2026 மார்ச் 29, ஞாயிற்றுக்கிழமை

சிறிசேன வருகை; இந்திய - இலங்கை உறவில் புதிய தொடக்கம்?

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 17 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

நான்கு நாள் பயணமாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியா வந்திருக்கிறார். தேர்தல் வெற்றிக்கு பின்னர் முதன்முறையாக இந்தியா வந்துள்ள அவர், இந்தியாவுடனான இலங்கையின் நெருங்கிய உறவை உலக நாடுகளுக்கு பிரகடனப்படுத்தியிருக்கிறார். இது மிகவும் வரலாற்று சிறப்புமிக்க உறவின் நல்ல தொடக்கத்துக்கான அறிகுறி என்று அரசியல் தலைவர்கள் கருதுகிறார்கள். இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிலுமே வெவ்வேறு அரசுகள் ஆட்சிக்கு வந்திருப்பது இலங்கை தமிழர் நலனில் புதிய அத்தியாயத்தை தொடக்கும் என்றும் நம்பப்படுகிறது.

இந்திய பிரதமர் நரேந்திரமோடியை பொறுத்தளவில் இலங்கை தமிழர்களின் நலனில் அக்கறை காட்டவேண்டும், அவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்ற எண்ணவோட்டத்தில் இருக்கிறார். அதேநேரத்தில் ஒட்டுமொத்த இலங்கை - இந்திய உறவில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்ஷ இருந்தபோது, நிலவியதை விட உன்னதமான அடுத்த கட்டத்துக்கு  இந்த உறவை எடுத்துச்செல்ல வேண்டும் என்றும் கருதுகிறார்.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இந்தியா வந்துசென்ற பின்னரும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் சீனா சென்று திரும்பிவந்துள்ள நிலையிலும், நடைபெறும் இலங்கை ஜனாதிபதியுடனான சந்திப்பு அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

முன்னர் டாக்டர் மன்மோகன் சிங் இந்திய பிரதமராக இருந்தபோது, இலங்கையுடனான பேச்சுவார்த்தையில் அவருக்கு பல நெருக்கடிகள்.  சந்தித்த பிரச்சினைகள் ஏராளம். இப்போது இந்திய பிரதமர் நரேந்திரமோடி அப்படி எதையும் எதிர்கொள்ளவில்லை. இலங்கையில் போர் எதுவும் நடக்கவில்லை. தமிழகத்தின் 39 எம்.பி.க்களின் ஆதரவில் நரேந்திரமோடி ஆட்சி செய்யவில்லை. அவர் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி செய்கிறார். குறிப்பாக, டாக்டர் மன்மோகன்சிங்குக்கு இரு பிரச்சினைகள் அப்போது இருந்தன. ஒன்று அவர் கட்சி தலைமைக்கு இலங்கை தமிழர் பிரச்சினையை  தீர்ப்பதில் இருந்த கவனமின்மை. அதற்கு ராஜீவ் படுகொலை செய்யப்பட்டது ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கோ அல்லது வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த சல்மான் குர்ஷித்தோ கட்சி தலைமையின் எண்ணவோட்டத்துக்கு மாறாக இலங்கை தமிழர் விவகாரத்தில் எந்த முடிவுக்கும் வரமுடியாது.

அதேபோல், தமிழகத்தில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவில் மத்தியில் ஆட்சி செய்யவேண்டிய நிலை மன்மோகன்சிங்குக்கு  இருந்தது. அந்த தி.மு.க. மாநிலத்தில் அப்போது ஆட்சியில் இருந்ததால் அ.தி.மு.க. உள்ளிட்ட மற்ற கட்சிகள் அனைத்துமே ஓரணியில் நின்று தமிழகத்தில் 'இலங்கை தமிழர்களை அழிக்க காங்கிரஸுக்கு தி.மு.க. துணை போகிறது' என்ற பெரிய போராட்டங்களையே நடத்தினார்கள். இலங்கை தமிழர் பிரச்சினையில் தி.மு.க. வுக்;கு அப்போது கொடுத்த அந்த அழுத்தத்தை அப்படியே மன்மோகன்சிங் மீது தி.மு.க. திருப்பியது.

ஆனால், இன்றைய நிலைமை அப்படியில்லை. தமிழகத்தில் இலங்கை தமிழர்களுக்காக போராடும் அமைப்புகள், கட்சிகள் இதுவரையில் அ.தி.மு.க. அரசுக்கு அப்படியொரு அழுத்தத்தை கொடுக்கவில்லை. மத்திய அரசின் முக்கிய கொள்கை முடிவுகளுக்கு அ.தி.மு.க. துணை போகிறது. 'மத்திய அரசுக்கு அச்சாணி போல் நிற்கிறது கழகம்' என்று எமது எம்.ஜி.ஆரில் (அ.தி.மு.க.வின் நாளிதழ்) பிரகடனம் செய்துகொள்கிறது. ஆனால்,  மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி ஆட்சிக்கு வந்த பின்னர்,  இலங்கை தமிழர் பிரச்சினையில் அ.தி.மு.க. அமைதி காக்கிறது.

இலங்கை தேர்தல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோல்வி என்று எது பற்றியும் அக்கட்சி கருத்து சொல்லவில்லை. அதனால்,  தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க.வின் 37 எம்.பி.க்களையும் அக்கட்சிக்கு ராஜ்யசபையில் உள்ள ஆதரவையும் பா.ஜ.க. முக்கிய மசோதாக்கள் விஷயத்தில் பெறவேண்டிய நிர்ப்பந்தம் இருந்தாலும், இலங்கை தமிழர் பிரச்சினையை முன்னிறுத்தி மத்தியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுடன் தி.மு.க. மோதியது போல் அ.தி.மு.க. இப்போது உள்ள மத்திய அரசுடன் மோதும் என்பதற்கான வாய்ப்புகள் இல்லை. ஆகவே 'தமிழக அழுத்தம்', 'கட்சித் தலைமையின் அழுத்தம்' ஆகிய இரண்டும் இல்லாமல் 'சுதந்திரப்பறவையாக' இலங்கை தமிழர் பிரச்சினையில் பிரதமர் நரேந்திரமோடி முடிவு எடுக்கமுடியும் என்ற சூழல் இலங்கையின் புதிய ஜனாதிபதியின் வருகையின்போது நிலவுகிறது.

அதனாலேயே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியா வருகிறார் என்று அறிந்ததும் தி.மு.க. தலைவர் கருணாநிதி நீண்ட கடிதம் ஒன்றை பாரதப் பிரதமர் நரேந்திரமோடிக்கு எழுதியுள்ளார். அக்கடிதத்தில், 'அனைத்து அதிகாரங்களும் உள்ள 13ஆவது அரசியல் சட்டத்திருத்தத்தை அமுலுக்கு  கொண்டுவருவது, தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வை எட்ட 'பொது வாக்கெடுப்பு',  இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை, ஐ.நா. கூட்டத்தில் மனித உரிமை மீறல்கள் குறித்த அறிக்கை வரும்போது அதற்கு இந்தியா ஆதரவு அளித்திடவேண்டும், தமிழர் பகுதியில் உள்ள  இராணுவத்தை திரும்ப பெறுதல், தமிழர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிலங்களையும் வீடுகளையும் அவர்களிடம் திருப்பிக்கொடுத்தல்' போன்ற பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்தியா வரும் இலங்கை ஜனாதிபதியுடன் பிரதமர் நரேந்திரமோடி 'விருப்பு வெறுப்பின்றி' ஆய்ந்து தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கவேண்டும் என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இதிலே 'விருப்பு வெறுப்பின்றி' என்று கருணாநிதி கடிதத்தில் இடம்பெற்றுள்ள அந்த வார்த்தைக்கு ஆயிரம் அர்த்தங்கள் கண்டுபிடிக்கலாம் என்றாலும், முந்தைய காங்கிரஸ் அரசு போல், அக்கட்சியின் தலைமை போல், 'விருப்பு வெறுப்பு' அடிப்படையில் இலங்கை தமிழர் பிரச்சினையை அணுகாதீர்கள் என்பது இதில் அவர் நினைவுகூர்ந்துள்ள குறிப்பிடத்தக்க வேண்டுகோள்.

காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசிலிருந்து தி.மு.க.விலகிய பின்னரும்; சரி, நரேந்திரமோடி பிரதமராக பொறுப்பேற்ற பின்னரும் சரி தொடர்ந்து இலங்கை தமிழர் பிரச்சினைக்காக குரல் கொடுத்துவருவது இரு கட்சிகளே. அதில் ஒன்று தி.மு.க. இன்னொன்று ம.தி.மு.க. மற்ற கட்சிகள் எல்லாம் 'அனைவரும் கருத்து சொல்லியிருக்கிறார்களே' என்ற எண்ணத்தின் அடிப்படையில் கருத்துக்களை அவ்வப்போது கூறுகிறார்கள். ஆனால் இந்த இரு கட்சிகளும் தொடர்ந்து இதில் குரல் கொடுத்துவருகின்றன.

இந்த சூழ்நிலையிலேயே 'சிறிசேன தமிழகத்துக்கு வந்தால் கறுப்புக்கொடி காட்டுவோம்' என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டிருக்கிறார். கருணாநிதி முந்திக்கொண்டு கடிதம் எழுதியதும் வைகோவின் அறிக்கைக்கு முக்கிய காரணம்.

காஞ்சிபுரத்தில் உள்ள சங்கரமடத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேன இரகசியமாக வருவதாக தகவல் கிடைத்துள்ளதாக கூறியுள்ள வைகோ, 'சிறிசேனவுக்;கும் ராஜபக்ஷவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை' என்ற பாணியில் சிறிசேனவின் கடந்தகால அரசியல் பற்றி விரிவாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அப்படியொரு 'தமிழக விஸிட்' திட்டம் ஏதுமில்லை என்பது தற்போதையை சூழ்நிலையாக இருந்தாலும், தி.மு.க. வே கடிதம் அனுப்பிய பின்னர், நாம் ஏன் சும்மா இருக்கவேண்டும் என்று கருதிய வைகோ, அடுத்த கட்டத்துக்கு சென்று கறுப்புக்கொடி போராட்டத்தை அறிவித்துள்ளார். இதேபோல், வடமாகாணசபையில்  நிறைவேற்றிய 'மனித உரிமை மீறல் குறித்த சர்வதேச விசாரணையை' தமிழகத்தில் வரவேற்று உடனடியாக அறிக்கை விட்டது தி.மு.க. அடுத்து இன்னொரு கட்சி ம.தி.மு.க. என்பதும் கூர்ந்து கவனிக்கத்தக்கது. அதிலும், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் அதை வரவேற்று பேட்டி கொடுத்திருப்பது இன்னும் புதிய விஷயமாக இருக்கிறது. ஏனென்றால், தி.மு.க. என்றால் இதுவரை கருணாநிதி மட்டுமே இதுபோன்ற விஷயங்களில் முந்திக்கொண்டு கருத்து சொல்வார். இந்தமுறை ஸ்டாலின் அதில் முந்திக்கொண்டார்.

இதற்கிடையில், இந்தியா வந்துள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தமிழக பா.ஜ.க.வை சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வரவேற்றுள்ளமை  குறிப்பிடத்தக்க அம்சம். இராமநாதபுரம் மீனவர்கள் பிரச்சினை என்றாலும், இலங்கை கடற்படை பிடித்த படகுகளை மீட்பதாக இருந்தாலும், போராடும் அந்த மீனவர்களுடன் சென்று பேச்சுவார்த்தை நடத்தும் தமிழக பா.ஜ.க. தலைவர்களில் பொன்.ராதாகிருஷ்ணன் முக்கியமானவர். இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையில் வரும் மனித உரிமைகள் மீறல் தீர்மானம் குறித்து இரு நாடுகளிடையே பேச்சுவார்த்தை இருக்கும். அதேநேரத்தில், இலங்கையில் 'மறுவாழ்வுப்பணிகள், மறுகட்டமைப்புப் பணிகள், அதிகாரப்பகிர்வு' உள்ளிட்ட அனைத்து விஷயங்கள் பற்றியும் விவாதிக்கப்படும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் கருத்து வெளியிடப்பட்டுள்ளமை கவனிக்கத்தக்கது.

தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்படுவது, தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பது, தமிழகத்தில் உள்ள அகதிகளை மீண்டும்  இலங்கைக்கு அனுப்புவது போன்ற முக்கிய பிரச்சினைகள் பிரதமர் நரேந்திரமோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி சந்திப்பில் இன்னொரு அங்கமாக இருக்கும் என்ற தகவல்களும் வெளிவரத்தொடங்கியுள்ளன. சீனக்கப்பல்களை இலங்கை கடற்பகுதியில் நிற்க அனுமதி கொடுத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்ஷவின்  நடவடிக்கையால் இந்திய - இலங்கை உறவில் புகைச்சலாகவே இருந்தது. 'சீனாவுடனான உறவு இந்தியாவின் உறவை கெடுத்துக்கொள்வதற்காக அல்ல' என்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணத்துக்கு  இடையில் இலங்கை அறிவித்துள்ளமை தமிழகத்தில் உள்ள தலைவர்கள் மத்தியில் ஒரு சாதகமான அம்சத்தை தோற்றுவித்துள்ளது. இரு நாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தையில் இனிமையான முடிவுகள் எடுக்கப்படலாம் என்பதே  இந்த எதிர்பார்ப்பு.

அதனால் தானோ என்னவோ 'இலங்கை ஜனாதிபதியுடன்  தாங்கள் மேற்கொள்ளும் பேச்சுவார்த்தையில் நல்ல முடிவுகளை காண உலகத்தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள்' என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இலங்கை தமிழர்கள் நலன் என்பது இக்கடிதத்தின் மையக்கருத்து என்றாலும், அதிலும் தமிழக அரசியல் இல்லாமல் இல்லை. தமிழகத்தில் 'திராவிடக்கட்சிகளுக்கு மாற்று' என்று முழக்கமிடும் பா.ஜ.க., முதலில் இலங்கை தமிழர் பிரச்சினையில் அக்கறை செலுத்தி அவர்களுக்கு நிரந்தர தீர்வை உருவாக்கிக்கொடுக்க வேண்டும் என்ற செய்தியும் கருணாநிதி கடிதம், வைகோ அறிக்கை போன்றவற்றில் மறைந்து கிடக்கிறது. இது பற்றியெல்லாம் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஏதும் அறிக்கை விடவில்லை என்றாலும், பா.ஜ.க.வின் மாநிலப் பிரவேசம் அக்கட்சியையும் இலங்கை தமிழர் பிரச்சினையில் பா.ஜ.க.வை சாடவேண்டிய நிலைக்கு தள்ளும் என்றே தோன்றுகிறது.

அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு முக்கிய கட்சிகளில் தி.மு.க. இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அறிக்கை, கடிதம் என்று கருத்துக்களை தெரிவித்துவருகிறது. 'இலங்கை ஜனாதிபதி விஷயத்தில்' இப்பிரச்சினைக்கு ஏதாவது ஒரு சாதகமான பேச்சுவார்த்தை முடிவுகள் வெளியிடப்படவில்லை என்றால், 'இலங்கை தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சி போல்தான் பா.ஜ.க.வும்' என்ற குற்றச்சாட்டை சுமத்த தமிழக அரசியல் கட்சிகள் இப்போதே தயாராக இருக்கின்றன. எல்லாவற்றையும் விட முக்கியமாக தமிழக காங்கிரஸ் கட்சியே 'பா.ஜ.க. மீது குற்றஞ்சாட்ட' தயாராக இருக்கிறது என்பதே இந்தமுறை இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்துக்கு கிடைத்த எதிர்பாராத திருப்புமுனை. ஏனென்றால், இப்போதெல்லாம் முன்பு மத்தியில் ஆட்சியிலிருந்ததை விட, மிகவும் அக்கறையாக இலங்கை தமிழர் பிரச்சினையில் கருத்துக்களை கூறிவருகிறார் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். மொத்தத்தில் 'மோடி- சிறிசேன' சந்திப்பு இலங்கை தமிழர் நலனில் ஒளி வீச வைக்குமா? - இதையே இலங்கை தமிழர்களுக்காக நீண்டகாலமாக குரல் கொடுத்துவரும் தமிழக கட்சிகளும் தமிழக மக்களுமே ஆர்வமாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .