Thipaan / 2015 ஜூன் 15 , மு.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுக்கு எதிராக புதிய புயல் ஒன்று இந்திய அரசியலில் மையம் கொண்டிருக்கிறது.
ஐ.பி.எல். முன்னால் தலைவர் லலித் மோடி உதவியதாக எழுந்துள்ள இந்தக் குற்றச்சாட்டு எதிர்கட்சிகளுக்கு தீனி போடும் சமாச்சாரமாகி விட்டது.
அது மட்டுமின்றி நீண்ட காலமாக பா.ஜ.க.வுக்குள் நடைபெறும் பனிப்போருக்கும் உரம் போட்டது போல் அமைந்திருக்கிறது.
லலித் மோடி விவகாரம் பா.ஜ.க.வுக்குள் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தும் சக்தி மிக்கது என்பதுதான் அரசியல் வட்டாரத்தில் அடிபடும் பேச்சு.
ஏனென்றால், வெளி விவகார அமைச்சராக இருக்கும் சுஸ்மா சுவராஜ், பா.ஜ.க.வின் அசைக்க முடியாத தூண்களில் ஒருவராகவே திகழ்கிறார்.
'சோனியா வெளிநாட்டவர்' என்ற பிரசாரத்தை கையிலெடுத்து சோனியாவுக்கு எதிராக மொட்டை போட்டவர் சுஸ்மா சுவராஜ்.
அதே போல் நாடாளுமன்ற ஜனநாயகத்தில் பழுத்த அனுபவம் பெற்றவர். அது மட்டுமின்றி பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இரண்டின் ஆதரவையும் ஒருங்கே பெற்றவர்.
அதனால்தான் சுஸ்மா சுவராஜ் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இன்றைக்கு பிரதமராகியிருக்கும் நரேந்திரமோடிக்கு போட்டியாளராக பா.ஜ.க.வுக்குள் முன்னிறுத்தப்பட்டவர்.
அத்வானியின் தீவிர ஆதரவாளர். ஆனாலும் தேர்தல் நெருங்க, நெருங்க நரேந்திரமோடியை ஏற்றுக் கொண்ட சுஸ்மா சுவராஜ், அவரது அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராகவே பதவியேற்றார்.
அவர் அமைச்சரானதில் இருந்தே அவருக்கும், பிரதமருக்கும் பனிப்போர் என்பது போன்ற செய்திகள் அடிபடத் தொடங்கின.
பிரதமர் அலுவலகமே வெளியுறவுத்துறை விவகாரங்களை நேரடியாகக் கவனிக்கிறது என்றும், வெளியுறவுச் செயலாளராக ஜெய்சங்கரை நியமித்ததில் சுஸ்மா சுவராஜுக்கு முக்கிய பங்கு எதுவும் இல்லை என்றெல்லாம் கூட பத்திரிகை செய்திகள் ரக்கை கட்டி பறந்தன.
அவற்றையெல்லாம் ஓரங்கட்டி வைத்து விட்டு பிரதமர் நரேந்திர மோடியை ஏற்றுக் கொண்டு சுஸ்மா சுவராஜ் வெளியுறவுத்துறை அமைச்சராக செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்.
ஒரேயொரு முறை பிரதமருக்கு நெருக்கடி கொடுக்கும் விதத்தில் பேசினார் சுஸ்மா.
பிரதமர் ஒருபுறம் 'வளர்ச்சியே என் இலக்கு' என்று பிரசாரம் மேற்கொண்டு செயற்பட்டுக் கொண்டிருக்க, இன்னொரு புறம் 'கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்' என்றும் 'அந்த நூலை என்றைக்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் பிரதமர் நரேந்திரமோடி அளித்தாரோ அன்றைக்கே அதற்கு தேசிய நூல் அந்தஸ்து வந்து விட்டது' என்றும் 20 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டம் ஒன்றில் பரபரப்பாகப் பேசினார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ்.
அதற்கு அனைத்து எதிர்கட்சிகளும் விமர்சனங்களை முன் வைத்தன. பா.ஜ.க. அரசின் இந்துத்துவா அரசியலை இது எடுத்துக் காட்டுகிறது என்றெல்லாம் காரசாரமாகப் பேசின.
ஆனாலும் பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களின் வெற்றிக்கு சுஸ்மா சுவராஜ் முக்கியப் பங்கு வகித்தார். அதனால் தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் சுஸ்மாவின் பயணம் 'மலர்ப்பாதையிலேயே' சென்று கொண்டிருந்தது.
இது போன்றதொரு காலகட்டத்தில்தான் இப்போது மீண்டும் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு 'முள்பாதை' வந்திருக்கிறது. அது லலித் மோடியின் உருவில் வந்திருக்கிறது.
போர்த்துக்கலில் சிகிச்சை பெற்று வரும் புற்று நோயால் பாதிக்கப்பட்ட தனது மனைவியைப் பார்க்கச் செல்லுவதற்கு பயண ஆவணங்களை பெற இங்கிலாந்து அரசுக்கு பரிந்துரை செய்யும்படி லலித் மோடியின் சார்பில் கோரிக்கை வைக்க, அந்த பரிந்துரையைச் செய்த வெளியுறவுத்துத் துறை அமைச்சர் சுஸ்மா இன்றைக்கு வம்பில் மாட்டிக் கொண்டிருக்கிறார்.
பா.ஜ.க.வின் தலைவர் அமித்ஷா, 'இது மனிதாபிமான நோக்கத்தில் செய்யப்பட்ட உதவி' என்று கூறியிருக்கிறார்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் இந்த்ரேஷ் குமாரோ, 'தேசியப் பற்றுடன் கூடிய மனித நேய உதவி' என்று கூறியிருக்கிறார்.
சமீப காலங்களில் பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் சேர்ந்து ஒரு மத்திய அமைச்சரை ஆதரித்துள்ளது என்றால் அது சுஸ்மா சுவராஜைத்தான்.
இந்த ஆதரவுதான் அவருக்கு உட்கட்சிக்குள் பெரும் பகையை உருவாக்கி வைத்திருக்கிறது என்றால் மிகையாகாது.
வெளியுறவுத்துறை அமைச்சருக்கு இவ்வளவு தீவிரமாக ஆதரவு கொடுத்தாலும், பா.ஜ.க. இதுவரை பேசி வந்த, பிரசாரம் செய்து வந்த விஷயங்களுக்கு சுஸ்மாவின் நடவடிக்கை விரோதமாக இருக்கிறது என்பதுதான் எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டு.
லலித் மோடியைப் பொறுத்தமட்டில் பல்வேறு விவகாரங்களில் விசாரணை வளையத்திற்குள் சிக்கியிருப்பவர். குறிப்பாக 'ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் தொடர்பான' அமலாக்கத்துறையின் விசாரணையில் இருக்கிறார்.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஒருவரோ, '700 கோடி ரூபாய் கறுப்புப்பண விசாரணை வேறு லலித் மோடி மீது இருக்கிறது' என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.
'முறைகேட்டுப் புகார், ஊழல் விசாரணை போன்றவற்றில் சிக்கியிருப்பவர்களுக்கு அமைச்சர்கள் உதவக் கூடாது' என்பதும், 'வெளிநாட்டில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்டு இந்தியாவில் ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும்' என்பதும் பா.ஜ.க.வின் முக்கிய தேர்தல் பிரசாரம்.
அதனால்தான் இன்றைக்கு பா.ஜ.க. முன்பு எதிர்கட்சி வரிசையில் இருந்த போது அறிவித்ததை காற்றில் பறக்க விட்டு விட்டது என்று குற்றம் சாட்டுகின்றன.
லலித் மோடிக்கு உதவி செய்த வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறது காங்கிரஸ் கட்சி. முலயாம் சிங் யாதவின் சமாஜ்வாடிக் கட்சி தவிர மற்ற கட்சிகள் எல்லாமே இந்தக் கோரிக்கையை முன் வைத்து இந்திய அரசியலில் சூடு ஏற்படுத்தி வருகின்றன.
இப்படி வம்பில் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாட்டிக் கொள்வது புதிதல்ல. டாக்டர் மன்மோகன்சிங் பிரதமராக இருந்த போது நான்கு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் தர்மசங்கடத்துக்கு உள்ளானார்கள்.
முதலில் பால் வோல்க்கர் அறிக்கையின் விளைவாக (ஈராக் நாட்டின் உணவுக்குப் பதில் ஆயில் ஊழல் புகார்) அப்போது வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த நட்வர்சிங் ராஜினாமா செய்தார்.
பின்னர், வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எம்.கிருஷ்ணா, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றார்.
அங்கு பேச எழுந்த போது தன் உரைக்குப் பதில் போர்த்துக்கல் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் உரையை எடுத்துப் பேசியதன் விளைவாக வம்பில் சிக்கிக் கொண்டார்.
தனது, வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பிறகு அவருக்குப் பதில் வெளியுறவுத்துறை அமைச்சராக சல்மான் குர்ஷித் நியமிக்கப்பட்டார்.
அவர் சட்ட அமைச்சராக இருந்த போது அவர் நிர்வகிக்கும் டிரஸ்ட் மீதும் அப்போது ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பகிரங்கக் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். அதன் விளைவாக அடுத்து நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் சல்மான் குர்ஷித் சட்ட அமைச்சர் பதவியிலிருந்து வெளியுறவுத்துறை அமைச்சர் பதவிக்கு அமர்த்தப்பட்டார்.
கொச்சி ஐ.பி.எல். கிரிக்கெட் டீமுடன் வெளியுறத்துறை இணை அமைச்சராக இருந்த சசி தரூருக்கு தொடர்பு இருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இன்றைய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பா.ஜ.க.வின் முன்னனித் தலைவர்கள் அனைவருமே இதைப் பெரும் பிரச்சினையாக மாற்றியதன் விளைவாக, வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பதவியிலிருந்து அவர் ராஜினாமா செய்தார்.
இது போன்ற சூழலில்தான் இப்போது வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் மீதான புகார் வெளிவந்திருக்கிறது. பா.ஜ.க. தலைமையிலான அரசு முழு வீச்சில் வெளியுறவுத்துறை அமைச்சரின் பின்னால் நின்றாலும், இந்தப் பிரச்சினையை இத்தோடு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் விட்டு விடுமா என்பது கேள்விக்குறியே.
பா.ஜ.க. அரசு பதவியேற்ற பின்னர் மூன்று முக்கிய அமைச்சர்கள் மீது இது போன்ற சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.
முதலில் உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங்கையும் அவரது மகனையும் சம்பந்தப்படுத்தி ஒரு புகார் கிளப்பட்டு, அதற்கு பிரதமர் அலுவலகத்திலிருந்தே மறுப்புத் தெரிவிக்கப்பட்டது.
அடுத்து மஹாராஷ்டிராவில் விவசாயத்துறை சார்பாக இந்திய கணக்காயம் சில முறைகேடுகள் பற்றி அறிக்கை சமர்ப்பித்து, அதனைத் தொடர்ந்து கப்பல் துறை அமைச்சராக இருக்கும் நிதின்கட்கரி ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
'முதலில் என் பெயர் அறிக்கையில் இல்லை. பிறகு சேர்க்கப்பட்டது எனக்கு எதிரான சதி' என்று வெளிப்படையாகவே நிதின் கட்கரி குற்றம் சாட்டி பேட்டியளித்தார்.
இப்போது 'லலித் மோடி' விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் மீது குற்றம் சாட்டப்பட்டு, 'அவர் இராஜினாமா செய்ய வேண்டும்' என்று குரல் எழுப்பப்படுகிறது.
இந்த மூவருமே பா.ஜ.க.வின் உட்கட்சி அரசியலில் மிகவும் முக்கியமானவர்கள். அக்கட்சிக்குள் எந்த ஒரு குழப்பம் ஏற்பட்டாலும், அதை சமாளிக்கக்கூடிய ஆற்றல் படைத்தவர்கள் என்ற பெயர் இருக்கிறது.
கட்சியில் செல்வாக்கு உள்ளவர்கள் மீது அடுத்தடுத்து ஏன் இப்படி புகார்கள் பவனி வருகின்றன என்பதுதான் பா.ஜ.க.வுக்குள் உள்ள தலைவர்கள் பலர் மனதில் தோன்றியுள்ள சந்தேகம்.
அது பா.ஜ.க.வை வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ். போன்ற இயக்கத்துக்கும் ஏற்பட்டிருக்கிறது என்பது அந்த இயக்கத்தின் மூத்த தலைவர் ஒருவர் சுஸ்மா சுவராஜை தீவிரமாக ஆதரிப்பதிலிருந்து எதிரொலிக்கிறது.
ஆனால், தேர்தல் பிரசாரத்தில் சொன்னதற்கு இன்று மக்கள் மத்தியில் பொறுப்பாகி நிற்பவர் பாரதப் பிரதமர்தான். இந்த சூழ்நிலையில், 'கிரிக்கெட் கிங்' லலித் மோடிக்கு உதவி கையைச் சுட்டுக் கொண்டிருக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மாக சுவராஜ் காப்பாற்றப்படுவாரா என்பது பா.ஜ.க.வின் உள்கட்சி அரசியிலிலும், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திலும் பிரதமர் நரேந்திரமோடிக்கு இருக்கும் செல்வாக்கைப் பொறுத்தே இருக்கிறது.
ஆனால், 'லலித் மோடிக்கு சுஸ்மா அளித்த ஆதரவு' அரசியலில் நேர்மை என்ற பா.ஜ.க.வின் பிரசாரப் பயணத்தில் அமைந்த 'சோதனைச் சாவடி' போலவே மாறியிருக்கிறது என்பதுதான் பா.ஜ.க.வில் உள்ள மூத்த தலைவர்களின் எண்ணவோட்டமாக இருக்கிறது.
54 minute ago
7 hours ago
28 Mar 2026
28 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
7 hours ago
28 Mar 2026
28 Mar 2026