2025 மே 19, திங்கட்கிழமை

ஊடகமே எல்லோருக்கும் இறுதியாக கை கொடுக்கிறது

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 24 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த செப்டெம்பர் மாதம் 18ஆம் திகதி நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலக்கரத்ன - ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை வெளியிட்டதை அடுத்து அதனோடு தொடர்புடைய சம்பவங்கள் தொடரொன்றே இடம்பெற்றது. இப்போது அச் சம்பவத் தொடர் அதன் உச்சக் கட்டமொன்றை அடைந்து இன்று பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க குற்றப் பிரேரணையொன்றின் மூலம் பதவி நீக்கம் செய்யப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளார்.

மஞ்சுள திலக்கரத்னவின் அந்த அறிக்கை வரலாற்று முக்கயத்துவம் வாய்ந்ததாகவே பல அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். ஏனெனில் நீதித்துறை அவ்வாறு அறிக்கை வெளியிடும் மரபோ வழக்கமோ எந்தவொரு நாட்டிலும் இல்லை.

ஆனால் நீதித்துறை மீது, அதிலும் குறிப்பாக நீதித்துறைக்கு தலைமை தாங்கும் பிரதம நீதியரசர் மீது நிறைவேற்றுத்துறையினால் பல நெருக்குவாரங்கள் உருவாக்கப்பட்ட நிலையில் நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு மக்களிடம் முறைப்பாடு செய்வதைத் தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டதாகவே விமர்சகர்கள் கூறுகின்றனர். ஏனெனில் தமக்கு எவராகிலும் தொந்தரவு செய்யும்போது முறைப்பாடு செய்வதற்கு பொதுமக்களுக்கு நீதிமன்றங்கள் இருந்த போதிலும் நீதித்துறைக்கு அவ்வாறு முறைப்பாடு செய்வதற்கு சட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நிறுவனம் இல்லை.
இங்கு தான் ஊடகங்களின் முக்கியத்துவம் தங்கியிருக்கிறது. நீதித்துறையினர் வேறு வழியின்றி மக்களிடம் முறைப்பாடுசெய்ய வேண்டும் என்று நினைத்த போதிலும் ஊடகங்களின்றி அவர்களுக்கு அதனை செய்ய முடியாது. அதனால் தான் நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் பிரதம நீதியரசர் தலைமை தாங்கும் அவ் ஆணைக்குழுவின் பணிப்புரையின் பேரில் மேற்படி அறிக்கையை வெளியிட்டார்.

அதன் பின்னரும் பிரதம நீதியரசரின் சார்பில் அவரது சட்டத்தரணிகளால் கடந்த டிசெம்பர் 7ஆம் திகதி ஓர் அறிக்ககையும் அவருக்காக பொதுச் சட்டத்தரணிகள் குழுவொன்றினால் டிசெம்பர் 14ஆம் திகதி மற்றொரு அறிக்கையும் வெளியிடப்பட்டது.

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணையின் குற்றச்சாட்டுக்களை விசாரித்த நாடாளுமன்ற தெரிவுக் குழுவிலிருந்து அவர் வெளிநடப்பு செய்த உடன் அந்த வெளிநடப்புக்கான காரணங்களை விளக்கியே அவரது சட்டத்தரணிகள் அறிக்கை வெளியிட்டனர். தெரிவுக் குழுவின் அரசாங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் தமது அறிக்கையை சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் கையளித்தவுடன் அந்த அறிக்கை மூலம் பிரதம நீதியரசருக்கு நீதி வழங்கப்படவில்லை என்று கூறுவதற்காகவே மற்றைய அறிக்கை வெளியிடப்பட்டது.

அரசாங்கத்தின் பல அமைச்சர்கள் நீதித்துறையினர் இவ்வாறு அறிக்கை விடுவதை விமர்சித்தனர். புதுக்கடை இப்போது லிப்டன் சுற்றுவட்டமாக மாறியிருப்பதாக அவர்கள் கூறினர். நீதித்துறையினர் அரசியல்வாதிகளைப்போல் நடந்து கெளிகிறார்கள் என்பதே அதன் அர்த்தமாகும்.

நீதித்துறை வேறு வழியின்றி மக்களிடம் முறைப்பாடு செய்வதற்காக ஊடகங்கள் பயன்படுத்தப்பட்ட போதிலும் நாட்டில் பல நீதிபதிகள் ஏனைய வழக்குகளின் போதும் நீதிமன்றங்கள் தொடர்பான ஏனைய விடயங்களின் போதும் ஊடகங்களுடன் ஒத்துழைத்து செயற்படுவதில்லை. சிலர் ஊடகங்களை நட்புக் கண்கொண்டு பார்ப்பதும் இல்லை. சிலர் நீதிமன்ற பதிவாளரிடம் ஊடகவியலாளர்கள் ஆவணங்களை பெற்றுக்கொள்வதையும் விரும்புவதுமில்லை எனக் கூறப்படுகிறது.

ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டபோது நீதிமன்றங்களிடம் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் பலருக்கு நியாயம் வழங்கப்படவில்லை. குற்றவாளிகளை கண்டுபிடிக்குமாறு பொலிஸாரை இதைவிட அழுத்தமாக வற்புறுத்த நீதிவான்களால் முடியாதா என்பது தெளிவில்லை.

இந்த நிலையை இந்நாட்டு ஊடகவியலாளர்கள் இதற்கு முன்னரும் பலமுறை கண்டுள்ளனர். அவற்றில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஊடகங்களுடன் நடந்து கொண்ட முறையும் இப்போது நடந்து கொள்ளும் முறையும் சிறந்த உதாரணமாகும். இராணுவத் தளபதியாக இருக்கும்போது பொன்சேகா - அரச ஊடகங்களை மட்டுமே மதித்தார். ஏனைய சில ஊடகவியலாளர்களை அவர் துரோகிகள் என்று வர்ணித்த சந்தர்ப்பங்களும் இருந்தன.

பல ஊடகவியலாளர்கள் அவர் தளபதியாக இருக்கும் காலத்தில் ஆயுததாரிகளால் தாக்கப்பட்டனர். அவ்வாறான சில சம்பவங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் அவரையே குற்றஞ்சாட்டினர். புலிகளுக்கு எதிராக கருத்து வெளியிட்ட சில ஊடகவியலாளர்களும் அவரது காலத்தில் இராணுவ முகாம்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை. சில ஊடகவியலாளர்கள் அக்காலத்தில் நாட்டை விட்டே தப்பி ஓடிவிட்டனர்.

பதவியில் இருந்து சரிந்த பின்னர் அவருக்கு ஊடகங்களே துணை என்ற நிலை உருவாகியது. குறிப்பாக சிறையிலடைக்கப்பட்ட பின்னர் ஊடகங்களே அவருக்காக நாட்டின் அரசியல் அரங்கில் இடமொன்றை அமைத்துக் கொடுத்தன. அவரும் ஊடகங்களை சிறப்பான முறையில் பாவித்து அந்த இடத்தை பாதுகாத்துக் கொண்டார்.

அந்நாட்களில் அவர் அடிக்கடி மருத்துவமனைகளுக்கு அழைத்துவரப்பட்டார். அப்போதெல்லாம் ஊடகங்கள் அவரை சூழ்ந்து கொண்டன. ஓரிரு நிமிடங்களே அப்போது அவருக்கு தொலைக்காட்சி கமெராக்கள் முன் தோன்ற சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால் அவர் மிக சாதுரியமாக அந்த சில நிமிடங்களை தமது அரசியல் மற்றும் தனிப்பட்ட இருப்பை பாதுகாத்துக் கொள்ள பாவித்தார். அப்போது ஊடகங்கள் அவரை புறக்கணித்து இருந்தால் அவருக்கும் அவரது அரசியலுக்கும் என்ன நடந்து இருக்குமோ தெரியாது?

போர் நடந்து கொண்டு இருந்த காலத்தில் ஊடக சுதந்திரத்தைப் பற்றிப் பேசியவர்கள் பலரை தேசத்துரோகி என்று கூறிய பொன்சேகாவின் இன்றைய அரசியல் சுலோகங்களில் ஒன்றாக ஊடக சுதந்திரமும் இருப்பது விநோதமான விடயமாக இருப்பது போலவே மகிழ்ச்சிக்குரிய விடயமாகவும் இருக்கிறது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து ஐக்கிய தேசிய கட்சிக்குத் தாவிய மங்கள சமரவீரவும் ஒரு காலத்தில் அரசாங்க ஊடகங்களல்லாத ஏனைய ஊடகங்களை எதிரியைப் போல் கருதியவர். அவரே சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஊடகத்துறை அமைச்சராக இருந்தார். அவர் அப் பதவியில் இருந்த காலத்தில் இடம்பெற்ற ஊடகங்கள் விடயத்தில் முக்கியமான சம்பவமொன்று தான் 1997ஆம் ஆண்டு நிறைவேற்று ஜனாதிபதி முறையை ரத்துச் செய்யுமாறு கோரி ஐ.தே.க. கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில நடத்திய ஆர்ப்பாட்டம். அந்த ஆர்ப்பாட்டத்தை அரசாங்கம் பொலிஸாரையும் குண்டர்களையும் கொண்டு கலைத்தது. அப்போது பொலிஸாராலும் குண்டர்களாலும் இந்த நிகழ்வை அறிக்கையிடச் சென்ற ஊடகவியலாளர்களும் தாக்கப்பட்டனர். அவர்களது கமெராக்கள் அடித்து நொருக்கப்பட்டன. சில கமெராக்கள் குண்டர்களால் பறிக்கப்பட்டன.

பதவியில் இருக்கும் வரை சமரவீர இந்த அடாவடித்தனத்தை நியாயப்படுத்தினார். ஊடகவியலாளர்களும் ஐ.தே.கவினரும் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் புக முற்பட்டதால் அவர்கள் தாக்கப்பட்டனர் என்றே அவர் அப்போது வாதிட்டார்.

இப்போது அவருடைய அரசியலும் பெரும்பாலும் ஊடகங்கள் மீதே தங்கியிருக்கிறது. இன்று அவரே சில இணையத்தளங்களை நடத்த உதவி வருகிறார். ஊடக சுதந்திரத்தைப் பற்றி அக்கறையோடு பேசுகிறார்.

இவையெல்லாம் இப்போது ஊடக சுதந்திரத்தை மதியாது நடந்து கொள்ளும் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் புத்தியூட்டும் நிகழ்வாக இருக்கின்றன. ஆயினும் இப்போது ஊடகங்களை புறக்கணித்துவிட்டு தாமும் ஒருகாலத்தில் சரிந்தால் ஊடகங்களை பாவிக்கலாம் என அவர்கள் நினைக்கலாம். அது உண்மை தான். அவ்வாறானதோர் நிலைமை உருவானால் செய்தித் தாகத்தின் காரணமாக ஊடகங்கள் பழையனவற்றை மறந்து விடும் என்பதும் உண்மை தான். ஆனால் மனச்சாட்சி என்று ஒன்றும் இருக்கிறது அல்லவா?

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X