2025 மே 19, திங்கட்கிழமை

இந்த வாய்ப்பையும் நழுவவிட்டால், அடுத்தது…?

A.P.Mathan   / 2013 மார்ச் 20 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்

இலங்கையில் 2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த போரில் இடம்பெற்றதாக கூறப்படும் மனிதஉரிமை மீறல்கள் இப்போது சர்வதேச அளவில் சர்ச்சைக்குரிய விவகாரமாக மாற்றமடைந்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், இதே காலப்பகுதியில் போர் முடிவுக்கட்டத்தை அடைந்திருந்தபோது, குண்டுவீச்சுகள், உயிரிழப்புகள், காயங்கள் பற்றிய செய்திகள் ஊடகங்களில் வெளியாகிக் கொண்டிருந்தன.

போரில் காயமுற்ற, சுகவீனமுற்ற பொதுமக்கள், நூற்றுக்கணக்கில் கடல் வழியாக சர்வதேச செஞ்சிலுவைக் குழு மூலம் வெளியேற்றப்பட்டனர்.

அமெரிக்காவினதும், ஐ.நாவினதும், செய்மதிகள் பிடித்த படங்கள், சூடு தவிர்ப்பு வலயங்களிலும் குண்டுகள் விழும் தடயங்களைப் புலப்படுத்தியபோதிலும், அப்போது போரை நிறுத்தும் முயற்சிகளிலோ, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முயற்சிகளிலோ உரிய கவனம் செலுத்தப்பட்டிருக்கவில்லை.

போரின்போது, ஐ.நாவின் செயற்பாடுகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட சாள்ஸ் பெட்றி குழுவின் அறிக்கையில், பொதுமக்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க ஐ.நா தவறி விட்டதாக கூறப்பட்டுள்ளது.

போர் முடிவுக்கு வந்த பின்னர் தான், இந்தப் போரின்போது தாம் தவறிழைத்து விட்டதான உணர்வு சர்வதேச சமூகத்துக்கு உறைக்கத் தொடங்கியது. இதுவே, இப்போது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்த நம்பகமான – நடுநிலையான - சுதந்திரமான விசாரணை என்ற அழுத்தமான கோரிக்கையின் அடிப்படை.

போரின்போது பொதுமக்களில் ஒருவர் கூடக் கொல்லப்படவில்லை என்றும், பொதுமக்கள் கொல்லப்படாத வகையில் போரை நடத்தும் அரசாங்கத்தின் இறுக்கமான கொள்கை கடைசிவரை நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் இராணுவத்தரப்பு திரும்பத் திரும்பக் கூறுகிறது.

ஒரு கட்டத்தில் போரின்போது, குறிப்பிட்டளவு பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், போர் ஒன்றில் பொதுமக்கள் கொல்லப்படுவதை தவிர்க்க முடியாது என்றும் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ போன்றவர்கள் கூறியிருந்தனர்.

ஆனால், அதை மறுக்கும் வகையில் பொதுமக்கள் எவரும் இராணுவத்தினரின் தாக்குதலில் கொல்லப்படவில்லை என்று தனது முதற்கட்ட விசாரணை அறிக்கையில் கூறியிருந்தது இராணுவ விசாரணை நீதிமன்றம்.

போரின்போது, பொதுமக்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என்றால், காயமுற்ற நூற்றுக்கணக்கானோரை செஞ்சிலுவைச் சங்கம் எப்படி கப்பலில் மீட்டு வந்தது? போர் இடம்பெற்ற காலத்தில் இறந்தவர்கள் பற்றி அரசாங்கம் எடுத்த கணக்கெடுப்புகளின்போது, திடீரென 2009ஆம் ஆண்டில் மட்டும் வடக்கில் மரணங்கள் அதிகரித்தது எப்படி?

Enumeration of Vital Events ‐ 2011 ‐ Northern Province, Sri Lanka என்ற தலைப்பில் அரசாங்கம் வெளியிட்ட ஓர் அறிக்கை, 2008ஆம் ஆண்டில் வடக்கு மாகாணத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,657 என்பதையும், 2009ஆம் ஆண்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 11,172 ஆக அதிகரித்திருந்ததையும் வெளிப்படுத்தியிருந்தது. போரில் இறந்த புலிகளை உள்ளடக்காமல் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது.

இதில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மட்டும் 2008ஆம் ஆண்டைவிட 2009ஆம் ஆண்டில் 6 மடங்கு அதிக இறப்புகள் நிகழ்ந்துள்ளதை இந்த புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டின. அதிலும் 7,934 பேரின் மரணங்கள் இயற்கையாக நிகழவில்லை என்றும் அந்த அரசு புள்ளிவிபரம் கூறியிருந்தது. போரின் போது ஏற்பட்ட மரணங்களே இவை என்பது வெளிப்படையானது.

இப்படியிருக்கும்போது, ஒரு கட்டத்தில் அரசாங்கம் போரில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதை ஏற்றுக்கொண்ட போதிலும், இராணுவ நீதிமன்ற விசாரணைக் குழு அதனை முற்றிலும் நிராகரித்தது.

போர் முடிவுக்கு வந்த நான்கு ஆண்டுகளில், இந்தப் போரில் இறந்தவர்கள், காணாமற்போனவர்கள், காயமடைந்தவர்கள் பற்றிய சரியானதொரு கணக்கெடுப்பைக் கூட அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.

கடந்தவாரம், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் உரையாற்றியபோது, போரில் இறந்தவர்கள் பற்றிய கணக்கெடுப்பை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை அரசின் குழுவுக்குத் தலைமை வகித்த அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டிருந்தார்.

போரில் கொல்லப்பட்ட பொதுமக்கள் பற்றி, ஒவ்வொருவரும் ஒவ்வொரு தகவலை வெளியிடுவதாக பாதுகாப்புச்செயலர் கோட்டாபய ராஜபக்ஷ அடிக்கடி கிண்டலடிப்பதுண்டு. இது 10 ஆயிரத்தில் இருந்து ஒரு இலட்சம் வரை வேறுபடுவதாக சுட்டிக்காட்டி நிராகரிக்கும் அவர், ஒருபோதும் கொல்லப்பட்ட பொதுமக்களின் சரியான எண்ணிக்கை இதுதான் என்று சொன்னது கிடையாது.

ஒருமுறை பிபிசி பேட்டியின் போது, 5,000 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று அவரும் அதேபோன்று தான் கணக்கு காட்டியிருந்தார். போரின்போது பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளையும், மனிதஉரிமை மீறல்களையும் போருடன் முடிந்துபோன கணக்காகவே முடிவு கட்டியிருந்தது அரசாங்கம்.

போரின்போது நடந்தவை பற்றி இனிமேல் எவரும் பேசப்போவதில்லை என்றே அது கருதியிருந்தது. அந்த தவறான கணிப்புத் தான் இலங்கை அரசாங்கத்தை இந்த நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

நான்கு சுவர்களுக்குள் இதுபற்றி நம்பகமான விசாரணைகளை அரசாங்கம் நடத்தியிருந்தால், இப்போதைய நெருக்கடி ஒருபோதும் அரசாங்கத்துக்கு வந்திருக்காது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுகின்றனர் என்று தெரிந்திருந்தும் வெளிநாடுகள் மௌனமாக இருந்தன. அந்தப் போர் பேரவலங்களுடன் முடிவுக்கு வந்த போதிலும் – அதையும் மௌனமாக ஏற்றுக் கொண்டன.

இலங்கையில் அமைதி ஏற்படும் என்ற நம்பிக்கையில் தான் வெளிநாடுகள் அதை வரவேற்றன. ஆனால், அரசாங்கம் அந்த சர்வதேச நம்பிக்கையை காப்பாற்றிக்கொள்ளத் தவறிவிட்டது. இது தான், இப்போதைய நெருக்கடிகளின் அடிப்படை.

இப்போது இலங்கை அரசாங்கத்தை தவிர, மற்றெல்லா நாடுகளும் மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து நம்பகமான விசாரணைகள் நடரத்தப்பட வேண்டும் என்றே கூறுகின்றன. சீனா, ரஷ்யா, கியூபா, பாகிஸ்தான், ஈரான் போன்ற நாடுகள் இலங்கைக்கு பலமான ஆதரவை வழங்கினாலும் கூட, அந்த நாடுகள் ஒன்றுமே போரின்போது மீறல்கள் நடக்கவில்லை என்றோ அதுபற்றி விசாரிக்கத் தேவையில்லை என்றோ கூறவில்லை.

விசாரணை எந்த அடிப்படையில் நடத்தப்பட வேண்டும் என்பதில் தான் அந்த நாடுகள் முரண்படுகின்றவே தவிர, குற்றங்கள், மீறல்கள் நடக்கவில்லை என்று ஒருபோதும் கூறியதில்லை. இந்த நாடுகள் எல்லாம், கொஞ்சம் மென்போக்குடன் எந்த விசாரணைகள் என்றாலும் அதை இலங்கையே விசாரிக்க வேண்டும் என்கின்றன.

அதேவேளை, மேற்குலக நாடுகள் மற்றும் மனிதஉரிமை அமைப்புகள் நம்பகமான - நடுநிலையான சர்வதேச விசாரணையை வலியுறுத்துகின்றன. அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் இரண்டுக்கும் நடுவே, நம்பகமான நடுநிலையான உள்ளக விசாரணையை வலியுறுத்துகின்றன. அதாவது குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் அணுகுமுறையில் தான் உலகம் பிளவுபட்டு நிற்கிறதே தவிர, குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் நிலையில் இல்லை.

இலங்கை அரசாங்கம், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், நியாயமான நம்பகமான ஒரு விசாரணைப் பொறிமுறையை உருவாக்கியிருந்தால், இப்போதைய நெருக்கடிகளில் இருந்து ஓரளவுக்கேனும் தப்பித்துக் கொண்டிருக்கலாம்.

ஆனால், அரசாங்கம், கடந்த முறை அமெரிக்கா தீர்மானம் கொண்டு வரப்போகிறது என்று தெரிந்ததும், ஓர் இராணுவ விசாரணை நீதிமன்றத்தை அமைக்க உத்தரவிட்டது. ஆனால் அதை சர்வதேச சமூகம் கருத்தில் எடுக்கவேயில்லை.

ஏனென்றால், குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான இராணுவத் தரப்பின் மூலம் நடத்தப்படும் விசாரணைகளை ஏற்கத்தக்க நிலையில் சர்வதேசம் இல்லை.

தற்போது, ஜெனிவாவில் கொண்டு வரப்படும் தீர்மானம் சர்வதேச விசாரணைகளுக்கான அடிப்படையாக இல்லாவிட்டாலும், நம்பகமான ஒரு விசாரணைக்கு அழுத்தம் கொடுப்பதாகவே இருக்கப்போகிறது.

இந்தியாவின் நிலை கூட, நம்பகமான நடுநிலையான விசாரணை ஒன்றை இலங்கை நடத்தியாக வேண்டும் என்பதாக மாறியுள்ளது.

சோனியா காந்தி, மன்மோகன் சிங், சல்மான் குர்ஷித் போன்றவர்கள் வெளியிட்டுள்ள கருத்துகள், சர்வதேச விசாரணைக்கான அழுத்தங்களை கொடுக்காத போதிலும், நம்பகமான நடுநிலையான விசாரணையின் தேவையை உணர்த்தியுள்ளன.

இப்போது, இலங்கை அரசாங்கம், நம்பகமான நடுநிலையான விசாரணை அழுத்தங்களில் இருந்து இனிமேலும் நழுவிக்கொள்ள முடியாத நிலைக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் போர் முடிவடைந்தபோது கிடைத்த வாய்ப்புகளை தவறவிட்டது போன்று, இந்த வாய்ப்பையும் அரசாங்கம் நழுவ விடுமானால், அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகினது மட்டுமன்றி, இந்தியாவினதும் ஒரே தெரிவாக, சர்வதேச விசாரணைப் பொறிமுறையாகவே இருக்கும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X