2025 மே 19, திங்கட்கிழமை

ஜெனிவாவில் என்ன செய்யப்போகிறது இந்தியா?

A.P.Mathan   / 2013 மார்ச் 13 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான நகர்வுகள் தீவிரமடைந்துள்ளன. அடுத்தவாரம், இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் விவாதிக்கப்படவுள்ளது.

இந்தத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படுமா – இல்லையா? இந்தத் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவளிக்குமா – இல்லையா? இந்த இரண்டும் தான் இப்போதைய முக்கிய வினாக்களாக உள்ளன.

இலங்கைக்கு எதிரான தீர்மானம் தோற்கடிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் ஜெனிவாவில் இல்லை. எப்படியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விடும் என்பதில் சந்தேகம் அரசாங்கத்துக்குக் கூட இருப்பதாகத் தெரியவில்லை. கடந்த ஆண்டு தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, இறுக்கமான கடும் சூழல் காணப்பட்டது.

தீர்மானத்தை வெற்றிபெற வைப்பதற்கும் தோற்கடிப்பதற்கும் அமெரிக்காவும் இலங்கையும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டிருந்தன. அத்தகைய சூழலில் கூட, இலங்கை அரசாங்கம் எப்படியும் தோற்று விடுவோம் என்றே கருதியிருந்தது. தீர்மானம் தோற்கடிக்கப்படும் வரையில் இதனை அரசாங்கம் வெளியே சொல்லவில்லை.

தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர், எதிர்பார்க்கப்பட்ட முடிவு தான் என்று பேராசிரியர் திஸ்ஸ விதாரண போன்ற அமைச்சர்கள் கூறியிருந்தனர். ஆனால் கடந்தமுறை போல, அமைச்சர்களோ அரசாங்கமோ, தீர்மானம் தோற்கடிக்கப்படும் என்று அழுத்திக் கூறி நம்பிக்கையூட்டத் தயாராக இல்லை. ஆனால், எப்படியாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விடும் என்பதில், அரசாங்கத்துக்குச் சந்தேகம் இல்லை.

காரணம், கடந்தமுறை இருந்தளவு ஆதரவு இலங்கைக்கு இம்முறை இல்லை. கடந்தமுறை பெரும் பக்க பலமாக இருந்த சீனா, ரஸ்யா, கியூபா போன்ற நாடுகள் இப்போது ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் வாக்களிக்கும் தகைமையைக் கொண்டிருக்கவில்லை.

இன்னொரு காரணம், போர் முடிந்து நான்கு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் இறுதியான அமைதியை ஏற்படுத்தத் தவறியுள்ளது மட்டுமன்றி, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் விடயத்திலும், எந்தவொரு நாட்டையும் திருப்திப்படுத்தத் தவறியுள்ளது.

உலகில் எந்தவொரு நாடுமே, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை, போதியளவில் நடைமுறைப்படுத்தியுள்ளது என்றோ, திருப்தியான முறையில் நடைமுறைப்படுத்தி வருகிறது என்றோ கருத்துக் கூறவில்லை.

சாதகமற்ற இந்தநிலையில், அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டு விடும் என்று இலங்கை அரசாங்கம் நம்புகின்ற ஒரு நிலை இருக்குமேயானால், அது மிகவும் பரிதாபத்துக்குரிய நிலையில் உள்ளது என்றே அர்த்தம்.

எனவே, தீர்மானம் நிறைவேற்றப்படுமா இல்லையா என்பது இப்போதைய பிரச்சினையல்ல. இந்தத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படுமா, இந்தியா இதனை ஆதரிக்குமா என்பனவே முதன்மையான பிரச்சினை. இந்த இரண்டு கேள்விகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டுள்ளன.

அதாவது, அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படுவதை விரும்பாத சில நாடுகளில் இந்தியாவும் ஜப்பானும் முக்கியமானவை. இவை இரண்டுமே இப்போது, மதில் மேல் பூனையாக இருக்க விரும்புகின்றன.

தமது சார்புநிலை வெளிப்பட்டு விடாமல் இருப்பதற்காக, இந்த நாடுகள் தீர்மானம் வாக்கெடுப்புக்கு வருவதைத் தவிர்க்க நினைக்கின்றன. அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விடப்படாமலேயே, ஏற்றுக் கொள்ளும்படி இலங்கைக்கு இந்தியா ஆலோசனைகளைக் கூறியுள்ளது.

அதாவது அமெரிக்காவின் தீர்மானத்தை இலங்கை ஏற்றுக்கொள்வதன் மூலம் - அதனுடன் இணங்கிப் போவதன் மூலம் அதனை சாத்தியப்படுத்த முடியும். ஆனால், அவ்வாறு இணங்கிப் போவதானால், இப்போதைய தீர்மான வரைபின்படி, நடுநிலையான சர்வதேச விசாரணையை ஏற்றுக்கொள்ள வேண்டி வரும். இந்தியா கூட, இந்த வரைபை ஏற்கவில்லை. அதாவது சர்வதேச விசாரணைக் குழு இலங்கைக்குள் வருவதை இந்தியா வரவேற்கவில்லை.

எனவேதான் அமெரிக்காவுடன் பேசி, இந்த வரைபில் திருத்தங்களை செய்து ஓர் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளும்படி இந்தியாவை வலியுறுத்தி வருகிறது. இந்தியாவின் அறிவுரைப்படி, இலங்கை நடந்து கொள்வதானால், வாக்கெடுப்புக்கு கோராமலேயே ஒதுங்கி நிற்கவேண்டும். அவ்வாறு செய்தால், தீர்மானத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டதாகி விடும். இது முழுமையான சரணாகதிக்கு ஒப்பானது.

இலங்கையைப் பொறுத்தவரையில், சர்வதேச நகர்வுகளுக்கு எதிராக நின்று பிடிக்கும் ஒரு தன்மையை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் வெளிப்படுத்தி வந்துள்ளது. அதாவது, சர்வதேச சக்திகள் எல்லாம், இலங்கை அரசைக் கவிழ்க்கச் சதி செய்கின்றன, அதற்கெல்லாம் பணியப் போவதில்லை என்ற விம்பம் ஒன்றை அரசாங்கம் உருவாக்கி வைத்துள்ளது.

ஜெனிவா தீர்மானத்தை எதிர்க்காமல் - வாக்கெடுப்புக்கு கோராமல் அரசாங்கம் ஒதுங்கி கொண்டால், அந்த விம்பம் உடைந்துபோய் விடும். அடுத்து, அமெரிக்கத் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டால், சர்வதேச விசாரணையை எதிர்கொள்வது மட்டும் சிக்கலில்லை.

தீர்மானத்தை இலங்கை நடைமுறைப்படுத்தியுள்ளதா என்பது குறித்து 24ஆவது அமர்வில், அதாவது இன்னும் ஆறு மாதங்களில் இடைக்கால உள்ளக அறிக்கையை எதிர்கொள்ள வேண்டும்.

25ஆவது அமர்வில், அதாவது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இறுதி அறிக்கை மற்றும் விவாதம் நடத்தப்படுவதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவை இலங்கைக்கு ‘இடிக்கின்ற‘ விடயங்கள்.

அதாவது, இந்தியாவின் சங்கடங்களைப் போக்கிக் கொள்வதற்காக, தான் நெருக்கடியில் சிக்கிக்கொள்ள இலங்கை விரும்புமா என்ற சிக்கல் உள்ளது.

ஆனால் இன்னொரு பக்கத்தில் இலங்கை விரும்பியோ விரும்பாமலோ, தீர்மானம் நிறைவேற்றப்படும் நிலை உள்ளதால், இந்தியாவின் ஆதரவைக் கருத்தில் கொண்டு, வாக்கெடுப்பைக் கோராமலும் விடமுடியும்.

இலங்கை அரசாங்கம் இந்த தீர்மான விடயத்தில் பலத்த குழப்பத்தை எதிர்கொண்டுள்ளது. அதனால் தான், தெளிவான முடிவொன்றை எடுக்க முடியாதுள்ளது. இனி இந்தியா என்ன செய்யப் போகிறது என்ற கேள்விக்கு விடை தேடலாம்.

இலங்கை வாக்கெடுப்பைக் கோராது போனால், தப்பித்தோம் என்று இந்தியா இருந்து விடும். ஆனால், இந்தியாவின் பேச்சை மீறி, தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பை நடத்த இலங்கை கோரினால், இந்தியாவின் பாடு தான் திண்டாட்டமாகி விடும்.

கடந்த வாரம் இருந்த சூழல், இந்திய நிலைப்பாடு இலங்கைக்கு சார்பானதாக இருக்கவில்லை. அதாவது தமிழ்நாட்டின் அழுத்தங்கள் காரணமாக, தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கூடிய வாய்ப்புகளே அதிகமிருப்பதாக கருத வைத்தன.

ஆனால் இப்போதைய நிலைமை அவ்வாறு இல்லை என்பதைக் கவனத்தில் எடுக்க வேண்டும்.

ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள, உண்மை கண்டறியும் பொறிமுறையை இந்தியா ஏற்கத் தயாரில்லை. இந்த உண்மை கண்டறியும் பொறிமுறை என்பது, ஒரு சர்வதேச விசாரணைப் பொறிமுறை தான்.

அவ்வாறு ஒரு குழு அமைக்கப்பட்டு, இலங்கையில் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரிக்கப்படுவதை இந்தியா விரும்பவில்லை. அது இந்தியாவையும் பொறிக்குள் தள்ளிவிடும் என்று கருதுவதால், இறைமை பற்றி அதிகமாகவே பேசுகிறது.

எந்த விசாரணையானாலும் அதை உள்நாட்டுக்குள் தான் மேற்கொள்ள வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. முன்னதாக, நவநீதம்பிள்ளையின் அறிக்கையை இணைத்து, அதை வரவேற்பது என்ற போர்வையில், உண்மை கண்டறியும் பொறிமுறையை உருவாக்கும் வரைபை அமெரிக்கா வெளியிடவில்லை. இரண்டாவது வரைபில் தான் அந்த அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இது சேர்க்கப்பட்டதும் இந்தியா எச்சரிக்கையாகி விட்டது.

இதனால் தான், இந்திய நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் மட்டுமன்றி, ஏனைய அரசியல் கட்சிகளும் கடுமையான குரல் கொடுத்த போதிலும் பிடிகொடுக்காமல் நழுவியது மன்மோகன்சிங் அரசு.

பிரதமர் மன்மோகன்சிங் ஆகட்டும், வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகட்டும், கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்காமல் பதிலளிக்கின்றனர். சல்மான் குர்ஷித் ஒரு கட்டத்தில் பிறநாடுகளின் உள்விவகாரங்களில் இந்தியா தலையிடுவதில்லை என்று கூடக் கூறினார்.

இப்போதைய நிலையில், இதே தீர்மான வரைபு ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, வாக்கெடுப்புக்கு விடப்பட்டால், இந்தியா அதனை ஆதரிக்காது என்றே கருத வேண்டியுள்ளது.

அவ்வாறு ஆதரிப்பது என்ற முடிவை எடுப்பதானால் கூட, வேறு வழியற்றதொரு நிலையில் தான் அந்த முடிவை எடுக்கும். அவ்வாறாயின் இந்தியா தீர்மானத்தை எதிர்க்குமா? என்ற கேள்வி எழுகிறது.

தீர்மானத்தை ஆதரிக்காது போனால், எதிர்ப்பது மட்டும் தான் ஒரே தெரிவு இல்லை. இன்னொரு தெரிவும் உள்ளது, அது தான் நடுநிலை வகிப்பது.

கடந்த ஆண்டு தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, அதனை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட மலேசியா நடுநிலை வகித்தது. உண்மையில் மலேசிய தீர்மானத்தை ஆதரிப்பதாகவே இருந்தது.

ஏனென்றால், மலேசியாவில் உள்ள தமிழர்களின் அழுத்தங்கள் அத்தகைய சூழலை உருவாக்கியது. ஆனால், இறுதி நேரத்தில் நிலைமை மாறியது. மலேசியப் பிரதமருடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொலைபேசியில் பேசினார்.

அந்த தொலைபேசிப் பேச்சுக்கான சூழலை அப்போது உருவாக்கியவர், மலேசியத் தூதுவராக இருந்த கொடகே. இதன் விளைவாக, மலேசிய நடுநிலை வகித்தது. இதுபோன்று இம்முறை இந்தியாவும் நடுநிலை வகிப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

உள்நாட்டு நெருக்கடிகள் காரணமாக, தீர்மானத்தை எதிர்க்கின்ற முடிவை இந்தியாவினால் எடுக்க முடியாது. அது மன்மோகன்சிங் அரசாங்கத்தைப் பொறுத்தவரை தற்கொலைக்கு ஒப்பானது. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் 40 ஆசனங்களைக் கொண்ட தமிழ்நாடு மற்றும் புதுவையை ஒட்டுமொத்தமாகவே கைகழுவி விடுவதற்கு அது சமனாகும். எனவே தீர்மானத்தை எதிர்த்து, இந்தியா வாக்களிக்க முடியாது. நடுநிலை வகிப்பது ஒன்றே அதன் தெரிவாக இருக்கும்.

ஆனால், தீர்மானத்தில் திருத்தம் செய்வதற்கு இந்தியா இறுதிவரை முயற்சிகளை மட்டும் மேற்கொள்ளும். அது எந்தளவுக்கு சாத்தியமாகும் என்று கூறமுடியாது.

ஜெனிவா தீர்மானம் விவாதத்துக்கு வந்து வாக்கெடுப்புக்கு விடப்படும் வரை இலங்கையால் மட்டுமன்றி மன்மோகன்சிங் தலைமையிலான இந்திய அரசாங்கத்தினாலும் கூட நிம்மதியாக இருக்க முடியாது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X