2025 மே 19, திங்கட்கிழமை

அரசாங்கத்திற்கு இந்த தைரியம் எங்கிருந்து வந்தது?

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 13 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்தமாதமும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விடயத்தில் அமெரிக்கா பிரேரணையொன்றை கொண்டுவரவிருக்கிறது. அது இலங்கைக்கு சாதகமானதாக அமையும் என்று கூறுவதற்கில்லை. ஆனாலும் இலங்கை அரசாங்கம் அதனை பொருட்படுத்துவதாகவும் தெரியவில்லை. தமக்கு ஆபத்து இல்லை என்ற உத்தரவாதம் அரசாங்கத்திற்கு எங்கிருந்து கிடைத்ததோ தெரியாது.

வரவிருக்கும் பிரேரணையை தோல்வியுறக் செய்யவேண்டும் என்று அரசாங்கம் கருதுவதும் அதற்காக சில நாடுகளின் உதவியை நாடுவதும் உண்மைதான். ஆனால் பிரேரணை வராமல் இருப்பதற்காக அல்லது வந்தால் அதற்கு எதிராக பல நாடுகளின் உதவியை பெறுவதற்காக உள்நாட்டில் தாமாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் அக்கறை காட்டுவதாக தெரியவில்லை.

வியப்புக்குரிய விடயம் என்னவென்றால் பிரேரணையை தடுப்பதற்காகவோ அல்லது அதனை தோல்வியுறச் செய்யவோ தாமாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை எடுப்பது ஒருபுறமிருக்க, அரசாங்கம் சர்வதேச சமூகத்தை மேலும் சீண்டுவதைப்போல் தான் நடந்துகொள்கிறது. அதுவும் பிரேரணை கண்ணுக்கு தெரியும் அளவிற்கு நெருங்கிவிட்ட நிலையிலும் அரசாங்கம் ஐ.நா. மனித உரிமை பேரவைக்கு சவால் விடுவதைப்போல் நடந்துகொள்ளும்போது இந்த தைரியம் எங்கிருந்து வந்தது என்று கேட்கத் தோன்றுகிறது.

கடந்தவருடம் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை இலங்கை அரசாங்கத்திற்கு எதிரானது என எவர் எவ்வாறு கூறினாலும் அது உண்மையிலேயே இறுதியில் இலங்கை அரசாங்கத்திற்கு சாதகமானதாகவே அமைந்தது. இலங்கையில் இறுதிக்கட்ட போரின்போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்களைப் பற்றி சர்வதேச விசாரணை வேண்டும் என்று பிரேணை கொண்டுவரப்படுமுன் கோரியவர்களை அப் பிரேரணை சமாளித்துவிட்டது. கடந்தவருட பிரேரணை உள்நாட்டு விசாரணையைதான் வலியுறுத்துகிறது.

இந்தமுறையும் அமெரிக்கா தம்மை பாரதூரமாக பாதிக்கும் எதனையும் செய்யாது என்ற உத்தரவாதம் அரசாங்கத்திற்கு இருக்கிறதோ தெரியாது. இல்லாவிட்டால் அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு சவால்விடும் வகையில் நடந்துகொள்வது எவ்வாறு?

உதாரணமாக, அண்மையில் இராணுவக் குழுவொன்று வெளியிட்ட அறிக்கையை எடுத்துக் கொள்ளலாம். கடந்தவருட பிரேரணை அரசாங்கமே நியமித்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் சிபார்சுகளை அமுலாக்குமாறே வலியுறுத்துகிறது. பொலிஸ் திணைக்களத்தை பாதுகாப்பு அமைச்சிடமிருந்து பிரிக்கவேண்டும் என்று நல்லிணக்க ஆணைக் குழு பரிந்துரைத்திருந்தது.

ஆணைக்குழுவின் சிபார்சு 9.214இல் பொலிஸ் திணைக்களமானது சிவில் நிறுவனம் என்பதால் அதனை பாதுகாப்பு படைகளை கையாளும் நிறுவனத்திலிருந்து பிரிப்பது நல்லது என கூறப்படுகிறது. ஆனால் மேற்படி இராணுவக் குழு அக் கருத்தை நிராகரித்துள்ளது. ஏனைய நாடுகளுக்குதான் அந்த ஆலோசனை பொருத்தமாகும் என அந்த அறிக்கை கூறுகிறது. ஆணைக் குழுவின் சிபார்சுகளை எவ்வாறு அமுலாக்கலாம் என்று ஆராய்வதற்காகவே இந்த இராணுவ குழு நியமிக்கப்பட்டது என்பது இங்கு கவனிக்கத்தக்க விடயமாகும்.

போரின்போது காணாமற் போனவர்கள் தொடர்பாக விசாரணை செய்யவேண்டும் என்று ஆணைக்குழு சிபார்சு செய்தது. ஆணைக்குழுவின் சிபார்சு 9.23 இன் பிரகாரம் காணாமற்போனவர்கள் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைத்திருப்பதால் அரசாங்கம் அவற்றைப் பற்றி விசாரணை செய்து குற்றவாளிகளாக காணப்படுவோரை தண்டிக்கவேண்டும்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை அமுலாக்கவேண்டும் என்று பொதுவாக கூறும் அதேவேளை கடந்தவருட அமெரிக்க பிரேரணையும் காணாமற் போனோர்களைப் பற்றி விசாரிக்கவேண்டும் என்பதை தனியாகவும் வலியுறுத்தியுள்ளது. ஆயினும் கடந்த மாதம் 25ஆம் திகதி பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஊடகவியலாளர்களின் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் போரின்போது சாதாரண மக்கள் எவரும் காணாமற் போகவில்லை என்று கூறியிருந்தார். இது காணாமற் போனவர்களைப் பற்றி அரசாங்கம் விசாரிக்கப் போவதில்லை என்று பகிரங்கமாக கூறுவதற்கு சமமாகும்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை அமுலாக்க வேண்டும் என்று பொதுவாக கூறும் அதேவேளை அமெரிக்கப் பிரேரணை மேலும் சில விடயங்களையும் மேலதிகமாக அதன் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளது. தடுப்புக் காவல் தொடர்பான கொள்கையை மீள் பரிசீலனை செய்யவேண்டும் என்பது அவற்றில் ஒன்றாகும்.

ஆனால், அவ்வாறு கடந்தவருட பிரேரணையில் இருந்தும் இவ் வருட பிரேரணை வருவதாக தெரிந்தும் அரசாங்கம் சில நாட்களுக்கு முன்னர் சந்தேகநபர்களை பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைத்துக்கொள்ளக்கூடிய காலத்தை 48 மணிநேரமாக அதிகரித்தது. வெளிநாட்டு நெருக்குவாரங்களை அரசாங்கம் எவ்வகையிலும் மதிப்பதில்லை என்பதையே இதுவும் காட்டுகிறது.

கடந்த வருட அமெரிக்கப் பிரேரணையில் விசேடமாக குறிப்பிடப்பட்டுள்ள மற்றுமொருவிடயம் தான் வடபகுதியில் இராணுவ பிரசன்னத்தை குறைக்கவேண்டும் என்பது. ஆனால் மேற்படி இராணுவ குழுவின் அறிக்கை இராணுவத்திற்கு தேவைக்கு ஏற்ப நாட்டில் எங்கும் நிலைகொண்டிருக்க முடியும் என்று கூறுகிறது.

அதிகார பரவலாக்கல் அமெரிக்கப் பிரேரணையில் தனியாக குறிப்பிடப்பட்டு இருந்த மற்றுமொரு விடயமாகும். ஆனால் திருகோணமலையில் நடைபெற்ற இவ்வருட சுதந்திரதின வைபவத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய உரை இந்தக் கருத்துக்கு எதிராக அமைந்துள்ளதாக தமிழ் கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.

அதுமட்டுமல்லாது அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களும் ஜனாதிபதியின் சகோதரர்களுமான அமைச்சர் பஸில் ராஜபக்ஷவும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் அண்மையில் ஏற்கனவே அமுலில் இருக்கும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தையும் ரத்துச் செய்யவேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இந்தியாவும் இந்த விடயத்தில் வெகுவாக அக்கறைகாட்டிவரும் நிலையில் இவ்வாறு 13அவது திருத்தத்தை ரத்துச் செய்யவேண்டும் என்று அடித்துக் கூற அரசாங்கத்தின் தலைவர்களுக்கு எங்கிருந்து தைரியம் வந்தது என்பது தெளிவாகவில்லை.

சட்டத்தின் ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதும் இதேபோல் அமெரிக்கா தனியாக வலியுறுத்தியிருந்தது. எனினும் முன்னாள் பிரதமநீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட குற்றப் பிரேரணை விடயத்தில் அரசாங்கம் நடந்துகொண்ட விதம் சட்டத்தின் ஆதிக்கத்திற்கு முரணானது என அமெரிக்கா உட்பட பல நாடுகளின் விமர்சனத்திற்குள்ளாகியது. 

சர்வதேச சமூகம் என்றழைக்கப்படும் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசுகள் குறிப்பிட்டதோர் வரையரைக்குள் தான் இலங்கை போன்ற தமது நட்பு நாடுகளை மிரட்டும். அவ்வல்லரசுகளின் அரசியல் பொருளாதார நலன்களுக்கு இடையூறு விளைவிக்காதவரை எந்தவொரு நாடும் அவ்வல்லரசுகளின் கடும் கோபத்திற்குள்ளாவதில்லை. அந்நாடுகள் தாம் விரும்பியவாறு நடந்துகொள்ளலாம். இலங்கை அரசாங்கமும் அதனை அறிந்திருக்கிறது.

எனவே இலங்கை அரசாங்கம் அவ்வல்லரசுகளின் நலன்களை பேணிக் காத்துவருகிறது. அதேவேளை உள்நாட்டு மக்கள் கேட்கும் வகையில் விமல் வீரவன்ச போன்றவர்களைக் கொண்டு ஒருசில ஏகாதிபத்திய எதிர்ப்பு சுலோகங்களையும் முழங்கிக் கொள்கிறது. அவ்வாறுசெய்யும் போது ஆபத்துவராது என்ற தைரியத்தில் தான் அரசாங்கம் செயற்படுகிறதுபோலும்.

You May Also Like

  Comments - 0

  • ss Friday, 08 March 2013 03:52 PM

    விநாச கால விபரீத புத்தி என்பார்கள்.... அது இது தான்... தலைக்கு மேல் தண்ணீர் ஏறிய பிறகு ஜான் போனால் என்ன... முழம் போனால் என்ன என்று நினைக்கிறார்கள் போலும்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X