Thipaan / 2015 மே 27 , மு.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
'சிங்கள இனவாதத்தைக் கொண்டு தமிழ் இனவாதத்தை தோற்கடிக்க முடியாது.' என தொனிப்படும் கருத்தை மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த அண்மையில் வெளியிட்டிருந்தார்.
அத்தோடு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தன்னுடைய அரசியல் தேவைகளுக்காக தெற்கில் சிங்கள இனவாதத்தைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாகவும் அவரால் வடக்கிலோ- கிழக்கிலோ- மலையகத்திலோ நீண்டுள்ள மற்றொரு இனவாதத்தை வெற்றி கொள்ள முடியாது என்றும் தெரிவித்திருந்தார்.
கே.டி.லால்காந்தவின் மேற்கண்ட கூற்றில் குறிப்பிட்டளவு உண்மையிருக்கின்றது. ஆனால், ஓர் இனவாதத்தைக் கொண்டு இன்னொரு இனவாதத்தைத் தோற்கடிப்பது பற்றி, ஆட்சியதிகாரம் நோக்கி நகரும் அரசியல்வாதிகள் என்றைக்குமே கவனத்திற் கொள்வதில்லை.
மாறாக, இனவாதத் தீக்கு தொடர்ந்தும் எவ்வாறு எண்ணெய் ஊற்றி கொழுந்துவிட்டு எரிய வைப்பது என்றே சிந்தித்து செயலாற்றி வந்திருக்கின்றார்கள். இலங்கையில் வாக்கு அரசியல் தீர்க்கமான இடத்தை வகிக்கும் வரை இதுதான் நிலைமையாக தொடரப்போகிறது.
தமிழ் இனவாதமும் முஸ்லிம் இனவாதமும் சிங்கள இனவாதத்துக்கு எந்த வகையிலும் சளைத்தவை அல்ல. பிரித்தானியா, இலங்கையில் சுதந்திரம் பற்றிய பேச்சுக்களை ஆரம்பித்த தருணத்திலேயே 'அரசியல் அதிகாரங்களை பகிர்ந்து தமது தேசியங்களின் இருப்பைக் காப்பாற்றுதல்' எனும் விடயம் முன்னிலை பெற்றது.
அதில், எந்தத் தப்பும் இல்லை. ஆனால், தேசியத்தின் இருப்பை தக்க வைப்பதற்கு இனவாதமே சிறந்த தெரிவு என்று சிந்திக்கத் தலைப்பட்ட இடமே, இலங்கை அரசியலில் இனவாதம் என்றைக்குமே தோற்கடிக்க முடியாத சக்தியாக ஓங்கி நிற்பதற்கு காரணமானது. இனவாத அரசியலின் கோலொச்சுகை இந்த நாட்டு மக்களுக்கு இன, மத வேறுபாடின்றி பேரழிவுகளைத் தந்திருக்கின்றது.
கடந்த வாரம் முழுவதும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட பகுதி பெரும் கோபத்தினால் சூழப்பட்டிருந்தது. புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வுக்குப் பின் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மக்களின் கோபத்தினை பெருமெடுப்பில் வெளிப்படுத்த வைத்தது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்கிற கோஷம், அந்த மக்களுக்குள் ஏற்கெனவே இருந்த கூட்டுக் கோபத்தை தீயாக வெளிப்படுத்தியது. அதுதான், மக்கள் இவ்வளவு ஆக்ரோஷமாக ஒருங்கிணைவதற்கான காரணமாகவும் அமைந்தது.
தமிழ் மக்களின் கூட்டுக் கோபம் என்பது அரசியல் அதிகார போராட்டத்தின் தோல்வி நிலை, அடக்குமுறையின் தொடர் வலி, உரிமை மீறல்கள் மீதான ஆத்திரம் என்று பல விடயங்களிலிருந்து பிறப்பது.
அது, ஆட்சி மாற்றத்துக்குப் பின் கிடைத்திருக்கின்ற சிறு ஜனநாயக(!) இடைவெளியை பெருவாரியாக கையாள வைத்திருக்கின்றது.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருந்திருந்தால், வித்தியாவின் படுகொலைக்கு எதிராக தமிழ் மக்கள் இவ்வளவுக்கு கிளர்ந்தெழுந்திருப்பார்களா?, என்கிற கேள்வி பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்டது. அந்தக் கேள்வி தர்க்க ரீதியில் சரியானது என்கிற எண்ணப்பாடும் பலரிடம் உண்டு.
ஆனாலும், இழப்புக்களின் இழுபாட்டுக்குள் இருந்த மக்கள் இன்னும் இன்னும் இழப்பை ஏற்பதற்கு தயாராக இருக்கவில்லை. அப்படியான நிலையில், ஆற்றாமையுடன் அமைதியாக இருந்திருக்கலாம். ஆனால், இப்போது வெளிப்பட்ட கோபம் அவசியமானது. அதை யாராலும் நிராகரித்துவிட முடியாது.
எனினும், வடக்கின் அண்மைய கூட்டுக் கோபத்துக்குப் பின்னாலுள்ள பிழை என்னவென்றால், அதீத உணர்வெழுச்சி வெளிப்பாட்டை மற்றவர்கள் கையாள அனுமதித்ததிலும் யதார்த்த களத்தின் போக்கினை புத்திசாதுரியமாக எதிர்கொள்ளாமல் தவிர்த்ததிலும் இருக்கின்றது.
தமிழ் மக்கள், வன்முறைகள் மீது ஆர்வம் கொண்ட சமூகம் என்கிற சாயம் திட்டமிட்டு பூசப்பட்டிருக்கின்றது.
அஹிம்சை வழிப் போராட்டங்களில் ஈடுபாடு கொண்ட சமூகத்தை ஆயுத வழிக்கு திருப்பி விட்ட சக்திகளே அந்த சாயத்தை பூசி விட்டிருக்கின்றன என்பதும் வேதனையானது.
அப்படியிருக்கின்ற நிலையில், எமது உணர்வெழுச்சி வேகம் நாட்டின் நடைமுறைகளை புறந்தள்ளுவதாக அமைகின்ற அனைத்துச் சந்தர்ப்பங்களும் எமக்கான தோல்விகளை வழங்கும். அல்லது, அதனை மற்றவர்கள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சந்தப்பங்களை வழங்கும்.
வித்தியாவின் படுகொலைக்கு நீதி கோருவது மக்களின் பொறுப்பு. ஆனால் அந்த பொறுப்பு, சட்டங்களை புறந்தள்ளிவிட்டு கிடைத்துவிடாது. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாம் இன்னமும் இலங்கையின் குடிமக்களாகவே இருக்கின்றோம்.
அதுபோக, ஜனநாயகப் படுத்தப்பட்டுள்ள சமூக அமைப்பில் நீதி கோருதலுக்கான நெறிமுறைகள் உண்டு. அது, நீதிமன்றத்தை தாக்குமளவுக்கு செல்ல முடியாது.
வடக்கு மக்களின் உணர்வெழுச்சியை தீய சக்திகள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. சரியாக ஒருங்கிணைக்கப்படாத எழுச்சியில் தீய சக்திகள் தமது சூழ்சிகளை அரங்கேற்றுவது இலகுவானது. நீதிமன்றத்தின் மீதான தாக்குதலிலும் வன்முறைகளிலும் அது வெளிப்பட்டது.
மக்களும் அந்த சக்திகளின் உண்மை நிலை அறியாது அவர்களோடு ஒத்திசைந்திருக்கின்றார்கள். இதுதான், பெரும் பிழையான தோற்றத்தை காட்டியிருக்கின்றது. அது, வித்தியாவின் படுகொலைக்கு நீதி கோரிய விடயத்தை அதிலிருந்து விலக்கி இன்னொரு தளத்துக்கும் நகர்த்தியிருக்கின்றது.
ஆயுத மோதல்கள் நிறைவுற்று ஆறு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் வடக்கு- கிழக்கு இன்னமும் இராணுவத்தின் பிடிக்குள்ளேயே இருக்கின்றது. சிவில் நடைமுறைகள் மெல்ல மெல்ல சீர்பெற்று வந்தாலும், அதிகார அலகு என்பது இராணுவ கட்டமைப்புக்குள்ளேயே இன்னமும் வைக்கப்பட்டிருக்கின்றது. இராணுவத்தின் நிலைபெறுகை என்பது தமிழ் மக்களின் ஆன்ம அரசியல் பலத்தை தொடர்ந்தும் மட்டுறுத்தி வைப்பதற்கான நிகழ்ச்சி நிரலுடன் சம்பந்தப்பட்டது.
தமிழ் மக்களின் போராட்ட உணர்வை ஒட்டுமொத்தமாக இல்லாதொழிக்க முடியாது என்றுணர்ந்துள்ள ஆட்சியாளர்கள், அதை, இராணுவ கட்டமைப்பினூடு மட்டுறுத்த முயல்கின்றன. அதனை, மஹிந்த ராஜபக்ஷ வெளிப்படையாக செய்தார்.
இப்போதுள்ள மைத்திரிபால சிறிசேன- ரணில் விக்ரமசிங்க கூட்டும் அதையே பிரதிபலிக்கிறது. இப்படியான சூழ்நிலையில், போராட்ட வடிவத்தை மாற்றி களம் காண வேண்டிய அவசியத்திலிருக்கிற தமிழ் மக்கள், உணர்வெழுச்சியை எல்லைகளற்ற நிலையில் முன்னெடுப்பது ஆபத்தானது.
இன்னொரு புறம், வித்தியாவின் படுகொலைக்கு நீதி கோரிய மக்களின் உணர்வெழுச்சியை தமிழ் இணைய ஊடகங்கள் பல, தமிழீழ போராட்டத்துக்கான அடுத்த கட்டமாக முன்னிறுத்தி குளிர்காய்ந்தன. தமிழ் மக்களின் கூட்டுக் கோபத்தில் இன விடுதலைக்கான வெளிப்பாடும் இருந்தது தான்.
ஆனால், வித்தியாவின் படுகொலையை இன விடுதலையை அடைவதற்கான எண்ணமாக அவர்கள் கருதவில்லை. இணைய ஊடகங்களின் அத்துமீறல் என்பது எதிரிகளை தாண்டி அச்சுறுத்தல் விடுக்குமளவுக்கு அதிகரித்திருக்கின்றது.
இந்தப் போக்கு, எமது மக்களின் நடவடிக்கைகளை இன்னும் மோசமான கட்டத்துக்கு நகர்த்திக் கொண்டிருக்கின்றது. ஊடகப் பொறுப்புணர்வு, தார்மிகம் பற்றியெல்லாம் கவலையில்லாத சமூகமாகவும் இந்த ஊடகங்கள் மக்களை வளர்த்து விடுகின்றன.
அதற்கு வித்தியாவின் படுகொலை விடயத்தை சமூக ஊடகங்களில் தமிழ் சமூகம் கையாண்ட விதம் வெளிப்படையாக பிரதிபலித்தது.
அடிபட்ட பாம்பாக ஊர்ந்து கொண்டிருக்கும் மஹிந்த ராஜபக்ஷவும் அவரது சகாக்களும் வடக்கு உணர்வெழுச்சியை இனவாத அரசியலில் தமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள எத்தணித்தனர். தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டங்கள் பொலிஸ் நிலையங்களைத் தாக்கியதோடுதான் ஆரம்பித்தன. இப்போது, நீதிமன்றம் தாக்கப்படும் விதமும் அதனையே பிரதிபலிக்கின்றது.
எனவே, இராணுவத்திடம் அதிகாரங்களை கையளிக்க வேண்டும் என்கிற மாதிரியான கோஷங்களையும் எழுப்பின.
சிங்கள கடும்போக்கு ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் வடக்கு உணர்வெளிச்சியை ஆயுத முனைப்பு போராட்டங்களாக சித்தரிக்க ஆரம்பித்தன. அதன் ஒரு கட்டம் இப்படி அரங்கேறியது, 'வடக்கில் உள்ளவர்கள் பிரபாகரனுடைய மரணத்துக்கு தீபம் ஏற்றுகின்றனர்.
சிங்கள நாட்டில் சிங்களவர்கள் நீதிமன்றதுக்கு கல்லெறிந்தது கிடையாது. ஆனால், வடக்கில் மாத்திரம் ஏன் அவ்வாறு நடக்கின்றது. நாட்டில் நல்லாட்சி நடைபெறுகின்றது என்கிறீர்கள்?' என்று ஊடகவியலாளர் ஒருவர் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவிடம் கேள்வியெழுப்பினார்.
இதனால் ஆத்திரமடைந்த நீதியமைச்சர், குறித்த ஊடகவியலாளரை நோக்கி, 'உங்களுடைய கேள்வியிலேயே இனவாதம் இருக்கின்றது. பொறுப்பற்ற முறையில் இனவாதமான கேள்விகளை எழுப்ப வேண்டாம். இது சிங்களவருடைய நாடு என்று எங்கு குறிப்பிடப்பட்டுள்ளது?
இது இலங்கை. இங்கு, பௌத்தர், தமிழர், முஸ்லிம், பறங்கியர் என பல இனத்தவர்கள் சமத்துவத்துடன் வாழ்கின்றனர். மஹிந்த ராஜபக்ஷ போன்று இனவாதத்தை ஏற்படுத்தும் சொற்களை பாவிப்பதை தவிர்த்து கொள்ளுங்கள்.' என்றார்.
எதிர்பார்த்ததைப் போலவே, வித்தியா படுகொலைக்கு நீதி கோரிய உணர்வெழுச்சி போராட்டங்களும் இனவாத அரசியலில் சதிவலைக்குள் வீழ்த்தப்பட்டிருக்கின்றன. அதற்கு, தமிழ் மக்களுக்குள் இருக்கும் தரப்புக்கள் சிலவும் ஒத்திசைந்து பங்களித்திருக்கின்றவோ என்று சந்தேகம் கொள்ள வைக்கின்றன. ஏனெனில், யாழ். வன்முறைகளின் போக்கு அப்படியிருந்தது.
கற்றறிருந்த சமூகம் என்று ஒரு காலத்தில் முன்னிறுத்தப்பட்டு வந்த தமிழ்ச் சமூகம் இன்றைக்கு கல்வி, பொருளாதாரம், சமூக ஒழுக்கம், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை என்கிற விடயங்களில் பின்தங்கியிருக்கின்றது. அவற்றை முன்னோக்கி நகர்த்துவது மிகவும் அவசரமானது.
அது, அரசியலுரிமைப் போராட்டத்தின் இருப்புக்கு முக்கியமானது. இல்லையென்றால், வாக்கு அரசியலின் இனவாத போக்கினுள் ஒரு கருவியாக மட்டுமே தமிழ் இனவாதமும் நீட்சி பெற்று தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும்!
54 minute ago
7 hours ago
28 Mar 2026
28 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
7 hours ago
28 Mar 2026
28 Mar 2026