2025 மே 19, திங்கட்கிழமை

சர்வதேச விசாரணைக்கான கோரிக்கை வலுப்பெறுகிறது

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 21 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த மாதம் அமெரிக்காவின் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விடயத்தில் கொண்டுவரவிருக்கும் பிரேரணை - கடந்த வருடம் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணையைப் பார்க்கிலும் சற்று காரமானதாக அமையும்போல் தான் தெரிகிறது. இதுவரை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையும் ஐ.நா.வின் தீர்மானங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் வெளியிட்டு வரும் கருத்துக்களால் இது புலனாகிறது.

தாம் இலங்கை தொடர்பாக இந்த வருடமும் ஐ.நா. மனித உரிமை பேரவையில் பிரேரணையொன்றை முன்மொழியவிருப்பதாக அமெரிக்கா இவ்வாரம் மீண்டும் வலியுறுத்தியிருந்தது. அத்தோடு அண்மையில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை - இலங்கை தொடர்பாக வெளியிட்டு இருந்த அறிக்கையை தாம் அங்கீகரிப்பதாகவும் அந்நாடு கூறியிருந்தது.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் மேற்படி அறிக்கையை உலகில் முன்னணி மனித உரிமை அமைப்புக்களான மனிதஉரிமைக் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை ஆகியனவும் அங்கீகரித்துள்ளன. எனவே அவ்வறிக்கை இம்முறை மனித உரிமை பேரவையின் போது இலங்கை விடயத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் சாத்தியக்கூறுகள் அதிகம் என்றே கூற வேண்டும்.

அதேவேளை ஐ.நா மனித உரிமை ஆணையாளரும் அமெரிக்க அரசாங்கமும் மனிதஉரிமைக் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை ஆகிய மனித உரிமை நிறுவனங்களும் கடந்த முறை மனித உரிமை பேரவையில் இலங்கை விடயத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் சிபார்சுகளை நிறைவேற்றுதல் சம்பந்தமாக இலங்கை அரசாங்கம் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என்ற தொனியிலேயே கருத்து வெளியிட்டுள்ளன. இதுவும் இலங்கைக்கு பாதகமானதோர் நிலைமையாகும்.

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பரிபூரணமற்றவையென்றும் சுதந்திரத் தன்மையற்றவையென்றும் நடுநிலையற்றவை என்றும் தமது அறிக்கையில் கூறும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர், இலங்கை அரசாங்கத்திற்கு இந்த அறிக்கை மூலமும் சில சிபார்சுகளை விதிக்கிறார்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 26ஆம் திகதி தமது கடிதத்தில் கூறியவாறு உண்மைகளை கண்டறியும் பொறிமுறையொன்றை அமைக்க வேண்டும் என்பது அவற்றில் ஒன்றாகும். தீர்மானமெடுக்கும் பணிகளில் சிறுபான்மை மக்கள் பூரணமாக பங்கேற்கும் வகையில் இராணுவமயமாக்கலை குறைக்கவும் அதிகார பரவலாக்கலை முறையாக அமுலாக்கவும் மேலும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது மற்றொன்றாகும்.

இறுதியாக சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் விடயத்தில் சுதந்திரமானதும் நம்பகமானதுமான சர்வதேச விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என்ற தமது நீண்ட கால கோரிக்கையை அவர் இந்த அறிக்கை மூலமும் மேலும் வலியுறுத்தியுள்ளார். இவற்றில் மனித உரிமைகள் விடயத்தில் சர்வதேச விசாரணையொன்றை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் தலைதூக்குவது இலங்கை அரசாங்கத்திற்கு பெரும் தலையிடியை கொடுக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடனான போர் 2009ஆம் ஆண்டு மே மாதம் முடிவடைந்தவுடன் வல்லரசு நாடுகளும் ஐ.நா. அமைப்புக்களும் சர்வதேச மனித உரிமை நிறுவனங்களும் போர் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையொன்றை நடத்த வேண்டும் என்று தான் வற்புறுத்தின. ஆனால் கடந்த வருட அமெரிக்க பிரேரணையை ஏற்றதன் மூலம் அவ்வனைத்து அமைப்புக்களும் உள்நாட்டு விசாரணையொன்றை ஏற்க வேண்டியதாயிற்று.

ஆயினும் அவ்வாறு தமக்கு கிடைத்த சாதகமான நிலைமையை பாதுகாத்துக்கொள்ள இலங்கை அரசாங்கம் தவறிவிட்டது போலும். இப்போது மீண்டும் சர்வதேச விசாரணையென்ற கோரிக்கை தலை தூக்குகிறது.

இதற்குக் காரணம் இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை பாதுகாக்க தவறியமை என்றே ஐ.நா. அமைப்புக்களும் அமெரிக்காவும் கூறுகின்றன. ஆனால் தாம் அளித்த வாக்குறுதிகளுக்கு மேலதிகமாகவும் பொறுப்போடு செயற்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் கூறுகிறது.

உண்மையிலேயே கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சர்வதேச நெருக்குவாரத்திலிருந்து தப்பித்துக்கொள்ள இலங்கை அரசாங்கத்திற்கு வழி சமைத்துக் கொடுத்திருந்தது. எனினும் அரசாங்கம் ஆணைக்குழுவின் சிபார்சுகளில் சிலவற்றை மட்டுமே செயற்படுத்த ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவை சம்மந்தமாகவும் அரசாங்கம் போதியளவு சிவில் சமூகத்தோடு ஒத்துழைக்கவில்லையென்றும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளும் பரிபூரணமற்றவையென்றும் சுதந்திரத் தன்மையற்றவையென்றும் நடுநிலையற்றவையென்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் என்ற நீண்ட கால தேவைகளை பூர்த்தி செய்வதில் இலங்கை அரசாங்கம் போதியளவு நடவடிக்கை எடுக்காதமையிட்டு தாம் வெகுவாக கவலையடைவதாக அமெரிக்காவும் இவ்வாரம் கூறியிருந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை நியூயோர்க்கில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் விக்டோரியா நியூலன்ட் இக்கருத்தை வெளியிட்டிருந்தார். எனவே தமது நாடு ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை வரவேற்பதாகவும் அவர் கூறுகிறார்.

போரின்போது அரச படைகளும் தமிழீழ விடுதலை புலிகளும் பாரியளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் அவற்றைப் பற்றி விசாரிக்க அரசாங்கம் குறிப்பிடத்தக்க எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லையென்றும் கடந்த 20ஆம் திகதி கூறிய ஹியூமன் ரைட்ஸ் வொட்ச் நிறுவனத்தின் ஆசியாவுக்கான பணிப்பாளர் பிரட் அடம்ஸ், எனவே ஐ.நா. மனித உரிமை பேரவை தமது அடுத்த மாத அமர்வின்போது இப்போர் குற்றங்களை விசாரிக்க சுதந்திரமான சர்வதேச விசாரணையொன்றுக்காக அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

சர்வதேச மன்னிப்புச் சபையும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை வரவேற்பதாக கடந்த 13ஆம் திகதி கூறியிருந்தது. அதிலும் சர்வதேச விசாரணைக்கான அணையாளரின் கோரிக்கையை தான் மன்னிப்புச் சபையும் வலியுறுத்தியிருந்தது.

இவ்வாறு சர்வதேச விசாரணைக்கான கோரிக்கை மீண்டும் வலுப்பெற்று வந்தாலும் அமெரிக்க பிரேரணையின் நோக்கம் அது தான் என்று கூறுவதற்கு இதுவரை ஆதாரங்கள் இல்லை. இவ்வருட பிரேரணை கடந்த வருட பிரேரணையின் மீளாய்வாக அமையும் என்று தான் சில இடங்களில் கூறப்பட்டு இருந்தது.

எதுவாக இருந்தாலும் இலங்கை அரசாங்கம் கடந்த முறைபோல் இந்த முறை அமெரிக்க பிரேரணையை தோற்கடிக்க அவ்வளவு முயற்சிப்பதாக தெரியவில்லை. இம்முறை ஐ.நா. மனித உரிமை பேரவையின் அமர்வுக்கு அமைச்சர்கள் செல்வதில்லை என்றும் தூதுவர்கள் போன்ற அதிகாரிகளே செல்லவிருப்பதாகவும் சில செய்திகள் கூறுகின்றன. சர்வதேச கண்டனத்தை எப்படியும் தவிர்க்க முடியாது என்று நினைத்து அரசாங்கம் அவ்வாறு நடந்து கொள்கிறதா அல்லது பெரிதாக எதுவும் நடக்காது என்ற ஏதாவது உத்தரவாதத்தினால் அவ்வாறு நடந்து கொள்கிறதா என்பது தெளிவில்லை.

You May Also Like

  Comments - 0

  • GIFT Thursday, 21 February 2013 04:37 PM

    இன்றைய "பொது பல சேனா" வின் முஸ்லிம் எதிர் கள நிலவரம், ஐநா வில் இலங்கைக்கு ஆதரவை கொடுக்கும்... இதுவொரு கண்துடைப்பு

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X