2025 மே 19, திங்கட்கிழமை

இந்தியாவைப் பிணை எடுக்குமா இலங்கை?

A.P.Mathan   / 2013 மார்ச் 07 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் உள்ளேயும் வெளியேயும் சூடான வாதப் பிரதிவாதங்களுடன் இடம்பெற்று வருகிறது.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அதிகாரபூர்வ கூட்டத்தொடருக்குப் புறம்பாக, பக்க நிகழ்வுகளும் ஜெனிவாவில் உள்ள ஐ.நா வளாகத்திலேயே நடைபெறுவதுண்டு. கடந்தமுறை இலங்கை அரசாங்கம் ஜெனிவா தீர்மானத்தைத் தோற்கடிக்க பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தது. அதற்காகப் பல பக்க நிகழ்வுகளை இலங்கை அரசாங்கம் ஒழுங்கு செய்திருந்தது.

தீர்மானத்தைக் கொண்டு வந்த அமெரிக்கா உலக வல்லரசாக இருந்த போதிலும், உலக வரைபடத்தில் எள்ளளவு சிறிய நாடான இலங்கை, அப்போது அமெரிக்காவுடன் கடுமையான இராஜதந்திர மோதலில் ஈடுபட்டது. தனக்கு ஆதரவாக வாக்குகளைத் திரட்டுவதற்காக சீனா, ரஷ்யாவின் துணையுடன் இலங்கை எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டது. பின்னர் அதில் தோற்றுப்போனது என்பது வேறு விடயம்.

ஆனால் இம்முறை நிலைமை அப்படியில்லை.

எப்படியும் கடந்தமுறையை விடவும் கடினமானதொரு தீர்மானத்தையே அமெரிக்கா முன்வைக்கும் என்ற நிலையில் கூட, தனக்கான ஆதரவை உறுதிப்படுத்திக் கொள்ளும் பெரியளவிலான எந்த இராஜதந்திர முயற்சியிலும் இலங்கை ஈடுபடவில்லை.

கடந்தமுறை, 24 நாடுகள் தான் இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தன. ஆனால் இம்முறை, 30 நாடுகள் ஆதரிக்கும் என்று தகவல்கள் பரபரப்பாக உலவிக் கொண்டிருக்கின்ற போதிலும், இலங்கையிடம் அந்தப் பரபரப்பைக் காணவில்லை.

எதிலும் ஓர் அலட்சியம், கண்மூடித்தனமாக நிராகரிக்கின்ற போக்கையே தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது இலங்கை. இது அமெரிக்கத் தீர்மானம் தொடர்பான இலங்கையின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வியை எழுப்பத் தயங்கவில்லை.

இந்தத் தீர்மானம் தொடர்பாக அமெரிக்க நிலைப்பாடு, இந்திய நிலைப்பாடு, இலங்கையின் நிலைப்பாடு என்பன ஒரே புள்ளியில் சந்திக்க முடியுமா என்ற கேள்வியை ஏற்படுத்தி விட்டுள்ளார் இந்திய வெளிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்.

அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் தொடர்பாக இந்தியா இன்னமும் தமது அதிகாரபூர்வ நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. கடந்த முறையைப்போன்றே இம்முறையும் இந்தியா தீர்மான வரைபின் இறுதி வரைபு வரை பொறுத்திருக்க முடிவு செய்துள்ளது.

அதாவது கடைசிநேரம் வரை தன்னைச் சுற்றிப் பரப்பரப்பு சூழ்ந்திருப்பதை இந்தியா விரும்புகிறது. இறுதியான தீர்மான வரைபு தான் இந்தியாவின் நிலைப்பாட்டை முடிவு செய்யும் என்று, கடந்த புதன்கிழமை இந்திய நாடாளுமன்றத்தில் தெளிவாக கூறியுள்ளார் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங். அவ்வாறாயின், தற்போதைய தீர்மான வரைபு இந்தியாவுக்கு பிடிக்கவில்லை என்பதே அர்த்தம். அதனை மாற்றுமாறு அழுத்தம் கொடுக்கிறது என்பதே அதன் பொருள்.

இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதை இந்தியா விரும்பினாலும் – அமெரிக்கத் தீர்மானம் தலையிடும் வகையிலானதாக இல்லாமல் - வெறும் நடைமுறைத் தீர்மானமாகவே இருப்பதாலும், இதனை ஆதரிக்க இந்தியா விருப்பப்படுகிறது.

ஆனால், அந்தத் தீர்மானம் இலங்கையை சிக்கலுக்குள் தள்ளிவிடும் அளவுக்கு கடுமையானதாக இருப்பதையும் இந்தியா விரும்பவில்லை. கடந்த ஆண்டும் இந்தியாவே, அமெரிக்கா கொண்டு வந்த இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை வலுவற்றதாக்கியது.

அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இலகுபடுத்தி இலங்கையைக் காப்பாற்றியது இந்தியாவே என்று அப்போது பெருமையாக குறிப்பிட்டிருந்தார் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங். கிட்டத்தட்ட இப்போதும் அவரது அந்த மனோநிலை மாறவில்லை என்பதையே, தீர்மான இறுதி வரைபு தான் இந்தியாவின் முடிவைத் தீர்மானிக்கும் என்ற அவரது கருத்து புலப்படுத்தியுள்ளது. அதாவது, இப்போதும் இலங்கையைக் காப்பாற்றுவதே இந்தியாவின் முதல் தெரிவாக இருக்கிறது.

அதேவேளை, இந்தியாவுக்கு உள்ளக நெருக்கடிகளும் வலுவாக இருப்பதால், எதையெதையோ சொல்லி சமாளித்துக்கொள்ளப் பார்க்கிறது. இந்தநிலையில் தான், எல்லோரதும் இணக்கப்பாட்டுடன் தீர்மானத்தைக் கொண்டு வரும் புதிய யோசனையை வெளியிட்டுள்ளார் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்.

தீர்மான வரைபு குறித்து இலங்கையே அமெரிக்காவுடன் பேசி இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்றும், அது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அமைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் அர்த்தம் என்னவென்றால், அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை, இலங்கை எதிர்க்கக் கூடாது என்பது மட்டுமல்ல. இலங்கை, ஏற்றுக் கொள்ளதக்களவுக்கு அது இலகுவானதாகவும் அமைய வேண்டும் என்பதே.

அதேவேளை, இந்த விவகாரத்துக்குள் தாம் இம்முறை நுழைந்துகொள்ள விரும்பாதது போலவும் இந்தியா காட்டிக் கொள்கிறது. கடந்தமுறை இந்தியாவே தீர்மானத்தைப் பலவீனப்படுத்தியது என்பது ஒரு குற்றச்சாட்டாகவே உள்ளது.

அதேவேளை, அதே இந்தியா தான் இப்போது இலங்கையின் செயற்பாடுகளில் அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. எனவே, மீண்டும் போய் தீர்மான வரைபைத் திருத்த வேண்டும், கடினமாக இருக்கக் கூடாது என்று வலியுறுத்த இந்தியா விரும்பவில்லை. அது தனது இருப்புக்கு அவ்வளவு நல்லதல்ல என்று இந்தியா கருதுகிறது போலும். அதனால் தான் இம்முறை இலங்கையை வைத்தே, அமெரிக்காவுடன் பேசி ஓர் இணக்கப்பாட்டுக்கு வர வைக்க முனைகிறது.

இதன்மூலம் இலங்கையைக் காப்பாற்ற இந்தியா முனைகிறதோ இல்லையோ, தன் மீதான நெருக்கடிகளை தவிர்த்துக்கொள்ள எத்தனிக்கிறது என்பது மட்டும் உண்மை. ஏனென்றால், இலங்கை விவகாரம் என்பது புதுடெல்லிக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது.

“ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்” என்ற பழமொழி தான், புதுடெல்லியின் நிலையை ஞாபகப்படுத்துகிறது.

அமெரிக்கத் தீர்மானத்துக்கு இலங்கை இணங்கிவிட்டால், அதனை எதிர்ப்பதில்லை என்று இலங்கை முடிவு செய்துவிட்டால் போதும், இந்தியாவுக்கு பெரிய நிம்மதி. காரணம், அந்தத் தீர்மானம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு விடும். அதனால், இலங்கைக்கு எதிதாக வாக்களிக்க வேண்டிய இக்கட்டான நிலை இந்தியாவுக்கு ஏற்படாது.

பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழனாக நடந்து கொள்வதற்கு இந்த உத்தி நன்றாகவே கைகொடுக்கும் என்று கருதுகிறது இந்தியா. இதனால் தான், தீர்மான வரைபு குறித்து, அமெரிக்காவுடன் பேசி ஓர் இணக்கப்பாட்டை எட்டுமாறு இந்தியா ஆலோசனை கூறியுள்ளது.

முன்னதாக, தீர்மானத்தை எதிர்க்க வேண்டாம் என்று இலங்கையை வலியுறுத்திய இந்தியா, இப்போது அமெரிக்காவுடன் பேசி முடிவு செய்யச் சொல்கிறது. இந்த விடயத்தில் கௌரவம் பார்க்க வேண்டாம் என்று கூறியுள்ளார் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்.

இந்தநிலையில், இந்தியாவை நெருக்கடியில் இருந்து காப்பாற்றும் பொறுப்பு இலங்கையிடம் வந்துள்ளது.

அதாவது, அமெரிக்காவுடன் இணங்கிப்போய் தீர்மான வரைபை உருவாக்குவதன் மூலம் ஜெனிவாவில் நெருக்கடியில் இருந்து இந்தியாவை விடுவிப்பதா இல்லையா என்பது கொழும்பின் கைகளில் தான் உள்ளது.

இந்தநிலையில், அமெரிக்கத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு இலங்கை இணங்கிப் போகப் போகிறதா அல்லது இந்தியாவின் யோசனைக்கு மாறாக தனது முடிவில் இறுக்கமாகவே நின்று கொள்ளப் போகிறதா என்பது தான் முக்கியமான கேள்வியா இருக்கிறது.

You May Also Like

  Comments - 0

  • ss Friday, 08 March 2013 05:06 AM

    இந்திய ஓட்டு இல்லாவிட்டாலும் இந்த தீர்மானத்தில் இலங்கை தோற்கப்போவது உறுதி! அடுத்த வருடம் எலெக்க்ஷனில் தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு டப்பாதான்....!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X