2026 மார்ச் 29, ஞாயிற்றுக்கிழமை

கோட்டைக்கு குறிவைக்கும் திமுக வாரிசுகள்

S.Renuka   / 2026 மார்ச் 29 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் திகதி நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 30-ஆம் திகதி ஆரேம்பமாகவுள்ளது. 

இந்நிலையில், திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் பல தொகுதிகளில் மறைந்த மற்றும் தற்போதைய மூத்த அமைச்சர்களின் வாரிசுகள் சீட் கேட்டு வரிசை கட்டி நிற்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஏற்கெனவே துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலைப்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அமைச்சர்களின் மகன்கள், மகள்கள் என ஒரு பெரிய 'வாரிசுப் பட்டாளமே' தேர்தல் களத்தில் குதிக்கத் தயாராகி வருகின்றனர்.

குறிப்பாக, மறைந்த அமைச்சர்களின் தொகுதிகளில் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். 

அமைச்சர்கள் எ.வ.வேலு, நேரு, பொன்முடி போன்றோரின் வாரிசுகள் ஏற்கனவே கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், இந்தத் தேர்தலில் அவர்களுக்கு நேரடிப் போட்டி வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் கட்சிக்கு வலுசேர்த்தாலும், மறுபுறம் நீண்டகாலமாகக் கட்சிக்காக உழைத்த சீனியர் நிர்வாகிகளிடையே மெல்லிய அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை திமுகவின் இந்த 'வாரிசு அரசியல்' போக்கை மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றன. 

"திமுக என்பது ஒரு குடும்பக் கட்சியாக மாறிவிட்டது" என்ற விமர்சனத்தை முன்வைத்து அவர்கள் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர். ஆனால், திமுக தரப்போ "திறமை உள்ளவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அவர்கள் அமைச்சர்களின் பிள்ளைகளாக இருப்பது ஒரு தகுதியல்ல, கூடுதல் பொறுப்பு" என்று விளக்கம் அளித்து வருகிறது. உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இளைஞரணி நிர்வாகிகள் அதிகளவில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

மார்ச் 29-ஆம் திகதி திமுகவின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகவுள்ள நிலையில், அதில் எத்தனை வாரிசுகளுக்கு இடம் கிடைக்கும் என்பது மில்லியன் டொலர் கேள்வியாக உள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது முதல் தேர்தலிலேயே 'புதிய முகம்'களுக்கு முன்னுரிமை அளிப்பதாகக் கூறி வரும் நிலையில், திமுகவின் இந்த வாரிசு வியூகம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மே 4-ஆம் திகதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது, மக்கள் இந்த வாரிசு அரசியலை ஏற்றுக்கொண்டார்களா என்பது தெரிந்துவிடும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .