2026 மார்ச் 29, ஞாயிற்றுக்கிழமை

புருஷனோட என் வீட்டில் 10 நாள்: எனக்கு ஆப்பு

Editorial   / 2026 மார்ச் 27 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சின்னத்திரை நடிகை தாமரைச் செல்வி, தன்னை நம்பவைத்து நகை மோசடி செய்ததாகக் கூறி வெளியிட்டுள்ள வீடியோவும், அது குறித்த பேட்டியும் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
 
சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தாமரைச் செல்வி இது குறித்து விரிவாகப் பேசியுள்ளார். "சின்ன மருமகள்" சீரியல் படப்பிடிப்பின் போது, தன்னுடன் நடித்த நடிகை ஸ்வேதாவுடன் நெருக்கமான நட்பு ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார். "அந்தத் தொடரில் ஸ்வேதா என்னை 'அம்மா' என்றுதான் அழைப்பார். படப்பிடிப்பு தளத்திலும் நாங்கள் நிஜமான தாய்-மகள் போலவே பழகினோம். அந்த அளவிற்கு எங்கள் நட்பு ஆழமாக இருந்தது," என்று தாமரை கூறியுள்ளார்.
 
நடிகை ஸ்வேதாவிற்குத் திருமணமாகி இருந்தாலும், ஒருகட்டத்தில் ஏற்பட்ட குடும்பப் பிரச்சினையால் அவர் கணவருடன் தங்குவதற்கு இடமின்றித் தவித்ததாகத் தாமரைத் தெரிவித்துள்ளார். "செல்ல இடமில்லை என்று அவர் கூறியதால், மனிதாபிமான அடிப்படையில் எனது வீட்டிலேயே 10 நாட்கள் தங்க வைத்தேன்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தாமரையின் வீட்டில் தங்கியிருந்த சில நாட்களிலேயே ஸ்வேதாவிற்கும் அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, ஸ்வேதா பிரிந்து சென்றுள்ளார். அப்போது ஸ்வேதாவின் கணவர், "எனக்கு இப்போதைக்குச் செல்ல இடமில்லை, இன்னும் சில நாட்கள் மட்டும் இங்கேயே இருக்க அனுமதி கொடுங்கள்," எனக் கண்ணீருடன் கேட்டதால் தாமரைச் செல்வி அதற்குச் சம்மதித்துள்ளார்.

இதனைப் பயன்படுத்திக் கொண்ட அவர், "எனது மனைவிக்கு (ஸ்வேதா) விளம்பரம் செய்கிறேன் என்று கூறி சிலரிடம் பணம் வாங்கினேன். ஆனால் அது நடக்காததால் அவர்கள் என்னை மிரட்டுகிறார்கள், கொஞ்சம் உதவுங்கள்," எனக் கேட்டுள்ளார். அதனை நம்பிய தாமரைச் செல்வி, அவருக்கும் பண உதவி செய்துள்ளார். "பல்வேறு இடங்களில் இருந்து ஸ்கேனர் (Scanner) அனுப்பி பணம் போடுமாறு அவர் கேட்டார். பாவம் என்று நினைத்து நானும் பலமுறை பணம் அனுப்பினேன்," என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
 
இறுதியில் இந்த உதவிகள் அனைத்தும் தனக்கே வினையாக முடிந்துவிட்டதாகத் தாமரை கூறுகிறார். "கடைசியில் என்னையே ஏமாற்றிவிட்டான். அந்தப் பையன் எனக்கு ஆப்பு வைத்துவிட்டான். இப்போது அந்த நடிகையும் என்னிடம் பேசுவதில்லை," என அவர் வருத்தப்பட்டுள்ளார்.

முன்னதாக வெளியிட்ட வீடியோவில், தனது நகையை ஏமாற்றி விற்றதாக 'ஆதி' என்ற நபர் மீது தாமரைச் செல்வி குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாகத் தனது கணவர் பார்த்தசாரதி மூலம் போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் பொலிஸார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .