2025 மே 19, திங்கட்கிழமை

மனிதனே மனிதன் உயிரை எடுக்க தகுதியானவனா?: அப்துல்கலாம்

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 18 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சந்தன வீரப்பன் கூட்டாளிகள் நால்வரின் தூக்கு தண்டனையை எதிர்த்து தமிழகத்தில் ஆவேசக் குரல் கிளம்பியிருக்கிறது. காஷ்மீரைச் சேர்ந்த அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதை கன்னியாகுமரியில் உள்ள தமிழன் கூட கண்டிக்கும் அளவிற்கு தூக்கு தண்டனை பற்றிய சூடான சர்ச்சை உருவாகியிருக்கிறது. யார் இந்த சந்தன வீரப்பன்? "சந்தன வீரப்பன்" என்பவன் தமிழகத்தின் காடுகளில் சுற்றித் திரிந்த காட்டு ராஜா. சுமார் 18,000 சதுர கிலோ மீற்றர் உள்ள தமிழக- கர்நாடக எல்லைகளுக்குட்பட்ட காடுகளில் வீரப்பனின் ஆதிக்கம் இரு மாநிலத்தவரையுமே பதற்றத்தில் மூழ்க வைத்தது. காட்டுக்குள் வாழ்ந்த இவனைப் பிடிக்க இரு மாநிலங்கள் கூட்டு அதிரடி படையை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள். ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்ற "பொலிஸ் ஆப்பரேஷன்" கடந்த 2004ஆம் வருடம் ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி முடிவுக்கு வந்தது. அன்றுதான் அதிரடிப்படை தலைவர் விஜயகுமார் ஐ.பி.எஸ்-ஸால் "சந்தன வீரப்பன்" சுட்டுக் கொல்லப்பட்டான்.

139இற்கும் மேற்பட்ட கொலைகள், அவர்களில் 32இற்கும் மேற்பட்டோர் பொலிஸ் அதிகாரிகள் என்று கொலை பீதியைக் கிளப்பி, தமிழக - கன்னட மக்களை நிலைகுலையச் செய்தவன் வீரப்பன். சந்தன வீரப்பன் - பொலிஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்படும் முன்பு பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரைக் கூட கடத்திச் சென்றான். இரு மாநிலங்களும் வீரப்பனுடன் பேச்சுவார்த்தை நடத்தி ராஜ்குமாரை விடுவிக்க, நக்கீரன் கோபால், பழ. நெடுமாறன் உள்ளிட்டவர்களை அனுப்பியது குறிப்பிடத்தக்கது. தமிழகத்திற்கு காவிரியிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பது கூட அப்போது ராஜ்குமார் ரிலீஸுக்கு வீரப்பன் வைத்த கோரிக்கைகளுள் ஒன்று. அந்த சந்தன வீரப்பனின் கூட்டாளிகளாக இருந்த பிலவேந்திரன், சைமன், ஞானப்பிரகாசம், மீதை மாதையன் ஆகிய நால்வரின் தூக்கு தண்டனை பற்றிதான் இப்போது கடும் சர்ச்சைகள் கிளம்பியிருக்கின்றன. இந்த நால்வரும் பாலாற்றை கடக்க முயன்ற பொலிஸ் படையினர் மீது "கண்ணிவெடி தாக்குதல்" நடத்தினர். இதில் பொலிஸார் உள்பட 22 பேர் உடல் சிதறி இறந்தார்கள். அந்த பொலிஸ் படைக்கு தலைமையேற்றிருந்த கோபாலகிருஷ்ணன் எஸ்.பி. படுகாயமடைந்து தப்பித்தார். அந்த வழக்கில்தான் இந்த நால்வருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அந்த தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்திருந்த கருணை மனுக்களை சமீபத்தில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தள்ளுபடி செய்தார்.

இதைத்தொடர்ந்து கர்நாடக மாநில சிறையில் இருக்கும் அந்த நால்வரும் விரைவில் தூக்கில் போடப்படுவார்கள் என்ற செய்தி கிளம்பவே, தமிழகத்தில் உள்ள சில அமைப்புகள் அதற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய செயலாளர் டி.ராஜா, "மரண தண்டனையை இந்தியா ரத்து செய்ய வேண்டும்" என்ற ரீதிக்கே சென்று வாதிட்டுள்ளார். அதேபோல் தூக்கை எதிர்நோக்கி காத்திருக்கும் அந்த நால்வரின் குடும்பத்தினரும் ராஜாவை சந்தித்துப் பேசியுள்ளார்கள். அவர்களிடமும், "தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன்" என்று வாக்குறுதி அளித்துள்ளார். இதற்கிடையில் இந்த நால்வரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்துள்ளார்கள். கருணை மனு நிராகரிப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை நாளை மறுநாள் புதனன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவிருப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. அதுவரை நால்வரும் தூக்கிலிடப்படக்கூடாது எனவும் தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர், நீதிபதிகள் ஏ.ஆர்.தவே மற்றும் விக்ரம்ஜித் சென் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இன்று காலை உத்திரவிட்டது. கர்நாடக மாநில கவர்னரிடமும் கூட "தூக்குத்தண்டனையை நிறைவேற்றக்கூடாது" என்று அந்த நால்வரின் சார்பில் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட பிறகு தூக்குத்தண்டனை போடக்கூடாது என்று கூறி பல மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. அந்த வரிசையில் இந்த நால்வரது மனுவும் சேரும் என்று தெரிகிறது.

இப்படி தூக்குத் தண்டனை விவகாரம் மிகுந்த பரபரப்பை இரு மாநிலங்களிலும் உருவாக்கியுள்ளது. ஏற்கனவே மும்பை தாக்குதலில் ஈடுபட்ட அல்கொய்தா தீவிரவாதி கசாப்பிற்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. பிறகு, இந்திய ஜனநாயகத்தின் சின்னமான நாடாளுமன்றத்தை அட்டாக் பண்ணிய காஷ்மீர் அப்சல் குரு தூக்கிலிடப்பட்டான். இப்போது வீரப்பன் கூட்டாளிகளான மாதையன், சைமன் உள்ளிட்ட நால்வருக்கு தூக்கு உறுதி செய்யப்பட்டு, எந்த நேரமும் தூக்கிலிடப்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ராஜீவ் கொலையாளிகள் மூவரின் தூக்குத்தண்டனை இந்த போராட்டத்தின் பின்னணியில் இருக்கிறது. அவர்களின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட பிறகு, அந்த மூவரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிறகு அதையே காரணம் காட்டி சில வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள். அந்த வழக்கில் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவது நிறுத்தி வைக்கப்பட்டது. அடுத்த கட்ட விசாரணைகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், திடீரென்று சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. "சென்னை நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரிப்பதற்கான சூழ்நிலை இல்லை. ஆகவே சுப்ரீம் கோர்ட்டே இந்த விசாரணையை எடுத்துக் கொள்ள வேண்டும்" என்று காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் வழக்கு தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து, அந்த வழக்கு இப்போது சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது.

அந்த வழக்கில் எழுந்துள்ள முக்கிய கேள்வி "நீண்ட காலம் தண்டனையை அனுபவித்துள்ளார்கள். அவர்களின் கருணை மனுக்கள் பல வருடங்கள் கழித்து தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அப்படி தாமதமாக கருணை மனுக்களை தள்ளுபடி செய்ததே தூக்குத் தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைப்பதற்கு ஏற்ற காரணம்" என்ற முக்கியமான வாதத்தை எடுத்து வைத்துள்ளார்கள். இதே மாதிரியான வாதம் பஞ்சாப் முதல்வராக இருந்த பீந்த்சிங்கை கொலை செய்த குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை வழக்கிலும் எழுப்பப்பட்டு, அதுவும் சுப்ரீம் கோர்ட் முன்பு நிலுவையில் உள்ளது. வீரப்பன் கூட்டாளிகள் விடயத்திலும் அதே காரணம்தான். ஏனென்றால் அவர்களும் ஏற்கனவே 25 வருடங்களாக ஜெயிலில் இருக்கிறார்கள். பயங்கரவாதி கசாப், அப்சல் குரு, வீரப்பன் கூட்டாளிகள் என்று வரும் இந்த கருணை மனு நிராகரிப்பு படலத்தின் அடுத்த கட்டம், ராஜீவ் கொலையாளிகளான பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவருக்கும் ஆபத்தாக மாறும் என்று இங்குள்ள தமிழ் அமைப்புகளும், ஈழத்தமிழர்களுக்காக போராடும் கட்சிகளும் கருதுகின்றன. அதனால்தான் வீரப்பன் கூட்டாளிகள் நால்வரின் தூக்குத் தண்டனையை எதிர்த்து தமிழகத்தில் பெரும் எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளது.

இந்நிலையில், புதிய குடியரசு தலைவராக வந்த பிரணாப் முகர்ஜி அடுத்தடுத்து கருணை மனுக்களை நிராகரித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்த "ஆக்டிவிஸம்" தமிழகத்தில் உள்ள தமிழ் அமைப்புகளையும் பதற வைத்திருக்கிறது. அதனாலேயே அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதை எதிர்த்து தமிழகத்தில் போராட்டங்கள், ஆர்பாட்டங்கள் நடைபெற்றன. அதில் தமிழ் அமைப்புகளும் பங்கேற்றன. குறிப்பாக உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறனே அக்கூட்டத்தில் கலந்து கொண்டு தூக்குத்தண்டனைக்கு எதிராக பேசினார். "அப்சல் குருவிற்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது சரியா" என்று கேள்வி எழுப்பி, இஸ்லாமிய அமைப்புகள் விவாதங்கள் நடத்தி வருகின்றன. இதிலும் தமிழ் அமைப்புகள் ஆர்வத்துடன் கலந்து கொள்கின்றன. ராஜீவ் கொலையாளிகளின் தூக்குத் தண்டனையை மனதில் வைத்தே இந்த விடயங்களில் எல்லாம் தமிழ் அமைப்புகள் தீவிரம் காட்டி போராடி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் "ஜூடிஷியல் ஆக்டிவிஸம்" 2-ஜி அலைக்கற்றை ஊழல் உள்ளிட்ட பல மெகா ஊழல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. அதற்கு உறுதுணையாக இந்திய கணக்காயம் (சி.ஏ.ஜி) போன்ற அமைப்பும் இருந்தன. இப்போதும் கூட "இந்தியாவிற்கு ஹெலிகாப்டர் வாங்கியதில் இத்தாலியில் ஊழல்" என்று கிளம்பிய புகாரைத் தொடர்ந்து, சி.ஏ.ஜி,யும் விரைவில் அறிக்கை கொடுக்கப் போகிறது. அரசியல் சட்ட அமைப்புகள் ஒவ்வொன்றும் "ஆக்டிவிஸம்" என்ற உத்வேகத்தில் இருக்கும்போது, தூக்குத்தண்டனைகளுக்கு எதிராக வரும் கருணை மனுக்களை உடனுக்குடன் தள்ளுபடி செய்து வரும் "குடியரசு தலைவரின் ஆக்டீவிஸம்" அரசியல் தலைவர்களையும், ஆட்சியிலிருப்பவர்களையும் மிரள வைத்திருக்கிறது. இந்திய அரசியல் சட்டத்தின் 72ஆவது பிரிவின் படி குடியரசு தலைவருக்கு சில அதிகாரங்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒரு முக்கியமான அதிகாரம் "தூக்கு தண்டனையை" குறைக்கும் அதிகாரம். இந்திய அமைச்சரவையின் பரிந்துரைப்படி இந்த அதிகாரத்தை பெரும்பாலான குடியரசு தலைவர்கள் மிகவும் அரிதாகவே இதுவரை பயன்படுத்தி வந்தார்கள். அதுவும் குறிப்பாக பல நேரங்களில் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கவே பெரிதும் இந்த அதிகாரத்தை பயன்படுத்துவார்கள். ஏனென்றால், இந்திய நீதிமன்றங்கள் "அரிதினும் அரிதான வழக்குகளில்" மட்டுமே குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை விதித்து வருகின்றன. அதுவும் மனித உரிமைகளை பாதுகாக்கும் அமைப்புகளின் உச்சகட்ட "ஆக்டிவிஸம்" இருக்கின்ற இதுபோன்ற சூழ்நிலையில், தூக்கு தண்டனை விதிப்பது என்பது நீதிமன்றங்களில் நடைபெறும் மிகவும் "அரிதிலும் அரிதான" விடயம். சமீபத்தில் டெல்லியில் நடந்த பெண் கற்பழிப்பு விடயத்தில் கூட அனைவரும் "குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தபோது, அது பற்றி பரிந்துரை செய்ய அமைக்கப்பட்ட வர்மா கமிஷன், "அரிதிலும் அரிதான வழக்குகளில் தூக்குத் தண்டனை விதிக்கலாம்" என்று மட்டுமே பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது. ஆகவேதான் "கருணை மனுக்கள்" விடயத்தில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் வித்தியாசமான செயல்பாடுகள், மற்ற குடியரசுத் தலைவர்களிடமிருந்து இவரை வேறுபடுத்திக் காட்டுகிறது.

பிரணாப் முகர்ஜிக்கு முன்பு இருந்த குடியரசு தலைவர் பிரதீபா பாட்டில் "தூக்கு தண்டனை" விதிக்கப்பட்டவர்கள் குடியரசு தலைவருக்கு கொடுத்த கருணை மனுக்களை அப்படியே நிலுவையில் வைத்து விட்டே சென்றார். அவருக்கு தூக்குப் போடுவதில் இஷ்டமில்லை என்பதை பறைசாற்றும் விதமாக நாட்டின் நாடாளுமன்றத்தைத் தாக்கிய அப்சல்குருவின் கருணை மனுவைக்கூட ஏற்கவும் இல்லை, நிராகரிக்கவும் இல்லை. அவரது காலம் செயல்படாத "ராஷ்டிரபதி காலம்" என்ற பல அரசியல் தலைவர்களும் குறை கூறினார்கள். ஆனால் அவருக்கு முன்பு இருந்த குடியரசு தலைவர் அப்துல் கலாமோ தூக்குத் தண்டனை பற்றி மாறுபட்ட கருத்துக் கொண்டிருந்தார். மிகக் கடுமையான குற்றம் என்று கருதினால், அதில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்தார். அவரது ஐந்தாண்டு காலத்தில் அவர் நிராகரித்த கருணை மனு ஒன்றே ஒன்றுதான். அதனால் ஒரேயொருவர்தான் தூக்கிலிடப்பட்டார். ஆனால் அதே சமயம், அப்துல்கலாம் தூக்குத் தண்டனை ஏற்புடையதல்ல என்ற கருத்தையும் கொண்டிருந்தார். இதை அவர் எழுதியுள்ள "டேர்னிங் பாயின்ட்" என்ற புத்தகத்தில் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறார்.

அப்துல் கலாம் பொதுவாக தூக்கு தண்டனை விதிப்பதற்கு எதிரானவராக இருந்ததற்கான காரணத்தை அவரே அந்த புத்தகத்தில் இவ்வாறு எழுதியிருக்கிறார். அதில், "குடியரசு தலைவராக எனக்கு இருந்த மிகப்பெரிய சங்கடங்களில் ஒன்று தூக்கு தண்டனையை உறுதி செய்வதுதான். இந்த பொறுப்பை எந்த குடியரசு தலைவரும் மனமுவந்து ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்" என்று குறிப்பிட்டு விட்டு, "நாமெல்லாம் கடவுளின் குழந்தைகள். ஆகவே மனித நடைமுறைகளோ (ஹீயுமன் ஸிஸ்டம்), அல்லது ஒரு மனிதனோ செயற்கையாக மற்றும் உருவாக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் ஒரு மனிதனின் உயிரை பறிப்பதற்கு தகுதி படைத்தவனல்ல என்பதே என் கருத்து" என்று தனது கருத்தை வெளிப்படையாகவே எழுதியிருக்கிறார். அது மட்டுமல்ல, தூக்குத் தண்டனை வழங்கும் முன்பு நீதிமன்றங்கள் சம்பந்தப்பட்ட குற்றவாளியின் தன்மை, அந்த குற்றத்தின் தாக்கம், அந்த குற்றம் சாட்டப்பட்டவரின் சமூக பொருளாதார நிலைமைகள் போன்றவற்றை தனியாக "இன்டெலிஜெண்டாக" விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூட நீதிமன்றங்களுக்கே அட்வஸ் பண்ணியிருந்தார் அப்துல் கலாம். இந்த அடிப்படையில் பார்த்தால், கருணை மனுக்கள் விடயத்தில் முன்னாள் குடியரசு தலைவர்கள் அப்துல்கலாம், பிரதீபா பாட்டீல் போன்றவர்களிலிருந்து முற்றிலுமாக மாறி நிற்கிறார் பிரணாப் முகர்ஜி என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

அப்சல்குரு தூக்கிலிடப்பட்டவுடன் காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா கொதித்து எழுந்தார். "அப்சல்குருவை தூக்கிலிட்டது அரசியல் அல்ல. செலக்ட்டீவான செயல் அல்ல என்றால் முன்னாள் பிரதமர் ராஜீவைக் கொன்றவர்களையும், பஞ்சாப் முதல்வராக இருந்த பீந்த்சிங்கை கொன்றவர்களையும் தூக்கிலிட வேண்டும்" என்று காட்டமாக அறிவித்தார். காங்கிரஸ் கூட்டணியில் முதலமைச்சராக இருக்கும் ஒமர் அப்துல்லா செய்த இந்த அறிவிப்பு, மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களை நிலைகுலையச் செய்தது. மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே உடனடியாக பத்திரிகையாளர்களை சந்தித்து, "ராஜீவ் கொலையாளிகள் தொடர்பான வழக்கு வேறு, இது வேறு. அந்த வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது" என்று விளக்கமளித்தார். ஆனாலும், அப்சல்குருவின் தூக்கு அரசியல் அல்ல என்பதை நிரூபிக்கவே இப்போது தமிழகத்தைச் சேர்ந்த "சந்தன வீரப்பனின்" கூட்டாளிகள் நால்வரின் தூக்குத் தண்டனைக்கு வழி விடும் விதமாக அவர்களின் கருணை மனுக்களை நிராகரித்துள்ளார் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி.

இதைத் தொடர்ந்து அந்த நால்வரின் குடும்பத்தினர் தமிழகத்தில் உள்ள தலைவர்களிடம் தங்கள் கணவரை காப்பாற்றும்படி கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கிறார்கள். ஞானப்பிரகாசத்தின் மனைவி செல்வமேரி, "என் கணவரை அந்தக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். கடவுளைத்தான் நம்பியிருக்கிறோம்" என்று உருக்கமாக பேட்டி கொடுத்துள்ளார். அதே நேரத்தில்,மாதையனின் மனைவி தங்கம்மாள், "எனது கணவரை காப்பாற்ற குடும்பத்தோடு தீக்குளிப்போம்" என்று கண்ணீர் மல்க பேட்டி கொடுத்திருக்கிறார். "நீண்ட பாரம்பரியம் கொண்ட இந்திய நாடும் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும்" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் ராஜா கூறியிருக்கிறார். இந்திய குடியரசு தலைவரின் "ஆக்டிவிஸம்" எதிர்காலத்தில் மரண தண்டனையை இந்தியாவின் சட்ட புத்தகங்களில் இருந்து அகற்றும் முடிவிற்கு கொண்டு போய் விடுமா என்பதே இப்போது அனைவரது மத்தியிலும் எழுந்துள்ள எண்ணம்!

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X