2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் இனவாதத்தின் அரசியல் நோக்கங்கள்

Kanagaraj   / 2013 ஏப்ரல் 13 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஐயூப்

தமிழ்நாட்டில் இலங்கையர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அடாவடித்தனங்கள் இலங்கையில் பலரை விசனம் கொள்ளச் செய்துள்ளது. இலங்கை தமிழர்களின் பெயரில் அவை இடம்பெற்றாலும் இலங்கை தமிழ் தலைவர்களும் தமிழ்நாட்டில் இடம்பெற்ற பல வன்செயல்களை கண்டித்தனர். நகைப்புக்குறிய விடயம் என்னவென்றால் தமிழ்நாட்டுத் தலைவர்களைப் போலவே இலங்கையிலும் இனவாதத்தை பாவித்து வாழ்க்கை நடத்தும் பொது பல சேனா போன்ற அமைப்புக்களும் தமிழ்நாட்டவர்களை பாவித்து இனவாதிகள் என்று கூறுவதே.

இலங்கையில் தமிழ் மக்களுக்காக தமிழ்நாட்டவர்கள் குரல் கொடுப்பதையோ அல்லது ஆர்ப்பட்டம் செய்வதையோ நியாயமாக சிந்திக்கும் எவரும் இனவாதம் என்று கூறுவதில்லை. அது இயல்பான இன உணர்வின் வெளிப்பாடாகும்.

இலங்கை பாதுகாப்பு படையினருக்கு தமிழ்நாட்டில் பயிற்சி வழங்க வேண்டாம் என்பதிலும் சிலவேளை நியாயம் காணலாம். (புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையே போர் நடந்த காலத்தில் அவ்வாறான பயிற்சிகளுக்கு எதிராக எவரும் குரல் கொடுக்காமை வேறு விடயம்.)
ஆனால் இலங்கையின் இனப் பிரச்சினையை காட்டி தமிழ்நாட்டுக்குச் செல்லும் விளையாட்டு வீரர்களை திருப்பி அனுப்பியுள்ளமையும் இலங்கையிலிருந்து அண்ணை வேலாங்கண்ணி தேவஸ்தானத்திற்கு தள யாத்திரைக்காக சென்றவர்களை தாக்கி விரட்டியமையும் கல்வித் தேவைகளுக்காகவும் யாத்திரைக்காகவும் தமிழ்நாட்டுக்குச் சென்ற பௌத்த பிக்குகளை தாக்கியமையும் எவ்வகையிலும் நியாயம் என்று கூற முடியாது.

அவற்றினாலும் ஐ.பீ.எல் போட்டிகளுக்காக இலங்கை கிறிக்கெட் வீரர்கள் இந்தியாவுக்கு வர வேண்டாம் என்று கூறுவதனாலும் இலங்கை தமிழர்கள் எவ்வித பயனையும் அடையப் போவதில்லை. இவ்வாறான செயல்களை இனவாதம் என்று தான் கூற வேண்டும்.

ஆனால் பொது பல சேனா போன்ற அமைப்புகளுக்கு அவ்வாறான செயல்களை பார்த்து அதோ இனவாதம் என்று கூற முடியாது. அவர்களும் அதனை தான் செய்கிறார்கள். உண்மையிலேயே தற்போது அங்கு நடப்பவற்றுக்கும் இங்கு நடப்பவற்றுக்கும் இடையே அவ்வளவு வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை.

இரண்டு இடங்களிலும் நடக்கும் சம்பவங்களுக்கு பின்னால் அரசியல் நோக்கங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் அது தெளிவாக இருக்கிறது. அடுத்த வருடம் இந்தியாவில் லோக்சபா தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதன் போது தாம் தான் இலங்கை தமிழர்களுக்காக கூடுதலான 'சேவை' செய்தோம் என்று காட்டி தமிழக மக்களின் வாக்குகளை பெறுவதே தமிழக தலைவர்களின் குறிக்கோளாக இருக்கிறது. குறிப்பாக தமிழகத்தின் பிரதான இரு கட்சிகளான திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் அகில இந்திய அண்ணா திராவிட மன்னேற்ற கழகத்திற்கும் இடையிலான போட்டியை குறிப்பிடலாம்.

ஏனெனில் இதே தலைவர்கள் தான் போர் உச்சக்கட்டத்தில் நடந்து கொண்டிருக்கும் போது 2009 அம் ஆண்டு ஆரம்பத்தில் எந்தவொரு போரின் போதும் சாதாரண மக்கள் கொல்லப்படுவது சகஜம் என்றும் புலிகளை நான் வெறுக்கிறேன் என்றும் கூறினார்கள்.

இலங்கையில் தற்பொது கிளரப்பட்டு வரும் இனவாத, மதவாத சாக்கடையின் உண்மையான உரிமையாளர்கள் தெளிவாக தெரிவதில்லை. ஆனால் அவர்களுக்கு கிடைக்கும் அரசியல் பின்புலத்தைக் கொண்டு தான் அதனை ஊகிக்க வேண்டியுள்ளது. ஏதிர்க்கட்சிகள் இந்த விடயத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறுவதற்கு ஆதாரம் இல்லை. ஆனால் எதிர்ககட்சிகளில் உள்ள இனவாதிகள் தனி நபர்களாக இனவாத சக்திகளுக்கு ஆதரவளிக்கலாம்.

ஆளும் கட்சியை பொறுத்த வரையில் ஜாதி;க ஹெல உருமய இதில் நேரடியாக சம்பந்தப் பட்டுள்ளதை காணலாம.; ஆனால் வழமையாக தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளை சாடி வரும் அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி இனவாத தீயை மூட்டுவதாக பொது பல சேனாவை சாடி வருகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் சில அமைச்சர்களும் பெயர் குறிப்பிடாமல் சிலர் இனவாதத்தை தூண்டுவதாக கூறி வருகிறார்கள். அதேவெளை ஜனாதிபதி பொது பல சேனாவுடன் பேச்சு வார்த்தையும் நடத்தியிருக்கிறார்.

பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு பொது பல சேனாவுடன் தொடர்பு இருப்பதாக சில இணையத்தளங்கள் கூறி வருகின்றன. அவர்களிடையே நேரடியான தொடர்பு இருப்பதாக தெரியவில்லையாயினும் அவ்விரு சாராரிடையே கருத்து ரீதியாக நெருக்கம் தெரிகிறது. காலியில் பொது பல சேனா அரம்பித்த பயிற்சி நிலையத்தை திறந்து வைக்க பாதுகாப்பு செயலாளர் சென்றமை தான் அவர்களிடையிலான நேரடி தொடர்பாக சுட்டிக் காட்டக் கூடியமாக இருக்கிறது.

இனங்களுக்கிடையே பகைமையை தூண்டும் இணையத்தளங்கள் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க நாட்டில் சட்டம் இல்லை என்று அரசாங்க தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் அரச தலைவர்களை விமர்சிக்கும் இணையத் தளங்களுக்கு பல்வேறு தடைகள் ஏற்படுவது எல்லோரும் அறிந்த விடயம். பொதுவாக முஸ்லிம்களுக்கு எதிரான தற்போதைய இனவாத தீயை எதிர்க் கட்சிகள் எதிர்த்து வந்த போதிலும் அரசாங்கம் அதன் பால் மிருதுவான போக்கையே கடைபிடித்து வருகிறது. எனவே தான் இதன் பின்னால் அரசாங்கம் இருப்பதாக எதிர்க் கட்சிகள் கூறி வருகின்றன.

தற்போது அரசாங்கத்திற்கு போர் வெற்றியை விற்று தேர்தல் பிரசாரத்தை நடத்த முடியாது. எனவே சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டி தேர்தல் காலம் வரும் போது தமிழ்நாட்டில் நடப்பதைப் போல் அந்த இனவாதத்தின் உரிமையாளர்களாக தாம் மாறி அம் மக்களின் வாக்குகளை பெறுவதே அரசாங்கத்தின் நேக்கமாக இருக்கிறது என சில எதிர்க் கட்சிகள் கூறுகின்றன.

இனவாதத்திற்கான அரச உதவி என்ற விடயத்தை எடுத்துக் கொண்டால் தமிழ்நாடடிலும் இலங்கையில் நடப்பதே காணக்கூடியதாக இருக்கிறது. அங்கும் யாத்திரிகளும் பிக்குகளும் தாக்கப்பட்ட போது ஆளும் கட்சி அவற்றை கண்டிக்க முற்படவில்லை.

தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் அண்மைய இனவாத தாக்குதல்களில் மற்றொரு பொதுமை இருக்கிறது. இரண்டு இடங்களிலும் தாக்குதல் நடத்தியோர் எதிர் தாக்குதலை எதிர்ப்பார்த்தே தமது தாக்குதல்களை நடத்தியிருந்தனர். குறிப்பாக தமிழ்நாட்டில் இது தெளிவாக தெரிந்தது. தமிழ்நாட்டில் பிக்குகள் மீது தாக்குதல் நடத்திய இரண்டு குழுக்களும் விடியோ கமெராக்களை தயாராக வைத்தக் கொண்டு தாக்குதல் நடத்தியமை அவர்களது நோக்கத்தை காட்டுகிறது.

பிக்குகளை தாக்குவதானது பௌத்தர்களின் மனதை வெகுவாக புண்படுத்தம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அப்போது இலங்கையில் தமிழர்கள் தாக்கப் படுவார்கள், அத் தாக்குதல்களை பதில் தாக்குதலாகவன்றி சிங்களவர்களின் கொடூரமாக எடுத்துக் காட்டலாம் என்று அவர்கள் நினைத்திருக்கலாம் போல் தான் தாக்குதலை விடியோ செய்து பரப்பியதன் மூலம் தெரிகிறது.

இலங்கையிலும் ஆங்காஙகே பள்ளிவாசல்களை தாக்குவதன் மூலம் அதனையே இனவாதிகள் எதிர்ப்பார்த்தனர் என்று ஊகிக்க வேண்டியுள்ளது.. ஏங்காவது முஸ்லிம்கள் எதிர் தாக்குதலில் ஈடுபட்டால் அதனை எதிர் தாக்குதலாகவன்றி முஸ்லிம்களின் வன்முறை என்று ஊதி பெருக்கி அதனை தமக்கு சாதகமாக்கிக் கொள்ளலாம் என்று அவர்கள் நினைத்திருக்கலாம்.

இரண்டு நாடுகளிலும் தாக்குதல் நடத்தியவர்கள் தமது சமுகத்தையே தலைகுனிய வைத்தனர். சென்னை ரயில் நிலையத்தில் வைத்து ஒரு பிக்குவை ஓட ஓட தாக்கியதை உலகமே கண்டது. இதனை இலங்கையிலும் ஒரு தமிழ் பத்திரிகை 'கறை' என்றே தமது ஆசிரியத் தலையங்கத்தில் வர்ணித்தது. இலங்கையிலும் ஒரு பௌத்த பிக்கு பிலியந்தலை பஸன் பக் நிறுவனத்தின் பாதுகாப்புக் கமெராவை நோக்கி கல்லெறிவதை தொலைக்காட்சி மூலம் முழு உலகமே கண்ட போது அது பௌத்தர்களின் கௌரவத்திற்கு ஏதுவாக இருந்திருக்காது.

இலங்கையில் இனவாதிகள் இனவாதத்தை பரப்புவதன் மூலம் தமது சமூகத்தையே சீரழிக்கிறார்கள். குரோதத்தை பரப்புவதன் மூலம் பௌத்தம் நன்மையடையும் என்று கூறலாமா? நாட்டில் சூது சட்டமாக்கப்பட்ட போது உல்லாச பிரயாணத் துறைக்கு அது அவசியமெனக் கூறி அவர்களில் பலர் அதனை ஆதரித்தனர். ஹலால் இலட்சினையைப் பற்றி கூக்குரலிடுவதை விட இந்த சூதை நிறுத்த முயற்சித்திருக்கலாமே!
குருநாகல் மாவட்டத்தில் மட்டும் மக்களின் ஆதரவில்லாததன் காரணமாக 300க்கு மேற்பட்ட விகாரைகள் மூடப்படும் நிலையில் இருப்பதாக அண்மையில் அமைச்சர் டீ.பீ ஏக்கநாயக்க கூறியிருந்தார். இந்த இனவாதத்தை ஒருபுறம் வைத்து விட்டு செய்வதற்கு எத்தனையோ விடயங்கள் இருக்கன்றன. அவ்வாறு செய்தால் அவற்றில் பலவற்றுக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஆதரவும் கிடைத்தீருக்கும்.  
தமிழ்நாட்டிலும் தலைவர்களுக்கும் இனவாதத்தை தூண்டாமல் எத்தனையோ முக்கிய விடயங்களை செய்ய முடியும்.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .