கமாக உள்ள இலங்கையை, எப்போதும் தன் பிடியில் இருந்து நழுவாமல் பார்த்துக் கொள்வதற்கு, இந்தப் பாதுகாப்பு ஒத்துழைப்பே உதவும் என்று இந்தியா வலுவாக நம்புகிறது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது, இலங்கைக்கு சீனாவே பிரதான ஆயுத விநியோக நாடாக இருந்து வந்தது. ஆனாலும், இந்தியாவினது பாதுகாப்பு ஒத்துழைப்பும் உதவிகளும் இலங்கைக்கு அவசியம் தேவைப்பட்டன.

தற்பாதுகாப்பு ஆயுதங்கள் என்ற வகையில், இந்தியாவும் புலிகளுக்கு எதிரான போரில் ஆயுதப் பங்களிப்புகளை இலங்கைக்கு வழங்கியுள்ளது. விடுதலைப் புலிகளின் வான்படையின் அச்சுறுத்தல் எழுந்தபோது, எல்-70 ரகத்தைச் சேர்ந்த 24 விமான எதிர்ப்புப் பீரங்கிகள், இந்திரா ரகத்தைச் சேர்ந்த இருபரிமாண ரேடர்கள், 10 கண்ணிவெடிப் பாதுகாப்பு வாகனங்கள், 11 கண்காணிப்பு ரேடர்கள் என்பனவற்றை இலங்கைக்கு இந்தியா வழங்கியிருந்தது.

கடலில் பாதுகாப்பை வலுப்படுத்த ஆழ்கடல் ரோந்துப் படகுகளையும், கடற்புலிகளின் நடமாட்டங்கள் தொடர்பான புலனாய்வுத் தகவல்களையும் இலங்கையுடன் இந்தியா பகிர்ந்து கொண்டது. அது தவிர, விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரிட்ட படையினரின் கணிசமானோர் இந்தியாவில் பயிற்சி பெற்றவர்கள் தான்.

மாலைதீவு, மொறிசியஸ், மொங்கோலியா, பொட்ஸ்வானா, உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் போன்ற பல நாடுகளின் படையினருக்கு இந்தியா பயிற்சி அளித்து வருகின்ற போதும், அவர்கள் எல்லோரையும் விட இலங்கைப் படையினருக்கே இந்தியா அதிக பயிற்சிகளை வழங்குகிறது.

இந்தியாவின் வெவ்வேறு பயிற்சி நிலையங்களில் ஆண்டுக்கு 800 தொடக்கம் 900 வரையான இலங்கைப் படையினர் பயிற்சி பெறுகின்றனர்.

டேராடூன் இராணுவப் பயிற்சி மையம், மிசோராமில் கிளர்ச்சி முறியடிப்பு மற்றும் காட்டுப் போர்முறைப் பாடசாலை, மகாராஷ்டிராவில் உள்ள ஆட்டிலறிப் பயிற்சிப் பாடசாலை ஆகியவற்றில் இலங்கை இராணுவத்தினருக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இப்போதும் அளிக்கப்படுகின்றன.

கடந்த ஆண்டில் 820 இலங்கைப் படையினருக்கு பயிற்சி அளித்த இந்தியா, இந்த ஆண்டில் 870 படையினருக்குப் பயிற்சி அளிக்கிறது. இந்தியாவில் மட்டுமன்றி, கண்டியில் கடந்த 2009 பெப்ரவரியில் இராணுவப் புலனாய்வுப் பாடசாலையை உருவாக்குவதற்கும் இந்தியா உதவியது. அங்கு இந்திய இராணுவத்தின் 10 குழுக்கள் பயிற்சிகளை அளித்து வருகின்றன. இந்த உதவி, அடுத்த ஆண்டு டிசெம்பர் வரை தொடரும்.

இதற்கிடையே, இந்திய - இலங்கை இராணுவங்களின் சிறப்புப் படையினரின் 21 நாள் போர்ப் பயிற்சிகள் இந்தியாவில் இப்போது இடம்பெற்று வருகின்றன. ஹிமாசல் பிரதேசத்தில் உள்ள நஹான் என்ற இடத்தில் இந்தப் பயிற்சிகள் கடந்த 3ஆம் திகதி ஆரம்பமாகின. வரும் 24ஆம் திகதி முடிவடையவுள்ளன. கிளர்ச்சி முறியடிப்பு அனுபவங்களை இதில் இருநாட்டுப் படையினரும் பகிர்ந்து கொள்கின்றனர்.

இவ்வாறு எல்லா மட்டங்களிலும், இந்திய - இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு உறுதியானதாக இருந்தாலும், அதில் இந்தியா திருப்தி கொள்ளவில்லை. காரணம், சீனா மற்றும் பாகிஸ்தானுடன், இலங்கை கொண்டுள்ள நெருக்கமான உறவுகள் தான்.

இந்தியாவுக்கு போட்டியாக இந்த நாடுகள், இலங்கையுடன் நெருங்கிப் போகின்றன அல்லது உதவிகளை அள்ளி வழங்குகின்றன. இந்தப் போட்டியை சமாளித்து இலங்கையை தன்பக்கத்தில் வைத்துக் கொள்வதற்கு இந்தியா தன்னாலான முயற்சிகளை எடுத்து வருகிறது.

அதனால் தான், தமிழ்நாட்டின் எதிர்ப்புகளையும் மீறி இலங்கைப் படையினருக்கான பயிற்சிகளை இந்தியா வழங்கி வருகிறது. சீனா, பாகிஸ்தான், போன்ற நாடுகளை நெருங்க விடாமல், தனது அரவணைப்பில் இலங்கையை வைத்துக்கொள்ள இந்தியா எவ்வளவு முயன்றாலும், அதில் வெற்றிபெறுவது இலகுவான காரியமல்ல.

ஏனென்றால், இந்து சமுத்திரத்தின் முத்தாக உள்ள இலங்கை - இந்து சமுத்திரத்தில் ஆதிக்கப் போட்டியில் குதித்துள்ள சீனாவுக்கும் மிக முக்கியமானது. எனவே, இலங்கையைக் கைக்குள் போட்டுக் கொள்வதற்கு இந்த நாடுகளுக்கு இடையில் நடக்கும் போட்டி முடிவுக்கு வந்துவிடப் போவதில்லை. இது தொடரப்போகிறது. இதையே இலங்கையும் விரும்பும்.

சீன, பாகிஸ்தான் உறவுகளை உடைத்துக்கொள்வது ஒன்றும் சுலபமில்லை என்பது இந்திய இராணுவத் தளபதிக்கு இப்போதைய இலங்கைப் பயணம் கண்டிப்பாக உணர்த்துவதாக அமையும்.

You May Also Like

  Comments - 0

  • Kumar Thursday, 20 December 2012 01:05 PM

    இந்து சமுத்திரத்தில் தொடரப்போகும் ஆதிக்கப் போட்டியா அல்லது போரா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X