2025 மே 19, திங்கட்கிழமை

ஜெனீவா பிரேரணையில் இடம்பிடித்த 'சர்வதேச விசாரணை...'

Menaka Mookandi   / 2013 மார்ச் 26 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தொடர்பாக அமெரிக்காவினால் ஐ.நா. மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை கடந்த 21ஆம் திகதி நிறைவேறியது. பிரேணைக்கு ஆதரவாக கடந்த முறை 24 நாடுகள் வாக்களித்திருந்த போதிலும் இம்முறை 25 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. அதற்கு எதிராக வாக்களித்த நாடுகளின் எண்ணிக்கை கடந்த வருடத்தைப் பார்க்கிலும் இரண்டு குறைந்து 13ஆக இருந்தது.

ஆனால் இதைக் கொண்டு மட்டும் இலங்கைக்கான சர்வதேச ஆதரவு குறைந்து வருவதாக முடிவு செய்ய முடியாது. ஏனெனில் கடந்த வருடம் பேரவையில் இலங்கைக்கு ஆதரவளித்த பல நாடுகள் இம்முறை பேரவையில் அங்கம் வகிக்கவில்லை.

பிரேரணைக்கு ஆதரவளிக்க வேண்டும் என இந்திய அரசாங்கத்தை வலியுறுத்தி வந்த பல இந்திய கட்சிகள், இந்தியா பிரேரணையின் காட்டத்தை குறைத்துவிட்டே வாக்களித்துள்ளது என்றும் அதன் மூலம் இந்திய அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டது என்றும் இப்போது குற்றஞ்சாட்டி வருகின்றன. ஆனால் பரேரணை நிறைவேறியமை தொடர்பாகவும் குறிப்பாக இந்தியா அதற்கு ஆதரவாக வாக்களித்தமை தொடர்பாகவும் இலங்கை அரசாங்கம் தமது அதிருப்தியை தெரிவித்துள்ளது.

உண்மையிலேயே இம்முறை சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை, கடந்த வருட பிரேரணையைப் போன்று இலங்கை அரசாங்கத்திற்கு தப்பித்துக்கொள்ள வாய்ப்பளித்ததொன்றா அல்லது எதிரக்கால அச்சுறுத்தலொன்றின் அறிகுறியா என்ற விடயத்தை ஆழமாக ஆராய்ந்தால் மட்டுமே புலனாகும்.

கடந்த முறை நிறைவேற்றப்பட்ட பிரேரணையை இலங்கையிலும் இந்தியாவிலும் ஏனைய நாடுகளிலும் வாழும் பல தமிழர்களும் இலங்கையில் சில எதிரக்கட்சிகளும் வெகுவாக பாராட்டின. ஆனால் இலங்கையில் போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எழுப்பப்பட்டு வந்த குரலை அந்தப் பிரேரணை அடக்கியது.

ஏனெனில் மேற்படி மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உள்நாட்டிலேயே விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுலாக்க வேண்டும் என்றே அந்தப் பிரேரணை வலியுறுத்துகிறது.

ஆனால் இலங்கை அரசாங்கம் மனித உரிமை பேரவையினால் வழங்கப்பட்ட அந்த வாய்ப்பை பயன்படுத்திக்ககொள்ளவில்லை. அந்தப் பிரேணையின் முன்னுரையில் வலியுறுத்தப்பட்டு இருந்த முக்கிய விடயங்களுக்கு முரணாகவே இலங்கையில் கடந்த ஒரு வருட காலத்தில் சம்பவங்கள் இடம்பெற்றன.

சட்டத்திற்கு புறம்பாக இடம்பெற்ற கொலைகள், கடத்தல்கள் தொடர்பாக விசாரணை நடத்தல், வடக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைத்தல், தடுப்புக் காவல் கொள்கையை மீளாய்வு செய்தல், சிவில் நிர்வாக நிறுவனங்களை பலம்பெறச் செய்தல், காணிப் பிரச்சினைகளை தீர்த்தல், அதிகார பரவலாக்கல் மூலம் இனப் பிரச்சினையை தீர்த்தல், கருத்துச் சுதந்திரத்தை பாதுகாத்தல் மற்றும் சட்டத்தின் ஆதிக்கத்தை நிலைநாட்டல் ஆகியன கடந்த வருட பிரேரணையின் முன்னுரையில் குறிப்பிடப்பட்டு இருந்த இலங்கை அரசாங்கத்திற்கான கடப்பாடுகளாகும். 

இவற்றைப் போலவே கடந்த வருட பிரேரணையின் பிரதான வாசகங்களும் இலங்கை அரசாங்கத்தின் கடப்பாடுகளாகவே அமைந்திருந்தன. மேலதிகமாக, இலங்கை அரசாங்கத்தின் இணக்கத்தோடு ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் இந்த கடப்பாடுகளை நிறைவேற்ற இலங்கை அரசாங்கத்திற்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்க வேண்டும் என்றும் அதில் இருந்தது.

ஆனால் இம்முறை பிரேரணையில் கடந்த வருட பிரேரணையில் உள்ளடக்கப்பட்டு இருந்த விடயங்களுக்குப் புறம்பாக வேறு சில விடயங்களும் சேர்க்ப்பட்டுள்ளன. கீழ்காணும் விடயங்கள் இவ்வருட பிரேணையின் முன்னுரையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
  • வட மாகாணசபைத் தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடத்துவதென அரசாங்கம் விடுத்துள்ள அறிவித்தலை பிரேரணை வரவேற்கிறது.
  • அபிவிருத்திப் பணிகள், கண்ணிவெடி அகற்றல் மற்றும் மீள்குடியமர்த்தல் ஆகியவற்றில் காணப்படும் முன்னேற்றத்தை வரவேற்பதோடு நீதி வழங்கல், நல்லிணக்கம் மற்றும்; வாழ்வாதாரம் ஆகிய துறைகளில் குறை காணப்படுகிறது.
  • நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் ஆகிய விடயங்கள் தொடர்பாக அரசாங்கம் சமர்ப்பித்துள்ள தேசிய செயற்பாட்டுத் திட்டம் போதுமான அளவில் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையவில்லை.
  • தொடரும் கொலைகள, சித்திரவதை, பழிவாங்கல், பயமுறுத்தல்கள், சட்டத்தின் ஆதிக்கத்திற்கு எதிரான அச்சுறுத்தல்கள் மற்றும் மத வேற்றுமை ஆகியவற்றைப் பற்றி கவலை தெரிவிக்கப்படுகிறது.
  • அதிகார பரவலாக்கல் தொடர்பான அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு கோரப்படுகிறது.
  • போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று மனித உரிமை ஆணையாளர் கடந்த மாதம் சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் கவனத்தில் கொள்ளப்படுகிறது.

கடந்த வருட பிரேரணையில் எங்கும் அரசாங்கம் விமர்சிக்கப்படவில்லை. ஆனால் இவ்வருட பிரேரணை நீதி வழங்கல், நல்லிணக்கம் மற்றும் வாழ்வாதாரம் ஆகிய துறைகளில் அரசாங்கத்தை குறை காண்கிறது, அரசாங்கத்தின் தேசிய செயற்பாட்டுத் திட்டத்தில் குறை காண்கிறது, இலங்கையில் சித்திரவதை, பழிவாங்கல், பயமுறுத்தல்கள் ஆகியன தொடர்வதாக கூறுகிறது, அதிகார பரவலாக்கல் தொடர்பாக அரசாங்கம் வாக்குறுதிகளை மீறியிருப்பதாக கூறுகிறது, மத ரீதியாக வேற்றுமை காட்டப்படுவதாக கூறுகிறது.

இவற்றில் அதிகார பரவலாக்கல் தொடர்பாக அரசாங்கம் வாக்குறுதிகளை மீறியிருப்பதாக கூறப்படும் வாசகத்தில் இந்தியா பின்புலத்தில் இருந்திருக்கலாம். ஏனெனில் இந்த விடயத்தை இந்தியா பல முறை கூறியிருக்கிறது. மத ரீதியாக வேற்றுமை காட்டப்படுவதாக கூறப்படுவதன் மூலம் அண்மைக் காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக வளர்க்கப்பட்டு வரும் குரோத மனப்பான்மையே குறிப்பிடப்படுகிறது.

பிரேணையின் பிரதான வாசகங்களிலும் பாரதூரத் தன்மை இம்முறை அதிகரித்துள்ளது. உண்மைகளை கண்டறிவதற்கான பொறிமுறையொன்று அவசியமென மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருப்பதை அவற்றின் முதலாவது வாசகத்தில் வரவேற்கப்பட்டுள்ளமை அதற்கு ஒரு உதாரணமாகும். மனித உரிமை ஆணையாளர் பேரவையின் 24ஆவது (அடுத்த வருட மார்ச் மாத) அமர்வின் போது இலங்கை நிலைவரம் தொடர்பாக வாய்மூல அறிக்கையொன்றை சமர்ப்பிக்க வேண்டும் என பிரேரணையின் 6ஆவது வாசகத்தில் கூறப்படுகிறது. பிரேரணை எந்த அளவிற்கு அமுலாக்கப்பட்டு இருக்கிறது என்பது 25ஆவது அமர்வின் போது ஆராயப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்ற விடயம் கவனத்தில் கொள்ளப்படுகிறது என்று முன்னுரையில் கூறும் பிரேரணை, உண்மைகளை கண்டறிவதற்கான பொறிமுறையொன்று அவசியமென்ற விடயத்தை பிரதான வாசகமொன்றில்; குறிப்பிடுகிறது. மொத்தத்தில் போர்க் காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களைப் பற்றிய உண்மைகளை கண்டறிய சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று பிரேரணை சூசகமாக கூறுகிறது போலும்.

ஆயினும் இப்போதைக்கு இலங்கைக்கு ஆபத்து எதுவும் இருப்பதாக தெரியவில்லை. ஏனெனில் மனித உரிமை பேரவை இலங்கை அரசாங்கத்திற்கு தமது கடப்பாடுகளை நிறைவேற்ற மேலும் ஒன்றரை வருட காலம் அவகாசம் வழங்கியிருக்கிறது. பேரவையின் 25ஆவது அமர்வின் போது மனித உரிமை ஆணையாளர் பேரவையில் சமர்ப்பிக்கவிருக்கும் அறிக்கையை அடுத்தே பேரவை அடுத்த கட்டத்திற்கு நகரும்.

சுருக்கமாக கூறுவதாயின் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணை என்ற விடயம் கடந்த வருட பிரேரணையில் இருக்கவில்லை. ஆனால் இவ்வருடம் அது கவனத்தில் கொள்ளப்படும் நிலைக்கு வந்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X