2025 மே 19, திங்கட்கிழமை

தேசிய கீதம் தான் இப்போதுள்ள பாரிய பிரச்சினையா?

Menaka Mookandi   / 2013 ஜனவரி 28 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார புதிய சர்ச்சையொன்றை கிளப்பியிருக்கறார். அது தான் தேசிய கீதத்தில் தமிழ் பதங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற சர்ச்சை. அது இன்றைய நிலையில் தேவையான சர்ச்சையோ இல்லையோ அதன் காரணமாக பல வாரங்களுக்குப் பின்னர் மீண்டும் ஒரு முறை அரசியல் அரங்கின் கவனம் இனப் பரச்சினையின் பக்கம் திரும்பியிருக்கிறது. பல வாரங்களாக நாட்டின் கவனம் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப் பிரேரணையின் பக்கமே திரும்பியிருந்தது.

நாட்டில் இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவே தேசிய கீதத்தில் தமிழ் பதங்களும் உள்ளடக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் ஆலோசனை வழங்கியிருக்கிறார் என நன்நோக்கத்தோடு பிரச்சினையை அணுகும் போது ஊகிக்கலாம். ஆனால் இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடைமுறை ரீதியில் மேற்கொள்ள வேண்டிய எத்தனையோ பல வாழ்வாதார விடயங்கள் இருக்க இது போன்ற உணர்வுசார் விடயங்களை தொடுவதில் எவ்வித பயனும் இல்லை என்றே கூற வேண்டும்.

நாட்டில் இன்னமும் பல பகுதிகளில் தமிழ் பேசும் மக்களுக்கு அரசாங்க கடிதங்களும் படிவங்களும் சிங்கள மொழியிலேயே கிடைக்கின்றன. அம்பாறை கச்சேரிக்கு வரும் தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் மொழிப் பிரச்சினை காரணமாகவே அவர்கள் அண்மைக் காலம் வரை கல்முனைக்கு தனியான கச்சேரியொன்றை கேட்டுக் கொண்டிருந்தனர். தேசிய கீதத்தை தமிழில் பாடுவதை விட அல்லது அதில் தமிழ் பதங்களை உள்ளடக்குவதை விட அம்பாறை மாவட்ட தமிழ் பேசும் மக்களுக்கு இந்த மொழிப் பிரச்சினையை தீர்த்துக் கொள்வதே முக்கியமாகும்.

நாட்டில் இனக்கலவரமொன்றை உருவாக்க சில சக்திகள் முஸ்லிம்களுக்கு எதிராக இந்நாட்களில் கங்கனம் கட்டிக்கொண்டு செயற்படுகின்றன. தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சராகவிருந்தும் ஒரு கம்யூனிஸ்ட் என்று தம்மை வர்ணித்துக் கொண்டிருக்கும் வாசுதேவ, இதுவரை அதைப் பற்றி ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. அதேவேளை நாடு அவ்வாறு பற்றி எரியப்போகும் நிலையில் இருக்க அவர் வேறு எதையோ சர்ச்சையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்.

வடக்கில் பலர் போர் காலத்திலும் அதன் பின்னரும் காணாமற் போயுள்ளனர். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையும் அதைப் பற்றி விசாரணை செய்யுமாறு அரசுக்கு சிபாரிசு செய்திருந்தது. மேலும் பலர் சிறைகளில் தவிக்கின்றனர். வடக்கில் சமூக வாழ்வில் இராணுவ தலையீடு பற்றிய குற்றச்சாட்டுக்கள் வேறு. போரின் போது விதவைகளான பெண்களின் பிரச்சினைகளும் மழிந்து கிடக்கின்றன. தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக சுயமாக சிந்திக்க அரசாங்கமோ அல்லது தமிழ் அரசியல்வாதிகளோ அல்லது ஊடகங்களோ இடமளிப்பதில்லை.

இவை அனைத்தும் தேசிய நல்லிணக்கத்தை பாதிக்கும் விடயங்களே. அவை அவசரமாக தீர்க்ப்பட வேண்டிய பிரச்சினைகளும் கூட. அவை நிச்சயமாக நாம் எந்த மொழியில் தேசிய கீதத்தை பாடுகிறோம் என்பதை விட பாரதூரமான பிரச்சினைகளாகும். ஆனால் அந்த விடயங்களின் போது நாணாயக்கார போன்றோர் வாய் திறப்பதே இல்லை.

நல்லிணக்கத்திற்காக நாட்டில் நீதியிருக்க வேண்டும். இனவாரியாக அநீதி இழைக்கப்படும் போதும் சிறுபான்மை மக்கள் நீதித்துறையினரிடமே முறைப்பாடு செய்ய வேண்டியிருக்கும். நீதித்துறை அரச கட்டுப்பாட்டில் இருந்தால் அம்மக்கள் யாரிடம் முறைப்பாடு செய்வது? ஆனால் அண்மையில் நடந்த குற்றப்பிரேரணை விடயத்தின் போது தமிழ் அரசியல்வாதிகள் அது ஏதோ தமக்கு சம்பந்தம் இல்லாத விடயம் போல் இருந்து விட்டனர். வாசுதேவவும் அந்த விடயத்தின் போது எப்பக்கம் இருந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

தேசிய கீதம் பற்றிய சர்ச்சை தேவையோ இல்லையோ அது தற்போது அரங்கிற்கு வந்துள்ளதால் அதைப்பற்றி சற்று ஆராய்வது பெருத்தமாகும். பெரும்பாலான நாடுகளின் தேசிய கீதம் அந்நாடுகளில் வாழும் பெரும்பான்மை சமூகத்தின் மொழியில் எழுதப்பட்டு இருந்த போதிலும் இந்தியா, சிங்கப்பூர் போன்ற சில நாடுகளில் அது சிறுபான்மை சமூகமொன்றின் மொழியிலேயே எழுதப்பட்டு இருக்கிறது.

எனவே இலங்கையிலும் தேசிய கீதம் குறிப்பிட்ட ஒரு மொழியில் இருந்தால் மட்டுமே மக்களிடையே தேச பக்தி வளரும் என்றோ வளராது என்றோ வாதிட முடியாது. அதேவேளை தேசிய கீதம் மக்களிடையே தேசபக்தியை வளர்க்க உதவுகிறதா என்று எந்தவொரு நாட்டிலும் ஆய்வு நடத்தப்பட்டதும் இல்லை. ஆயினும் எல்லா நாடுகளிலும் பெரும்பாலான மக்கள் தேசிய கீதத்தை நேசிப்பதால் அதை மதிப்பது ஏனையோரது கடமையாகும். அது சக மனிதர்களது உணர்வுகளை மதிப்பதாகும்.

தேசிய கீதம் மக்களிடையே தேசபக்தியை வளர்க்க உதவுகிறது என்று வாதிடுவதாயின் அது மக்களால் விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். தேசிய கீதத்தில் சிங்களம் மற்றும் தமிழ் மொழிப் பதங்கள் உள்ளடக்கப்பட்டால் அதை விளங்கிக்கொள்ள இரண்டு மொழிகளையும் அறிந்திருக்க வேண்டியிருக்கும். அந்த அறிவு நாட்டில் எத்தனைப் பேருக்குத் தான் இருக்கிறது? அந்த வகையில் பார்த்தால் கடந்த காலங்களில் நடந்ததைப் போல் சிங்கள மக்கள் சிங்கள மொழியிலும் தமிழ் மக்கள் தமிழ் மொழியிலும் தேசிய கீதத்தை பாடுவதே சிறந்ததாகும்.

2010ஆம் ஆண்டு இதேபோல் தமிழ் மொழியில் தேசிய கீதத்தை பாடுவது தொடர்பாக சர்ச்சையொன்று எழுந்தது. அப்போது சிங்கள மக்களில் பலர் தமிழ் மொழியில் தேசிய கீதத்தைப் பாடுவதை எதிர்த்தனர். எனவே நாடு பிரிய வேண்டும் என்று வாதிடும் சில தமிழர்களும் தமிழ் மொழியில் தேசிய கீதததைப் பாடுவதை ஆதரித்தனர். அது நாட்டுப் பிரிவினையை ஆதரிக்காத கீதம் என்பதை அவர்கள் அப்போது மறந்து விட்டார்கள் போலும்.

அதே நிலைமை இப்போது சிங்கள தீவிரவாதிகளிடம் ஓரளவிற்கு காணப்படுகிறது. அவர்கள் இப்போது தேசிய கீதத்தில் தமிழ் பதங்களை களப்பதை தான் எதிர்க்கிறார்களேயல்லாமல் தமிழில் அதனை பாடுவதை எதிர்ப்பதாக தெரியவில்லை. சிங்கள ஊடகங்களில் வரும் கட்டுரைகளில் தமிழில் தேசிய கீதத்தைப் பாடுவதைப் பற்றி எதுவும் கூறப்படுவதில்லை. 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற சர்ச்சையை அவர்கள் இவ்வளவு குறுகிய காலத்தில் மறந்து விட்டார்கள் என்று கூறலாமா?

அது எதுவாக இருந்தாலும் தேசிய ஒற்றுமை என்று வரும் போது தேசிய கீதத்தை விட முக்கிய வாழ்வாதார பிரச்சினைகள் இருக்கின்றன. குறிப்பாக சிறுபான்மை மக்களுக்கு எத்தனையோ முக்கிய பிரச்சினைகள் இருக்கின்றன. தேசிய கீதத்தை சிங்களத்தில் மட்டும் பாடலாம், தமிழிலும் சிங்களத்திலும் பாடலாம், அல்லது சிங்களம் மற்றும் தமிழ் பதங்களை கலந்தும் பாடலாம். இதனால் உடனடியாக மக்களின் வாழ்வில் பெரும் மாற்றம் ஏற்படப்போவதில்லை. உடனடித் தேவையாக இருப்பது போரின் வடுக்களாக இருக்கும் இடம்பெயர்ந்தோரினதும் விதவைகளினதும் புலிகளால் விரட்டப்போரினதும் முன்னாள் போராளிகளினதும் பிரச்சினைகளை விரைவாக தீரப்பதே.

தேசிய ஐக்கியத்திற்காக வேகமாக தலை தூக்கும் பேரினவாத அரக்கனை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். நாட்டின் முதலாவது சனத்தொகை மதிப்பீடு கணக்கிடப்பட்ட 1881ஆம் ஆண்டு முதல் இனப் போர் ஆரம்பிக்கப்படும் வரை சகல சனத்தொகை மதிப்பீடுகளின் போதும் 7 வீதமாக இருந்த முஸ்லிம்களின் சனத்தொகை அதிகரிக்கப்படுவதாக சிங்கள மக்கள் மத்தியில் பிரசாரம் செய்யப்படுகிறது. போர் நடைபெற்றுக் கொண்டு இருந்த காலத்திலும் நடைமுறையில் இருந்த ஹலால் சான்றிதழ் மூலம் கிடைக்கப்பெறும் பணம் பயங்கரவாதத்தை வளர்க்க உபயோகிக்கப்படுவதாக இவ்வளவ காலமும் இல்லாமல் இப்போது திடீரென பிரசாரம் செய்யப்படுகிறது.

அவ்வாறு கூறிக்கொண்டு உலகில் எங்குமே காணப்படாத வகையில் முஸ்லிம்களின் சமயத்தை அவமதித்துக் கொண்டு அவர்களை ஆத்திரமூட்ட சில சக்திகள் முயற்சிக்கின்றன. தேசிய கீதத்தை மாற்றியமைப்பதை ஒருபுறம் வைத்துவிட்டு அரசாங்கம் இவற்றுக்குத் தான் உடனடியாக தீர்வு காண வேண்டும்.

You May Also Like

  Comments - 0

  • Sam Tuesday, 29 January 2013 12:41 AM

    இது பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்ற நிலைக்குத் தள்ளும் முயற்சி. ஈழச் சிந்தனை ஒளியும் வரை முள் வேலிக்குள் அடைத்தமை; பின்னர் தேசிய கீதமே வேண்டாம் என்று இருக்கும் போது சிங்களத்தில் பாடும் படி நிர்ப்பந்திக்க, இல்லை, இல்லை தமிழில்தான் பாடுவோம் என்று எழுந்தமை. இப்போது, ஓகோ, தமிழிலும் இருக்கிறதே படிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன் இப்படி ஒன்றைக் கிளப்புகிறார்கள்.முதலில் தீர்க்கவேண்டிய பிரச்சனைகள் பல இருக்கின்றது, அதை முதலில் பேசலாமே!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X