.jpg)
தமிழக ராஜ்ய சபை தேர்தல் அனல் பறக்கிறது. வெற்றிக் கோப்பையை பெறப்போவது யார் என்பதில் கடும் போட்டி நடக்கிறது. மொத்தமுள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து ஆறு ராஜ்ய சபை உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியும். அதாவது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையைத்தான் ராஜ்ய சபை என்று கூறுகிறோம். அப்படி தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களுக்கு ஆறு வருட காலம் பதவிக்காலம். லோக்சபா டிஸ்மிஸ் செய்யப்பட்டாலும் ராஜ்ய சபைக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு பதவி பறிபோகாது. இப்படி சலுகைகள், விசேஷ உரிமைகள் அடங்கிய ராஜ்ய சபை தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நான்கு வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. டாக்டர் மைத்ரேயன், ரத்தினவேலு, அர்ஜூனன், லக்குமணன் என்ற நான்கு பேரும் அ.தி.மு.க.வின் சார்பில் ராஜ்ய சபை மஞ்சுவிரட்டில் பங்கேற்றுள்ளவர்கள். இவர்கள் வெற்றி பெறுவதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஐந்தாவது ராஜ்ய சபை பதவிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் டி.ராஜா நிற்கிறார். இவர் போராடிப் பெற்ற பதவி இது. வேட்பாளராக நிற்பதற்கு முதலில் தன் கட்சிக்குள் பெரும் போராட்டத்தை சந்தித்தார். பிறகு அவர் வெற்றி பெறுவதற்கு அ.தி.மு.க.வின் ஆதரவை பெறுவதற்கு இன்னொரு போராட்டம் நடத்தினார். கடைசி நிமிடத்தில் அ.தி.மு.க. தனது ஐந்தாவது வேட்பாளரை வாபஸ் பெற்று இவரை ஆதரித்து விட்டதால், ராஜாவின் வெற்றியும் ராசியாகவே அமைந்து விட்டது.
திக்குமுக்காடும் தி.மு.க.
ஆனால் சிக்கலில் மாட்டிக் கொண்டது என்னவோ திராவிட முன்னேற்றக் கழகம்தான். அக்கட்சியின் சார்பில் 23 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருக்கின்ற சூழ்நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது மகள் கனிமொழியை களமிறக்கினார். வெற்றி பெறுவதற்கு 34 ராஜ்ய சபை உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில் மற்ற கட்சிகள் எல்லாம் கைவிட்டுவிட இப்போது மூன்று கட்சிகளை நம்பி நிற்கிறார். முதல் கட்சி ஜவஹிருல்லா தலைமையில் உள்ள மனித நேய மக்கள் கட்சி. இரண்டாவது கட்சி டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் உள்ள புதிய தமிழகம் கட்சி. மூன்றாவதாக சமீபத்தில் கூட்டணியை விட்டு வெளியேற்றப்பட்ட காங்கிரஸ் கட்சி. இம்மூன்று கட்சிகளில் முதல் இரு கட்சிகளிடமும் தலா இரு எம்.எல்.ஏ.க்கள். இந்த நான்கு எம்.எல்.ஏ.க்களும் தி.மு.க. வேட்பாளர் கனிமொழியை ஆதரித்துவிட்டார்கள். மூன்றாவது கட்சியான காங்கிரஸிடம் 5 எம்.எல்.ஏ.க்கள். தி.மு.க.வை எதிர்த்துப் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளருக்கு 22 வாக்குகள் உள்ளன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் கையில் "வெற்றி லகான்" இருக்கிறது. அக்கட்சி தே.மு.தி.க.வை ஆதரித்தால், தி.மு.க.விற்கும், தே.மு.தி.க.விற்கும் "சரிசம" வாக்குகள் வந்து விடும். அ.தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்த ஐந்து வேட்பாளர்களுக்கும் வாக்களிப்பவர்கள், தங்கள் "இரண்டாவது விருப்புரிமை வாக்கை" தே.மு.தி.க. வேட்பாளருக்கோ, தி.மு.க. வேட்பாளருக்கோ போடமாட்டார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், போட்டியிடும் இரு வேட்பாளர்களின் (தி.மு.க. மற்றும் தே.மு.தி.க) பெயரையும் எழுதிப் போட்டு குலுக்கல் முறையில் தேர்வு செய்ய வேண்டும் என்று இந்திய ராஜ்ய சபை தேர்தல் விதிகள் கூறுகின்றன.
காங்கிரஸுக்கு அடித்த திடீர் யோகம்
இங்குதான் காங்கிரஸ் கட்சியின் முக்கியத்துவம் முகட்டின் உச்சியின் மேல் நிற்கிறது. அக்கட்சியை சில மாதங்களுக்கு முன்புதான் "இலங்கை தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக வந்த ஜெனிவா தீர்மானத்தில் இந்தியா தக்க திருத்தங்களை கொண்டு வந்து, சர்வதேச விசாரணைக்கு கோரவில்லை" என்ற காரணத்தைச் சொல்லி, மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை தி.மு.க. விலக்கிக் கொண்டது. தன் மத்திய அமைச்சர்களையும் வாபஸ் பெற்றுக் கொண்டது. இவ்வளவு குறுகிய காலத்தில் மீண்டும் காங்கிரஸின் ஆதரவை கோரும் நிலை தங்களுக்கு வரும் என்று தி.மு.க. தலைமை கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். அதே நேரத்தில் விலகிச் சென்ற தி.மு.க.வை அப்படியே விட்டுவிட காங்கிரஸ் கட்சி தயாராக இல்லை. ஜூன் மூன்றாம் திகதி தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 90ஆவது பிறந்த நாளுக்கு பிரதமர் மன்மோகன்சிங் வாழ்த்துச் சொன்னார். காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி வாழ்த்துச் சொன்னார். மத்திய அமைச்சர்கள் வாழ்த்துச் சொன்னார்கள். ஆனால் தமிழகத்திலிருந்து நிதியமைச்சராகியுள்ள ப.சிதம்பரம் வாழ்த்துச் சொல்லவில்லை. அதற்கு பதிலடியாக அடுத்த சில நாட்களில் நிதியமைச்சரின் தாயார் லட்சுமி அம்மாள் இயற்கை எய்தினார். அவருக்கு தி.மு.க. தலைவர் குடும்பத்தினர் சார்பில் யாரும் இரங்கல் சொல்லவில்லை. ஏன் அவர் மறைவிற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி இரங்கல் செய்தி கூட தெரிவிக்கவில்லை. காங்கிரஸிற்குள் உள்ள மற்ற தலைவர்களுக்கும், தி.மு.க. தலைவருக்கும் ராசியுண்டு. ஆனால் ப.சிதம்பரத்துடன் எதிர்ப்பு என்ற நிலையே மேலோங்கி நின்றது.
ப.சிதம்பரம்- டி.ஆர். பாலு போராட்டம்
இதுபோன்ற காலகட்டத்தில்தான் காங்கிரஸின் ஆதரவை தி.மு.க. பெறுவதற்கு முயற்சிக்க, நிதியமைச்சர் ப.சிதம்பரம், இன்னொரு மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் உள்ளிட்டோர் விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க.விற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று படையெடுத்தனர். அதேவேளையில் தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு சோனியா காந்தியை சந்தித்தார். பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணியை சந்தித்தார். தங்கள் கட்சி வேட்பாளர் கனிமொழிக்கு காங்கிரஸ் ஆதரவு தேவை என்று அவர்களிடம் வாதிட்டவர், "எங்களை உங்கள் அமைச்சர்கள் எல்லாம் 2-ஜி ஊழல் என்றார்கள். ஆனால் காங்கிரஸ் அமைச்சர்கள் பன்சால் (ரயில்வே பதவிக்கு அவரது உறவினர் லஞ்சம் பெற்றார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது), பிரதமர் மன்மோகன்சிங் (நிலக்கரி முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டு) போன்றவர்கள் மீது எல்லாம் குற்றம் சாட்டப்பட்டபோது தி.மு.க. ஏதாவது வாய் திறந்து பேசியதா? காங்கிரஸை ஊழல் கட்சி என்று கூறினோமா? இல்லை நாடாளுமன்றத்தில் எங்கள் கட்சி எம்.பி.க்கள் யாரும் காங்கிரஸை ஊழல் தொடர்பாக விமர்சித்தார்களா?" என்று கூறிய டி.ஆர்.பாலு, "இப்போது உங்களிடம் உள்ள ஐந்து எம்.எல்.ஏ.க்களும் தி.மு.க. வாக்கு வாங்கி ஜெயித்தவர்கள். ஆகவே உங்கள் மனச்சாட்சிக்கே விட்டு விடுகிறோம்" என்று சென்டிமென்டாக சோனியா காந்தியிடம் பேசியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தி.மு.க.விற்கு கைகொடுக்கும் நரேந்திரமோடி
இந்த சந்திப்பிற்குப் பிறகு காங்கிரஸ் மேலிடத்திடம் மனமாற்றம் தெரிகிறது. வருகின்ற 27ஆம் திகதி நடக்கவிருக்கும் ராஜ்ய சபை தேர்தலில் தி.மு.க.விற்கு வாக்களிக்கும் மனநிலைக்கு இன்னும் காங்கிரஸ் வரவில்லையென்றாலும், அதற்கான பாஸிட்டிவ் அம்சங்கள் தெரிவதாக தி.மு.க. வட்டாரங்களில் செய்தி அடிபடுகிறது. அதற்கு கை கொடுத்திருப்பவர் பா.ஜ.க. சார்பில் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று கருதப்படும் நரேந்திர மோடி. ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் "இமேஜ்" ரொம்பவும் பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த ஊழல்கள், மம்தா பானர்ஜி, கருணாநிதி போன்ற கூட்டணிக் கட்சி தலைவர்கள் வெளியேறியது எல்லாமே அக்கட்சியின் அடுத்த ரவுண்ட் வெற்றி வாய்ப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. குறிப்பாக 2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி தனிமைப்படுத்தப்பட்டு விடுமோ என்ற அச்ச உணர்வு காங்கிரஸ் தலைவர்களிடமே இருக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில் திடீரென்று பா.ஜ.க. தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் பெரும் குழப்பம் முளைத்து விட்டது.
அக்கட்சியுடன் 17 வருடங்கள் கூட்டணியாக இருந்த ஐக்கிய ஜனதா தளம் விலகிவிட்டது. "மோடியை முன்னிறுத்தினால், அந்த விபரீத விளையாட்டிற்கு நாங்கள் தயாராக இல்லை" என்று அக்கட்சி கூறிவிட்டது. அது மட்டுமின்றி அக்கட்சியின் பீஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார், "காங்கிரஸ் எதிர்ப்பு அலை இருந்தது. ஆனால் அந்த எதிர்ப்பு அலையை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் நிலையில் மோடி தலைமையிலான பா.ஜ.க. இல்லை" என்ற ரீதியில் பேட்டிகளை கொடுக்கத் தொடங்கியுள்ளார். இப்படி பரபரப்புக்கிடையில் பீஹார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தனது அரசின் மீது நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். அதில் எதிரும் புதிருமாக இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் ஆதரித்துள்ளன. இது எதிர்காலத்தில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துடன் காங்கிரஸுக்கு நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி அமைவதற்கான வாய்ப்பு தோன்றியுள்ளது.
மதசார்பற்ற அணியா, இந்துத்துவா அணியா?
அதேமாதிரி தமிழகத்தில் இந்த ராஜ்ய சபை தேர்தலில் தி.மு.க.வை காங்கிரஸ் ஆதரித்தால், தமிழகத்திலும் காங்கிரஸை விட்டு விலகிச் சென்ற தி.மு.க.வை மீண்டும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் கொண்டு வந்த லாபம் கிடைக்கும் என்று காங்கிரஸின் முன்னணி டெல்லி தலைவர்கள் கருதுவதாக தெரிகிறது. இதுதவிர விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க. மற்ற இரு முக்கிய கட்சிகளான தி.மு.க.விற்கும், அ.தி.மு.க.விற்கும் மாற்று என்று புறப்பட்டாலும், உண்மையில் அந்தக் கட்சி காங்கிரஸ் கட்சியின் ஸ்தானத்தைத்தான் நீக்கியிருக்கிறது. அதாவது இதுவரை தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த காங்கிரஸை நான்காவது இடத்திற்கு தள்ளிவிட்டு, அந்த இடத்தைப் பிடித்திருக்கிறது தே.மு.தி.க.
இந்நிலையில் "தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரிப்பது காங்கிரஸை தமிழகத்தில் நான்காவது இடத்திற்கு நிரந்தரமாக தள்ளி வைக்கும். ஆகவே நாம் இந்த முறை தி.மு.க.வை ஆதரித்தால் நமக்கு அகில இந்திய அளவில் புதிய இமேஜ் கிடைக்கும். பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கலைந்து கொண்டிருக்கிறது. ஆனால் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் புதிய கட்சிகள் (ஐக்கிய ஜனதா தளம்) சேருவது மட்டுமின்றி, போன கட்சிகளும் (தி.மு.க) மீண்டும் வருகிறது என்ற இமேஜ் கிடைக்கும். அகில இந்திய அளவில் வெற்றி பெறும் கூட்டணியை அமைக்கும் கட்சி காங்கிரஸ் என்ற இமேஜ் 2014 நாடாளுமன்ற தேர்தலில் பெரும் உதவியை கொடுக்கும். அது மட்டுமின்றி பா.ஜ.க. சார்பில் நரேந்திரமோடி முன்னிறுத்தப்படும் பட்சத்தில் "மதசார்பற்ற அணி"க்கும் "இந்துத்துவா அணிக்கும்" போட்டி என்ற நிலை வரும். அந்த சமயத்தில் தி.மு.க., ஐக்கிய ஜனதா தளம் போன்ற கட்சிகள் காங்கிரஸுடனேயே நிற்கும்" என்கிறார் தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவர் ஒருவர். சமீபத்தில் "வீக்" ஆங்கில வாரப் பத்திரிகைக்கு அளித்த கட்டுரை ஒன்றில், "நாடாளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பது அப்போது உருவாகும் தேசிய அரசியல் சூழ்நிலையை மனதில் கொண்டு முடிவு எடுக்கப்படும்" என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியிருக்கிறார். அந்த "தேசிய அரசியல் சூழ்நிலை" என்பது அகில இந்திய அளவில் "மதசார்பற்ற அணியா"? அல்லது "இந்துத்துவா அணியா" என்பதுதான். இந்த பின்னணிகளையெல்லாம் அலசி ஆராயும் காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைவர்கள், ராஜ்ய சபை தேர்தலில் தே.மு.தி.க.விற்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுக்க தயங்குகிறார்கள். தி.மு.க. வேட்பாளர் கனிமொழியை ஆதரிக்கலாம் என்ற நிலைப்பாட்டை எடுக்கலாம் என்று தங்கள் தரப்பு வாதங்களை முன் வைத்து வருகிறார்கள்.
காங்கிரஸுக்கு "இமேஜ்" கொடுப்பது தி.மு.க.வா, தே.மு.தி.கவா?
காங்கிரஸ் கட்சியின் ஆதரவை பெறுவதில் பொதுவாக அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும்தான் போட்டியிருக்கும். அவர்களில் ஒருவரை காங்கிரஸ் தலைமையும் தேர்வு செய்யும். ஏனென்றால் இந்த இரு கட்சிகளில் ஒன்றுதான் ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றிக் கூட்டணி அமைக்கும் சக்தி மிகுந்தவைகளாக இருக்கும். அதுமட்டுமின்றி, அகில இந்திய கட்சிகளான பா.ஜ.க.வும், காங்கிரஸும் தமிழகத்தில் உள்ள தி.மு.க.வுடனோ, அ.தி.மு.க.வுடனோ கூட்டணி வைத்தால், "வெற்றி பெறும் கூட்டணி" என்ற இமேஜ் அந்த கட்சிகளுக்கு கிடைக்கும். ஏனென்றால் 1989இலிருந்து மத்தியில் அமையும் ஒவ்வொரு ஆட்சிக்கும் 40 எம்.பி.க்கள் உள்ள தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியிலிருந்து கிடைத்த வெற்றிதான் முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. ஆனால் அப்படியொரு இமேஜை "காங்கிரஸ்- தே.மு.தி.க." கூட்டணி கொடுக்காது. இரு கட்சிகளும் சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலி்ல் 10 முதல் 15 சதவீத வாக்குகள் பெறுவதே குதிரைக் கொம்பாக மாறிவிடும். அந்த சதவீதம் நாற்பது நாடாளுமன்ற தொகுதிகளில் ஒன்றில் கூட டெபாஸிட் வாங்குவதற்கு கூட போதாமல் போகும் ஆபத்து இருக்கிறது. எம்.பி. பதவி வெற்றி என்பது இந்த கூட்டணிக்கு கிடைப்பது அரிதிலும் அரிதாகவே அமைந்து விடும் என்ற அச்சம் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் மத்தியிலேயே இருப்பதை பார்க்க முடிகிறது. ஆகவே காங்கிரஸ் தி.மு.க. வேட்பாளர் கனிமொழியை ஆதரித்தாலும் சரி, தே.மு.தி.க.வை ஆதரித்தாலும் சரி தமிழகத்தில் குறைந்த பட்சம் நான்கு முனை போட்டியை வருகின்ற 2014 நாடாளுமன்ற தேர்தல் சந்திக்கும் சூழ்நிலை எழும். ஆறு ராஜ்ய சபை பதவிகளில் ஒரு பதவிக்கு அமையப்போகும் கூட்டணி, தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள 40 எம்.பி. தேர்தலின் கூட்டணியை நிர்ணயிக்கும் சக்தி மிகுந்ததாக மாறியிருப்பதுதான் இப்போதைக்கு பரபரப்பான செய்தி.
போனில் பேசுவாரா தி.மு.க.தலைவர் கருணாநிதி?
தி.மு.க. தலைவர் கருணாநிதி "காங்கிரஸின் ஆதரவு" கேட்டு சோனியா காந்தியுடன் பேச வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடம் எதிர்பார்க்கிறது. அப்போதுதான் "எதிர்கால நாடாளுமன்ற கூட்டணிக்கு அச்சாரம் போட முடியும்" என்றும் அக்கட்சி சீனியர்கள் நினைக்கிறார்கள். ஆனால் தி.மு.க. தரப்பிலோ காங்கிரஸின் ஆதரவை எதிர்பார்க்கும் அதேநேரத்தில் ஏதாவது ஒருவகையில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களையே வளைத்துப் போட்டு கனிமொழியை ஜெயிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எது எப்படியோ "தமிழகத்தில் எங்கே இருக்கிறது காங்கிரஸ்?" என்று கேள்வி எழுப்பியவர்கள் மத்தியில் இப்போது "காங்கிரஸ் என்ன முடிவு எடுக்கப் போகிறது" என்ற எதிர்பார்ப்பு கிளம்பியிருப்பது "சிறியதோ, பெரியதோ" ஜனநாயகத்தை எண்ணிக்கைகளே முடிவு செய்யும் என்பதை மீண்டும் எடுத்துரைப்பதாக அமைந்திருக்கிறது.