2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

மாறுமா இந்தியா; மாற்றுமா இலங்கையை?

A.P.Mathan   / 2013 ஜனவரி 23 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.சஞ்சயன்


“இலங்கை தொடர்பான கொள்கையை இந்தியா மாற்றிக்கொள்ள வேண்டும், அவ்வாறு மாற்றினால் தான், இலங்கையின் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்” என்று, கடந்த திங்கட்கிழமை ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

எட்டாவது இந்திய - இலங்கை கூட்டுக்குழுக் கூட்டத்துக்காக, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கடந்த திங்கட்கிழமை, புதுடெல்லிக்குப் புறப்பட்ட சமயத்தில் தான், இந்தப் பேட்டி ஊடகங்களில் பரபரப்பாக வெளியானது.

மிக முக்கியமான தருணமொன்றில் தான், சுரேஷ் பிரேமச்சந்திரனின் இந்தக் கருத்து வெளியானது. பிரதமநீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க பதவிநீக்கம் செய்யப்பட்ட பின்னணி, அதுபற்றி இந்தியா தப்பித்தவறிக் கூட வாய்திறக்காத சூழல், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸின் புதுடெல்லிப் பயணம், அடுத்தமாதம் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 22ஆவது கூட்டத்தொடர் என்று பல்வேறு வழிகளிலும் முக்கியத்துவமானதாக கருதப்படும் சூழலில் தான் இந்தக் கருத்து வெளியிடப்பட்டது.

ஒருவகையில் சொல்லப்போனால், இது இந்தியாவின் மௌனத்தை உடைக்கும் நோக்கத்தை, ஜி.எல்.பீரிஸ் – சல்மான் குர்ஷித் சந்திப்பில் இலங்கையின் வலைக்குள் இந்தியா வீழ்ந்துவிடக் கூடாதே என்ற எதிர்பார்ப்பு உள்ளதை அவரது இந்தக் கருத்து புலப்படுத்தியுள்ளது.

சுரேஷ் பிரேமச்சந்திரனின் பேட்டியில் கூறப்பட்டுள்ளதைப் போலவே, இலங்கை தொடர்பாக இந்தியா கடைப்பிடித்து வரும் கொள்கையே, அதன் மெத்தனப் போக்கிற்கு காரணமாகியுள்ளது. முதலில் விடுதலைப் புலிகளை அழித்து விட்டு, அதன் பின்னர் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என்று இந்தியாவுக்கு வாக்குறுதி கொடுத்திருந்தது இலங்கை அரசாங்கம். போர் முடிவுக்கு வந்த பின்னர், அந்த வாக்குறுதி மட்டுமன்றி, இந்தியாவுக்குக் கொடுக்கப்பட்ட இன்னும் எத்தனையோ வாக்குறுதிகளை இலங்கை காப்பாற்றவில்லை. ஆனாலும் இந்தியாவின் அணுகுமுறையில் பெரியளவிலான மாற்றம் எதையும் காணமுடியவில்லை.

2009 மே மாதம் முடிவுக்கு வந்த போரை அடுத்து, இலங்கை தொடர்பாக இந்தியா கடைப்பிடித்து வரும் கொள்கைக்கு விதிவிலக்காக இடம்பெற்ற ஒரே சம்பவம் என்றால், கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக வாக்களித்ததேயாகும்.

இதற்கு முன்னரும் சரி, பின்னரும் சரி - இலங்கையுடன் இந்தியா முட்டிக்கொள்ளவும் இல்லை, அதிகம் பேசிக்கொள்ளவும் இல்லை.

ராஜிவ்காந்தி கொலைக்குப் பின்னர், பலகாலமாக இந்தியா கடைப்பிடித்து வந்த, ‘கண்டும் காணாத‘ போக்கிலேயே இந்தியா இருந்து வருகிறது.

அண்மையில் பிரதம நீதியரசரை சர்ச்சைக்குரிய வகையில் அரசாங்கம் பதவி நீக்கியபோது, உலகெங்கும் இருந்து கண்டனங்கள் எழுந்த போதிலும், அயல்நாடான இந்தியா மட்டும் வாயையே திறக்கவில்லை. இந்த மெத்தனப்போக்கே இலங்கை அரசு, தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் அக்கறையற்றிருப்பதற்கு காரணம் என்ற கருத்து, அரசியல் மட்டங்களில் வலுவாகவே உள்ளது.

விடுதலைப் புலிகள் காலத்துக் கொள்கையை இந்தியா மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு மாற்றிக் கொண்டால் தான் இலங்கையை அதன் போக்கில் இருந்து மாற்றிக்கொள்ள முடியும் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

போர் முடிவுக்கு வந்து நான்காண்டுகளாகியும் அரசியல்தீர்வு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதற்கும், அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படாதுள்ளதற்கும் காரணம், இந்தியா தனது கொள்கையை மாற்றிக் கொள்ளாததே என்று மறைமுகமாக குற்றம்சாட்டியுள்ளார் சுரேஷ் பிரேமச்சந்திரன். இப்போது இந்தியாவுக்கு உள்ள பிரச்சினை வேறு விதமானது.

விடுதலைப் புலிகளை இந்தியா எதிரியாகப் பார்த்தது. அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது- புலிகளின் வளர்ச்சியும் பலமும், இந்தியாவின் மாநிலங்களிடையே தனியே பிரிந்து போகும் எண்ணத்தைத் தூண்டிவிட்டு விடும் என்ற அச்சம். இது இப்போது எழுந்ததல்ல, கிட்டத்தட்ட 1980களின் இறுதிப்பகுதியிலேயே அது ஆரம்பித்துவிட்டது.

இரண்டாவது- ராஜிவ்காந்தியைக் கொலை செய்தவர்கள் என்ற பழியுணர்ச்சி. இந்த இரண்டும் தான் புலிகளுக்கு எதிரான போருக்கு இலங்கை அரசுக்கு, இந்தியா துணை நிற்கக் காரணம்.

இரண்டு விதங்களில் தலைவலியாக இருந்த புலிகளை அழிப்பதற்கு இலங்கை முன் வந்தபோது, அதை இந்தியா ஆர்வத்துடன் ஆமோதித்தது. ஆனால், கிணறு வெட்டப் பூதம் கிளம்பும் என்று இந்தியா அப்போது எதிர்பார்த்திருக்கவில்லை என்றே கூறலாம்.

அதாவது, அப்போது இலங்கைக்கான சீனாவின் இராணுவ உதவிகள் குறித்து இந்தியா கவலை கொண்டிருந்த போதிலும், அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. போர் முடிந்த பின்னர், சீனாவின் தலையீடு எல்லாம் சரியாகி விடும் என்ற நினைப்பில் இருந்த இந்தியாவுக்கு, அதன் பின்னர் தான் சீனா நிரந்தரமாகவே காலூன்றப் போகிறது என்ற உண்மை விளங்கியது. இப்போது, இலங்கையில் இந்தியாவை விடவும் செல்வாக்குச் செலுத்தும் சக்தியாக சீனாவே வளர்ந்து நிற்கிறது.

போர் முடிவுக்கு வந்த பின்னர், சர்வதேச அரங்கில் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட இலங்கைக்கு, பாதுகாப்புக் கவசம் ஒன்று தேவைப்பட்டது. சீனா அந்தக் கவசத்தை அளித்து, இலங்கையை இன்னும் தனக்கு நெருக்கமாக்கிக் கொண்டது.

இந்தியாவினால் அந்தக் கவசத்தை இலங்கைக்கு அளிக்க முடியவும் இல்லை, இலங்கையைத் தன் கட்டுக்கள் வைத்திருக்கவும் முடியவில்லை. இலங்கை அரசு முன்னர் புலிகளைத் துருப்புச்சீட்டாகப் பாவித்து இந்தியாவை மடக்கியது. இப்போது அதற்குப் பதிலாக சீனாவைப் பாவித்துக் கொள்கிறது.

இந்தியாவைப் போல, அரசியல்தீர்வு, தமிழ் மக்களின் உரிமைகள், மனித உரிமைகள், ஜனநாயகம், ஊடக சுதந்திரம் - இதுபோன்ற எதைப் பற்றியுமே வாய்திறந்து கண்டிக்காத நண்பனாக சீனா இருக்கிறது. ஆனால் இந்தியாவால் அப்படி இருக்க முடியாது.

இப்போது இந்தியாவுக்கு உள்ள சிக்கல் இது தான்- இலங்கை அரசை வழிக்குக் கொண்டுவர வேண்டுமானால், சீனாவிடம் இருந்த அதனை பிரிக்க வேண்டும். இது முடியக்கூடிய காரியம் இல்லை. அந்தக் காலகட்டம் கடந்துபோய்விட்டது. இதனால், முடிந்தவரை இலங்கையுடன் முரண்படாமல் இருந்து கொள்ளப்பார்க்கிறது.

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க பதவிநீக்கப்பட்ட விவகாரத்தில், இந்தியாவுக்கு உடன்பாடு இருக்கவில்லை என்றே தெரிகிறது. ஆனால் வாய்திறக்கவில்லை. ஏனென்றால், இலங்கை அரசாங்கம் உள்நாட்டு விவகாரங்களில் யாரேனும் கருத்துச் சொல்வதை உள்வாங்குவதும் இல்லை, ஏற்றுக் கொள்வதும் இல்லை. அப்படிப்பட்ட நிலையில் வாயைத் திறந்து கண்டித்து, வாங்கிக் கட்டிக் கொள்வதை விட- இப்போதுள்ள அந்நியப்பட்ட நிலை அல்லது இடைவெளி இன்னும் அதிகரிப்பதை தவிர்ப்பதற்காகவே இந்தியா ஒதுங்கி நின்றது.

எனினும், குற்றப்பிரேரணையை எதிர்த்த மூத்த அமைச்சர் டியு.குணசேகரவுக்கு இந்திய அரசியல் தலைவர்களிடம் இருந்து கிடைத்த பாராட்டு, இந்தியாவுக்கு இதில் உடன்பாடு இல்லை என்பதை உணர்ந்து கொள்ளப் போதுமானது.

இத்தகைய பின்னணியில் தான், இலங்கை தொடர்பான கொள்கையை இந்தியா மாற்றிக்கொள்ள வேண்டும் என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

அதாவது புலிகள் காலத்துக் கொள்கையை உதறி விடுமாறு அவர் கேட்டுள்ள போதிலும், இந்தியா அத்தகைய மாற்றம் ஒன்றுக்குத் தயாராக இல்லை என்பதே உண்மை. ஏனென்றால், இப்போது புலிகள் இல்லாமல் போயிருக்கலாம், ஆனால் இலங்கை மீதான இந்தியாவின் நலன் அதற்கு முக்கியமானது.

எனவே, கொழும்பு தொடர்பான கொள்கையை மாற்றிக் கொண்டு, அதனுடன் முரண்போக்கில் செல்வதற்கு இந்தியா தயாராகவில்லை. ஏனென்றால், அது சீனாவை மேலும் பலப்படுத்தி விடுவதாக அமைந்து விடும். விடுதலைப் புலிகள் விவகாரத்தில் இந்தியா கற்றுக்கொண்ட பாடம் அது.

இந்தியா இன்னொரு பொறிக்குள் விழாமல் தப்பிக்கொள்ள வேண்டுமானால், புலிகள் காலத்துக் கொள்கையைத் தொடருவதைத் தவிர்க்க முடியாது. அது தமிழரின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு தடங்கலாகவே நிச்சயம் இருக்கும். அதைப்பற்றி இந்தியா கவலைப்படப்போவதில்லை.

ஏனென்றால், இந்தியாவுக்கோ அமெரிக்காவுக்கோ அல்லது வேறு எந்த நாட்டுக்கோ, முதலில் தமது நலன்கள் தான் முக்கியமே தவிர, தமிழர்களின் நலன் அல்ல.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .