Thipaan / 2015 மே 20 , மு.ப. 08:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போது நாடாளுமன்றத்தில் குழப்ப நிலை நிலவி வருகிறது. நாடாளுமன்றத்தில் மிகப் பெரிய கட்சி எதிர்க் கட்சியிலும் சிறியதோர் கட்சி ஆளும் கட்சியாகவும் இருக்கிறது. எனவே, நாடாளுமன்றத்தை கலைத்து புதிதாக பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என பல அரசியல் கட்சிகள் கூறுகின்றன.
ஆனால், தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பு அதைப் பற்றி அக்கறையே இல்லாததைப் போல் இருக்கிறது.
அதேபோல் தேர்தல் முறையை மாற்றி அமைப்பதற்கான அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தைப் பற்றி பல அரசியல் கட்சிகள் கருத்து வெளியிட்டு வருகின்றன.
சில கட்சிகள் அந்த விடயத்தில் அரசாங்கத்துக்கு சவால் விட்டுக் கொண்டும் இருக்கிறன்றன. சில சிறுபான்மை கட்சிகள் அந்த விடயத்தில் பதறிப் போய் இருப்பதாகவும் தெரிகிறது. ஆனால், அதிலும் தமிழ்த் தேசியக் கூட்;டமைப்பு அலட்டிக் கொள்ளவில்லை.
நாடாளுமன்றத்தை கலைக்குமாறு பல அரசியல் கட்சிகள் கூறி வந்த போதிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதற்கு இப்போதே தயாராக இல்லை போல் தான் தெரிகிறது.
அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஜனாதிபதியின் பிரதான இரண்டு தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான, தேர்தல் முறையை மாற்றி அமைப்பதற்கு அவரது அரசாங்கத்துக்கு இன்னமும் முடியாமல் போனமையே ஒரு காரணமாகும்.
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் நிறைவேறிய போதிலும் அதன் கீழ் அடுத்த தேர்தலுக்கான நிர்வாக ஒழுங்குகள் இன்னமும் தயாராக இல்லாமையே அடுத்த காரணமாகும்.
20 ஆவது திருத்தமானது அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத் திட்டத்தின் முக்கிய வாக்குறுதியாக இருந்தது. ஆனால், அந்த வேலைத் திட்டத்துக்கான காலக்கெடு கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி முடிவடைந்த போதிலும் அந்த காலப் பகுதியில் அந்த திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்வது ஒரு புறமிருக்க, அதைப் பற்றி அரசியல் கட்சிகளிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளவாவது முடியவில்லை. குறிப்பாக இந்த விடயத்தில் சிறு மற்றும் சிறுபான்மை கட்சிகள் பெரும் அச்சத்துடனேயே இருக்கின்றன.
தற்போதைய விகிதாசார தேர்தல் முறையையும் 1978ஆம் ஆண்டுக்கு முன்னர் நாட்டில் அமுலில் இருந்த தொகுதிவாரி தேர்தல் முறையையும் உள்ளடக்கிய கலப்பு முறையொன்று இருக்க வேண்டும் என்பதே பொதுவாக தற்போது ஏற்பட்டு இருக்கும் இணக்கப்பாடாகும்.
ஆனால், நாடாளுமன்றத்திலுள்ள ஆசனங்களுக்கு எத்தனை சதவீதம் விகிதாசார முறையில் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் எத்தனை சதவீதம் தொகுதி வாரி முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் இப்போதும் இழுபறி நிலை இருந்து வருகிறது.
மக்கள் விடுதலை முன்னணி போன்ற சிறு கட்சிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தவிர்ந்த ஏனைய சிறுபான்மைக் கட்சிகளும் தற்போது அரசாங்கம் முன்வைக்கப் போகும் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதில் அக்கறை காட்டவில்லை.
எனவே, அக் கட்சிகள் அத் திருத்தத்தை நிறைவேற்றாமலேயே நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் எனக் கூறுகின்றன.
சிறு கட்சிகள் சில 20ஆவது திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காத போதிலும் எதிர்வரும் பொதுத் தேர்தலை தற்போதைய முறையின் கீழேயே நடத்த வேண்டும் என்று கூறுகின்றன.
20ஆவது திருத்தம் நிறைவேறினாலும் அதன் கீழ் தேர்தல் தொகுதிகளின் எல்லைகளை நிர்ணயிப்பதற்கு நீண்ட காலம் எடுக்கும் என்றும் அதுவரை குழப்ப நிலையிலுள்ள தற்போதைய நாடாளுமன்றத்தை கலைக்காதிருக்க முடியாது என்றும் அக் கட்சிகள் வாதிடுகின்றன.
அதில் ஓரளவு உண்மை இருந்த போதிலும் தற்போதைய முறையின் கீழேயே எதிர்வரும் தேர்தலையும் நடத்த வேண்டும் என அவர்கள் வாதிடுவதற்கான உண்மையான காரணம் அதுவல்ல.
தொகுதிவாரி தேர்தல் முறை தமக்கு சாதகமாக அமையாது என்பதால் இந்தத் தடவை மட்டுமாவது தமக்கு சாதகமான விகிதாசார முறைiயிலேயே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நோக்கிலேயே அவர்கள் இவ்வாறு வாதிடுகிறார்கள்.
மக்கள் விடுதலை முன்னணி, கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவை தோல்வியுறச் செய்ய பெரும் பங்கை ஆற்றியது. அந்த தேர்தல் பிரசார காலத்தில் அக் கட்சியினர் மக்கள் மனதை வெகுவாக வென்றனர். அதன் பின்னர் மஹிந்தவின் அரசாங்கத்தின் கீழ் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பாகவும் அக் கட்சியினர் குரல் எழுப்பினர்.
அக் கட்சியினர் புதிய அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளை ஏற்காததனாலும் அவர்கள் பெருமை தேடிக் கொண்டனர். தமிழ் மக்கள் விடயத்திலும் அவர்களது நிலைப்பாட்டில் நல்ல முன்னேற்றத்தை காணக்கூடியதாக இருக்கிறது.
எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தலில் அக் கட்சி முன்னரை விட கூடுதலான ஆசனங்களை வெல்லும் என்றதோர் பொது அபிப்பிராயம் நிலவி வருகிறது. காலப் போக்கில் இந்த நிலைமை மாறலாம்.
தொகுதிவாரி தேர்தல் முறையை விரும்பாததற்குப் புறம்பாக இதுவும் விரைவில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று அக் கட்சியினர் குரல் எழுப்புவதற்கான கரணமாக இருக்கலாம்.
இனவாதக் கும்பல்களான விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி, தினேஷ் குணவர்தனவின் மக்கள் ஐக்கிய முன்னணி மற்றும் உதய கம்மன்பிலவின் பிவிதுரு ஹெல உறுமய போன்ற கட்சிகள் எந்த முறையில் தேர்தல் நடந்தாலும் தனியே போட்டியிட்டால் முழு நாட்டிலும் ஓரிரு ஆசனங்களுக்கு மேல் பெற மாட்டா. அக் கட்சிகளும் விரைவில் பொதுத் தேர்தலை நடத்துவதை விரும்புகின்றன.
அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. சிறு கட்சிகள் என்ற வகையில் அக்கட்சிகளும் விகிதாசார முறையை விரும்புவதே முதலாவது காரணமாகும்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பிளவு பட்டு இருப்பதனால் அதன் மூலம் பயனடைவதே அவர்களது இரண்டாவது நோக்கமாகும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகித்த கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மஹிந்தவுக்கு ஆதரவான குழுக்கள் எவ்வளவு தான் கோஷமிட்டாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் அரசாங்கத்தில் பிரதமர் பதவியை ராஜபக்ஷவுக்கு வழங்குவது ஒரு புறமிருக்க, அவருக்கு ஸ்ரீ.ல.சு.க.வின் கீழ் போட்டியிடவாவது சந்தர்ப்பம் வழங்குவாரா என நம்ப முடியாது.
தமக்கு சவால் விடுத்த சகலரினதும் வாழ்க்கையையே ராஜபக்ஷ பாழாக்க முற்பட்டார். பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு பின்னராவது அவருக்கு மீண்டும் அதிகாரத்தை கையிலெடுக்க இடமளித்தால் தமக்கு என்ன நடக்கும் என்பது மைத்திரிபாலவுக்குத் தெரியும்.
எனவே, அரசியல் ரீதியாக அவரை சற்றேனும் பலப்படுத்த மைத்திரிபால முற்பட மாட்டார் என்றே ஊகிக்க முடிகிறது. அதற்காக அவருக்கு இன்னமும் நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரங்கள் இருக்கின்றன.
மஹிந்தவுக்கு ஸ்ரீ.ல.சு.க.வில் இடம் கிடைக்காது போனால் அதனால் விரக்தியடையும் அவரது ஆதரவாளர்கள் மஹிந்தவின் பெயரை வைத்து அரசியல் நடத்தும் விமல் வீரவன்ச மற்றும் தினேஷ் குணவர்தன போன்றோர்களின் கட்சிகளை நாடலாம்.
ராஜபக்ஷவும் அந்தக் கட்சிகளின் கீழ் தேர்தலில் போட்டியிட்டால் அக்கட்சிகள் பலம் பெறுவது நிச்சயம். இந்த தைரியத்தில் தான் விமல் மற்றும் தினேஷ் ஆகியோர் நாடாளுமன்றத்தை கலைக்குமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுக்கின்றனர்.
நாட்டிலுள்ள இரு பிரதான கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசிய கட்சியும் இன்றைய நிலையில் விகிதாசார தேர்தல் முறையையே விரும்புகின்றது போலும்.
நீண்ட காலமாக எதிர்க்கட்சியில் இருந்ததனால் ஐ.தே.க.வின் மாவட்ட மட்ட அமைப்புக்கள் இன்னமும் முறையாக சீரமைக்கப்படவில்லை.
எனவே தொகுதிவாரியாக தமக்கு சாதகமான நிலைமை இன்னமும் தோன்றவில்லை என அக் கட்சி நினைக்கிறது போலும் எனவே தான் அக் கட்சி நாடாளுமன்றத்தை கலைக்க அவசரப்படுகிறது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே எங்கும் பாரியளவில் சிறுபான்மை மக்கள் செறிவாக வாழ்வதில்லை.
எனவே, வடக்கு மற்றும் கிழக்கு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் தொகுதிவாரி தேர்தல் முறையினால் தமது பிரதிநிதித்துவம் குறையும் என அஞ்சுகிறார்கள்.
ஆனால், தமிழ்த்; தேசியக் கூட்டமைப்புக்கு வடக்கில் எந்தத் தேர்தல் முறையும் சாதகமாகவே அமையும். எனவே, அக் கட்சி அமைதியாக இருக்கிறது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் கிழக்கில் எந்தத் தேர்தல் முறையும் ஒன்றுதான் ஆனால், அக் கட்சி வடக்கு, கிழக்குக்கு வெளியே போட்டியிடுவதால் தேர்தல் முறை மாற்றம் சம்பந்தமாக சற்று குழப்பமடைந்துள்ளது.
நீண்ட காலமாக ஆளும் கட்சியாக இருந்ததனால் ஸ்ரீ.ல.சு.க.வுக்கு மாவட்ட மட்ட அமைப்புக்கள் இருக்கின்றன.
எனவே, தொகுதிவாரி முறை தமக்கு சாதகமானது என அக் கட்சி நினைக்கிறது.
எனவே தான் அக் கட்சி கலப்பு தேர்தல் முறை தொடர்பான அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றிக் கொண்டே பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என அடம் பிடிக்கிறது.
ஆனால், தற்போதைய கள நிலைமையைப் பொறுத்தவரை தேர்தல் முறையைப் பார்க்கிலும் உட்கட்சிப் போராட்டமே ஸ்ரீ.ல.சு.க.வின் தலைவிதியை நிர்ணயிக்கும்.
இவ்வாறு பார்க்கும் போது தமிழ் கட்சியாக இருந்தாலும் முஸ்லிம் கட்சியாக இருந்தாலும் சிங்கள் தலைமையுள்ள கட்சியாக இருந்தாலும் பெரிய கட்சியாக இருந்தாலும் சிறிய கட்சியாக இருந்தாலும் எந்தவொரு கட்சியும் நாட்டின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு தேர்தல் முறையை மதிப்பிடுவதோ அல்லது குறிப்பிட்தோர் தேர்தல் முறையை ஆதரிப்பதோ இல்லை.
சகல கட்சிகளும் குறிப்பிட்டதோர் தேர்தல் முறையினால் தமக்கு என்ன நடக்கப் போகிறது என்பதை அடிப்படையாக வைத்தே அத் தேர்தல் முறையை ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ முடிவு செய்கின்றன. ஆனால், இதனால் அரசியல் கட்சிகளுக்கிடையே ஏற்படும் விவாதம் ஜனநாயகத்துக்கு உகந்ததாகும்.
ஆறுதலாக விவாதித்து சிறந்ததோர் தேர்தல் முறையை உருவாக்கிக் கொள்ள தற்போதைய நாடாளுமன்றத்தின் நிலைமை தடையாக இருக்கிறது.
நாடாளுமன்றத்தில் மிகப் பெரும் கட்சி எதிர்க் கட்சியாக இருக்கிறது அதை விட சிறியதோர் கட்சி ஆளும் கட்சியாக இருக்கிறது. மிகப் பெரும் கட்சியின் தலைவரான ஜனாதிபதி இரண்டாவது பெரும் கட்சிக்கே நெருக்கமாக இருக்கிறார். அதேவேளை, 'நல்லாட்சியின்' விளைவாக தமது தலைவர் நியமித்த பிரதமரை ஸ்ரீ.ல.சு.க எதிர்த்து போர் பிரகடனம் செய்கிறது.
இந்த குழப்ப நிலையின் காரணமாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் மூலம் புதிய நாடாளுமன்றம் ஒன்றை தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற வாதம் நியாயமானதே.
ஆனால், அந்த அவசரம் தேர்தல் முறை தொடர்பான ஆறுதலான விவாதத்துக்கு இடமளிக்குமா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
நாடாளுமன்றத்தை அவசரப்பட்டு கலைக்கக் கூடாது என்பதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. இப்போது அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்துக்கு சபாநாயகரினால் கையொப்பம் இடப்பட்டுள்ளது.
எனவே, இனி சம்பந்தப்பட்ட விடயங்களுக்கு அது தான் சட்டம். இனி தேர்தல்கள் நடத்தப்படுவதாக இருந்தால் தேர்தல் ஆணைக்குழு ஒன்றின் மூலமே நடத்தப்பட முடியும்.
தேர்தல் கமிஷன் உள்ளிட்ட 'சுதந்திர' கமிஷன்களை நியமிக்க அரசியலமைப்புச் சபை ஒன்று இருக்க வேண்டும். அந்தச் சபையை நியமிக்க பல மாதங்கள் இல்லாவிட்டால் பல வாரங்களாவது அவசியமாகும்.
அதற்கிடையே நாடாளுமன்றத்தை கலைத்தால் அரசியலமைப்புச் சபையை நியமிக்க முடியாமல் போய்விடும். ஏனெனில், அச் சபையின் உறுப்பினர்களில் ஏழு பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாவர்.
எனவே, அச் சபையை நிமிக்காது நாடாளுமன்றத்தை கலைத்தால் அது நாட்டை அராஜக நிலைக்கு இட்டுச் செல்லும்.
மறுபுறத்தில் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என்பதற்காக அவசரமாக அரசியலமைப்புச் சபைக்கு உறுப்பிர்கள் நியமிக்கப்பட்டால் பொருத்தமான சிறந்த உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படாது போகலாம்.
இது சுதந்திர ஆணைக்குழுக்களை நியமித்தலை பாதிக்கும் அது நீதித்துறை, பொலிஸ், அரச சேவை போன்ற நாட்டின் சகல முக்கிய துறைகளையும் பாதிக்கும்.
எனவே, நாடாளுமன்றத்தை கூடிய விரைவில் கலைக்க வேண்டும் என்றிருந்த போதிலும் அதற்காக அவசரப்பட்டு நாட்டின் எதிர் காலத்தை பாதிப்படையச் செய்யவும் கூடாது.
54 minute ago
7 hours ago
28 Mar 2026
28 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
7 hours ago
28 Mar 2026
28 Mar 2026