2025 மே 19, திங்கட்கிழமை

பலம் தான் நீதியும் சட்டமும் என்ற நிலை வருமா?

A.P.Mathan   / 2013 ஜனவரி 06 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப் பிரேரணை விடயத்தில் உயர் நீதிமன்றத்தினால் அனுப்பப்பட்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்ட சட்ட வியாக்கியானமானது சட்ட வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதேவேளை அது இதுவரை நீதித்துறைக்கும் நிறைவேற்றுத்துறை மற்றும் சட்டமியற்றும் துறைக்கும் இடையில் நிலவி வந்த பிணக்கை அரசியல் நெருக்கடியாக மாற்றிவிட்டது என்றே தெரிகிறது.

நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளானது சட்டங்கள் அல்லவென்றும் எனவே அவற்றின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக் குழுவுக்கு நீதியரசர் ஒருவருக்கு எதிராக நீதி விசாரணை செய்யும் அதிகாரம் இல்லை என்றும் உயர் நீதிமன்றம் வியாக்கியானம் செய்துள்ளது. அதேவேளை முறையாக குற்ற விசாரணை செய்யாது பிரதம நீதியரசரை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணையை நாடாளுமன்றத்தினால் நிறைவேற்ற முடியாது என்றும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணையிலுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக நாடாளுமன்றத்தின் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு அவ்விசாரணைகளை தொடர்வதை நிறுத்துமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆறு மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. அதன் பிரகாரம் நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகள் சட்டங்களாக ஏற்றுக்கொள்ள முடியுமா, தெரிவுக்குழுவை நீதி விசாரணைக்கான நிறுவனமாக ஏற்றுக்கொள்ள முடியுமா என்ற கேள்விகள் எழுந்தன.

சட்டத்தை வியாக்கியானம் செய்யும் அதிகாரம் உயர் நீதிமன்றத்திற்கு மட்டுமே இருக்கிறது. எனவே மேன்முறையீட்டு நீதிமன்றம் வியாக்கியானத்திற்காக இவ் விடயங்களை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பியிருந்தது. அதன் அடிப்படையிலேயே மேற்படி வியாக்கியானம் உயர் நீதிமன்றத்தினால் அனுப்பப்பட்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

இந்த வியாக்கியானம் முலம் கீழ் காணும் விடயங்கள் கூறப்படுகின்றன.

•    சட்டம் என்பது நாடாளுமன்றத்தினால் அல்லது சட்டமியற்றும் சபையொன்றினால் நிறைவேற்றப்பட்டதாக இருக்க வேண்டும். (அரசியல் யாப்பு-170)
•    அவ்வாறு நிறைவேற்றப்பட்ட சட்டத்தால் நிறுவப்பட்ட நீதிமன்றங்கள் மற்றும் மன்றுக்களால் மட்டுமே ஒரு நபர் விடயத்தில் நீதி விசாரணை செய்ய முடியும்.
•    நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளானவை சட்டங்கள் அல்ல, அவை நாடாளுமன்ற அலுவல்களை முறையாக நடத்துவதற்காக வகுத்துக்கொள்ளப்பட்ட விதிமுறைகளே.
•    எனவே அக் கட்டளைகளின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக் குழுவுக்கு நீதி விசாரணைக்கான அதிகாரம் இல்லை.
•    முறையான நீதி விசாரணையொன்றினால் நீதியரசர் ஒருவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாது குற்றப் பிரேரணையொன்று நாடாளுமன்றத்தினால் நிறைவேற்ற முடியாது. ஏனெனில் நிருபிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே அந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டும்.

இவற்றில் இறுதியாக நாம் குறிப்பிட்டுள்ள விடயம் நீதிமன்றத்தினால் நாடாளுமன்றத்திற்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவுவொன்று என்றே கூற வேண்டும்.

ஆனால், அரசாங்கம் இந்த வியாக்கியானத்தை ஏற்பதாக தெரியவில்லை. குற்றப் பிரேரணையொன்றின்போது நாடாளுமன்றம் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பது உட்பட சகல விடயங்களையும் சட்டத்தின் மூலமாகவோ அல்லது நிலையியல் கட்டளைகள் மூலமாகவோ ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டு இருப்பதால்; நிலையியல் கட்டளைகள் மூலமும் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக ஒழுங்குகளை மேற்கொள்ள முடியும் என்று அரச ஊடகங்கள் வெள்ளிக்கிழமை வாதிட்டு இருந்தன.

குற்றச்சாட்டுக்களை விசாரிப்பது உட்பட சகல விடயங்களையும் சட்டத்தின் மூலமாகவோ அல்லது நிலையியல் கட்டளைகள் மூலமாகவோ ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டு இருப்பது உண்மை தான். ஆனால் சட்டத்தின் மூலமாக மட்டுமே நீதி விசாரணைக்கான நிறுவனங்களை நீறுவ முடியும் என்றும் அதே அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடயங்களை அரசாங்கமும் நீதிமன்றமும் அந்தந்த நிறுவனங்களின் தலைவர்களுக்கு வேண்டியவாறு கையாள்கின்றன.

உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தைப் பற்றி கருத்து வெளியிட்ட அமைச்சர் விமல் வீரவன்ச, நீதித்துறையினர் தாமே வழக்குத் தாக்கல் செய்து தாமே அதனை விசாரித்து தீர்ப்பு வழங்கியிருப்பதாக கூறியருந்தார். அவர் அந்த விடயத்தை கூறும்போது பாவித்த வார்த்தைகள் நீதிமன்ற அவமதிப்பாக இருப்பதால் தாம் அவருக்கு எதிராக வழக்கொன்றை தாக்கல் செய்யப்போவதாக தென் மாகாண சபை உறுப்பினர் மைத்திரி குணரத்ன கூறியிருந்தார்.

நீதித்துறை தமது வழக்கை தாமே விசாரித்து தீர்ப்பு வழங்கியிருப்பதாக விமல் வீரவன்ச கூறும்போது நாடாளுமன்றம் பிரதம நீதியரசருக்கு எதிராக தாமே குற்றச்சாட்டுக்களை சுமத்தி தாமே அவற்றை விசாரித்து தீர்ப்பு வழங்கியிருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச கூறுகிறார்.

நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் செயற்பாடுகளுக்கு எதிராக பிரதம நீதியரசரும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருக்கிறார். அது விடயத்தில் மேன்முறையீட்டு நீதிமன்றமானது சபாநாயகருக்கும் தெரிவுக் குழு உறுப்பினர்கள் 11 பேருக்கும் அறிவித்தல் அனுப்பியது. அவற்றை ஏற்பதில்லை என சபாநாயகரும் தெரிவுக் குழுவிலுள்ள ஆளும் கட்சியைச் சேர்ந்த 7 உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர்.

இந்த குற்றப்பிரேரணையையும் தெரிவுக் குழுவினால் நீதி விசாரணை செய்யும் முறையையும் தாம் ஏற்காவிட்டாலும் நாடாளுமன்றத்திற்கு கட்டளையிட நீதிமன்றத்திற்கு முடியாது என்ற அடிப்படையில் தாமும் நீதிமன்றத்தில் ஆஜராவதில்லை என ஐ.தே.க.வும் கூறியது. மக்கள் விடுதலை முன்னணியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நாடாளுமன்றத்திற்கு கட்டளையிட நீதிமன்றத்திற்கு முடியாது என்பதை எப்போதும் ஏற்கமுடியாது என்ற நிலைப்பாட்டுக்கு வந்துள்ளது போலும். எனவே அக்கட்சிகள் நீதிமன்ற அழைப்பை ஏற்று நீதிமன்றத்திற்குச் சென்றன.

நாடாளுமன்ற விடயங்களில் தலையிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வதிமுறையாகும். முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வாவுக்கு எதிராக 2001ஆம் ஆண்டு இதேபோல் குற்றப் பிரேரணையொன்று ஐ.தே.க.வும் மக்கள் விடுதலை முன்னணியும் சமர்ப்பித்த போதும் இதே பிரச்சினைகள் எழுந்து அன்றைய சபாநாயகர் அனுர பண்டாரநாயக்க - நாடாளுமன்றத்திற்கு கட்டளையிட நீதிமன்றத்திற்கு முடியாது என்று கூறினார்.

அப்போதும் இதேபோல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க நாடாளுமன்ற தெரிவுக் குழுவொன்று நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கு எதிராக இரண்டு அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றம் 2001ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி சபாநாயகருக்கு இடைக்கால தடை உத்தரவொன்றை பிறப்பித்தது. அதனை ஆராய்ந்த பின்னரே ஜூன் 20ஆம் திகதி அனுர பண்டாரநாயக்க தமது தீர்ப்பை வழங்கினார்.

இலங்கை வரலாற்றில் பிரதம நீதியரசர்களுக்கு எதிராக சமர்ப்பிக்கட்ட மூன்றாவது குற்றப் பிரேரணை தற்போதைய பிரேரணையாகும். இந்த மூன்றின் போதும் தெரிவுக் குழு மூலம் குற்ற விசாரணை மேற்கொள்வது தொடர்பான சர்ச்சை எழுந்தது. 1984ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் திகதி அப்போதைய பிரதம நீதியரசர் நெவில் சமரகோனுக்கு எதிராக ஐ.தே.க. முதலாவது குற்றப் பிரேரணையை சமர்ப்பித்தது. பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டபோதிலும் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பது எவ்வாறு என்று அப்போது நிச்சயிக்கப்பட்டு இருக்கவில்லை.

சட்டத்தால் அல்லது நிலையியல் கட்டளைகளால் அதற்கு ஆவண செய்ய வேண்டும் என்றே யாப்பு கூறுகிறது. அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன சட்டத்தால் அதற்கு ஆவண செய்ய முற்படவில்லை. அவரது உத்தரவின் பேரில் மறுநாளே தெரிவுக்குழுவொன்றின் மூலம் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கான நிலையியல் கட்டளை நிறைவேற்றப்பட்டது. அது சட்ட நுணுக்கங்களின்படி விடயங்களை ஆராய்ந்து தீர்ப்பு வழங்கும் முறையல்ல. மாறாக ஆளும் கட்சிக்கு இயல்பாகவே கிடைக்கும் பெரும்பான்மை பலத்தை கொண்டு தீர்ப்பு வழங்கும் முறையாகும். இதனை அப்போது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் இடதுசாரி கட்சிகளும் எதிர்த்தன. இன்று ஸ்ரீ.ல.சு.க. அதனை ஆதரிப்பது மட்டுமல்ல, நடைமுறைப்படுத்துகிறது. அன்று அதனை அறிமுகப்படுத்திய ஐ.தே.க. இன்று அதனை எதிர்க்கிறது. இன்று அம்முறையை எதிர்க்கும் மக்கள் விடுதலை முன்னணியும் 2001ஆம் ஆண்டு சரத் என் சில்வாவிற்கு எதிராக அதனை பாவிக்க முற்பட்டது. இது தான் இலங்கையின் அரசியல் நாகரிகம்.

தெரிவுக்குழுவொன்றின் மூலம் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் முறையை மாற்றுவதற்காக எவராவது நீதிமன்றத்தின் உதவியை நாடுவதில் தவறில்லை. அப்போது சட்ட வியாக்கியானம் தேவைப்படுவதையும் தவிர்க்கமுடியாது.

நாடாளுமன்ற விடயங்களில் எவரும் தலையிட முடியாது என்பது உண்மை. அதுபோலவே சட்ட வியாக்கினத்திற்கான உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்தையும் எவரும் புறக்கணிக்க முடியாது. வழமையாக பல சட்ட மூலங்கள் தொடர்பாக உயர் நீதிமன்றம் வியாக்கியானங்களை நாடாளுமன்றத்திற்கு வழங்குகிறது. நாடாளுமன்றம் அவற்றை ஏற்றுக்கொள்கிறது. பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி தற்போதைய நெருக்கடிக்கெல்லாம் மூல காரணங்களில் ஒன்றாகிய திவிநெகும் சட்ட மூலம் தொடர்பாகவும் உயர் நீதிமன்றம் வியாக்கியானங்களை வழங்கியது. அரசாங்கம் அவற்றையும் ஏற்றது.

இவ்வாறு இரு சாராரும் தத்தமது அதிகாரங்களைப் பற்றி தொடர்ந்தும் வாதிட்டுக் கொண்டு இருக்க முடியும். ஆனால் முக்கியமான பிரச்சினை என்னவென்றால் அரசாங்கம் வியாழக்கிழமை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்காவிட்டால் என்ன நடக்கும் என்பதே. நாம் கடந்த வாரம் குறிப்பிட்டதைப்போல் ஜனாதிபதி - உயர் நீதிமன்ற வியாக்கியானத்தை புறக்கணித்து பிரதம நீதியரசரை பதவி நீக்கம் செய்து, பிரதம நீதியரசர் அதனை ஏற்காதிருந்தால் பாதுகாப்பு படையினர் எவருக்கு விசுவாசமாக இருக்கிறார்களோ அவர் தான் வெற்றி பெறுவார்.

அதேவேளை சர்வதேச சமூகம் இந்த விடயத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறது என்பதும் முக்கியமான விடயமாகும். குறிப்பாக இந்த வருடத்தில் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு இலங்கையில் நடைபெறவிருப்பதால் இந்த விடயம் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X