2025 மே 19, திங்கட்கிழமை

விடுதலைப் புலி முத்திரை

A.P.Mathan   / 2013 ஜூன் 04 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்

விடுதலைப் புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட நான்காவது ஆண்டு நிறைவை அரசாங்கம் கடந்த மாதம் வெகு விமரிசையாகக் கொண்டாடியது. ஆண்டுதோறும் விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டதைக் கொண்டாடி வரும் அரசாங்கம், இன்னொரு பக்கத்தில் புலி என்ற ஓர் உருவகத்தை வைத்தும் நாட்டை மிரட்டிக் கொண்டிருக்கிறது.
 
கடந்தவாரம் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்ட 2012ஆம் ஆண்டுக்கான தீவிரவாதம் தொடர்பான அறிக்கையில், விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் நீடிப்பதாக கூறப்பட்டிருந்தது. அந்த அறிக்கையில், விடுதலைப் புலிகளின் எந்த தீவிரவாத செயற்பாடுகள் குறித்தும் குறிப்பிடப்படவில்லை.
 
அத்தகைய சம்பவங்கள் ஏதும், 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையிலோ அல்லது வெளிநாடுகளிலோ இடம்பெறவில்லை. 2009 மே 19ஆம் திகதிக்குப் பின்னர் எந்தவொரு தீவிரவாதத் தாக்குதலும் இடம்பெறவில்லை என்று இலங்கை அரசாங்கமே உறுதி செய்கிறது.
 
அதுபோல உலகின் வேறெந்தப் பகுதிகளிலும் விடுதலைப் புலிகளின் தீவிரவாதத் தாக்குதல் நடந்ததாக அமெரிக்காவும் குறிப்பிடவில்லை. ஆனாலும் அமெரிக்கா, விடுதலைப் புலிகளை வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் தொடர்ந்து வைத்திருக்கிறது. இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகள் தொடர்பாக, அவ்வப்போது மிரட்டியே வருகிறது.
 
ஒருவகையில் சொல்லப்போனால் அமெரிக்காவும், இலங்கையும் விடுதலைப் புலிகள் என்ற பெயரைப் பயன்படுத்தி தமது இலக்குகளை அடைய முனைகின்றன என்றே கருதலாம்.
 
விடுதலைப் புலிகள் என்ற முத்திரை குத்தி எதிர்க்கட்சிகளின் அரசியல் நடவடிக்கைகளை முடக்குவதற்கு அரசாங்கம் முனைவதாக ஐதேக பிரதித் தலைவர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
 
அரசாங்கத்திற்கு எதிரான, மாற்றுக் கருத்துக்களை வெளியிடுவோரை புலி ஆதரவாளர்களாக சித்திரிப்பதும், ஜனநாயகம், நல்லாட்சி, சட்டம் ஒழுங்கு தொடர்பாக குரல் கொடுப்போரை தேசத் துரோகிகளாக அடையாளப்படுத்துவம் அரசாங்கத்தின் வழக்கமாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
அதுமட்டுமன்றி, எதிர்க்கட்சியினர் வெளிநாட்டுக்கு சென்று கருத்தரங்கு அல்லது வேறும் ஏதும் நிகழ்வில் பங்கேற்றால் புலி ஆதரவு அமைப்புக்களுடன் இணைந்து நாட்டுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுவதாக பிரசாரம் செய்யப்படுவதாகவும் அவர் வேதனைப்பட்டுள்ளார். இதனை அரசாங்கத்தின் வரட்டு போன அரசியல் மூலோபாயம் என்றே குறிப்பிட வேண்டும்.
 
ஏனென்றால், விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் இலங்கையில் அடியோடு அழிக்கப்பட்டு நான்கு ஆண்டுகளாகி விட்டன.
 
வெளிநாடுகளில் புலிகள் இயக்கம் இயங்குவதாக அவ்வப்போது அரசாங்கம் மிரட்டினாலும், அது அரசாங்கத்தை அச்சுறுத்தும் அளவிற்குச் செயற்படுவதற்கான எந்த தடயமும் கிடையாது.
 
வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் கட்டமைப்பு ரீதியாக ஒன்றுபட்ட நிலையிலும் இல்லை, அத்தகைய கட்டமைப்பு ஒன்று உருவாவதற்கான சாத்தியங்களும் தென்படவில்லை.
 
ஆங்காங்கே, விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாக செயற்பட்டவர்களும், அவர்களுடன் இணைந்து செயற்பட்டவர்களும் வெளிநாடுகளில் இருந்தாலும், அவர்களால் இலங்கையில் ஒரு தாக்குதலையேனும் நடத்தும் திறன் கிடையாது.
 
அவர்கள் வசித்து வரும் நாடுகளில் தம்மை விடுதலைப் புலிகள் என்று வெளிப்படையாக கூறிக்கொள்ள முடியாத நிலையில் இருக்கும் அவர்கள், ஒருபோதும் இன்னொரு போருக்குத் தலைமை தாங்க முடியாது. இந்த உண்மை அமெரிக்காவுக்கும் தெரியும், இலங்கை அரசுக்கும் நன்றாகவே தெரியும்.
 
2009 மே 18ஆம் திகதிக்குப் பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மீள உயிர்கொடுக்க முனைந்தவர்கள் அந்த முயற்சிகளில் தோல்வியைச் சந்தித்ததே மிச்சம்.
 
வெளிநாடுகளில் உள்ள புலிகள் தொடர்ந்து நிதி சேகரிப்பதாகவும், ஆட்கடத்தல்களில் ஈடுபடுவதாகவும் அமெரிக்க அறிக்கையிலும் கூறப்பட்டுள்ளது. எனினும் அது எந்தளவுக்கு கட்டமைப்பு ரீதியாக ஒழுங்கப்பமைக்கப்பட்டது என்பதிலும், அது உண்மையிலேயே விடுதலைப் புலிகளினுடையது தானா என்பதிலும் சந்தேகங்கள் உள்ளன.
 
ஏனென்றால், விடுதலைப் புலிகளின் நிதி சேகரிப்புக்கு பெரும்பாலான எல்லா நாடுகளுமே தடைவிதித்துள்ள நிலையில், இதனை அவர்களால் கட்டமைப்பு ரீதியாக மேற்கொள்ள முடியாது. அவ்வாறு சேகரிக்கப்படும் நிதியைக் கொண்டு, அதிகபட்சமாக வெளிநாடுகளில் ஏதேனும் நிகழ்வுகளை நடத்தலாமே தவிர, இலங்கையில் எத்தகைய அரசு எதிர்ப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது. இருந்தபோதிலும் விடுதலைப் புலிகளைப் பயன்படுத்தி, அரசாங்கத்தை எதிர்ப்போர் அனைவரும் மிரட்டப்படுவதும், புலி முத்திரை குத்தப்படுவதும் இலங்கையில் வழக்கமாகியுள்ளது. அந்தப் புலி முத்திரைக்கு தப்பாதவர்கள் யாருமில்லை.
 
அரசாங்கத்தையும் அதன் நிலைப்பாடுகளையும் ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் அல்லது அதனை விமர்சிப்பவர்கள் எவராயினும் இந்த முத்திரை குத்தலில் இருந்து தப்பிக்க முடியாது. எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களாகட்டும், வெளிநாட்டு இராஜதந்திரிகளாகட்டும் இதற்கு விதிவிலக்காக முடியாது. இதுதான் புலிகள் இல்லாத நான்கு ஆண்டுகளிலும் ஏற்பட்டுள்ள நிலை.
 
விடுதலைப் புலிகள் இயக்கம் இல்லை, ஆனாலும் புலிகளைப் பயன்படுத்தி தம்மை எதிர்ப்போரை மிரட்டுகின்ற, அச்சமூட்டுகின்ற காரியங்களை அரசாங்கம் செய்வதாக, ஐதேக உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் எத்தனைமுறை குற்றம்சாட்டினாலும் அரசாங்கம் தன்போக்கில் இருந்து மாறுவதாக இல்லை.
 
கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக எதற்கெடுத்தாலும் புலிகளையே குற்றம் சுமத்தி தப்பிக்கொள்ளும் ஓர் உத்தி கையாளப்பட்டு வந்தது.
 
போர் முடிவுக்கு வந்து - புலிகள் அழிக்கப்பட்டு நான்கு ஆண்டுகளான பின்னரும், அந்த மரபு அல்லது வழக்கத்தில் இருந்து அரசாங்கத்தினால் வெளியே வரமுடியவில்லை. ஒரு பழக்கத்தில் இருந்து  மீளமுடியாது இருப்பதும் ஒருவித நோய் தான்.
 
தீவிரவாதத்தை ஒரு நோய் என்று விமர்சித்த அரசாங்கம், அதே தீவிரவாத எதிர்ப்பு உத்தியை ஜனநாயக சக்திகள் மீது பிரயோகிப்பதையும் ஒரு நோயாகவே பார்க்க மறுக்கவியலாது. முன்னர் புலி முத்திரையால் அதிகம் பாதிக்கப்பட்டது தமிழர்களாகவே இருந்தனர். ஆனால் அந்தப் புலி முத்திரை இப்போது, தமிழர்கள் என்ற நிலையைக் கடந்து சிங்களவர்களையும் முஸ்லிம்களையும், ஏன் வெளிநாட்டு இராஜதந்திரிகளையும் கூடப் பதம் பார்க்கிறது.
 
முன்னர் தமிழர்கள் மீது எடுத்ததற்கெல்லாம் புலி முத்திரை குத்தப்பட்டபோது, அதை வேடிக்கை பார்த்தவர்களும், ஊக்குவித்தவர்களும் கூட இப்போது புலிகளாக்கப்பட்டுள்ளனர்.
 
ஆக, விடுதலைப் புலிகள் என்ற சொல்லுக்கான இலக்கணம் இப்போது மாறத் தொடங்கியுள்ளது. ஒரு காலகட்டத்தில், விடுதலைப் புலிகளை தீவிரவாத அமைப்பாக அடையாளப்படுத்திய நிலை மாறி, அரசாங்கத்தை எதிர்ப்பவர்களும் விமர்சிப்பவர்களும் விடுதலைப் புலிகளாகும் நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. அதாவது இவர்களை ஜனநாயகப் புலிகள் என்ற நிலைக்குள் கொண்டு வந்திருக்கிறது அரசாங்கம்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X