2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

இனப்பிரச்சினையும் அரசாங்கத்தின் ஊடக ஒழுக்கக் கோவையும்

Menaka Mookandi   / 2013 ஜூன் 21 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கமானது, அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களுக்காக ஒழுக்கக் கோவையொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டில் எத்தனையோ ஒழுக்கக் கோவைகள் இருக்கும் போது அரசாங்கம் புதிதாக மற்றொரு கோவையை ஏன் முன்வைத்தது என்பது தெளிவில்லாமல் இருக்கிறது. அதேவேளை பலர் இந்த விடயத்தில் அரசாங்கத்தின் நோக்கங்களைப் பற்றி கடுஞ் சந்தேகம் கொண்டுள்ளனர். 

இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கத்தினால் (Editors Guild of Sari Lanka) தயாரிக்கப்பட்டு பொதுவாக நாட்டில் ஏறத்தாழ அனைத்து சுதந்திர ஊடகவியலாளர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒழுக்கக் கோவையொன்று இருக்கிறது. அது மட்டுமல்லாது அக்கோவையின் அமுலாக்கத்தை மேற்பார்வை செய்வதற்காக இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவும் (Press Complaint Commission of Sri Lanka) இருக்கிறது.

பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு ஒழுக்க நெறிகளை எவ்வாறு பேணுவது என்பதைப் பற்றி நாடளாவிய ரீதியல் ஊடகவியலாளர்களுக்காக பயிற்சி செயலமர்வுகளையும் நடத்தி வருகிறது. அதேவேளை பத்திரிகைகள் அவ் ஒழுக்கக் கோவையை மீறும் போது ஆணைக்குழு அதை பத்திரிகை ஆசிரியர்களுக்கு தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது. பத்திரிகைகளுக்கு எதிராக தனி நபர்களோ அல்லது நிறுவனங்களோ செய்யும் முறைப்பாடுகளையும் ஆணைக்குழு விசாரித்து வருகிறது.

அதற்கு புறம்பாக சில நிறுவனங்கள் தமக்கென்றே ஒழுக்கக் கோவைகளை வைத்திருக்கின்றன. ரூபவாஹினி கூட்டுத்தாபனம், நெத் எப்.எம். வானொலி நிறுவனம் மற்றும் ராவய பத்திரிகை அவ்வாறான நிறுவனங்களாகும். போதாக்குறைக்கு சர்வதேச ஊடக நிறுவனங்களின் ஒழுக்கக் கோவைகளையும் அவசியமாக இருந்தால் பின்பற்ற முடியும்.

அவையெல்லாம் இருக்கையில் அரசாங்கம் ஏன் மற்றோர் ஒழுக்கக் கோவையை தயாரிக்க வேண்டும்? அதன் வாசகங்களை ஆராயும் போது ஓரளவிற்கு அரசாங்கத்தின் நோக்கத்தை புரிந்து கொள்ளலாம். ஆனால் மேலோட்டமாக அதன் வாசகங்களைப் பார்க்கும் போது அதில் எவ்வித குறையும் இருப்பதாக தெரியவில்லை.

இவ்விடயம் ஊடக அமைப்புக்களை மட்டுமோ அல்லது எதிர்க்கட்சிகளை மட்டுமோ பாதிக்கக் கூடிய விடயம் அல்ல. 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான சர்ச்சை உச்சக் கட்டத்தை அடைந்து இருக்கும் இவ்வேளையில் அது தமிழ் ஊடகங்களையும் பாதிக்கலாம்.

இனப் பிரச்சினை விடயத்தில் அநேகமாக சிறுபான்மை மக்கள் அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சித்து வரும் நிலையில் இது சிறுபான்மை நலன்களையும் பாதிக்கலாம். எனவே இது இனப்பிரச்சினையோடு சம்பந்தம் இல்லையே என்று சிறுபான்மையினர் உதாசீனமாக இருந்து விட முடியாது.

இது சிறுபான்மை மக்களை பாதிக்காத விடயமாக இருந்தாலும் பொதுவாக சமூகத்தை பாதிக்கும் சமூக, பொருளாதார பிரச்சினைகள் விடயத்தில் அம்மக்களும் கரிசனை காட்டத் தான் வேண்டும். அரசாங்கத்தின் ஊடக ஒழுக்கக் கோவையின் பிரதான பிரச்சினை என்னவென்றால் அதில் பல வாசகங்களுக்கு பல அர்த்தங்களை கொடுக்கக் கூடியதாக இருப்பதே. இதனை அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஹியூமன் ரைட்ஸ் வொச் நிறுவனமும் சுட்டிக்காட்டியுள்ளது.

'பொதுமக்களின் எதிர்ப்பார்ப்புக்கு களங்கத்தை ஏற்படுத்தல், நாட்டின் ஒழுக்க விதியை அல்லது பொதுமக்களின் ரசனை மற்றும் ஒழுக்கத்தின் தரம் தாழ்த்துதல் ஆகிய விடயங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும்' என்பதே அக்கோவையின் முதலாவது விதியாக இருக்கிறது.

பார்த்த பார்வைக்கு இது சிறந்த வாசகமாகத் தான் தெரிகிறது. ஆனால், தேர்தலொன்றின் போது ஆளும் கட்சியொன்றுக்கு எதிராக கருத்து வெளியிடுவதையும் வேண்டும் என்றால் 'பொதுமக்களின் எதிர்ப்பார்ப்புக்கு களங்கத்தை ஏற்படுத்தல்' என்பதாக குற்றஞ்சாட்டலாம். 'பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பு' எது என்பதை யார் தீர்மானிப்பது என்பதே இங்குள்ள முக்கிய பிரச்சினையாகும்.  

'நாட்டின் ஒழுக்க விதியை தாழ்த்துதல்' என்றும் இங்கு குறிப்பிடப்படுகிறது. 'நாட்டின் ஒழுக்க விதி' என்பது என்ன? யார் அதனை தீர்மானிக்கப் போவது? இவை தெளிவில்லாத விடயங்களாகும். 'பொதுமக்களின் ஒழுக்கத்தின் தரம்' என்றும் இதே வசனத்தில் குறிப்பிடப்படுகிறது. நாட்டின் ஒழுக்க விதி வேறு, பொதுமக்களின் ஒழுக்கத்தின் தரம் வேறா? யார் இதனை தீர்மானிப்பது?

இக்கோவையில் இதைவிட பாரதூரமான வாசகம் ஒன்று இருக்கிறது. அதாவது வெளிநாட்டு உறவுகளை பாதிக்கும் விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் என்பதே. இதன் பிரகாரம் இந்தியா - இலங்கையின் இனப் பிரச்சினையை முறையாக கையாளவில்லை என்று ஓர் எழுத்தாளர் எழுதினால், சிலவேளை அதுவும் வெளிநாட்டு உறவுகளை பாதிக்கும் விமர்சனமாக அரசாங்கம் கருதலாம்.

சில மாதங்களுக்கு முன்னர் பிரிட்டன் சில இலங்கை தமிழர்களை தனது நாட்டிலிருந்து வெளியேற்றியது. இதை விமர்சிப்பதும் வெளிநாட்டு உறவுகளை பாதிக்கும் விடயமாக எடுத்துக் கொள்ளலாம். முஸ்லிம்கள் அநேகமாக இஸ்ரேலை விமர்சித்து எழுதுவார்கள். அதையும் வெளிநாட்டு உறவுகளை பாதிக்கும் விடயமாக எடுத்துக் கொள்ளலாம்.

அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் மனித உரிமை விடயத்தில் இரட்டை வேடம் பூண்டு செயற்படுவதாக அரச ஆதரவாளர்கள் பல வேளைகளில் கூறுவார்கள். அதையும் வெளிநாட்டு உறவுகளை பாதிக்கும் விமர்சனமாக கருதலாம். ஆனால் அரசாங்க ஆதரவாளர்களையும் குறைகூறும் அளவிற்கு அரசாங்கத்தின் அரசியல் ஒழுக்க நெறிகள் உறுதியாக இருக்குமா என்பதே இங்குள்ள கேள்வியாகும்.

'ஜனாதிபதி, நீதித்துறை மற்றும் தேசத்தினுடைய ஒருமைப்பாட்டை பாதிக்கும் விடயங்கள் தவிர்க்கப்பட வேண்டும்“ என அரச கோவையின் தமிழ் பிரதி கூறுகிறது. ஆனால் அதே வாசகம் 'நிறைவேற்றுத்துறை, நீதித்துறை மற்றும் சட்டமியற்றும் துறை ஆகியவற்றின் மேன்மைக்கு எதிரான விடயங்களை தவிர்க்க வேண்டும்' என்று ஆங்கில பிரதியிலும் 'நிறைவேற்றுத்துறை, நீதித்துறை மற்றும் சட்டமியற்றும் துறை ஆகியவற்றின் மீது மக்களிடம் இருக்கும் கௌரவத்தை பாதிக்கும் விடயங்களை தவிர்க்க வேண்டும்' என்று சிங்கள பிரதியிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறைவேற்றுத்துறை, நீதித்துறை மற்றும் சட்டமியற்றும் துறை என்ற மூன்று துறையும் சேர்ந்தே 'அரசு' உருவாகிறது. எனவே அம்மூன்று துறையின் மேன்மையை பாதிக்கும் விடயங்களை தவிர்க்க வேண்டும் என்றாலும் அத்துறைகள் மீது மக்களிடம் இருக்கும் கௌரவத்தை பாதிக்கும் விடயங்களை தவிர்க்க வேண்டும் என்றாலும் அரசாங்கத்தை விமர்சிக்க முடியாது என்ற நிலைமையே உருவாகிறது. ஏனெனில் அவ்வாறான விமர்சனத்தால் அரசின் கௌரவம் பாதிக்கப்படுகிறது என்றோ அல்லது அதன் மேன்மை பாதிக்கப்படுகிறது என்றோ வாதிட முடியும்.

பொதுமக்களை தவறாக வழிப்படுத்தும் விடயங்களை தவிர்க்க வேண்டும் என்பது மற்றொரு வாசகமாகும். குறிப்பிட்டதோர் கருத்து மக்களை தவறாக வழிப்படுத்துவதாக தீர்மானிக்கப்போவது அரசாங்கமே. எனவே ஓர் அரசாங்கம் தாம் விரும்பாத சகல கருத்துக்களையும் மக்களை தவறாக வழிப்படுத்தும் கருத்தாக கருதலாம்.

மதக்குழுக்கள் மற்றும் சமூகங்களுக்கு அவதூறு ஏற்படும் அல்லது இனவாதத்தை, மதப்பூசல்களை தூண்டும் விடயங்களை தவிர்க்க வேண்டும் என்றும் வன்முறைகளை ஊக்கப்படுத்தும் அல்லது தூண்டிவிடும் உள்ளடக்கங்கள் மற்றும் தேசியத்துக்கு எதிரான நடைமுறைகளை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் இரண்டு வாசகங்கள் அரசாங்க கோவையில் இருக்கின்றன. இரண்டும் தற்போதைய நிலைமையில் பொருத்தமானதாகவும் பாராட்டக்கூடியதாகவும் இருக்கின்றன.

ஆனால் 'மதக்குழுக்கள் மற்றும் சமூகங்களுக்கு அவதூறு ஏற்படும் அல்லது இனவாதத்தை, மதப்பூசல்களை தூண்டும் விடயங்கள்' தொடர்பாக அசாத் சாலிக்கு எதிராக நடவடிக்கை எடுத்தவர்கள் - பொதுபல சேனா, சிஹல ராவய, ராவணா பலய போன்ற பல்வேறு குழுக்கள் தொடர்பாக அவ்வாறான முறைப்பாடுகள் இல்லை என்கிறார்கள். எனவே அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஓரிரு தினங்களுக்கு முன்னர் கூறியதைப் போல் முதலில் அரசியல்வாதிகளுக்கு ஒழுக்கக் கோவையொன்றை தயாரிக்க வேண்டும்.

ஊடகவியலாளர்களுக்கான இவ் ஒழுக்கக் கோவையை மீறுவோர் சம்பந்தமாக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது இன்னமும் கூறப்படவில்லை. இவை சட்டமாக்கப்படுமா என்பதும் இன்னமும் கூறப்படவில்லை.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .