2025 மே 19, திங்கட்கிழமை

இலட்சினை போனாலும் ஹலால் ஹலால்தான்... ஆனால் அடுத்த கட்டம்?

Menaka Mookandi   / 2013 மார்ச் 13 , பி.ப. 03:54 - 14     - {{hitsCtrl.values.hits}}

'ஹலால் வேண்டாம்' என்ற வார்த்தைகளுடன் அண்மைக் காலமாக நாட்டில் சில பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன. இந்த சுவரொட்டிகளில் இருப்பதை பின்பற்றி வாழ முற்பட்டால் இவற்றை எழுதியவர்களும் ஒட்டியவர்களும் உட்பட நாட்டில் அனைவரும் பட்டினியால் உயிரிழக்க வேண்டியிருக்கும். நிர்வாணமாக இருக்க வேண்டியிருக்கும். திருடி தான் பணம் சம்பாதிக்க வேண்டியிருக்கும். அவ்வாறு இல்லாவிட்டால் அவர்கள் பன்றி இறைச்சி போன்ற முஸ்லிம்கள் ஹராம் என்று கூறும் உணவு வகைகளை சாப்பிட்டு வாழ வேண்டியிருக்கும்.

ஏனெனில் சோறு, பாண் போன்று நாட்டில் நாம் அனைவரும் உட்கொள்ளும் உணவு வகைகள் தான் ஹலால் உணவு என்று முஸ்லிம்களால் அழைக்கப்படுகின்றன. அவற்றை வேண்டாம் என்றால் எதை சாப்பிடுவது? நியாயமாக சம்பாதித்த பணத்தில் வாங்கியவை தான் ஹலாலாக கருதப்படுகின்றன. இவை வேண்டாம் என்றால் பட்டிணியும் நிர்வாணமும் தான் விடையாகக் கிடைக்கும். 

முஸ்லிம்கள் மட்டுமல்லாது எந்தவொரு சமூகத்திற்கும் உண்ணவும் உடுக்கவும் தொழில் செய்யவும் திருமணம் செய்து கொள்ளவும் வாழ்க்கையில் தேவையான ஏனையவற்றுக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொருட்களோ அல்லது ஏற்றுக் கொள்ளப்பட்ட முறைகளோ இருக்கின்றன. கொரியாவில் மக்கள் உண்ணும் சில இறைச்சி வகைகளை இலங்கையில் எந்த இனத்தவரும் உண்பதில்லை. சிலர் ஈடுபட்டாலும் விபசாரத்தை எந்த சமூகமும் ஏற்றுக் கொள்வதில்லை.

இலங்கையில் ஓரிரு உணவுப் பொருட்கள் தவிர்ந்த அரிசி, பருப்பு பாண் போன்ற சகல உணவுப் பொருட்களும் நாட்டில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவையே. அரபி வார்த்தைகளை பிரயோகிப்பதாக இருந்தால் அவை எல்லோருக்கும் ஹலாலானவையே. முஸ்லிம்கள் இஸ்லாமிய போதனைகளின்படி தாம் ஏற்றுக் கொண்டவற்றை ஹலாலானவை என்கின்றனர். ஏற்றுக்கொள்ளாதவற்றை ஹராமானவை என்கின்றனர். அவற்றில் ஹலால் இலட்சினை பொறிக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பது முக்கியமல்ல.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை 2005ஆம் ஆண்டில் ஆரம்பித்த இந்த ஹலால் இலட்சினை வழங்குதல் இன்று நாட்டில் பெரும் புரட்சியாக்கப்பட்டுள்ளது. அதனால் நாட்டில் ஏற்பட்ட பதற்ற நிலைமை காரணமாக தேசிய பாவனைப் பொருட்களிலிருந்து அந்த இலட்சினையை அகற்றுவதற்கு உலமாச் சபை இணக்கம் தெரிவித்துள்ளது. ஏற்றுமதிப் பொருட்கள் மட்டும் ஹலாலானவை என்று இலவசமாக சான்றிதழ் வழங்குவதற்கும் அச்சபை இணங்கியிருக்கிறது. ஆனால் பொது பல சேனா என்ற பெயரில் புதிதாக தோன்றியுள்ள அமைப்பும் ஜாதிக்க ஹெல உருமயவும் ஹலால் சான்றிதழ் முறையே ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றனர். எனவே பிரச்சினை முடிவடைந்ததாக கருத முடியாது.

ஹராம், ஹலால் என்ற விடயங்கள் பாவனைப் பொருட்கள் மற்றும் வாழ்க்கை முறை ஆகிய சகலவற்றிலும் பின்பற்ற வேண்டியதாக இருந்தாலும் பெரும்பாலான முஸ்லிம்கள் பிரதானமாக உணவு வகைகளைத் தான் ஹராம், ஹலால் என்று பிரித்து பார்க்கின்றனர். இந்த ஹலாலான பொருட்களை விலைக்கு வாங்குவதற்கான பணத்தை ஹலாலான முறையில் சம்பாதிக்க வேண்டும் என்று சிந்திக்கும் முஸ்லிம்களின் எண்ணிக்கை மிகவும் குறைவே.

ஹலால் இலட்சினை அறிமுகப்படுத்தப்பட்ட 2005ஆம் ஆண்டுக்கு முன்னர் பல்லாயிரம் ஆண்டுகளாக இலங்கை முஸ்லிம்கள் தமது பொது அறிவை பயன்படுத்தி ஹராமான பொருட்களையும் ஹலாலான பொருட்களையும் பிரித்து அறிந்து பாவித்தனர். 2005ஆம் ஆண்டுக்குப் பின்னரும். பல முஸ்லிம்கள் அவ்வாறே பொருட்கள் ஹலாலானவையா ஹராமானவையா என்பதை தீர்மானிக்கின்றனர். சில முஸ்லிம்கள் இந்த ஹலால் சர்ச்சை வந்ததன் பின்னரே பொருட்களில் இவ்வாறானதோர் இலட்சினை இருப்பதை அறிந்து கொண்டனர். எனவே ஹலால் இலட்சினையை இல்லாதொழித்ததன் காரணமாக முஸ்லிம்கள் பெரிதாக எதனையும் இழக்கவில்லை.
 
சில பொருட்கள் ஹலாலானவையாக (இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட்டவையாக) இருந்த போதிலும் அவற்றை தயாரிக்கும் போது உபயோகிக்கப்படும் சில பொருட்கள் ஹலாலானவையல்ல. கேக்கில் பிராண்டி போடப்பட்டிருந்தால் கேக் ஹலாலாகாது. எனவே அது போன்ற சந்தர்ப்பங்களில் ஹலால் இலட்சினை முஸ்லிம்களுக்கு உதவியது என்பது தான் உண்மை.
 
அதேவேளை கடந்த ஏழு ஆண்டுகளாக பல பொருட்களில் ஹலால் இலட்சினை பொறிக்கப்பட்டு இருந்தது. அப்பொருட்கள் விகாரைகளிலும் நுகரப்பட்டன. அக்காலத்தில் இந்த இலட்சினையால் பௌத்தர்கள் அடைந்த நட்டம் என்று கூறுவதற்கும் எதவும் இல்லை.

ஹலால் சான்றிதழ் பெறுவதற்காக வர்த்தகர்கள் செலுத்தும் பணத் தொகையின் காரணமாக பொருட்களின் விலை அதிகரிப்பதாக கூறப்பட்டாலும் அத்தொகை கணக்கெடுக்க முடியாதளவு குறைந்தது என இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பிரதிநிதிகள் அண்மையில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாடொன்றின் போது கூறியிருந்தனர்.

சான்றிதழுக்காக வர்த்தகர்கள் பணம் செலுத்த வேண்டும் தான். ஆனால் சான்றிதழினால் அதிகரிக்கும் வர்த்தகத்தால் அதைவிட பன் மடங்கு வருமானம் அவர்களிடம் வந்தடைகிறது. எனவே தான் அவர்கள் சுய விருப்பத்தில் சான்றிதழை தேடி வந்தனர்.

எனவே ஹலால் சான்றிதழினால் பெரும்பான்மை சமூகம் நட்டமடைந்ததாக கூற முடியாது. ஆனால் பொரும்பான்மை இனத்தவர்கள் மத்தியில் இருக்கும் சிலர் தமது ஆதிக்க வெறி மனப்பான்மையை முஸ்லிம்களிடம் காட்டி திருப்தி காண்பதற்காகவே இது போன்ற பல்வேறு பிரச்சினைகளை அரங்கிற்கு கொண்டு வருகின்றனர்.  

ஹலால் இலட்சினை இல்லாதொழித்ததன் காரணமாக முஸ்லிம்கள் பெரிதாக எதனையும் இழக்கவில்லை என்றாலும்; பேரினவாதிகளின் ஆதிக்கவாதத்தின் மிரட்டல்கள் காரணமாகவே ஹலால் இலட்சினை அகற்றப்படுகிறது. இது முஸ்லிம்களுக்கு பெரும் அவமானம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

ஆனால் நாட்டில் ஆங்காங்கே சிதறி வாழும் முஸ்லிம்களிடம் இதற்குப் பரிகாரம் இருப்பதாகவும் தெரியவில்லை. சிதறி வாழ்வது மட்டுமல்லாது இந்த மிரட்டல்களுக்கு பின்புலத்தில் இருக்கும் சக்திகளைப் பற்றி வரும் பல்வேறு வதந்திகளின் காரணமாகவும் பெரும்பான்மையின புத்திஜீவிகள் மௌனம் சாதிக்கும் நிலையிலும் முஸ்லிம்களுக்கு பொறுமை தவிர வேறு வழியில்லை போல் தான் தெரிகிறது.

ஹலால் பிரச்சினையைப் பற்றி ஆராய்ந்து தீர்வு காண்பதற்காக அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் முடிவுக்கு காத்திராது ஹலால் இலட்சினையை தேசிய விற்பனைப் பொருட்களில் இருந்து அகற்றிக் கொள்வதென்ற முடிவுக்கு வர உலமாச்சபை ஏன் அவசரப்பட்டது என்பது தெளிவில்லை.

அதேவேளை இலவசமாக ஹலால் சானறிதல் வழங்க முடியும் என்றால் அதனை ஆரம்பத்திலிருந்தே ஏன் இலவசமாக வழங்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. இலவசமாக வழங்கும் போது இதற்கான இரசாயன கூட கட்டணங்களை செலுத்துவது யார் என்பதையும் உலமாச் சபை விளக்கியிருக்க வேண்டும்.

ஹலால் இலட்சினையை தேசிய சந்தையில் இருந்து அகற்றுவது போதாது என்றும் ஹலால் சான்றிதழ் முறையே ஒழிக்கப்பட வேண்டும் என்றும் பொது பல சேனாவும் ஜாதிக்க ஹெல உருமயவும் கூறுகின்றன. அவ்வாறு செய்வதால் ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்களே பாதிக்கப்படுவார்கள். இதனால் சாதாரண முஸ்லிம்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். ஆனால் முஸ்லிம்கள் அவர்கள் சொல்வதெல்லாம் செய்ய நேரிடுவது தான் இங்குள்ள பிரச்சினையாகும்.

பொறுமை வேண்டும் என்ற காரணம் தவிர இந்த ஹலால் சர்ச்சையின் போது முஸ்லிம்களிடமும் ஒருமித்த கருத்து இல்லை. பொறுமை வேண்டும் என்று கூறிய போதிலும் முஸ்லிம்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் பாதுகாப்பான சூழலில் உள்ளவர்கள் பிரச்சினையை அணுகும் முறையும் ஏனையவர்கள் பிரச்சினையை அணுகும் முறையும் சிலவேளைகளில் வேறுபடுகிறது. உலமாச் சபையின் முடிவு தொடர்பிலும் இந்த வேறுபாடு தெரிகிறது. இந்த வேறுபாடுகளின் காரணமாக சில முஸ்லிம்கள் வெளியிடும் கருத்துக்களையும் பொது பல சேனா போன்ற சக்திகள் முஸ்லிம்களுக்கு எதிராகவே பாவிக்கின்றன. 

உலமாச் சபையின் முடிவு தமிழ் சமூகத்திலும் சில தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது போலும். சில தமிழ் தலைவர்களும் ஊடகங்களும் அந்த முடிவை விமர்சித்துள்ளனர். இதில் நியாயம் இல்லாமலும் இல்லை. சிலர் முஸ்லிம்களின் ரோஷத்தை தூண்ட முற்படுகிறார்கள். அது விஷமத்தனமானது. அதேவேளை தம்மைப் பொன்ற மற்றொரு சிறுபான்மை சமூகம் அவமானப்படுத்தப்படுகிறதே என்ற ஆதங்கமும் வேறு சிலரது விமர்சனங்களில் தெரிகிறது.

முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இந்த சக்தி இப்போது மூத்த பிக்குகளையும் தாக்க முற்பட்டுள்ளது. அவர்கள் இலஞ்சம் வாங்குபவர்களாக வர்ணித்துள்ளது. அது கட்டுக்கடங்காத நிலையில் இருப்பதை மூத்த பிக்குகள் உணர ஆரம்பித்துள்ளனர். இந்த கட்டுப்பாடற்றத் தன்மையின் விளைவை முஸ்லிம்கள் மட்டுமல்லாது அதிகாரத்திலுள்ளவர்களும் எதிர்க்கொள்ள வேண்டியிருக்கும்.

You May Also Like

  Comments - 14

  • Kuhan Wednesday, 13 March 2013 04:30 PM

    "சிலர் முஸ்லிம்களின் ரோஷத்தை தூண்ட முற்படுகிறார்கள்."
    உங்களுக்கு சிங்களவன் அடிச்சாலும் குற்றமில்லை அதை தமிழன் கேட்டா குற்றம். --- நியாயமான சிந்தனை.

    உங்களுக்கு சிங்களவன் அடிச்சாலும் குற்றமில்லை அதை தமிழன் கேட்டா குற்றம். --- நியாயமான சிந்தனை.')">Reply : 0       0

    Mohammed Hiraz Thursday, 14 March 2013 04:03 AM

    உங்களுடைய புரிதல்தான் தப்பு, நியாயத்தை சுட்டி காட்ட நீங்கள் யார் என்று உங்களையே வினவுங்கள் உண்மை தெளியும். உரிமை இல்லாதோரின் விடயத்தில் தலையிடா கொள்கைதான் உசிதம்...

    Reply : 0       0

    mohamed Razmi Thursday, 14 March 2013 08:22 AM

    நடுநிலையான பகுப்பாய்வு. மார்க்கம் பேசும் சில பிரசாரப் பீரங்கிகளிடம் இது இல்லாது போனது இலங்கை முஸ்லிம்களின் துரதிர்ஷ்டமே!

    இனியாவது மக்களின் அபிலாஷைகளை அறிந்து உலமா சபை தனது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ளுமா?

    Reply : 0       0

    குமார் Thursday, 14 March 2013 10:35 AM

    உண்மையில் நாம் சரியாக முஸ்லிம்களை விளங்கிக்கொள்ளாதது தான் காரணம். முஸ்லிம்கள் எந்த ஒரு பிரச்சினையிலும் சிங்களவர்களுக்கு சார்பாகவே இருந்துள்ளனர். தமிழர்களுக்கு சிங்களவர்கள்தான் முதல் எதிரி ஆனால் முஸ்லிம்களுக்கு தமிழர்கள்தான் முதல் எதிரி. அதனால்தான் சிங்கள முஸ்லிம் பிரச்சினையில் தமிழர்கள் கருத்து சொல்வது அவர்களுக்கு பிடிக்கவில்லை. இதை எம்மில் சிலர் சரியாக விளங்கிக்கொள்ளாமல் தமிழ் பேசும் மக்கள் என்றெல்லாம் பேசி வருகின்றனர்.

    Reply : 0       0

    minesh Thursday, 14 March 2013 10:49 AM

    உங்களுக்கு சிங்களவன் அடிச்சாலும் குற்றமில்லை அதை தமிழன் கேட்டா குற்றம். நான் ஆமோதிக்கிரேன்...

    Reply : 0       0

    minesh Thursday, 14 March 2013 10:51 AM

    agreed with you

    Reply : 0       0

    SANOOS SAHABDEEN Thursday, 14 March 2013 01:27 PM

    VARAVAETKATH THAKKA SIRANTHATHORU AAKKAM......

    Reply : 0       0

    Mohanmed Hiraz Friday, 15 March 2013 06:49 PM

    ஏனெனில் எதற்காகவும் நாம் சொந்த நாட்டை காட்டி கொடுக்கும் துரோகத்தை செய்பவர்கள் அல்ல...

    Reply : 0       0

    ashba Saturday, 16 March 2013 08:20 AM

    கோழியிடம் கேட்டு காயம் ஆத்த முடியாது. நல்லதொரு ஆக்கம் சகோதரரே.

    Reply : 0       0

    jaks Sunday, 17 March 2013 04:49 AM

    முஸ்லிம் அமைச்சர்கள் எம்பிக்கள் என்ன செய்கின்றார்களோ?

    Reply : 0       0

    குமார் Monday, 18 March 2013 07:01 AM

    உங்களுடைய நாட்டுபற்றை பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். இலங்கை - பாகிஸ்தான் கிரிகெட் போட்டியின்போது இதை நன்றாகவே பார்க்கலாம். இவ்வளவு நாட்டுபற்றுள்ளவர்கள் ஏன் ஹலால், ஹிஜாப் போன்ற சிறு விடயங்களுக்கு இவ்வளவு பிரச்சினை செய்ய வேண்டும்? நாட்டுக்காக தியாகம் செய்யலாமே.

    Reply : 0       0

    Dr. M.Siddique Tuesday, 19 March 2013 05:30 PM

    இங்கே பல தமிழ்ச் சகோதரர்கள் உண்மையில் முஸ்லிம்கள் பற்றி அனுதாபப்படுகிறார்கள் என்பது உண்மைதான். ஆயினும் 1915 சிங்கள-முஸ்லிம் கலவரத்தின் போது சிங்களவருக்குச் சார்பாக லண்டன்வரை சென்ற சேர். பொன் இராமநாதனின் துரோகத்தை முஸ்லிம்களுக்கு மறக்க முடியாமலிருக்கிறது என்பதும் உண்மை. இந்தத் துரோகமும் 1915இன் பயங்கர அனுபவங்களுமே தமிழர்களை ஆதரித்துச் சிங்கள மக்களைப் பகைத்துக்கொள்ள முஸ்லிம்கள் தயங்குவதற்கான காரணம் என்று எனது மதிப்பிற்குரிய தமிழ் ஆசிரியர் ஒருவரே கூறினார். 65% ஆன முஸ்லிம்கள் சிங்கள மக்களிடையே வாழும்போது அவர்களைப் பகைத்துக் கொள்வது தற்கொலைக்குச் சமன்.

    Reply : 0       0

    MADURANKULI KURANKAR Wednesday, 20 March 2013 05:15 PM

    முஸ்லிம் அமைச்சர்கள், சிங்கள அமைச்சர்களுக்கு பேன் பார்க்கிறார்கள்...

    Reply : 0       0

    Kuhan Friday, 22 March 2013 08:53 AM

    சேர். பொன் இராமநாதன் செய்தது தவறு. புலி செய்ததும் தவறு.
    1983 சிங்கள-தமிழ் கலவரத்தின்போது முஸ்லிம்கள் சிங்களவருக்கு தமிழ் மக்களின் சொத்துக்களை காட்டி கொடுத்து, சூறையாடியதையும்,
    முஸ்லிம்கள் இராணுவத்துடன் சேர்ந்து தமிழ் மக்களின் சொத்துக்களை சூறையாடியதையும் தமிழர்களுக்கு மறக்க முடியாமலிருக்கிறது என்பதும் உண்மை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X