2025 மே 19, திங்கட்கிழமை

மீண்டும் சூடேறும் ஜெனிவா களம்

A.P.Mathan   / 2013 ஜனவரி 31 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்

மீண்டும் ஒருமுறை ஜெனிவாவை நோக்கி, பலரது கவனமும் திரும்பத் தொடங்கியுள்ளது. அடுத்த மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 22ஆவது கூட்டத்தொடர், இலங்கைக்கு சவால்மிக்கதாகவே இருக்கும் என்ற கருத்து, பல மாதங்களாகவே அடிபட்டு வந்தது தான். இப்போது, எதிர்பார்க்கப்பட்டதை விட இன்னமும் கடினமான – இறுக்கமான சூழல் இருக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

19ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை, இலங்கை மதித்து நடந்து கொண்டதா, அதை நிறைவேற்றியதா என்பதை விளக்கும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கை தான், இறுக்கம் நிறைந்ததாக இருக்கும் என்று முன்னர் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இப்போது அதற்கும் மேலாக, இன்னொரு புதிய தீர்மானத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு, இலங்கை அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது. அந்தத் தீர்மானத்தைத் தாமே கொண்டு வரப் போவதாக அமெரிக்கா முன்கூட்டியே பகிரங்கமாக அறிவித்திருப்பது தான், இந்த விவகாரத்தில் புதிய திருப்பம்.

வரும் ஜெனிவா கூட்டத்தொடரில் அமெரிக்கா ஒரு தீர்மானத்தைக் கொண்டு வரலாம் என்ற பேச்சு சிலவாரங்களாகவே அரசியல், ஊடக வட்டாரங்களில் அடிபட்டபோதும், ஒபாமாவின் இரண்டாவது பதவிக்கால வெளியுறவுக் கொள்கை பற்றிய சந்தேகங்களால், அதற்கான சாத்தியங்கள் குறித்த கேள்வி பலரிடம் இருக்கவே செய்தது.

ஆனால், ஒபாமாவின் இரண்டாவது பதவிக்காலத்தில் இலங்கை தொடர்பான கொள்கையில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறித்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தான் அமெரிக்காவின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இரண்டாவது பதவிக்காலத்துக்காக ஒபாமா தெரிவுசெய்யப்பட்ட போதிலும், அமெரிக்க இராஜாங்கச் செயலராக ஹிலாரி கிளின்டன் தொடர்ந்து பதவி வகிக்கப் போவதில்லை. ஏற்கனவே ஒபாமாவின் இரண்டாவது பதவிக்காலம் ஆரம்பமாகிவிட்ட போதிலும், இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்டனின் பதவிக்காலம் இன்னமும் முடிவடையவில்லை. அவர் வரும் வெள்ளிக்கிழமையுடன் தான், ஓய்வுபெறப் போகிறார்.

அவரையடுத்து ஜோன் கெரி புதிய இராஜாங்கச் செயலராகப் பதவியேற்கப் போகிறார். ஜோன் கெரியைப் பொறுத்தவரையில், இலங்கை தொடர்பான கொள்கையில் ஹிலாரியைப் பின்பற்றமாட்டார் என்றே இலங்கை அரசாங்கம் உறுதியாக நம்பியிருந்தது.

ஆனால், ஜோன் கெரி பதவியேற்க முன்னதாகவே, ஒபாமாவின் இரண்டாவது பதவிக்காலம், இலங்கை அரசுக்கு சோதனையாகத் தான் அமையப்போகிறது என்ற முன்னெச்சரிக்கையைக் கொடுத்துள்ளது இந்த அறிவிப்பு.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு, மத்திய ஆசிய விவகாரப் பிரிவின் பிரதி உதவிச்செயலர் நிலையில் உள்ள மூன்று அதிகாரிகள் இந்தவாரம் கொழும்பு வந்திருந்தனர். விக்ரம் சிங், ஜேம்ஸ் மூர், ஜேன் சிம்மர்சன் ஆகிய இந்த மூன்று பிரதி உதவிச்செயலர்களும், இலங்கைக்கு மேற்கொண்ட பயணம், இலங்கைக்கான எச்சரிக்கையை விடுப்பதற்கே என்பது உறுதியாகியுள்ளது. முன்னெப்போதும், இப்படி மூன்று பிரதி உதவிச்செயலர்கள் இலங்கைக்கு ஒரு சமயத்தில் வந்தது கிடையாது.

ஒரே இடத்தில் பணியாற்றும் ஒரே நிலை அதிகாரிகள்- அதுவும் ஒன்றாகவே பயணம் மேற்கொள்ளும்போது, அமெரிக்கா கூடிய அக்கறை செலுத்துகிறது என்றே அர்த்தம். ஆனால் அமெரிக்க அதிகாரிகள் மூவரினதும் பயணத்தை இலங்கை அரசாங்கம் அலட்சியமாகவே கருதியிருந்தது.

“கடந்த மாதம், நடந்த காலி கடல்சார் கருத்தரங்கில் பங்கேற்க வருவதாக அவர்கள் கூறியிருந்தார்கள். பின்னர் அந்தப் பயணத்தை பிற்போட்டனர். இப்போது வருகின்றனர்” என்று இவர்களின் வருகை குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் கூறியிருந்தார் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ.

ஆனால், அரசாங்கத்துக்கு அமெரிக்க அதிகாரிகளின் பயண நோக்கம் முன்னரே தெரிந்திருந்தது.

ஏனென்றால், கடந்த திங்கட்கிழமை கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போது, அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானம் பற்றி ஏற்கனவே இலங்கை அரசாங்கத்துக்கு அறிவிக்கப்பட்டு விட்டதாக அமெரிக்காவின் பிரதி உதவி இராஜாங்கச்செயலர் ஜேம்ஸ் மூர் தெரிவித்திருந்தார்.

ஆனால், இலங்கை அரசாங்கம் இத்தகையதொரு அபாய நிலையில் இருப்பதாக காட்டிக் கொள்வதைத் தவிர்த்தது.

ஆனால் அமெரிக்க உயர் மட்டக்குழு, இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஜெனிவாவில் தீர்மானம் கொண்டு வரப்போவதாக வெளிப்படையாக அறிவித்துவிட்டது. இதனை இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.

ஏனென்றால், அமெரிக்க இராஜாங்கச் செயலராக ஜோன் கெரி இன்னமும் பதவியேற்காத நிலையில், இது பற்றிய தீர்மானம் வெளிப்படையாக அறிவிக்கப்படும் என்று இலங்கை அரசாங்கம் நம்பியிருக்கவில்லை.

அடுத்து, அமெரிக்கா இப்படி முன்கூட்டியே தமது முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கக் கூடிய சூழலும் இருக்கவில்லை.

கடந்த ஆண்டு மார்ச் மாதம், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வரவுள்ளது குறித்து, ஜெனிவா கூட்டத்துக்கு முன்னர் கொழும்பு வந்திருந்த தெற்கு, மத்திய ஆசிய பிராந்தியத்துக்கான உதவிச்செயலர் றொபேட் ஓ பிளேக்கோ அல்லது  மனிதஉரிமைகள், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் ஜனநாயகத்துக்கான கீழ் நிலைச் செயலர் மரியா ஒரேரோவோ உறுதியாக கூறவில்லை.

பொதுப்படையாக - இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று தான் கூறியிருந்தனர். ஆனால் இலங்கை அரசாங்கத்துக்கு அவர்கள் முன்னமே எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இதனால், ஜெனிவாவில் தீர்மானத்தை முன்வைக்கப்போவது அமெரிக்காவா அல்லது வேறு நாடா என்ற கேள்வி கடைசிநேரம் வரை இருந்து கொண்டேயிருந்தது. ஆனால் இம்முறை, நிலைமை அப்படியில்லை. தாமே தீர்மானத்தை முன்வைக்கவுள்ளதாக அறிவித்துவிட்டது அமெரிக்கா.

இது கடந்த ஆண்டில் இருந்த நிலையைவிட இறுக்கமான நிலையில் அமெரிக்கா உள்ளது என்பதற்கான ஆதாரம்.

அதுவும், கடந்தமுறை நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கோரும் வகையில் பொதுப்படையாக வலியுறுத்தப்பட்டது. இம்முறை கொண்டு வரப்படும் தீர்மானம், போர்க்குற்ற விசாரணைகளுக்கு அழுத்தம் கொடுப்பதாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தமுறை, தீர்மானத்தில் போர்க்குற்ற விசாரணைகளுக்கு அழுத்தம் கொடுப்பது உள்ளிட்ட சில விடயங்களை, இந்தியாவின் ஆலோசனையின் பேரில் நீக்குவதற்கு அமெரிக்கா இணங்கியிருந்தது. ஆனால் இந்தமுறை நேரடியாகவே போர்க்குற்ற விவகாரங்களை ஜெனிவாவில் முன்னிலைப்படுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

இது, சர்வதேச அரங்கில் இலங்கைக்கு இன்னும் அதிக நெருக்கடியையும் அழுத்தங்களையும் ஏற்படுத்தக் கூடியது. எனினும், கடந்தமுறை ஜெனிவாவில் ரஷ்யாவும், சீனாவும் இலங்கைக்குப் பக்கபலமாக இருந்தன. இம்முறை இந்த நாடுகள் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்காதது இலங்கைக்குப் பெரும் இழப்பாகவே இருக்கும்.

ஜெனிவா களத்தில், இலங்கை அரசாங்கம் இம்முறை கூடுதல் அழுத்தங்களைச் சந்திக்கவுள்ளதற்கு தனியே போர்க்குற்றங்கள் மட்டும் காரணமல்ல. பிரதம நீதியரசர் பதவியில் இருந்து ஷிராணி பண்டாரநாயக்கவை அரசாங்கம் நீக்கியதும், அமெரிக்காவின் இந்த இறுக்கமான முடிவுக்கு மற்றொரு காரணம். இதனை அமெரிக்க உயர் மட்டக்குழு கொழும்பில் தெரிவித்துள்ளது.

இந்தவகையில் பார்க்கப்போனால் அரசாங்கம் தனது தலையில் தானே, மண்ணை அள்ளிப் போட்டுள்ளது என்று தான் அர்த்தம்.

ஷிராணி பண்டாரநாயக்க பதவி நீக்கப்பட்ட விவகாரத்திலும் சரி, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் விவகாரத்திலும் சரி – இலங்கை அரசாங்கம் தனக்கான குழியை தானே வெட்டிக் கொண்டுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் 35 வீதமே நடைமுறைப்படுத்தப்படுவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. இதில் முக்கியமான பரிந்துரைகள் இடம்பெறவில்லை. இது போதுமானதல்ல – இன்னும் அதிகம் செய்தாக வேண்டும் என்கிறது அமெரிக்கா.

ஆனால், அரசாங்கமோ ஓரளவுக்கு மேல் பணிவதில்லை என்பதில் உறுதியாகவே இருக்கிறது. அதனால் தான், கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவா கூட்டத்தொடர் முடிவுக்கு வந்த கையுடன், ஆபிரிக்கா, இலத்தீன் அமெரிக்காவின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பி விட்டிருந்தது. இந்த நாடுகளுடன் புதிதாக இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தி, ஜெனிவாவில் தனக்கான பாதுகாப்புக் கவசம் ஒன்றை உருவாக்க முற்பட்டது.

இந்தநிலையில் தான், ஜெனிவாவில் அடுத்த தீர்மானம் வரப்போவது உறுதியாகி விட்டது. அதை எதிர்கொள்ளத் தாமும் தயார் என்று இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது. இந்தநிலையில் கடந்தமுறையை விட இம்முறை ஜெனிவா களம் சூடானதாகவே இருக்கப் போகிறது. அதேவேளை, இந்தியாவின் நிலை என்னவென்பது இன்னமும் கேள்விக்குரியதாகவே உள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X