2025 மே 19, திங்கட்கிழமை

கச்சத்தீவு தீர்மானமும் வட இலங்கை மீனவர்களும்

Menaka Mookandi   / 2013 மே 10 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தமிழ் மக்களின் முன்னிலைப்படுத்தி இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பல போராட்டங்களை நடத்தி வரும் தமிழ்நாட்டுத் தலைவர்களின் சில நடவடிக்கைகளை விளங்கிக்கொள்வது கடினமாக இருக்கிறது. கச்சதீவை மீண்டும் இந்திய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று தமிழ்நாடு சட்ட சபையில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அவ்வாறானதொரு நடவடிக்கையாகும்.

இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான இந்தப் பிரேரணையால் இலங்கை அரசாங்கம் பாதிக்கப்படுமா அல்லது இலங்கை தமிழர்கள் பாதிக்கப்படுவார்களா என்பதை அவர்கள் தான் விளக்க வேண்டும். குறிப்பாக இந்தப் பிரேரணை நடைமுறைப்படுத்தப்பட்டால் இலங்கையின் வட பகுதி மீனவர்கள் கச்சத்தீவின் அருகே மீன் பிடிக்க அனுமதிக்கப்படுவார்களா என்பது தெளிவாக இல்லை. 

இலங்கை தமிழர்களின் பெயரில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களிலும் எதிர்ப்புகளிலும் ஈடுபடும் தமிழ்நாட்டுத் தலைவர்கள், கச்சத்தீவு தொடர்பான இந்தப் பிரேரணையை இந்திய மீனவர்களின் நன்மைக்காகவென்றே நிறைவேற்றியிருக்கிறார்கள். அதனை இலங்கையின் வட பகுதி தமிழ் மீனவர்கள் ஆதரிப்பார்களா என்பது சந்தேகமே.

ஏற்கனவே வட இலங்கை மீனவர்களுக்கும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் இடையே மீன் அறுவடை தொடர்பாக பிரச்சினைகள் எழுந்துள்ளன. இருநாட்டு மீனவ சங்கத் தலைவர்கள் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியும் இருக்கிறார்கள். இருநாட்டு அரசியல் தலைவர்களும் சில உடன்பாடுகளை செய்துகொண்டு இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டு மீனவர்கள் தமக்குறிய கடற் பிரதேசத்தில் இழுவைப் படகுகள் மூலம் மீன் பிடிப்பதாகவும் அதனால் தமது வருமானம் பாதிக்கப்படுவதாகவும் இலங்கை மீவர்கள் குற்றஞ்சாட்டுவதாலேயே மீனவர்களிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதேவேளை இலங்கை கடற்படையினர் தமிழ்நாட்டு மீனவர்களை தாக்குவதாகவும் சுட்டுக் கொல்வதாகவும் கூறும் தமிழ்நாட்டுத் தலைவர்கள் இதற்குப் பரிகாரமாகவே கச்சத்தீவை மீண்டும் இந்திய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்கிறார்கள்.

இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினை வடக்கு கிழக்கு பகுதிகளில் போர் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் இருந்தே தொடரும் பிரச்சினையாகும். உதாரணமாக 1976ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி இலங்கையில் வெளியாகும் தமிழ் பத்திரிகையொன்றின் முன் பக்கத்தில் பிரசுரமான செய்தியொன்றை எடுத்துக் காட்டலாம். 'பாக்கு நீரிணையில் இறால் இருப்பதற்காக இந்திய மீனவர்கள் இலங்கைக் கடலுக்குச் செல்ல முடியாது - இந்திய அரசு அதிகாரி விளக்கம்' என்ற தலைப்பில் அந்தச் செய்தி வெளியாகியிருந்தது.

இந்திய மீனவர்கள் இலங்கை கடற் பகுதியில் மீன் பிடிப்பதாக இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்திடம் செய்திருந்த முறைப்பாடொன்றை அடுத்து அதைப் பற்றி விசாரணை செய்வதற்காக ராமேஸ்வரத்திற்கு வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச் செயலாளராகவிருந்த எஸ்.சஹாப்தீனை மேற்கோள் காட்டியே இந்த செய்தி எழுதப்பட்டிருந்தது. இலங்கை கடற் படையினர் இந்திய கடற் பகுதிக்குள் புகுந்து இந்திய மீனவர்களுக்கு தொல்லை கொடுக்காதிருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சஹாப்தீன் உறுதியளித்ததாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்படடிருந்தது.

இது பிரிதொரு விடயத்திற்காக பழைய பத்திரிகைகளை ஆராயும் போது தற்செயலாக எமக்குக் கிடைத்த செய்தியாகும். அதாவது அதற்கும் (1976ஆம் ஆண்டுக்கும்) நீண்ட காலத்திற்கு முன்பிலிருந்தே இந்த மீன்பிடி சண்டை நிலவி வந்துள்ளது. இந்திய மீனவர்கள் இலங்கை கடற் பிரதேசத்தில் மீன் பிடிப்பதும் இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்களுக்கு 'தொல்லை' கொடுப்பதும் அன்றும் நடைபெற்றுள்ளது.

1976இல் தான் முதன் முதலில் இந்தப் பிரச்சினை உருவானது என்று வைத்துக் கொண்டாலும் இது இப்போதைக்கு நீண்ட கால பிரச்சினை என்பது தெளிவானது. 1976ஆம் ஆண்டு இதே மே மாதம் 14ஆம் திகதி தான் தமிழீழம் தொடர்பான வரலாற்று பிரசித்திப் பெற்ற வட்டுக்கோட்டை மாநாடு நடபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

வட்டுக்கோட்டை மாநாட்டை அடுத்து தமிழீழத்தை அடைவதற்காக மிதவாத தமிழ் தலைவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் வேகம் போதாது என்று குற்றஞ்சாட்டிய தமிழ் இளைஞர்கள், ஆயுதம் ஏந்தி போர் தொடுத்த போது இந்த மீனவப் பிரச்சினையும் புதிய பரிமானத்தை பெற்றுக் கொண்டது. இந்திய மீனவர்கள் அதன் பின்னர் மென் மேலும் இலங்கை கடற் பிரதேசத்தின் பால் ஈர்க்கப்பட்டார்கள், இலங்கை கடற்படையினரும் மென் மேலும் கூடதலான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

போர் ஆரம்பித்ததன் பின்னர் இலங்கை போராளிக் குழுக்கள் தமிழ்நாட்டை தளமாக பாவித்தார்கள். அங்கிருந்து இலங்கைக்கு ஆயுதம், மருந்து வகைகள், எரிபொருள் மற்றும் ஏனைய போர் தளபாடங்கள் கொண்டுவரப்பட்டன. அனேகமாக இருநாட்டு மீனவர்களைப போல் நடித்தே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆயுதக் குழுக்களின், குறிப்பாக தமிழீழ விடுதலை புலிகளின் இந்த நடமாட்டத்தை கட்டுப்படுத்த கடற்படையினர் மீனவர்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்தனர். இறுதியல் போர் உக்கிரமடையவே இலங்கை கடலில் மீன்பிடித் தொழில் நடக்காத நிலை ஏற்பட்டது.

1983ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கையின் மொத்த மீன் அறுவடையில் 25 வீதம் அதாவது வருடத்திற்கு 48,000 மெற்றிக் தொன் மீன் வட கடலிலேயே உற்பத்தி செய்யப்பட்டது என்றும் 2000ஆவது ஆண்டுக்குப் பின்னர் அது 1000 மெற்றிக் தொன்னாக குறைந்ததாகவும் 2008ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி சென்னையில் நடைபெற்ற மாநாடொன்றின் போது யாழ்ப்பான பல்கலைகழக புவியியல் பீடத்தைச் சேர்ந்த கலாநிதி ஒகஸ்டின் சூசை சிலுவைதாசன் கூறியதாக ஒரு செய்தி வெளியாகியிருந்தது. இந்த நிலைமை நீடிக்கவே இலங்கை கடற்பகுதியில் மீன் வளம் வெகுவாக அதிகரித்தது.

இதனால் இந்திய மீனவர்கள் முன்னரை விட கூடுதலாக இலங்கை கடற் பிரதேசத்திற்குள் நுழைய முற்பட்டனர். இலங்கைக்கு வடக்கே உள்ள கடல் வங்கால விரிகுடா, பாக்கு விரிகுடா மற்றும் மன்னார் வளைகுடா என்று மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டு விவரிக்கப்படுகிறது. இவற்றில் பாக்கு விரிகுடா மற்றும் மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளிலேயே இந்த ஊடுறுவல் கூடுதலாக கானப்பட்டது.

தமிழ்நாட்டுக்குச் சொந்தமான பல்வேறு அளவிலான சுமார் 18,000 படகுகள் பாக்கு நீரிணையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் இழுவைப் படகுகளின் எண்ணிக்கையும் கடந்த காலங்களில் பெருமளவில் அதிகரித்துள்ளது. இதனால் இந்திய கடலில் மீன் பெருக்கம் வெகுவாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்திய படகு உரிமையாளர்கள் நிர்ப்பந்திக்கப்படாவிட்டாலும் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பகுதிக்குள் நுழைய நிர்ப்பந்திக்கப்படடுள்ளனர். 

இதுவே இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதற்குக் காரணம் என இந்திய கடற்படையின் தென் கடல் கட்டளை பகுதிக்கான கொமடோர் பீ.ஈ. வான் ஹோல்டர்ன் கூறியதாக 2008ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் திகதி இந்து பத்திரிகை கூறியிருந்தது. இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பகுதிக்குள் புகாத வரை அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க இந்திய அரசாங்கம் தயாராக இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்கிருஷ்ணா, 2010ஆம் ஆண்டு ஓகஸ்ட் 11ஆம் திகதி ராஜ்ய சபையில் கூறினார்.

இலங்கை கடற்பிரதேசத்திற்குள் நுழையும் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையைக் கண்ட உடன் தப்பி ஓட முயற்சிப்பதாலேயே சுடப்படுகிறார்கள் என இந்திய கடற்படையின தென் கடலுக்கு பொறுப்பான் பிரதம கட்டளை அதிகாரியான வைஸ் அட்மிரல் கே.என். சுஷில் 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் 21ஆம் திகதி கோயம்புத்தூரில் வைத்து கூறியிருந்தார்.

இந்திய மீனவர்கள் இலங்கை கடற் பகுதிக்குள் ஊடுறுவுவது உண்மை எனினும் அதற்காக அவர்களை சுட்டுக் கொல்வதை எவராலும் நியாயப்படுத்த முடியாது. குறிப்பாக புலிகள் பற்றிய பிரச்சினை தற்போது இல்லாத நிலையில் துப்பக்கிப் பிரயோகத்தை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

இதன் காரணமாகவே எல்லையை கடக்கும் இந்திய மீனவர் மீது தாக்குதல் நடத்தாது சட்ட நடவடிக்கை எடுப்பதாக இந்திய மத்திய அரசும இலங்கை அரசும 2008ஆம் ஆண்டு இணக்கத்திற்கு வந்தது. ஆனால் அதன் பின்னரும் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றதாக செய்திகள் கூறின. எனினும் கடந்த வருடமோ இவ்வருடமோ ஒரு இந்திய மீனவரேனும் கொல்லப்படவில்லை என இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தனி கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி லோக்சபாவில் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் தான் தமிழ்நாடு சட்டசபை கச்சத்தீவை மீளப் பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. எனவே இந்திய மத்திய அரசாங்கம் இதனை பெரிதாக பொருட்படுத்துமா என்பது சந்தேகமே.

இந்த விடயத்தில் இலங்கை தமிழ் தலைவர்கள் பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிர்கள் போலும். தமது அரசியல் கோரிக்கைகளை ஆதரிக்கும் தமிழ்நாட்டுத் தலைவர்களை அவர்களால் பகைத்துக் கொள்ளவும் முடியாது. அதேவேளை தாம் பிரதிநிதித்துவப் படுத்தும் வட இலங்கை தமிழ் மீனவர்களுக்கு உரித்தான மீன் வளத்தை இந்திய மீனவர்கள் இழுவைப் படகுகள் மூலம் அள்ளிக் கொண்டு போவதை அனுமதிக்கவும் முடியாது. எனவே அவர்கள் இந்த விடயத்தில் ஏறத்தாழ பார்வையாளர்களாக இருக்கிறார்கள். அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா மட்டும் சற்று வித்தியாசமாக நடந்து கொள்கிறார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X