2025 மே 19, திங்கட்கிழமை

காங்கிரஸ் துணை தலைவரானார் ராகுல் காந்தி: பின்னணி என்ன?

A.P.Mathan   / 2013 ஜனவரி 21 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் துணை தலைவராக ராகுல் காந்தி தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சி தலைவராக அவருக்கு "முடிசூட்டு" விழா அரங்கேறுவதற்கான முன்னோட்டமே இப்போது அவருக்கு அளிக்கப்பட்டுள்ள துணை தலைவர் பதவி. 1885இல் தொடங்கப்பட்ட காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தி 58ஆவது தலைவர். அவருக்கு ராகுல் காந்தி இப்போது துணை தலைவர். இதற்கு முன்பு இரு துணை தலைவர்கள் இப்படி காங்கிரஸ் கட்சியில் நியமிக்கப்பட்டார்கள். ஒருவர் அர்ஜூன் சிங். இன்னொருவர் ஜிதேந்திர பிரசாத். இந்த இருவருமே பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைவர்களாகும் அதிர்ஷ்டம் அடையப் போகிறவர்கள் இல்லை என்பதால் அவர்களுக்கு கட்சியின் மற்ற முன்னணித் தலைவர்கள் "புகழ்மாலை" சூட்டவில்லை. ஆனால் இந்த இளவரசர்தான் அடுத்த காங்கிரஸ் தலைவர் என்பதால் கட்சி முன்னோடிகள் முண்டியடித்துக் கொண்டு "வாழ்த்துரைகளை" பூமாலைபோல் கோர்த்து ராகுல் கழுத்தில் போட்டிருக்கிறார்கள்.

துணைத் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டு பேசிய ராகுல் காந்தி உருக்கமான உரை நிகழ்த்தியிருக்கிறார். அதில் அவர் கூறியுள்ள சில கருத்துக்கள் ஆட்சியிலிருக்கும் பிரதமர் மன்மோகன் சிங்கையும், காங்கிரஸ் தலைமையில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசையுமே குறை கூறும்விதத்தில் இருக்கின்றன. "சொன்னால் நடக்கும் என்ற தகுதியில் உயர் பதவியில் இருப்பவர்களை சந்திக்கிறேன். ஆனால், நாட்டு மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றி அவர்களுக்கு தெரியவில்லை. ஏன் இப்படி நடக்கிறது என்றால் நாம் அறிவுபூர்வமானவர்களை மதிப்பதில்லை. பொது அமைப்பு (பப்ளிக் ஸிஸ்டம்) நிர்வாகம், நீதி, கல்வி, அரசியல் கட்டமைப்பு எல்லாமே அறிவுபூர்வமானவர்களை வெளியே வைக்கும் விதத்தில்தான் உள்ளன. இதனால் ஒரு விதமான "இரண்டாம் தரத்தன்மையே" ஆதிக்கம் செலுத்துகிறது" என்று மிகவும் நொந்துபோய் பேசியிருக்கிறார். எதிர்க்கட்சி வரிசையில் இருப்பவர்கள் இப்படி பேசுவதை புரிந்துகொள்ள முடியும். ஆனால் 9ஆவது வருடமாக இந்திய அரசை வழி நடத்திக் கொண்டிருக்கும் ஓர் ஆளுங்கட்சியின் துணைத் தலைவர் இப்படி பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பையும், காங்கிரஸ் கட்சிக்கும், பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஆட்சிக்கும் உள்ள இடைவெளியையும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அதுவும் குறிப்பாக இரண்டாவது முறை வந்துள்ள நேரத்தில் 2-ஜி அலைக்கற்றை ஊழல், கொமல்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஊழல், நிலக்கரி ஒதுக்கீட்டில் முறைகேடு என்று பெரும் ரகளையே நடந்து முடிந்துவிட்டது. இதற்காக அன்னா ஹசாரே, அரவிந்த் கெஜ்ரிவால் போன்றோர் ஊரைக்கூட்டி பெரும் போராட்டமே "ஊழலுக்கு எதிராக" நடத்தி முடித்து விட்டார்கள். குறிப்பாக நிலக்கரி ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங் மீதே இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா கட்சி குற்றம் சாட்டியது. அது போன்ற சூழ்நிலையில் நடைபெற்றுள்ள காங்கிரஸின் ஜெய்ப்பூர் "சிந்தனை அரங்க" கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "ஊழல்வாதிகளாக இருப்பவர்கள் ஊழலை ஒழிப்போம் என்று பேசுகிறார்கள்" என்று கூறியிருக்கிறார். இதில் இன்னொரு ஹைலைட் என்னவென்றால், அதே ஜெய்ப்பூர் கூட்டத்தில் தன் நிறைவுரையில், "ஊழலுக்கு எதிராக 2010இல் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் ஐந்து அம்சத்திட்டத்தை அறிவித்தேன். அதை நிறைவேற்றியிருக்கிறோம்" என்று சோனியா காந்தி பேசியிருக்கிறார். "நம் அரசு ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறது" என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசியிருக்க, "ஊழல்வாதிகளாக இருப்பவர்கள் ஊழலை ஒழிப்போம்" என்கிறார்கள் என்று அதே கட்சியின் புதிய துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராகுல் காந்தி அறிவித்திருப்பது "முரண்பாட்டின்" மொத்த உருவம்போல் தெரிகிறது. இதுவும் கூட, காங்கிரஸ் கட்சிக்கும் பிரதமர் மன்மோகன்சிங்கின் ஆட்சிக்கும் உள்ள வேறுபாட்டை எடுத்துரைக்கும் விதத்தில் இருக்கிறது.

"துணை தலைவரானதும் என்னை நீங்கள் எல்லாம் பாராட்டினீர்கள். ஆனால் என் அன்னை (சோனியா) வந்து என்னைப் பார்த்து கதறினார். ஏன் கதறினார் தெரியுமா? அதிகாரத்திற்கு வருவது விஷம் போன்றது என்று அவருக்குத் தெரியும்" என்று வேதனைப்பட்ட ராகுல் காந்தி, தனது 42 வயதில் எட்டு வருடங்கள் அரசியல் அனுபவம் பெற்றுவிட்டேன் என்பதை விளக்கிக் காட்டி, தான் ஒன்றும் அரசியலுக்கு புதிதல்ல என்பதை மற்ற காங்கிரஸ் தலைவர்களுக்கு எல்லாம் புரிய வைத்துள்ளார். "வாரிசு அரசியல் அல்ல இது" என்பதை வழியக்கப் போய் விளக்க முயன்றிருக்கிறார் ராகுல் காந்தி. அதே நேரத்தில் "ஸ்கீம் மற்றும் பைனான்ஸ் போன்றவற்றால் தேசங்கள் உருவாக்கப்படுவதில்லை" என்று பிரதமர் மன்மோகன்சிங்கை மேடையில் வைத்துக் கொண்டு ஏன் ராகுல் காந்தி கிண்டலடித்தார் என்பதும் பலருக்கு பிடிபடவில்லை. இப்போது நிதியமைச்சராக இருப்பவர் ப.சிதம்பரம். முன்பு நிதியமைச்சராக இருந்த பிரதமர் மன்மோகன்சிங், இப்போது "ஸ்கீம்ஸ்" போடும் அதிகாரத்தில் இருக்கிறார். இதுபோன்ற சூழ்நிலையில், "ஸ்கீம் அன்ட் பைனான்ஸ்" போன்றவற்றை வைத்து தேசம் உருவாக்கப்படுவதில்லை என்று ராகுல் சொன்னதை பிரதமர் மற்றும் நிதியைமைச்சர் போன்றோரின் மீதுள்ள கோபத்தை வெளிப்படுத்துவதாகவே உணருகிறார்கள்.

ராகுல் காந்தியின் பேச்சு இப்படியிருக்க, காங்கிரஸ் கட்சி இளைய சமுதாயத்தை குறிப்பாக நகர்ப்புற இளைஞர்களை வசீகரம் செய்யும் முயற்சியில் இறங்க நினைக்கிறது. ஏனென்றால் "ஊழல் எதிர்ப்பு" "டெல்லியில் பெண் கற்பழிப்பை எதிர்த்து போராட்டம்" என்று எல்லாவற்றிலும் அந்த இளைய சமுதாயமே டெல்லியின் வீதிகளில் கொடிப்பிடித்து நின்றது. அவர்களை கவர்ந்து இழுக்கும் விடயங்கள் "ஜெய்ப்பூர் டிக்ளரேஷன்ஸ்" என்று நிறைவேற்றப்பட்டுள்ள 59 தீர்மானங்களில் இடம்பெற்றிருப்பது ஆச்சர்யமான விடயம் அல்ல. "பொருளாதார வளர்ச்சி, சமூக நீதி" என்ற இரட்டை லட்சியத்தை நோக்கிய பயணத்தில், "நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை" தடுக்க காங்கிரஸுக்கு மற்ற மதசார்பற்ற சக்திகள் கைகொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருப்பது மட்டுமே "கூட்டணி" சம்பந்தப்பட்ட டிக்ளரேஷன் ஆகும். ஆகவே, 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு மேலும் சில "மதசார்பற்ற கட்சிகளை"யும், இப்போது கூட்டணியில் இருக்கின்ற கட்சிகளையும் ஒன்று திரட்ட  காங்கிரஸ் பாடுபடும் என்பது "ஜெய்ப்பூர் டிக்ளரேஷனில்" வெளிப்பட்டுள்ளது. இதற்கு வலு சேர்க்கும் விதத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, ராகுல் காந்தி காங்கிரஸ் துணை தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இதையெல்லாம் விட முக்கியமாக "ஆட்சியில் இல்லாத மாநிலங்களில்" கட்சியை பலப்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சோனியா காந்தியே தன் பேச்சில், "நீண்ட காலமாக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் நம் தொண்டர்களின் உத்வேகம் குறைகிறது" என்று குறைபட்டுக் கொண்டிருந்தார். அதற்கு வழி காணும் வகையில், ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் மக்கள் பிரச்சினைகளுக்காக அங்கே உள்ள கட்சி தலைவர்கள் ஆர்பாட்டங்கள், போராட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுபோன்ற மாநிலங்களில் "ஆட்சியிலிருக்கும் கட்சிக்கு நாம் ஒரு நம்பகத்தன்மை வாய்ந்த மாற்று சக்தி என்பதை நிரூபிக்கும் வகையில் அந்த போராட்டங்கள், ஆர்பாட்டங்கள் எல்லாம் அமைய வேண்டும்" என்றும் தொண்டர்கள் உசுப்பி விடப்பட்டுள்ளார்கள். ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் வரிசையில் முதலிடத்தில் இருப்பது மேற்குவங்கமும், தமிழகமும்தான். இங்குதான் ஆட்சி போய் ரொம்ப வருடங்கள் உருண்டோடி விட்டன. மேற்கு வங்கத்தில் மத்திய அரசுக்கு தலைவலி கொடுத்துக் கொண்டிருக்கும் மம்தா பாணர்ஜி முதலமைச்சராக இருக்கிறார். இவர் காங்கிரஸிலிருந்து முன்பு பிரிந்து சென்று திரினாமூல் காங்கிரஸ் என்று பெயர் வைத்து அங்கு ஆட்சியைப் பிடித்திருப்பவர். அதேபோல் தமிழகத்தில் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியின் சார்பில் முதலமைச்சராக இருக்கிறார் ஜெயலலிதா. தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து மத்திய அரசுக்கும்- மாநில அரசுக்கும் மோதல் அரங்கேறிய வண்ணமே இருக்கிறது. இப்போதும் கூட வருகின்ற ஜனவரி 24ஆம் திகதி டீசல் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப் போகிறது அ.தி.மு.க. இந்த கோணத்தில் பார்த்தால் "ஜெய்ப்பூர் டிக்ளரேஷன்" படி தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் தீவிரப் போராட்டங்களை அறிவிக்கும் என்றே தெரிகிறது. ஏற்கனவே கூட்டணியில் உள்ள தி.மு.க. தங்களுக்கு போதிய எண்ணிக்கையில் சீட்டுகளை கொடுக்க வேண்டும் என்பதற்கும் இந்த போராட்டம் உதவும் என்று காங்கிரஸ் தலைமை நினைக்கலாம். ஆனால் அ.தி.மு.க. அரசை எதிர்த்து அப்படியொரு போராட்டத்திற்கு தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் எந்த அளவிற்கு முன்வரப் போகிறார்கள் என்பது பார்க்க வேண்டிய விடயம்.

"ஜெய்ப்பூர் டிக்ளரேஷனில்" 56ஆவது டிக்ளரேஷன் மிகவும் முக்கியமானது. அதுவும் குறிப்பாக ராகுல் காந்தி துணை தலைவர் ஆகியிருக்கின்ற நேரத்தில், "தேர்தல்கள் வரும் போது வெற்றி வாய்ப்பு மட்டுமே வேட்பாளர்களை தேர்வு செய்ய காரணமாக இருக்கக்கூடாது. "வெற்றி வாய்ப்பு", "விசுவாசம்" என்ற இரண்டிற்கும் ஒரு பேலன்ஸ் இருக்கும் விதத்தில் வேட்பாளர் தேர்வுகள் நடைபெற வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. சுருங்கச் சொன்னால் "காந்தி பேமிலிக்கு" விசுவாசமாக இருப்பவர்கள் வேட்பாளர்களாக ஆக்கப்பட வேண்டும் என்று "கறாராக" கூறப்பட்டுள்ளது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே ராகுல் காந்தி "பிரதமர் வேட்பாளராக" அறிவிக்கப்படுவார் என்று "தற்போது" எதிர்பார்க்க முடியாது. ஆனால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு வெற்றி பெற்றால் ராகுல்காந்தியே பிரதமர் என்பதை காங்கிரஸின் முன்னணித் தலைவர்கள் கூட பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஆகவே, அந்த நேரத்தில் எம்.பி.க்களாகவோ, கட்சியில் முக்கிய நிர்வாகிகளாகவோ இருப்பவர்களுக்கு "காந்தி பேமிலி" என்ற விசுவாசக் கொடி குத்தப்பட்டிருக்க வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடம் கருதுகிறது. அது ஒன்றே ராகுல் காந்திக்கு எந்தவிதமான "வில்லங்க" சவால்கள் ஏற்பட்டு விடாமல் தடுக்க உதவும் "தற்காப்புக் கலை" என்று நினைக்கிறார்கள். மொத்தத்தில் புத்துணர்ச்சியுடனும், புதுப்பொலிவுடனும் காங்கிரஸின் துணை தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் ராகுல் காந்திக்கு இப்போதே "தற்காப்பு ஆயுதம்", "விசுவாசத்தின்" வடிவில் ஜெய்ப்பூர் டிக்ளரேஷன் வாயிலாக கொடுக்கப்பட்டு விட்டது. "சிந்தனை அரங்கத்தின்" சிறப்புகளில் இது மிகவும் முக்கியமானது. ஏறக்குறைய 9 வருடங்கள் "காந்தி பேமிலியில்" இல்லாத ஒருவர் (டாக்டர் மன்மோகன் சிங்) காங்கிரஸ் கட்சியின் தலைமையில் நடைபெறும் ஆட்சிக்கு இந்திய பிரதமராக இருக்கிறார். ஆகவே, "காந்தி பேமிலி விசுவாசம்" கட்சிக்குள் புகுத்தப்படுவது இந்த இடைவெளியை போக்கி, காங்கிரஸை மீண்டும் தங்கள் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்று ராகுல்காந்தியும், சோனியா காந்தியும் நினைக்கிறார்கள். ஜெய்ப்பூர் "சிந்தனை அரங்கம்" அந்த நினைப்பிற்கு வெளிச்சம் காட்டும் "கைவிளக்காக" அமைந்திருக்கிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X