Thipaan / 2015 ஜூன் 08 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
மீண்டும் முதலமைச்சரான ஜெயலலிதா சந்திக்கும் முதல் இடைத் தேர்தல், தமிழக வரலாற்றில் முத்திரை பதிக்கப்போகிறது. தமிழக தேர்தல் வரலாற்றில் முதலமைச்சராக இருந்த ஒருவர் இப்போதுதான் இடைத் தேர்தலை சந்திக்கிறார். குறிப்பாக முதலமைச்சரான பிறகு அவர் சந்திக்கும் இந்த தேர்தல் இன்னொரு புதிய அத்தியாயத்தை தோற்றுவிக்கப் போகிறது.
சென்னை மாநகரில் உள்ள ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் வெற்றிவேல். பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கு மேன்முறையீட்டில் மே 11ஆம் திகதி ஜெயலலிதா விடுதலையானார்.
வெற்றிவேல், மே 17ஆம் திகதி தன் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார். அன்றைய தினமே ஏற்றுக் கொள்ளப்பட்ட அந்த இராஜினாமாவுக்குப் பின்னர் 22ஆம் திகதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
அதில் ஜெயலலிதா சட்டமன்றக் கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். 23ஆம் திகதி அவர் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். 26ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத் தேர்தலை அறிவித்தது. ஜூன் 27ஆம் திகதி இடைத் தேர்தல். ஜூன் 30ஆம் திகதி தேர்தல் முடிவு வெளியிடப்படும்.
பொதுவாக அ.தி.மு.க.சார்பில் யார் இடைத் தேர்தலில் போட்டியிட்டாலும், எளிதில் வெற்றி பெறுவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். சமீப கால தேர்தல் முடிவுகள் அதைத்தான் எடுத்துக் காட்டியுள்ளன.
ஆனால், இந்த முறை முதலமைச்சர், அதாவது அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரே இடைத் தேர்தலில் நிற்கிறார். அதனால் அவரது வெற்றி ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டது மட்டுமின்றி, இதுவரை இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர்களை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதாவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பது அ.தி.மு.க.வின் முனைப்பான வியூகம்.
சில அ.தி.மு.க.வினர் ' எங்கள் அம்மாவின் வெற்றியும், அவருக்கு கிடைக்கும் வாக்கு வித்தியாசமும் கின்னஸ் பதிவேட்டிலும் பதிவு ஆகும் படி தீவிர தேர்தல் பணி செய்வோம்' என்று சபதம் போட்டு வேலை செய்கிறார்கள்.
இவருக்குப் போட்டியாக களத்தில் நின்றது முதலில் டிராபிக் ராமசாமி மட்டும்தான். பல்வேறு பொது நல வழக்குகள் போட்டு தமிழகத்தில் பிரபலமான இவர் வேட்பு மனுத்தாக்கல் செய்து விட்டு அனைத்துக் கட்சிகளிடமும் ஆதரவு கேட்டார்.
ஆனால், இதுவரை யாரும் வெளிப்படையாக அவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. தேர்தலில் போட்டியில்லை என்ற முடிவை வைகோ, தி.மு.க. தலைவர் கருணாநிதி, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ், காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் எல்லோரும் எடுத்து விட்டார்கள்.
அனேகமாக விஜயகாந்தும், பா.ஜ.க.வும் கூட அப்படித்தான் முடிவு எடுப்பார்கள் என்பதே லேட்டஸ்ட் நிலவரம். எல்லாவற்றிற்கும் மேலாக மத்தியில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், 'தேர்தல் ஆணையம் லெவல் பிளேயிங் பீல்டை உருவாக்குமா' என்ற சந்தேகக் கேள்வியை எழுப்பியிருப்பதை வாக்காளர்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள்.
ஏனென்றால், பெங்களூர் வழக்கின் தீர்ப்புக்குப் பின்னர் அ.தி.மு.க.வுக்கும், பா.ஜ.க.வுக்கும் ஏற்பட்டுள்ள புது விதமான நெருக்கம், முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதாவை பிரதமர் நரேந்திரமோடியே வாழ்த்தியது போன்றவைதான் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இவ்வளவு தாமதம் காட்டுகிறது பா.ஜ.க. என்றே கருத்து நிலவுகிறது.
இதற்கிடையில் 'தி.மு.க.வுக்கும் எங்களுக்கும் கொள்கை வேறுபாடு உண்டு. அ.தி.மு.க.வுக்கும் எங்களுக்கும் கொள்கையளவில் எந்த வேறுபாடும் இல்லை' என்று தேசிய செயலாளர் எச். ராஜா பேட்டியளித்திருப்பது இங்கே கூர்ந்து கவனிக்கத்தக்கது.
ஆனால், இந்த முறை வித்தியாசமாக ஜெயலலிதாவை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சி மகேந்திரன் இரு கம்யூனிஸ்டுகளின் சார்பாக நிறுத்தப்பட்டிருக்கிறார்.
ஆர்.கே.நகர் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிட்டிங் தொகுதி அல்ல. அதே போல் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை.
இந்நிலையில் ஆர்.கே.நகரில் போட்டியிட முன்வந்தது ஏன் என்பது பற்றி பல சர்ச்சைகள் ஓடுகின்றன.
ஏனென்றால், தங்கள் எம்.எல்.ஏ.வான முத்துக்குமார் விபத்து ஒன்றில் இறந்த போது அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியை 'நேரவிரயம் கருதி நாங்கள் போட்டியிடவில்லை' என்று கூறி விட்டுக் கொடுத்தவர்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்.
ஆனால், இந்த முறை ஆர்.கே.நகரில் 'தேர்தல் புறக்கணிப்பு ஜனநாயகத்தில் இல்லை' என்ற தோரணையில் களமிறங்கியிருக்கிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
இதை விட முக்கியமாக 'திருவரங்கம் இடைத் தேர்தலில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டது.
ஆகவே, இந்த இடைத் தேர்தலில் நீங்கள் போட்டியிட வேண்டும்' என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வற்புறுத்தியிருக்கிறார்.
அதன் விளைவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அதன் வேட்பாளர் சி.மகேந்திரன் களமிறக்கப்பட்டுள்ளார். ஆனால், இன்றைய நிலவரப்படி இரு கம்யூனிஸ்ட்டுகளின் சார்பிலும் தி.மு.க.வின் ஆதரவை கோரமாட்டார்கள் என்ற பேச்சு அடிபடுகிறது.
ஏனென்றால், ஹைதராபாத்தில் நடைபெற்ற மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ கூட்டத்தில் கலந்து கொண்ட 16 உறுப்பினர்களில் 12 பேர் தி.மு.க. கூட்டணி வேண்டாம் என்று கருத்துத் தெரிவித்ததாக அதற்கு ஒரு காரணம் சொல்லப்படுகிறது.
ஆகவே, இந்த இடைத் தேர்தலில் முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் கட்சியின் சார்பில்- அதுவும் குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வேட்பாளர் நிற்கிறார்.
அவரது பிரசாரம் 'ஊழல், மதசார்பற்ற தன்மை, மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள்' போன்ற மூன்று முக்கிய விஷயங்களை முன் வைத்து இருக்கும் என்று இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூட்டாகவே அறிவித்து விட்டன.
மகேந்திரனும் தீவிரப் பிரசாரத்தில் குதித்து விட்டார். தொகுதிக்குள் சென்றவுடனேயே 'ஆர்.கே. நகர் தொகுதி கிட்டத்தட்ட அ.தி.மு.க.வின் ஆக்கிரமிப்பில் இருக்கிறது. தேர்தல் ஆணையமும் வேடிக்கை பார்க்கிறது' என்று பகிரங்கமாகவே முதல் நாளே குற்றம் சாட்டி விட்டார்.
இந்த வேகத்தைப் பார்த்தால் முதல்வருக்கு எதிராக அவரது பிரசாரம் சூடுபிடிக்கும் என்றே தெரிகிறது. கடும் பிரசாரம் நடைபெறும் சூழ்நிலையில், முதலமைச்சரின் இடைத் தேர்தல் வெற்றி கம்யூனிஸ்ட் வேட்பாளர் மகேந்திரனை எதிர்த்து கிடைத்த வெற்றி என்ற ரீதியில்தான் பதிவாகுமே தவிர, டிராபிக் ராமசாமியை எதிர்த்து வெற்றி பெற்றோம் என்ற நிலை வராது.
அதே நேரம் தி.மு.க. என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது மிக முக்கியமாக கவனிக்கப்படுகிறது. அக்கட்சியின் தலைவர் கருணாநிதியை சந்தித்து தனக்கு ஆதரவளிக்கும்படி டிராபிக் ராமசாமி ஏற்கெனவே கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒரு வேளை தங்களை மூக்குடைக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பதிலடி கொடுக்க விரும்பி 'டிராபிக் ராமசாமிக்கு தி.மு.க. ஆதரவு' என்ற நிலைப்பாட்டை எடுத்தால், இடைத் தேர்தலின் முடிவுகள் வித்தியாசமாகப் போகும்.
அப்போதும் முதலமைச்சர் ஜெயலலிதாதான் அமோக வெற்றி பெறுவார். ஆனால், டிராபிக் ராமசாமியை விட குறைவான வாக்குகளை கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி.மகேந்திரன் பெற வேண்டிய நெருக்கடியான சூழ்நிலை உருவாகி விடும்.
அது தனித்துப் போட்டி என்ற களமிறங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பெரிய அதிர்ச்சியைக் கொடுக்கும். அது மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள மாநில கம்யூனிஸ்ட் தலைமைக்கு 'தி.மு.க, அ.தி.மு.க.வுடன் கூட்டணி வேண்டாம்' என்று கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய தலைமையிடம் அடித்துச் சொல்வதில் சிரமம் ஏற்படும்.
அதுதான் இன்றைய தினம் மாநில அளவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளின் முக்கியத் தலைவர்களுக்கு கவலையாக இருக்கும் என்று தெரிகிறது.
இந்த இடைத் தேர்தல் வெற்றி எந்த மாற்றத்தையும் தமிழக அரசியலில் உருவாக்கி விடாது. அ.தி.மு.க.வுக்கு 'நம்பர் ஒன் கட்சி' என்ற அந்தஸ்து தொடரும்.
பா.ஜ.க.வும், தே.மு.தி.க.வும் இணைந்து வேட்பாளரை நிறுத்தவில்லை என்றால் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கடைசிக் கட்சியான தே.மு.தி.க.வுடனும் பா.ஜ.க.வுக்கு உறவு சரியில்லை என்ற தோற்றம் உருவாகும்.
எல்லாவற்றையும் விட சட்டமன்றத் தேர்தல் வரும் 11 மாதத்துக்கு முன்பு கூட எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து இடைத் தேர்தலை சந்திக்க முடியவில்லை என்ற எண்ணம் வாக்காளர்கள் மத்தியில் உருவாகும்.
'எதிர்கட்சிகளின் ஒற்றுமை' சிதறிக் கிடக்கிறது என்ற தோற்றத்தைத் தவிர வேறு எந்த மாற்றத்தையும் கம்யூனிஸ்டுகள் போட்டியிடுவது உருவாக்கி விடாது என்பதே இன்றைய நிலைமை. ஏறக்குறைய 30 சதவீத வாக்குகள் உள்ள தி.மு.க.வுக்கும், 42 சதவீத வாக்குகள் கொண்ட அ.தி.மு.க.வுக்கும் மாற்றாக 0.50 சதவீத வாக்குகள் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் அணி திரளுவதுதான் தமிழக வாக்காளர்களை கொஞ்சம் மிரள வைத்துள்ளது.
அதை விட வியக்க வைத்துள்ளது. அதற்கு காரணம் தமிழகத்தில் உள்ள இந்த இரு முக்கியக் கட்சிகளுமே ஊழல் புகாரில் சிக்கித் தவிக்கின்றன என்ற காரணத்தைத்தான் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் திரும்பத் திரும்ப கூறி வருகின்றன.
54 minute ago
7 hours ago
28 Mar 2026
28 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
7 hours ago
28 Mar 2026
28 Mar 2026