.JPG)
வடக்கும் கிழக்கும் இணைந்திருப்பது நல்லது என்பதே என் கருத்து. 13ஆவது திருத்தச்சட்டத்தின் நோக்கமே வடக்கு, கிழக்கு பிரச்சினைகளை தீர்த்து வைப்பது என்பதே. 1987இல் 13ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டு இரு மாகாணங்களும் இணைந்ததற்கு காரணம், இரண்டு மாகாணங்களிலுமே பொதுவானதாக தமிழ்மொழி இருந்ததுதான்.
அந்த நேரத்தில் கிழக்கில் இருந்த முஸ்லிம் மக்கள், தமிழ் பெரும்பான்மையைப் பற்றிய அச்சம் கொண்டிருந்தார்கள். இப்போது அவையெல்லாம் சீர்செய்யப்பட்டு விட்டன. வடக்கிலும் கிழக்கிலும் பாவிக்கப்படுவது ஒரே மொழி. அவர்களது கலாசாரம் தனி. சுவாத்தியம் கூட மற்ற மாகாணங்களில் இருந்து வேறுபட்டது. அதனால் அவர்களை தங்களை தாங்களே தங்கள் மொழியில் ஆட்சி செய்ய அனுமதிப்பது அவசியம். வடக்கில் வந்து வாழ்வதை ஒருவரும் எதிர்க்கவில்லை என்று முன்னாள் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
டெய்லிமிரர் பத்திரிகைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். வடமாகாண சபை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் முன்னாள் பிரதம நீதியரசர் விக்னேஸ்வரனுடனான நேர்காணலின் முழு தமிழ் வடிவம் வருமாறு.
.JPG)
கே: ஆரம்பத்தில் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவாக உங்கள் பெயரை முன்வைத்தபோது, அரசியல் ஈடுபாடு இல்லை என்று அதை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படியிருக்கும் போது மீண்டும் சமீபத்தில் உங்கள் பெயரை முன்மொழிந்தபோது, எப்படி அதற்கு சம்மதித்தீர்கள்? உங்கள் மனமாறுதலுக்கான காரணம் என்ன?
ப: இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்னால், கூட்டமைப்பினர் எனக்கு அப்படி அழைப்பு விடுத்தபோது அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆயினும், எனது மாணவர்களும் நெருங்கிய நண்பர்களும், அது எனது தலையாய கடமை என்று வற்புறுத்தினார்கள். எனக்கு நிறைய அழுத்தங்கள் வந்தன. அவற்றை நான் நிராகரித்திருக்க முடியும்.
இருந்தும், தீவிர யோசனையின் பின், கூட்டமைப்பின் அனைத்து கட்சிகளும் சேர்ந்து அழைத்தால் மட்டும், முதலமைச்சர் வேட்பாளனாக இருக்க சம்மதம் தெரிவித்தேன். அதனால்தான் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியவர்களும் மற்றவர்களுடன் இணைந்து எனது இல்லத்திற்கு வருகை தந்து என்னைத்தான் முதலமைச்சர் வேட்பாளனாக நிறுத்துவதற்கு அசைக்க முடியாத முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தார்கள். எனது நிபந்தனைக்கு அமைவாக, அவர்களது கோரிக்கை இருந்ததால்தான் நானும் சம்மதித்தேன்.
கே: வடக்கில் வாழ்கின்ற தமிழ்க் குடும்பங்களுக்கும் அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு தரும்படியான தீர்க்கமான செயற்பாடுகளை செய்திருப்பதாக அரசு தரப்பு தீர்க்கமாக நம்புகின்றார்கள். ஆனால், எதிர்க் கட்சியினரோ உண்மை நிலைவரம் அப்படியில்லை என்று மறுப்பு தெரிவிக்கின்றார்கள். எந்த பிரச்சினைகள் உடனடியாக தீர்த்து வைக்கப்படல் வேண்டுமென நீங்கள் நினைக்கின்றீர்கள்?
ப: வடக்கில் நிலவும் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயற்படவேண்டிய விடயங்கள் இழப்பீடு, புனர்வாழ்வு, மீள் நிர்மாணம், அபிவிருத்தி ஆகியவையே. ஆனால், அரசின் பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்கள் அனைத்துமே, முடிவுக்கு கொண்டுவரப்படாத பிரச்சினைகளை புறந்தள்ளிவிட்டு முன்னெடுக்கப்பட்டு வடக்கின் பல தமிழ் குடும்பங்களை பாதிப்புக்கு உள்ளாக்குகின்றன.
தங்களது இல்லங்களையும் வாழ்வாதாரங்களையும் இழந்துவிட்ட மக்கள் அவற்றை நிவர்த்தி செய்ய முடியாது தவிக்கின்றார்கள். ஆனால் மிக பாரிய பிரச்சினையாக உள்ளது படையினரின் பிரசன்னம்தான். இருபது பட்டாலியன்களை கொண்ட இராணுவத்தின் பத்திலிருந்து பதினைந்து வரையிலான படையணிகள் வடக்கிலேயே நிலை கொண்டுள்ளன. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை அவர்கள் ஆக்கிரமித்திருக்கின்றார்கள். சில இடங்களில் வெளியேயிருந்து கொண்டுவரப்பட்ட சில குடும்பங்களை அந்த நிலங்களில் விவசாயம் செய்யவிட்டு, அந்த விளைச்சல்களை அந்த நிலங்களின் உரிமையாளர்களுக்கே விற்பனை செய்வதுதான் மிகப்பெரிய சோகம்.
நில ஆர்ஜித சட்டங்களின் மூலம் தனியார் நிலங்கள் கையகப்படுத்தும்போது முகாம்களிலும் தனியார் வீடுகளிலும் கஷ்டத்துடன் வாழும் அந்த காணிகளின் உரிமையாளர்களுக்கு வெறும் அறிவித்தல் மட்டுமே கொடுக்கின்றார்கள். உதாரணத்திற்கு, நான் வசிக்கும் மானிப்பாயில் ஒரு கிராமத்தில் உள்ள எனது நண்பரான மருத்துவர் ஒருவரின் வீடு உள்ளது. அவர் அவுஸ்திரேலியாவில் இருக்கிறார். ஆனால் அந்த வீடு கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களாக பொலிஸ் பாவனையில் இருந்தது.
பொலிஸ் அந்த வீட்டை காலி செய்து வெளியேறிய உடனே, வீட்டை கையப்படுத்திக் கொள்வதாக அந்த வீட்டில் அறிவித்தல் ஒட்டப்பட்டது. தனது வயோதிப காலத்தில், தனது முன்னோரின் வீட்டில் திரும்ப வந்திருந்து வாழ்க்கையை கழிக்க விரும்பிய அவர், இப்போது அவரது வீட்டை பெறுவதற்கு சட்ட நடவடிக்கை எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்.
.JPG)
கே: ஊடகங்களால் பலமுறை வெளிச்சம் போட்டு காட்டப்படும் காணாமல் போனவர்கள், தடுத்துவைக்கப்பட்டவர்கள் ஆகியோரின் பிரச்சினைகள் நூற்றுக்கணக்கான பெற்றோரின் ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியிலும், இன்னும் தீர்க்கப்படாமலே இருக்கின்றனவே, இதை எப்படி கருதுகிறீர்கள்?
ப: இந்த கேள்விக்கு பதில் தருவது மிகவும் கடினமானதுதான். ஆனால் நீதிச்சேவையின் ஒரு முன்னாள் உறுப்பினர் என்ற வகையில் சட்டமா அதிபரை சந்தித்து காணாமல் போன, தடுத்து வைத்திருப்போர் ஆகியோரின் கோப்புகளை அவர் மூலம் பெற்று, நடவடிக்கைகள் எடுக்கமுடியும் என்று கருதுகிறேன். முன்னரே இப்படி செய்ய சிலர் முற்பட்டிருக்கலாம், ஆனால் எனக்கிருக்கும் அனுபவ வசதி இல்லாததால் அவரிடம் கலந்தாலோசிக்க முடியாத ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கலாம்.
காணாமல் போயிருக்கும் ஊடகவியலாளர் எக்நெலிகொட மாதிரி நிறைய சம்பவங்கள் இருக்கலாம். அதாவது அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்று அறிந்துகொள்ள முடியாத ஒரு நிலைமை. ஆனால் தீவிரப்படுத்தப்பட்ட முயற்சிகள் சிலவேளைகளில் பயன்தரக்கூடும். முக்கியமாக பொது அமைப்பொன்று நிறுவப்பட்டு, அதன் மூலம் முக்கியமான தகவல்களை சேகரித்து செயற்படுவது சாத்தியமே. அதன் மூலம் குறைந்தது 50 பேர் அல்லது 100 பேரை விடுவிக்க முடிந்தால் அது மிகப்பெரிய சேவையாகும்.
ஒரு நீதிபதியாக, இப்படி பலர் வருடக் கணக்கில் தடுத்து வைக்கப்பட்டு இருந்ததை நான் நன்றாக அறிவேன். உதாரணமாக வெலிக்கடையில் ஒரு பெண்மணி 12-15 ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். ஏனென்றால் பிணையில் செல்வதற்கு தேவையாக இருந்த ரூபா 5000 அவரிடம் இருக்கவில்லை. சிறை அதிகாரிகள் இப்படிப்பட்டவர்களை பற்றி மேல் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துவதன் மூலம் இத்தகைய சம்பவங்களை தவிர்த்துக் கொள்ளப்படலாம். நான் மாவட்ட நீதிபதியாக இருந்த காலத்தில் சிறை அதிகாரிகளிடமிருந்து வழக்குக்காக அழைத்துவரப்படுவோரின் வழக்குகள் பற்றிய தகவல்களை எனக்கு தர பணித்திருந்தேன். அப்படி பல வழக்குகளில் சிறை அதிகாரிகளுடன் கலந்துபேசி, அவர்களுக்கு பிணை வழங்க ஏற்பாடு செய்திருந்தேன்.
கே: அப்படியென்றால் குற்றச்சாட்டுகள், வழக்குகள், ஒன்றுமில்லாமல் சிறைகளில் வாடும் தமிழ்க் கைதிகளின் நிலைமைக்கு நீதிச்சேவையில் உள்ளவர்கள் மீது குற்றம் சொல்லுகின்றீர்களா?
ப: அவர்கள் வேண்டுமென்றே அப்படி செய்திருப்பார்கள் என்றில்லை. ஆனால், செயல்பாடு இல்லாமையும், அலட்சியமும் காரணமாக இருந்திருக்கலாம். எங்களுடைய காலத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தோர் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருப்போம். சிறை அதிகாரிகளையும் அப்படி செயற்பட ஊக்குவிப்போம். நான் அடிக்கடி சிறைச்சாலைகளுக்கு விஜயம் செய்து அவர்களது பிரச்சினைகளை பற்றி கலந்து பேசி முடிந்தளவு உதவிகளை செய்திருக்கின்றேன்.
இன்று நீதிச்சேவையில் அப்படிப்பட்ட உணர்வு கொண்டவர்கள் மிகச்சிலரே இருகின்றனர். கைதிகளின் உணர்வுகளை யோசித்து பார்த்து செயல்படுவது ஒரு நீதிபதியின் முக்கிய கடமையாக நான் கருதுகின்றேன்.
.JPG)
கே: யுத்தத்தின் போதும் அதற்கு பின்னரும் இனப் பிரச்சினைக்கு 13ஆம் திருத்தச் சட்டத்தை விட அதிகமான தீர்வை தருவதாக அரசு உறுதி வழங்கியது. ஆனால், இப்போது திருத்தச் சட்டத்தில் உள்ள அதிகாரங்களை கூட ஒழித்துவிட முனைத்திருக்கிறது. இதை நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள்? இந்த திருத்தச்சட்டம் இந்தியாவால் இலங்கை மீது திணிக்கப்பட்டது என்று உணர்கிறீர்களா?
ப: இந்தியாவால் திணிக்கப்பட்டது என்று நம்ப முடியாது. ஏனென்றால் இந்திய - இலங்கை உடன்படிக்கையின்படி இலங்கை அரசுதான் இப்படியான அதிகார பகிர்வை கொடுக்க வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டிய நிலையில் இருந்தது. அதன்படி 13ஆவது திருத்தச்சட்டம், ஜே.ஆர்.ஜெயவர்தன அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது.
உண்மையில் 13ஆவது திருத்தச்சட்டம், இந்திய - இலங்கை உடன்படிக்கையின்படி, வடக்கிலும் கிழக்கிலும் தோன்றி இருந்த பிரச்சினைகளை தீரப்பதற்காகவே உருவாக்கப்பட்டது. ஆனால், அது அரசாங்கத்தால் மற்ற மாகாணங்களிலும் அமுல்படுத்தப்பட்டது. குழப்பங்களுக்கிடையே நடைபெற்ற மாகாண சபை தேர்தல்களை தொடர்ந்து, வேறந்த வழியிலும் அந்த சட்டம் பாவிக்கப்படவில்லை.
இன்றுவரை தெற்கிலிருக்கும் மாகாண சபைகள், அவைகளுக்கு 13ஆம் திருத்தச்சட்டத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற அதிகாரங்களைப் பற்றி கொஞ்சமேனும் அலட்டிக்கொள்ளவில்லை. தங்களது தனிப்பட்ட சுய அதிகாரங்கள் மீதே அவர்கள் கவனம் இருந்தது. மத்தியிலோ, மாகாணங்களிலோ அதிகாரங்கள் குவிந்திருப்பதை பற்றி அவர்களுக்கு அக்கறை இருக்கவில்லை.
வடக்கிலோ மொழியும் கலாசாரமும் தனித்துவமானதாக வேறுபட்டு இருந்தது. அந்த மக்களின் குறை, நிறைகளை கவனிப்பதற்கு அதிகாரங்கள் உள்ள அரசு கட்டுமானம் ஒன்று தேவைப்பட்டது. இதை அரசாங்கம் நன்றாக உணர்ந்துகொள்ள வேண்டும்.
கடுமையான அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டால், பிரச்சினை அதிகமாகி இன்னுமொரு ஆயுத சக்தி தோன்றுவது தடுக்க முடியா ஒன்றாகிவிடும். இரு இனங்களுக்கிடையே நம்பிக்கையை வளர்ப்பது மிக அவசியம். தலைவர்களாக இருக்கும் நாம். நம்பிக்கையின் அடிப்படையில் தீர்வு ஒன்றை காண முயன்றால், வெற்றி தரும் முன்னேற்றத்தை நிச்சயம் அடையலாம்.
மிகமுக்கியமாக இன்னொரு ஆயுத புரட்சி ஏற்படுமானால், இந்த அரசுக்கு யாரும் அனுதாபம் காட்டப்போவதில்லை. ஏனென்றால் இந்தியாவிடமும் சர்வதேச சமூகத்திடமும் கையேந்தி உதவி பெற்றார்கள். யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து தமிழர்களுக்கு நல்ல தீர்வை தருவதாக உறுதி கூறினார்கள். இப்போது அந்த உறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டார்கள்.
நான் நினைக்கிறேன், அது தவறாக இருக்கலாம். இந்த அரசுதான் 13ஆம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடும் போக்காளர்களை ஏவிவிட்டு, அதன்மூலம் 13 மட்டும் போதும் என்று தமிழர்களை கட்டுப்படுத்தி, சம்மதிக்க வைத்துவிட்டு அதன்பின் வேறு ஏதும் செய்யாது நழுவிவிடும் என்று. ஏனென்றால் அவர்களுக்கு தெரியும் 13இல் உள்ள குறைபாடுகள் என்னவென்று. அதன்மிக முக்கிய குறைபாடு எந்த சட்டத்தையும் அரசின் ஏக பிரதிநிதியாக இருக்கும் ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் நிறைவேற்ற முடியாது.
அதனால், 13ஆம் திருத்த சட்டத்தின்மூலம் ஒன்றும் நடக்காது. ஆனால், அதை கைவிட்டுவிட்டால், தமிழர்களுக்கு இப்போதைக்கு வேறு ஒன்றும் இல்லை. அதனால் தான் கூட்டமைப்பு இந்த தேர்தலில் பங்குபற்ற முடிவு செய்தது. எனது கருத்து என்னவென்றால் வடமாகாணத்தை ஆட்சி செய்வதற்கான ஜனநாயக கட்டமைப்பு ஒன்று இதுவரை இல்லை. அதனால் 13ஆவது சட்டத்தின்படி மாகாண சபையை முதலில் அமைத்துக்கொள்வோம். அதன்பின்னர், நமக்கு கூடுதலாக தேவையானதைப் பற்றி கேட்போம்.
.JPG)
கே: அப்படியானால் 13ஆவது திருத்தச்சட்டம் தமிழர் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை தீர்க்க போதுமான ஒன்றாக இல்லை எனறு கூறுகின்றீர்களா?
ப: 13ஆவது திருத்தச்சட்டம் மட்டுமே போதுமானது அல்ல. ஆனால், அதை திருத்த முயற்சி செய்யலாம். ஆளுநருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வானளவு அதிகாரத்தை மாகாணசபைக்கு மேலும் சில அதிகாரங்களைப் பெற்றுகொள்வதன் மூலம் குறைக்கலாம். சமீபத்தில் ஜனாதிபதி, ஆளுநர்களுக்கு மாகாணசபை நடவடிக்கைகளில் தலையீடு செய்ய வேண்டாமென்று அறிவுறுத்துவதாக செய்தி பத்திரிகைகளில் பார்த்தேன்.
ஆனாலும், வடக்கில் மாகாணசபை அமைக்கப்பட்டால், தான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் அதிகாரிகளுக்கு சொன்னதாக எனக்கு கிடைத்தது. இராணுவ அதிகாரிகளை சிவில் நிர்வாகத்தில் ஈடுபட அனுமதிப்பது பெரும் தவறு. அவர்களுக்கு மற்றவர்களுடன் அனுசரித்து போகும் பழக்கம் இல்லை. மற்றவர்கள் சொல்வதை கேட்கவும் மாட்டார்கள்.
மேலும் துரதிர்ஷ்டவசமாக இந்த அரசு அதிகாரங்களை மத்தியில் குவிப்பதிலியே குறியாக இருக்கிறது. 13ஆம், 18ஆம் திருத்தச்சட்டம் இதற்கு நல்ல உதாரணம். மேலும் மேலும் அதிகாரங்களை தங்கள் கைகளிலேயே வைத்துகொள்வதில் தீவிரம் காட்டுகிறார்கள். இந்த நிலைமையில் பெரிய மாற்றங்களை கொண்டுவர முடியாது போனாலும் கூட, ஓரளவு போதுமான அதிகாரங்களை பெற்றுகொள்ள முடியும். இதற்கு மற்ற மாகாண சபைகளும் இலங்கை, இந்திய மத்திய அரசுகளும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்.
கே: 13ஆம் திருத்தச் சட்டத்தை ஒழிக்க முனைபவர்கள், அது அரசியல் யாப்புக்கு எதிரானது என்றும், மக்கள் வாக்கெடுப்புக்கு விடப்படாததால் அது சட்டப்படி செல்லுபடியாகாது என்றும் இந்தியா முழுமையாக உடன்படிக்கையை அமுல்படுத்தாததாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார்களே? உங்கள் கருத்து என்ன?
ப: சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை. ஏனென்றால் உச்ச நீதிமன்றம் வடக்கையும் கிழக்கையும் பிரித்து தீர்ப்பு வழங்கிவிட்டது. இந்தியா உடன்படிக்கையை முழுமையாக நிறைவேற்றவில்லை என்று சொல்வதும், அவர்கள் 2009இல் வழங்கிய ஒத்துழைப்பின்படி பார்த்தால் தவறு. சர்வதேச நாடுகளின் மிகமுக்கியமாக இந்தியாவின் ஒத்துழைப்பு கிடைத்திராவிடில் இலங்கை அத்தனை சுலபமாக விடுதலை புலிகளை வெற்றி கொண்டிருக்க முடியாது. 80களின் மாதிரி இல்லாமல், 2009இல் இந்தியா தீவிரமாக ஒத்துழைத்தது. அதனால் 13ஆவது திருத்தச் சட்டத்தை ஒழிப்பதற்கு அது போதுமான காரணமல்ல. இந்தியா, இலங்கை என்ற நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்ட சர்வதேச உடன்படிக்கை அது. இந்தியாவின் அனுமதி இல்லாமல் அதை ஒழிக்கவோ மாற்றவோ முடியாது. இலங்கைக்கும் தன்னிச்சையாக ஒன்றும் செய்ய முடியாது.
கே: இலங்கை தன்னிச்சையாக செயல்பட முயன்றால் அதனால் என்ன விளைவுகள் நேரும் என்று நினைக்கிறீர்கள்?
ப: அண்மையில் சிவசங்கர் மேனனின் வருகையிலிருந்து இதை புரிந்துகொள்ள முடியும். ஒரு தேசம் என்ற வகையில் நமது நம்பகத்தன்மை பாழ்பட்டுவிடும். ஏற்கனவே நமது நம்பகத்தன்மை சந்தேகத்துக்கிடமான ஒன்றாகவே இருந்து வந்திருக்கின்றது. ஏனென்றால் இந்த அரசின் தலைமை சர்வதேச நாடுகளுக்கு 13ஆவது திருத்தச்சட்டம் ஊடாக இனப்பிரச்சினைக்கு, அதற்கும் மேலே போய் தீர்வு காணுவோம் என்று சொன்னது. ஆனால் இப்போது அதற்கு கீழே போய் எப்படி அதை ஒழிக்கலாம் என்று யோசிக்கின்றது. பலரை சில காலம் ஏமாற்றலாம். சிலரை பல காலம் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது என்பதை அரசு உணர்ந்துகொள்ள வேண்டும்.
.JPG)
கே: வடக்கும் கிழக்கும் 1987இல் இருந்தது போல் இணைந்திருப்பது மக்களுக்கு நல்லதா, அல்லது இப்போது இருப்பதுபோல் தனித்து செயல்படுவது நல்லதா, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
ப: இரண்டுமே இணைந்திருப்பது நல்லது என்பதே என் கருத்து. 13ஆவது திருத்தச்சட்டத்தின் நோக்கமே வடக்கு, கிழக்கு பிரச்சினைகளை தீர்த்து வைப்பது என்பதே. 1987இல் 13ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டு இரு மாகாணங்களும் இணைந்ததற்கு காரணம், இரண்டு மாகாணங்களிலுமே பொதுவானதாக தமிழ்மொழி இருந்ததுதான்.
அந்த நேரத்தில் கிழக்கில் இருந்த முஸ்லிம் மக்கள், தமிழ் பெரும்பான்மையைப் பற்றிய அச்சம் கொண்டிருந்தார்கள். இப்போது அவையெல்லாம் சீர்செய்யப்பட்டு விட்டன. வடக்கிலும் கிழக்கிலும் பாவிக்கப்படுவது ஒரே மொழி. அவர்களது கலாசாரம் தனி. சுவாத்தியம் கூட மற்ற மாகாணங்களில் இருந்து வேறுபட்டது. அதனால் அவர்களை தங்களை தாங்களே தங்கள் மொழியில் ஆட்சி செய்ய அனுமதிப்பது அவசியம். வடக்கில் வந்து வாழ்வதை ஒருவரும் எதிர்க்கவில்லை. ஆனால் ஏன் அவர்கள் அந்த பிரதேசத்தின் மொழியை கற்றுக்கொள்ளக் கூடாது? நான் சிறுவனாக இருந்தபோது (யாழ்ப்பாணத்தில்) அப்புகாமி என்பவரிடம் இருந்துதான் ரொட்டி வாங்குவேன். எங்களை விட நல்ல தமிழ் பேசுவார் அவர். ஜோசப் பரராஜசிங்கத்திடம் வேலை பார்த்த சோமபால என்பவர், நான் அவருடன் சிங்களத்தில் பேசும்போது தமிழில்தான் என்னுடன் அவர் பேசுவார்.
ஆனால், தற்போது அரசு வடக்கிலும் கிழக்கிலும் உள்ள மக்களை அவர்களது தாய்மொழியை விட்டுவிட்டு சிங்கள மொழியை பாவிக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். அங்குள்ள எல்லா திணைக்களங்களிலும் சிங்கள மொழியிலே கடிதங்கள் பரிமாறப்படுகின்றன. பொலிஸிடம் கொடுக்கும் வாக்குமூலம் கூட சிங்களத்தில்தான் பதியப்படுகிறது. அங்கு 90 வீதமான மக்கள் தமிழ் பேசுபவர்களாக இருக்கையில், இது முரண்பாடானதாகவும் கேவலமாகவும் இருக்கின்றது. அவ்வப்போது சிறு சிறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டாலும் முக்கிய பிரச்சினை இன்னும் அப்படியே இருக்கிறது.

கே: இனப்பிரச்சினை தீர்வுக்கு இரு இனங்களிடையேயும் நம்பிக்கை வளர்க்க வேண்டும் என்று சொன்னீர்கள். ஆனால் கூட்டமைப்பு இன்னும் புலிகளின் பிரதிநிதிகள் போன்றே செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு மத்தியில் அப்படி நம்பிக்கையை வளர்த்துக்கொள்வது சாத்தியமானதா?
ப: நான் உறுதியாக நம்புகிறேன். புரிந்துணர்வு மூலமும் கல்வியின் மூலமும் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள முடியும். இன்னொரு மறக்கக்கூடாத விடயம் கூட்டமைப்பு, புலிகள் மாதிரி இல்லாமல் அகிம்சையிலும் சமஷ்டி முறையிலும் அதிக நாட்டம் கொண்டவர்கள். ஆனால் இருவரது நோக்கமும் உரிமைகள் மறுக்கப்பட்டு இரண்டாந்தர குடிமக்களாக இயல்பு வாழ்க்கை வாழமுடியாத தமிழ் மக்களை கரையேற்றுவதுதான். அதனால்தான் சிலர் கூட்டமைப்பு, புலிகளின் பிரதிநிதிகளாக செயல்படுகிறார்கள் என்று நினைக்கிறார்கள்.
ஒரு காலத்தில் உயர்மட்ட புலி உறுப்பினர்களாக இருந்த தயா மாஸ்டர், கே.பி, தமிழினி இப்போது அரசுடன் இணைந்திருக்கிறார்களே, அதை எப்படி பார்க்கின்றீர்கள்? பேசுவதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை. அரசின் கட்டுப்பாட்டிலே கட்டுண்டு இருக்கிறார்கள். அவர்களை அரசின் பிடியில் இருந்து விடுவித்து வெளிநாடுகளுக்கு அனுப்பி பாருங்கள். அப்போது அவர்களுடைய எண்ணங்களிலும் செயல்களிலும் பாரிய மாற்றங்களை காணலாம். இப்படிப்பட்ட நிலைதான் கூட்டமைப்பினருக்கு இருந்தது. புலிகள் இருந்தபோது அவர்களது தலைவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். வாயை மூடிக்கொண்டு இருப்பதை விட வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை அவர்களால்.
ஆனால் அரசும் அப்படி குற்றஞ்சாட்டுவோரும் புலிகளை முழுதாக அழித்துவிட்டோம் என்று மார் தட்டுகிறார்கள். அப்படியானால் கூட்டமைப்பு எப்படி புலிகளின் பிரதிநிதிகளாக செயல்பட முடியும்? இல்லாத, ஒழிக்கப்பட்ட அமைப்பின் முகவரிகளாக எப்படி இயங்க முடியும்?

கே: எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அரசின் மீது வடக்கில் யாரும் அரசியல் செய்வதை விரும்புவதில்லை, அனுமதிப்பதில்லை என்று குற்றஞ்சாட்டுகிறார்கள். அப்படியானால் சுதந்திரமான நேர்மையான தேர்தலை செப்டெம்பரில் அரசு நடத்தும் என்று எதிர்பார்க்கிறீர்களா?
ப: இதுதான் எங்கள் கவலைகளில் முதன்மையாக இருக்கிறது. வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களை அனுமதிப்பதை அரசு எதிர்ப்பது கவலையளிக்கிறது. சமீபத்தில் தேர்தல் ஆணையாளருடனான சந்திப்பொன்றில் எங்களது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரிடம் இராணுவத்தினர் முகாம்களில் தேர்தல் காலங்களில் வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்திருக்கிறார். அது சாத்தியமானது அல்ல என்று சொல்லியிருக்கிறார். இப்படிப்பட்ட பிரச்சினைகளுக்கு அவரால் தீர்வு தர முடியாதென்றால் அவர் தேர்தல் ஆணையாளராக எப்படி செயல்பட முடியும். இது விடயமாக அவருக்கும் சுரேஷ் பிரேமசந்திரனுக்கும் இடையில் பெரிய விவாதமே நடந்திருக்கிறது.
சுதந்திரமான நேர்மையான தேர்தல் நடத்த இப்போதுள்ள சூழ்நிலை சரியாதுதானா என்பது எவராலும் எளிதாக யூகித்துக்கொள்ள முடியும். தேர்தல் சம்பந்தமான வழக்குகள் சிலவற்றை நான் கையாண்டிருந்ததால் எப்படிப்பட்ட நடவடிக்கைகள் அதிகாரத்தில் உள்ளவர்களினால் எதிர்ப்புக்களை ஒடுக்க எடுக்கப்பட்டன என்று நான் அறிவேன். அதனாலேதான் முடிந்த அளவுக்கு தேர்தலை சுதந்திரமாகவும் நேர்மையானதாகவும் நடத்துவது மிக அவசியம்.
.JPG)
நேர்காணல்: லக்னா பரணமான்ன
படப்பிடிப்பு: பிரதீப் பதிரண