2025 மே 19, திங்கட்கிழமை

இலங்கைக்கு அரசுக்கு இது தேவையா?

Menaka Mookandi   / 2013 ஜூலை 12 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை இல்லாதொழிப்தாகக் கூறினார்கள். வட மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் அதில் சில பகுதிகளை இல்லாதொழிப்பதாகக் கூறினார்கள். இப்போது எதுவுமே இல்லாமல் வட மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதுவும் இந்திய நெருக்குதலினாலேயே இந்த நிலை ஏற்பட்டது என்பதை உலகமே கண்டுகொண்டது. இது தேவையா?

மக்கள் விடுதலை முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி மற்றும் ஜாதிக்க ஹெல உருமய போன்ற கட்சிகள் மாகாணசபை முறையை ரத்து செய்ய வேண்டும் என்று அடிக்கடி கூறி வந்த போதிலும் ஆளும் கூட்டணியின் பிரதான கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மிக அண்மைக் காலத்தில் இருந்தே அந்த கோரிக்கையை விடுத்து வருகிறது. மாகாணசபை முறை 1987ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட போது அக்கட்சியும் அம்முறையை எதிர்த்த போதிலும் பின்னர் அந்த எதிர்ப்பு மங்கிப்போயிருந்தது.

திவிநெகும் சட்டமுலத்திற்காக சகல மாகாண சபைகளினதும் அங்கீகாரத்தை பெற வேண்டும் என அண்மையில் முன்னாள் பிரதம் நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவின் தலைமையிலான உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்தே ஸ்ரீ.ல.சு.க.வும் மாகாண சபைகளை ஒழிக்க வேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டுள்ளது. முதலில் அமைச்சர் பசில் ராஜபக்ஷவே மாகாண சபைகளை இல்லாதொழிக்க வேண்டும் என்றார். பின்னர் அரசியல் பேசும் ஒரே அரசாங்க அதிகாரியான பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் சேர்ந்து கொண்டார்.

ஆனால் அவர்களும் அதற்கு அப்பால் செல்லவில்லை. இதற்கிடையே கடந்த மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் செப்டம்பரில் வட மாகாண சபைத் தேர்தலை நடத்துவதென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வாக்குறுதி குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதனிடையே தான் வடமாகண சபைத் தேர்தலை நடத்துவதாக இருந்தால் மாகாண சபைகளுக்கான காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை ரத்துச் செய்தே அதனை நடத்த வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ச கூச்சலிட ஆரம்பித்தார். வீரவன்ச இதனால் அரசியல் ஆதாயம் பெறுவாரோ என்று சிந்தித்த ஹெல உருமயவும் அதில் தொற்றிக் கொண்டது.

இந்த சிறிய கட்சிகளுக்கு தமது இருப்பை தமது உறுப்பினர்களுக்கும் நாட்டுக்கும் அறிவித்துக் கொள்ள அடிக்கடி ஏதாவது சுலோகம் ஒன்று தேவைப்படுகிறது. எனவே தான் வீரவன்ச இதை பிடித்துக் கொண்டார். அது சூடு பிடிக்கவே ஸ்ரீ.ல.சு.கவும் அதற்கு ஆதரவாக நடந்து கொள்ள முற்பட்டது. எனவே தான் பொலிஸ், காணி அதிகாரங்கள் உட்பட மாகண சபைகளிடமிருந்த நான்கு அதிகாரங்களை பறிக்க அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவர அரசாங்கம் முற்பட்டது.

ஆனால் இலங்கை வெயியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸுக்கான இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் ஒரு தொலைபேசி அலைப்போடு அந்த நான்கு அதிகாரங்களில் பொலிஸ், காணி அதிகாரங்களை பறிக்கும் யோசனையை அரசாங்கள் கைவிட்டுவிட்டது. அதன் பின்னர் இந்தியா அவ்வளவு எதிர்க்காது என்று எண்ணக்கூடிய இரண்டு அதிகாரங்களை மட்டும் பறிப்பதற்காக புதிய அரசியலமைப்புத் திருத்தமொன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதனை அடுத்து சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியாவுக்குச் சென்று இந்திய வெளியுறவு அமைச்சரை சந்தித்தார். அவர் 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவே இங்கு சென்றதாக கூறப்பட்டது.

ஆனால் அங்கு என்ன நடந்தது என்பது தெளிவாகவில்லை. இலங்கையில் சகல அரசியல் கட்சிகளும் சபாநாயகர் நியமித்துள்ள நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் இணைய வேண்டும் என இந்திய வெளியுறவு அமைச்சர் கூறியதாக இலங்கை பத்திரிகைகள் கூறிய போதிலும் இந்திய ஊடகங்கள் அதனை நிராகரித்து இருந்தன.

அதனை அடுத்து இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவஷங்கர் மேனன் இவ்வார ஆரம்பத்தில் இலங்கைக்கு விஜயம் செய்தார். அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த போது பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குவதில் உள்ள நடைமுறை பிரச்சினைகளை ஜனாதிபதி அவருக்கு எடுத்துக் கூறியதாக கூறப்படுகிறது. அதேவேளை நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் இணையுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பை தூண்டுமாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

ஆனால் இலங்கை அரசாங்கம் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அப்பால் செல்லும் வகையில் அரசியல் தீர்வொன்றை காண்பதாக இந்தியாவுக்கும் சர்வதேச சமுகத்திற்கும் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வெண்டும் என மேனன் வலியுறுத்தியதாகவே இந்திய ஊடகங்கள் தெரிவித்தன. அதன் பின்னர் மேனன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்களை சந்தித்தார்.  13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை ஒருதலைபட்சமாக மாற்றி அமைக்க இந்தியா இடமளிக்கப்பொவதில்லை என மேனன் இச்சந்திப்பின் போது கூறியிருக்கிறார்.

அதாவது ஜனாதிபதிக்கு நேரடியாக கூற வேண்டியதை மேனன் அரசாங்கத்தின் அங்கமாக இருக்கும் மு.கா.விடம் கூறியிருக்கிறார். இதற்கிடையே வடமாகாண சபைத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டு இம்மாதம் 25ஆம் திகதி முதல் ஓகஸ்ட் முதலாம் திகதி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

அதாவது வீரவன்ச வற்புறுத்தியது போல் பொலிஸ், காணி அதிகாரங்கள் பறிக்;கப்பட்ட நிலையில் வட மாகாண சபைத் தேர்தல் நடைபெறப்போவதில்லை. அதுமட்டுமல்ல, ஏற்கனவே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இரண்டு அதிகாரங்களை பறிப்பதற்கான திருத்தமும் நிறைவேற்றப்படுமா என்பது இப்போது சந்தேகமாகவே இருக்கிறது. ஏனெனில் மாகாணசபை தேர்தல் ஒன்று பிரகடனப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் மாகாண சபைகளின் அதிகாரங்கள் தொடர்பான திருத்தங்களை நிறைவேற்ற முடியுமா என்ற வாதமும் இங்கே எழுகிறது.

பொதுவாக பார்த்தால் எதிலுமே மாற்றம் இல்லாமல் வட மாகாண சபைக்கான் தேர்தல் நடைபெறப் போகிறது. அத்தேர்லுக்குப் பின்னரும் மாகாண சபைகளின் அதிகாரங்கள் தற்போதைய நிலையிலேயே இருக்கும் என்றே ஊகிக்க முடியும். இந்திய நெருக்குவாரத்தின் காரணமாகவே அரசாங்கத்தால் இந்த மாற்றங்களை கொண்டு வர முடியாமல் போயிற்று என்பது தெளிவான விடயமாகும்.

இந்தியாவிற்கு இந்த விடயங்களில் தலையிட முடியாது என்றும் இது இலங்கையின் இறைமை தொடர்பான விடயம் என்றும் சிலர் வாதிடுகிறார்கள். இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் இந்தியாவுக்கான பங்கினை இந்தியா நிறைவேற்றாத நிலையில் இந்தியாவுக்கு இவ்வாறு நெருக்குதலை பிரயோகிக்க உரிமை இல்லை என ஹெல உருமய கூறுகிறது. பாதுகாப்புச் செயலாளரும் அண்மையில் இக்கருத்தை வெளியிட்டு இருந்தார்.

அந்த வாதத்தை ஏற்பதாக இருந்தால் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை பரவலாக்குவதில் உள்ள கஷ்டங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சிவசங்கர் மேனனுக்கு எடுத்துக் கூறத் தேவையில்லை. தெரிவுக் குழுவில் இணையுமாறு தமிழ் தேசிய கூட்மைப்பை தூண்டுமாறு மேனனை கேட்டுக்கொள்ளத் தேவையில்லை. 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைப் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியாவுக்குச் செல்லவும் தேவையில்லை.

இந்தியாவுக்கு இதில் தலையிட முடியாது என்பதை நாம் ஏற்றுக்கொண்டாலும் தமது அரசியல், பொருளாதார நலன்களின் காரணமாக இந்தியா தலையிட நினைத்தால் தலையிடும். அதற்குத் தான் அரசியலில் நிபுணர்கள் பூகோள அரசியல் (geo-politics) என்கிறார்கள். இந்த பூகோள அரசியல் என்று வரும் போது நீதி, நியாயம், இறைமை ஆகிய அனைத்தும் அர்த்தமற்றுப் போகின்றன. 1980களில் இந்தியா தாமாகவே வற்புறுத்தி இலங்கையோடு செய்து கொண்ட ஒப்பந்தமொன்றின் கீழ் இலங்கைக்கு படைகளையே அனுப்பியமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X