2025 மே 19, திங்கட்கிழமை

நாற்பதுக்கு நாற்பது தொகுதிகளில் வெற்றி: ஜெயலலிதா

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 31 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெல்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்திலிருந்து "வெளிநடப்பு" செய்த கையோடு இன்றைய தினம் (31.12.2012) அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டினார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா. ஒன்றரை வருடங்கள் ஆட்சியை நிறைவு செய்யும் அவர், அடுத்த சில மாதங்களிலோ, அல்லது விரைவிலோ நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பதற்கான முஸ்தீபுகளை முடுக்கி விட்டுள்ளார். பொதுக்குழுவில் பேசியவர்கள் அனைவருமே, தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளையும் கைப்பற்றும் லட்சியம் பற்றியே விரிவாக பேசியிருக்கிறார்கள்.

இந்த ஒன்றரை ஆண்டு கால ஆட்சியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை எதிர்கொண்ட முக்கியச் சவால்கள் இரண்டு. ஒன்று கடும் மின்வெட்டுப் பிரச்சினை. சட்டமன்ற தேர்தலின்போது "நான் ஆட்சிக்கு வந்தால் மூன்றே மாதங்களில் மின்வெட்டுப் பிரச்சினையைத் தீர்ப்பேன்" என்று அவர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற பல்வேறு முயற்சிகளை எடுத்தார். மின்சார வாரியத்திற்கு தனி ஓர் அதிகாரிகள் குழுவை போட்டு, மின் வெட்டுப் பிரச்சினை மற்றும் மின்சாரத் திட்டங்களை முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றுவது பற்றி விவாதத்திற்கு வழி வகுத்தார். குறிப்பாக ஒவ்வொரு திங்கட்கிழமையும் இந்த மின்வெட்டுக்காக போடப்பட்ட அதிகாரிகள் குழுவுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். குளிர் காலத்தைத் தொடர்ந்து டெல்லி தங்களுக்கு வேண்டாம் என்று சரண்டர் செய்யும் 1700இற்கும் மேற்பட்ட மெகாவோட் மின்சாரத்தை தமிழகத்திற்கு கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கோரிக்கை வைத்தார். பிறகு இந்திய சுப்ரீம் கோர்ட்டில் இதற்காக வழக்குப் போட்டார்.

கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தை ஆரம்பத்தில் ஆதரித்தாலும், கடும் மின்வெட்டால் வந்த அதிருப்தியை நீக்குவதற்கு அந்த போராட்டக்காரர்களுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றார். அந்த அணுமின் நிலையப் பணிகள் தொடருவதற்கு தமிழக பொலிஸ் மூலம் உதவி செய்தார். இப்போது கூடங்குளத்தில் முதற்கட்டமாக உற்பத்தியாகும் 1000இற்கும் மேற்பட்ட மெகாவோட் மின்சாரத்தை முற்றிலுமாக தமிழகத்திற்கு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அது மட்டுமின்றி, தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து மின்சாரத்தையும் தமிழகத்திற்கே கொடுக்க வேண்டும் என்று சமீபத்தில் வெளிநடப்புச் செய்த தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் குரல் எழுப்பியிருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.

இதேபோல் காவிரி பிரச்சினை! காவிரி நடுவர் மன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப்பின் படி திறந்துவிடப்பட வேண்டிய தண்ணீரை திறந்து விட கர்நாடகம் தொடர்ந்து அடம்பிடிக்கிறது. பா.ஜ.க.வின் தேசிய தலைவர்களுடன் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நெருக்கமான அரசியல் உறவு இருக்கின்ற நேரத்தில் கூட பா.ஜ.க. முதல்வர் இருக்கும் கர்நாடக மாநில அரசு தமிழக முதல்வரின் கோரிக்கையை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. காரணம் இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் கர்நாடகாவில் மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதுபோன்ற நேரத்தில் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீரை திறந்து விட்டு தன் மாநில விவசாயிகளின் உணர்வுகளை புண்படுத்த அம்மாநில முதல்வர் ஜெகதீஷ் ஷட்டர் தயாராக இல்லை. அதேபோல் ஓரளவிற்கு மேல் கர்நாடக மாநில அரசுக்கு அழுத்தம் கொடுத்து, தண்ணீரை திறந்து வைக்க மத்திய அரசும் தயாராக இல்லை. ஏனென்றால் தமிழகத்தை விட அரசியல் ரீதியாக தங்களுக்கு செல்வாக்கு மிகுந்த மாநிலம் கர்நாடகம் என்று காங்கிரஸ் கருதுகிறது.

தமிழகத்தில் தி.மு.க. அல்லது அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துத்தான் காங்கிரஸ் எம்.பி.க்களை பெற வேண்டும். ஆனால், கர்நாடகத்தில் கூட்டணி இல்லாமலேயே எம்.பி. தேர்தலில் எம்.பி. தொகுதிகளை கனிசமாகப் பெற முடியும். அதேபோல் தமிழகத்தில் 1967இற்குப் பிறகு காங்கிரஸால் ஆட்சிக்கே வர முடியவில்லை. ஆனால் கர்நாடகாவில் ஆட்சிக்கு வரும் கட்சியாகத் திகழ்கிறது காங்கிரஸ். இதுமாதிரியான காரணங்களால் காவிரிப் பிரச்சினை சுப்ரீம் கோர்ட்டிற்கே போன பிறகும் தீரவில்லை. மேட்டூர் அணைக்கு காவிரி நீர் வராததால், தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் பயிர் செய்த நிலங்கள் வறண்டு கொண்டிருக்கின்றன. அதைப் பார்த்து வாடும் விவசாயிகள் சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதனால்தான் தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, "காவிரி பிரச்சினையில் மத்திய அரசு அரசியல் சட்டப்படி உள்ள தனது ரோலைச் செய்யத் தவறி விட்டது" என்று கடுமையாக குற்றம் சாட்டினார்.

இப்படி தான் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மத்திய அரசு உதவவில்லை என்ற கோபம் முதல்வர் ஜெயலலிதாவிற்கு இருக்கும் நேரத்தில் அ.தி.மு.க.வின் பொதுக்குழு, செயற்குழு போன்றவற்றை கூட்டி தீவிர ஆலோசனை நடத்தியிருக்கிறார். இப்பிரச்சினைகளை மையமாக வைத்து மத்திய அரசுக்கு எதிராக கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் மின்சாரம் வழங்குவது தொடர்பான வலியுறுத்தல் தீர்மானங்கள் அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது ஒரு புறமிருக்க, சமீப காலமாக எம்.ஜி.ஆர் புகழ் பரப்பும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவகத்தில் "இரட்டை இலை" தோற்றம்போல் தூண் அமைக்கப்பட்டிருக்கிறது. அதை எதிர்த்து தி.மு.க. தரப்பில் போடப்பட்ட வழக்கில் "அது இரட்டை இலை இல்லை. கிரேக்க குதிரைகளின் சிறகுகள்" என்று அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சொல்லப்பட்டிருப்பது வேறு விடயம். இது தவிர, எம்.ஜி.ஆர். நினைவு தினம் ரொம்பவும் ஜோராக கொண்டாடப்பட்டது. அவரது நினைவிடத்தில் நின்று ஒன்றரை ஆண்டு கால ஆட்சியின் சாதனைகள் அனைத்தையும் பட்டியலிட்டு முதல்வர் ஜெயலலிதா தலையேற்க, நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் "சாதனை கோஷம்" எழுப்பினார். ஜனவரி 1ஆம் திகதி கொடநாடு புறப்படும் முதல்வர் ஜெயலலிதா, நீலகிரி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர் சிலை ஒன்றையும் திறந்து வைக்கிறார். அ.தி.மு.க.வின் அசைக்கமுடியாத வாக்கு வங்கியாக இருக்கும் "எம்.ஜி.ஆர் பக்தர்களை" நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் முடுக்கி விடும் பணியாகவே இது தெரிகிறது. அதனால்தான் "எம்.ஜி.ஆர் நினைவகத்தை" புதுப்பித்து இரட்டை இலைச் சின்னம் வைத்ததற்கும் பாராட்டுத் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

குறிப்பாக 29ஆம் திகதி சென்னையில் "பா.சிதம்பரத்தின் கலை இலக்கிய பேரவை" சார்பில் நடைபெற்ற "பா.சிதம்பரம்- ஒரு பார்வை" என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற தி.மு.க. தலைவர் கருணாநிதி, "சேது சமுத்திரத்திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை வைத்தார். சிதம்பரத்திற்கு தான் அளிக்கும் 67ஆவது பிறந்த நாள் பரிசாக இதை எடுத்துக் கொண்டு சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றித் தர வேண்டும். அப்படிச் செய்தால் வரலாற்றில் சிதம்பரத்தின் பெயர் நிலைத்து நிற்கும்" என்றார். தி.மு.க. தலைவர் கருணாநிதியை மேடையில் வைத்துக் கொண்டு பேசிய கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், "திராவிடமும் (தி.மு.க.வும்), தேசியமும் (காங்கிரஸும்) இணைந்து இருக்க வேண்டும். கலைஞரும், ப.சிதம்பரமும் இதேபோல் என்றும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்" என்று பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முதலில் ப.சிதம்பரத்தின் இந்த புத்தகத்தை குடியரசு துணை தலைவர் அமீத் அன்சாரிதான் வெளியிடுவதாக பேசப்பட்டது. ஆனால் திடீரென்று அது மாற்றப்பட்டு, தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் ப. சிதம்பரம் பற்றிய புத்தகம் வெளியிடப்பட்டது, தி.மு.க- காங்கிரஸ் உறவில் ஏதோ "புதிய அத்தியாயம்" தமிழக அரசியல் வானில் உதித்திருப்பது போல் தெரிகிறது. இந்த புத்தகம் வெளியீடு தொடர்பான விளம்பரங்கள் வெளியிடப்பட்ட சூழ்நிலையில்தான் தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடந்தது. அதிலிருந்து மத்திய அரசை குறை கூறி வெளிநடப்புச் செய்தார் முதல்வர் ஜெயலலிதா. குறிப்பாக சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு விவகாரத்தில் காங்கிரஸை ஆதரித்து தி.மு.க. நாடாளுமன்றத்தில் வாக்களித்ததால் தி.மு.க.- காங்கிரஸ் உறவு தொடரும் சூழ்நிலை உருவாகியிருப்பதாகவே தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் எதிர்பார்க்கிறார். அதனால் "தி.மு.க.- காங்கிரஸ்" அணி மீண்டும் தொடர்ந்தால், அதை சமாளிக்கவும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதுப் புது யுக்திகளை ஆலோசித்துள்ளார்.

பொதுவாக ஒரு கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டுவது என்பது கீழ்மட்டத்திலிருந்து, பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் கட்சி பிரமுகர்களை பேச விடுவதற்குத்தான். அப்படிப் பேசும் போதும் ஆங்காங்கு நிலவும் சூழ்நிலைகளை கட்சியின் தலைவர் என்ற முறையில் ஜெயலலிதா தெரிந்து கொண்டு அதை ஆட்சியின் தலைவர் என்ற முறையில் சரி செய்ய முனைவார். இப்படி பரபரப்பாக கூடிய பொதுக்குழுவில் மின்வெட்டிற்கு சென்றமுறை நடைபெற்ற தி.மு.க. ஆட்சியே காரணம் என்பதை கிராமங்கள் தோறும் பிரசாரம் செய்ய கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டு, "நாடாளுமன்றத் தேர்தலில் 40இற்கும் 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும்" என்று கூறியிருக்கிறார். அதேபோல் இப்போதைக்கு "பா.ஜ.க.வுடனோ, காங்கிரஸுடனோ கூட்டணி இல்லை" என்று பொதுக்குழுவிற்கு முன்பு நடைபெற்ற செயற்குழுவில் அவர் பேசியதாகவும் செய்திகள். எதிர்பார்த்தபடியே தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற போது பேசுவதற்கு போதிய நேரம் கொடுக்காத மத்திய அரசைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் பொதுக்குழுவில் பேசிய புதிய வரவான (வைகோவின் ம.தி.மு.க.விலிருந்து விலகி சமீபத்தில் அ.தி.மு.க.வில் சேர்ந்தவர்) நாஞ்சில் சம்பத், "அம்மா இப்போது செயின்ட் ஜார்ஜ் (சென்னை) கோட்டையில் இருக்கிறார். அவர் எதிர்காலத்தில் ரெட் போர்ட்டிற்கு (டெல்லிக்கு) போவார்" என்று கூறி, அடுத்த பிரதமர் ஜெயலலிதாவே என்று பொதுக்குழுவில் அடித்துப் பேசியிருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலில் "நாற்பதுக்கு நாற்பது" என்பதுதான் அ.தி.மு.க. பொதுக்குழுவின் இலக்கு. இப்போதைக்கு கூட்டணி இல்லை என்ற ரீதியில் அவர் அறிவித்திருந்தாலும், அவரது இலக்கான "நாற்பதுக்கு நாற்பது" என்ற இலக்கினை அடைய நிச்சயம் கூட்டணி வேண்டும் என்பதே பொதுக்குழவிற்கு வந்திருந்த அ.தி.மு.க.வினரின் உணர்வாக இருந்தது.

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்படவில்லை என்பதால், இப்போதே கூட்டணி என்று கூறிவிட்டால், தொண்டர்கள் சோம்பலாகி விடுவார்கள் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா நினைத்திருக்கக்கூடும். அதனால் "கூட்டணி இல்லை" என்று செயற்குழுவில் பேசியிருக்கிறார். ஆனால் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 25 தீர்மானங்களில் அப்படியேதும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. "இலக்கு 40 தொகுதிகள்" என்பதுதான் இந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தப்பட்டுள்ள முழக்கம்!

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X