2025 மே 19, திங்கட்கிழமை

முன்னொரு காலத்தில் கொண்டோடி எனும் வலை இருந்தது!

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 27 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


வரலாற்றின் நீண்ட பயணத்தில் மனித சமூகம் தனது அடையாளங்களையும் முதுசங்களையும் இழந்து கொண்டே வருகிறது. ஒவ்வொரு சமூகமும் மக்கள் கூட்டமும் தமது வாழ்வியலின் ஒவ்வொரு துறையிலும் தமக்கென்று தனித்த பல அடையாளங்களைக் கொண்டது. ஆனாலும், நவீன - இயந்திர வாழ்வில் சிக்கிக் கொண்டமையினால் நமக்கென்றான பல அடையாளங்களையும் நமது பாரம்பரியங்களையும் தொலைத்து தொலைத்துக் கொண்டே வருவது துயர்மிகு விடயமாகும்.

இவ்வாறு நமக்குள்ளிருந்து தொலைந்து போன, அல்லது நாம் இழந்து போன ஒரு விடயத்தைத் தேடி அலைந்த கதைதான் இதுவாகும்.

அதன் பெயர் கொண்டோடி வலை. ஒரு காலத்தில் நன்னீர் மீனவர்களில் ஜாம்பவான்களாகக் கருதப்பட்டவர்கள் உபயோகித்த வலையாகும். கொண்டோடி வலையைப் பயன்படுத்தும் மீனவர்களைக் கண்டாலே, ஏனைய நன்னீர் மீனவர்களுக்கு உள்ளுர ஒரு வகைப் பயம் இருந்தது. கொண்டோடி வலையோடு இந்த ஜாம்பவான்கள் களத்தில் இறங்கினால், அங்குள்ள மீன்களை அள்ளிக் கொண்டு போய் விடுவார்கள்.

ஆனால், அந்தக் கொண்டோடி வலையையும் அதனைப் பயன்படுத்துகின்றவர்களையும் இப்போதெல்லாம் காண முடிவதேயில்லை. கிட்டத்தட்ட கொண்டோடி வலை புழக்கத்தில் இருந்து மறைந்தே போய்விட்டது. ஒருபொழுது நமது நண்பர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது – கொண்டோடி வலையினையும், அதைப் பயன்படுத்தி வந்த மீனவர்களையும் பற்றிய பேச்சு எழுந்தது. அதன் பின்னர்தான் அந்த வலை குறித்த நமது தேடல் ஆரம்பித்தது.

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு தீவுக்காலை எனும் களப்புப் பகுதியில் கொண்டோடி வலைகளைப் பயன்படுத்துகின்ற மீனவர்களைக் காண முடியும் என்கிற தகவலொன்று நமக்குக் கிடைத்தது. தீவுக்காலை நோக்கி பயணமானோம்.

கொண்டோடி வலை என்பதை - வாய்ப் பக்கம் அகன்று, பின் பகுதி ஒடுங்கிய ஒரு நீண்ட சாக்கு அல்லது கோணிப்பை போன்று கற்பனை செய்து கொள்ளுங்கள். குறித்த சாக்கின் வாய்ப் பகுதியில் - வளையும் தன்மையுடைய பலமான கம்புகளை, நீள் வட்ட வடிவில் வைத்துக் கட்டினால் எப்படியிருக்குமோ, அவ்வாறுதான் கொண்டோடி வலை இருக்கும். அநேகமாக சூரை மரங்களின் கம்புகளே கொண்டோடி வலையின் வாய் பகுதியில் வைத்துக் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டு வந்ததாக அறிய முடிகிறது.

அநேகமாக, சேறு நிறைந்த களப்புப் பகுதியில்தான் கொண்டோடி வலை பயன்படுத்தப்படும். முதலில் மீன்கள் உள்ள இடங்களை அடையாளம் கண்டு கொள்ளும் மீனவர்கள் - அந்தப் பகுதியில் இறங்குவார்கள். பின்னர் களப்பிலுள்ள ஓர் இடத்தில் வலையின் முகப்புப் பகுதியினை நிமிர்த்தி வைத்து விட்டு, அதற்கு முன்னாலுள்ள பகுதிகளில் தாம் கொண்டு செல்லும் கம்புகளால் நீரில் அடித்தும், நீரின் அடிப்பகுதியில் இடித்தும் மீன் பிடித்தலை ஆரப்பிப்பார்கள். இவ்வாறு அடிப்பதற்காகப் உபயோகிக்கும் கம்பினை கொண்டோடி மீனவர்கள் 'இடி கம்பு' என்று கூறுவார்கள். சேற்றினுள் 'கூடு'களை அமைத்து வசிக்கும் மீன்களை கலைப்பதற்காகவே இடி கம்பினைப் பயன்படுத்துவார்கள்.

ஆலையடிவேம்பு தீவுக்காலைப் பகுதிக்கு நாம் சென்றபோது, அங்குள்ள சேற்றுப் பகுதியில் சிலர் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதைக் கண்டோம். அவர்கள் 'இடி கம்பி'னையும் பயன்படுத்தினார்கள். அவர்களுக்காக நாம் கரையில் காத்திருந்தோம்.

அவர்கள் நெடு நேரத்தின் பின் கரையேறினார்கள். அவர்கள் வைத்திருந்த வலையை கவனித்த போது, அது கொண்டோடி வலை இல்லை என்பதை தெரிந்துகொள்ள முடிந்தது. ஆனாலும், அந்த வலைகள் ஏதோ ஒரு வகையில் கொண்டோடி வலையை ஒத்து இருந்தன. அவை கொண்டோடி வலையை விடவும் பல மடங்குகள் நீளமுடையவையாக இருந்தன. கொண்டோடி வலையின் வாய்ப்பகுதியில் கட்டப்பட்டிருக்கும் கம்புகளுக்குப் பதிலாக - இந்த வலையில் ஈயத் துண்டுகள் பொருத்தப்பட்டிருந்தன. ஆனாலும், இதனை அவர்கள் கொண்டோடி வலை என்றுதான் அழைத்தார்கள். 'அள்ளுவலை' என்றும் இதற்கு ஒரு பெயர் இருந்தது. 

அந்த வலையினைப் பயன்படுத்தியவர்களிடம் பேச்சுக் கொடுத்தோம். அவர்கள் தங்களை கொண்டோடி மீனவர்களாகவே கூறிக்கொண்டனர். அவர்கள் பயன்படுத்துவது கொண்டோடி வலையின் வேறொரு வடிவமாக இருந்தது. ஆனால், அது கொண்டோடி வலையல்ல.

அப்படியென்றால், கொண்டோடி வலைக்கு என்ன ஆனது? கொண்டோடி வலைகளைப் பயன்படுத்துவோரை ஏன் இப்போதேல்லாம் முன்னர்போல் காண முடிவதில்லை என்கிற கேள்விகளோடும், 'நிஜமான' கொண்டோடி வலையினைக் கண்டுகொள்ள முடியாத ஏமாற்றத்தோடும் நாம் தீவுக்காலையிலிருந்து புறப்பட்டோம்.

பின்னர், அட்டாளைச்சேனை பாலைச்சோலைப் பகுதியிலுள்ள மீனவர் ஒருவர் கொண்டோடி வலையினை வைத்திருப்பதாக அறிந்து - அங்கு சென்றோம். அவரிடம் கொண்டோடி வலையொன்று இருந்தது. ஆனால், வலையின் வாய்ப் பகுதியில் நீள்வட்ட வடிவில் கட்டப்பட்டிருக்க வேண்டிய கம்புகளுக்குப் பதிலாக இவர் 'பிளாஸ்ரிக்' குழாய்களைப் பயன்படுத்தி இருந்தார். அவரிடம் நாம் பேசினோம். தன்னுடைய அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டார். 'என்னுடைய வாப்பாவிடம் கொண்டோடி வலை இருந்தது. மாட்டு வண்டில் கட்டிக் கொண்டு தனது தந்தையார் உள்ளிட்ட கொண்டோடி வலை மீனவர்கள் புட்டம்பை பகுதிக்கு மீன் பிடிக்கச் செல்வார்கள். நான் சொல்வது 40 வருடங்களுக்கு முந்தைய கதை. அப்போது எனக்கு பத்து, பன்னிரண்டு வயதிருக்கும். வாப்பாவுடன் நானும் போயிருக்கிறேன்' என்று தன்னுடைய அனுபவங்களை நம்முடன் - அவர் பகிர்ந்து கொண்டார்.

இவரிடமும், கொண்டோடி வலையின் மூல வடிவத்தினை நம்மால் கண்டுகொள்ள முடியவில்லை. மீண்டும் ஏமாற்றத்தோடுதான் திரும்ப வேண்டியிருந்தது.

ஆனாலும், நாம் சோர்வடையவில்லை. கொண்டோடி வலை பற்றி விசாரித்துக் கொண்டேயிருந்தோம். அப்போது, அம்பாறை மாவட்டம் பாலமுனைப் பகுதியிலுள்ள மீனவர் ஒருவரிடம் கொண்டோடி வலை ஒன்று இருப்பதாக நமக்குப் பழக்கமான மீனவர் ஒருவர் கூறினார்.

நீண்ட தேடலுக்குப் பிறகு, பாலமுனையில் இருக்கும் அந்த மீனவரின் வீடு சென்றோம். பல மாதங்களாக நாம் தேடி அலைந்த கொண்டோடி வலை அங்கு இருந்தது. வலை சற்று சேதமடைந்திருந்தது. ஆனாலும், புழக்கத்திலிருந்து மறைந்துபோன கொண்டோடி வலையைக் கண்டதில் மகிழ்ச்சியடைந்தோம்.

கொண்டோடி வலையும், அதனுடன் சேர்த்துப் பயன்படுத்தும் 'இடி கம்பு'ம் பாரமானவை. அந்த வலையை தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு, சேறு நிறைந்த களப்புக்களில் பயணிப்பதென்பது மிகவும் சிரமமான காரியமாகும். பலம் கொண்டவர்களால் மட்டுமே அதை செய்ய முடியும். தவிரவும், சேறு நிறைந்த களப்புக்களில் பயணிக்கும் போது, சுங்காண், கெழுத்தி போன்ற மீன்களின் முட்கள் காலில் குத்தும் ஆபத்துக்களும் உள்ளன.

நமது முன்னோர்கள் ஆரோக்கியமும் பலமும் கொண்டவர்களாக இருந்தமையினால், அவர்களால் கொண்டோடி வலைகளை மிகவும் இலகுவாகவும் லாவகமாகவும் பயன்படுத்த முடிந்தது. நீர் நிலைகளில் இறங்கிப் பயணிக்கும் போது ஏற்படும் ஆபத்துக்களை எதிர்கொள்ள முடிந்தது. கொண்டோடி வலையினை தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு 'சிறுவால்' அணிந்தவாறு கைகளை வீசி நடந்து செல்லும் மீனவ ஜாம்பவான்களை எனது சிறிய வயதில் கண்டிருக்கின்றேன். அவர்களில் அநேகர், இப்போது உயிருடன் இல்லை. அதனால், கொண்டோடி வலையும் புழக்கத்திலிருந்து மறைந்தே விட்டது.

நம்மிடமிருந்தும், நம்மைச் சுற்றியிருந்தவர்களிடமிருந்தும் நாம் இழந்துபோன அடையாளங்கள் ஏராளமானவை. அவற்றில், கொண்டோடி வலையும் ஒன்றாகும். கொண்டோடி வலைகளை இனி நமது குழந்தைகள் காண்பதற்கு வாய்ப்பில்லை. நமது குழந்தைகளைத் தூங்க வைப்பதற்காகச் சொல்லும் 'பாட்டிக் கதை'களில் மட்டுமே - அந்த வலையினால் நாம் மீன்பிடித்துக் காட்ட முடியும்.
'ஓர் ஊரில் ஒரு ராசா இருந்தானாம்...' என்கிற குழந்தைகளுக்கான கதைகளின் வரிசையில் இன்னுமொரு கதை சேர்ந்து கொள்ளும்.

'முன்னொரு காலத்தில் கொண்டோடி எனும் வலையொன்று இருந்தது....'

You May Also Like

  Comments - 0

  • junaideen Wednesday, 27 February 2013 06:39 PM

    மப்றுக், உங்கள் தேடலுக்கும் உங்கள் ஆழ்ந்த சிந்தனைக்கும் நான்மட்டும் அல்ல என்னுடைய சக நண்பர்களும் விருப்பம் தெரிவித்தார்கள், பாராட்டினார்கள். இதேபோன்று பழைய விளையாட்டுக்கள்(கிட்டிப்புள், பார்விளையாட்டு) பழைய வைத்திய முறைகள் (கண் வைத்தியம், பாம்புக்கடி வைத்தியம்) போன்றவற்றையும் ஆய்வுகள் செய்து கட்டுரைகளாக வெளியாக்க வேண்டிநிற்கும் சக சவுதிவாழ் இலங்கை நண்பார்கள்... (அ.ஹ.ஜுனைதீன்)

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X