Thipaan / 2015 ஜூன் 24 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேர்தல் முறை சீர்த்திருத்தத்துக்கான அரசியலமைப்புத் திருத்தத்தின் 20 ஆவது நகல் வரைவு வர்த்தமானியில் கடந்த 12ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை எல்லோரும் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் என்று கூறிய போதிலும் குறிப்பிட்டதோர் ஆவணம் இருக்கவில்லை. இப்போது அந்த ஆவணம் வெளிவந்துள்ளது.
ஆனால், இதற்கு முன்னர் சட்ட வரைவுகள் வெளிவரும் போது இருந்ததை விட வித்தியாசமானதோர் நிலைமை தான் இந்த விடயத்தில் காணப்படுகிறது. இதற்கு முன்னர் சட்ட வரைவொன்று வெளிவந்தால் அது ஆளும் கட்சியின் கொள்கைகள் மற்றும் கருத்துக்கள் ஆகியவற்றுக்கு அமையவே வெளிவரும். ஆனால் இம் முறை அவ்வாறில்லை.
ஐக்கிய தேசிய கட்சியினர் அதிகமாக உள்ள அமைச்சரவையினால் அங்கிகரிக்கப்பட்டே இந்த சட்ட வரைவு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஐ.தே.க அதனை எதிர்க்கிறது.
அதனை நிறைவேற்றாமலே நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என்று அக் கட்சி கூறுகிறது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைக் கொண்ட ஸ்ரீ.ல.சு.க.வும் புதிய தேர்தல் முறையின் முக்கிய சில அம்சங்களை ஏற்றுக் கொள்ளவில்லை.
சிறுபான்மை கட்சிகளும் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அக் கட்சிகள் கூட்டாக தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. ஆனால், அந்த திருத்தத்துக்கு உரிமை கூறவோ அந்த எதிர்ப்பை எதிர்க்கொள்ளவோ ஒருவரும் இல்லை. தற்போதைய அரசியலின் குழப்ப நிலையை அது மேலும் சிக்கலாக்கியுள்ளது.
புதிய தேர்தல் முறை விகிதாசார மற்றும் தொகுதிவாரி தேர்தல் முறைகளின் கலப்பு முறையொன்றாகும். சகல அரசியல் கட்சிகளாலும் வெறுக்கப்பட்ட விருப்ப வாக்கு முறை இந்த தேர்தல் முறைமையில் இல்லை.
அதற்குப் பதிலாக தொகுதி வாரியாகவும் விகிதாசார முறையிலும் தேசிய பட்டியல் முலமாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். இந்த அமைப்பை எவரும் எதிர்க்கவில்லை. தொகுதிகளின் எண்ணிக்கையிலேயே கருத்து வேறுபாடு நிலவுகிறது.
1978 ஆம் ஆன்டு இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு நிறைவேற்றப்படும் முன் தொகுதி வாரியாக மட்டுமே நாட்டில் தேர்தல்கள் நடைபெற்றன. அப்போது 160 தேர்தல் தொகுதிகள் இருந்தன.
அந்தத் தொகுதிகள் வாரியாக 1978 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தேர்தல்கள் நடைபெறாவிட்டாலும் அவை உத்தியோகபூர்வமாக முற்றாக மறக்கப்படவில்லை. விகிதாசார முறையில் தேர்தல்கள் நடைபெற்றாலும் தேர்தல்களை அடுத்து வாக்குகளை எண்ணும் போது பழைய தொகுதி வாரியாக அவற்றை முதலில் எண்ணி தொகுதி வாரியாக முடிவுகளை முதலில் வெளியிடுவது தேர்தல் திணைக்களத்தின் வழமையாக இருந்து வந்துள்ளது.
விகிதாசார தேர்தல் முறையில் அவ்வாறு தொகுதி வாரியாக முடிவுகளை வெளியிடுவதில் அர்த்தமே இல்லை.
ஆனால், நாடாளுமன்ற தேர்தலின் போது மட்டுமல்லாது ஜனாதிபதித் தேர்தலின் போதும் தேர்தல் திணைக்களம் பழைய தொகுதி வாரியாக முடிவுகளை மட்டுமன்றி மாவட்ட முடிவுகளையும் வெளியிட்டுவிட்டுத் தான் ஒட்டுமொத்த முடிவை வெளியிடுகிறது.
ஏதோ ஒரு காரணத்துக்காக தேர்தல் திணைக்களம் அந்த நடைமுறையை கடந்த 37 ஆண்டுகளாக கடைபிடித்து வந்துள்ளது. அதன் காரணமாக பழைய 160 தொகுதிகள் மக்கள் மனதில் இருந்து அகன்றுவிடவில்லை. அவற்றின் எல்லைகளைப் பற்றி அரசியல் கட்சிகளுக்கிடையே முரண்பாடுகளும் இல்லை.
ஆனால், உத்தேச தேர்தல் முறையின் கீழ் தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கை 160இலிருந்து 145 ஆக குறைகிறது. ஐ.தே.க இந்த எண்ணிக்கை மேலும் குறைத்து 125 ஆக வேண்டும் என்கிறது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 160 தொகுதிகள் இருக்க வேண்டும் என்கிறது.
சிறுபான்மை கட்சிகள் இந்த விடயத்தில் இரண்டும்கெட்ட நிலையில் இருக்கின்றன. தொகுதிகளை அதிகரித்து தொகுதி வாரியாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டால் வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் குறையலாம். தொகுதிகளை குறைத்தால் புதிய தொகுதி நிர்ணயத்தின் போது அவர்கள் பாதிக்கப்படலாம்.
விகிதாசார முறையின் கீழ் நடைபெற்றதைப் போலவே உத்தேச முறையின் கீழும் மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டே வாக்கெடுப்பு நடைபெறும். இப்போது போலவே அரசியல் கட்சிகள் தமது மாவட்ட வேட்பாளர் பட்டியல்களை சமர்ப்பிக்கும்.
ஆனால், அப்பட்டியல்களை தயாரிக்கும் போது தொகுதி வாரியாக போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை தனியாக குறிப்பிட்டு ஏனைய வேட்பாளர்களின் பெயர்களோடு தேர்தல் ஆணையாளர்களிடம் சமர்ப்பிக்கும்.
வாக்காளர்கள் அவரவரது கட்சிக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும். தற்போது போல் கட்சிக்கு வாக்களித்துவிட்டு தாம் விரும்பும் வேட்பாளர்களின் இலக்கத்தின் மீதும் புள்ளடியிடத் தேவையில்லை. அதாவது விருப்ப வாக்கு முறை ஒழிக்கப்படுகிறது.
வாக்குகளை எண்ணும் போது இப்போது போலவே தொகுதி வாரியாக அவை எண்ணப்படும். குறிப்பிட்டதோர் தொகுதிக்கு பல கட்சிகள் தத்தமது வேட்பாளர்களை நியமித்து இருக்கும். அவர்களில் ஆகக் கூடுதலாக வாக்குகளைப் பெற்றவர் அத்தோகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராவார்.
இவ்வாறு மாவட்டத்தின் சகல தொகுதிகளுக்கும் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்.
ஒரு கட்சி குறிப்பிட்டதோர் மாவட்டத்தில் சகல தொகுதிகளிலும் தோல்வியடைந்திருக்கலாம். ஆனால், விகிதாசார ரீதியாக பார்த்தால் அக் கட்சி அம் மாவட்;டத்திலிருந்து மொத்தமாக பெற்ற வாக்குகளின் படி அக் கட்சிக்கு ஒரு சில ஆசனங்கள் கிடைக்க வேண்டும். புதிய முறைப்படி அக் கட்சிக்கு அவ்வாறு கிடைக்க வேண்டிய ஆசனங்கள் மாவட்ட தேர்வின் போதும் தேசிய பட்டியல் மூலமாகவும் வழங்கப்படும்.
உதாரணமாக மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி பதுளை மாவட்டத்திலிருந்து விகிதாசாரப்படி 4 ஆசனங்களை பெற வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். ஆனால், அக் கட்சியின் எந்தவொரு வேட்பாளரும் தொகுதி வாரியாக தெரிவு செய்யப்படவில்லை என்றும் வைத்துக் கொள்வோம்.
எனவே, அக் கட்சியின் தோல்வியடைந்த வேட்பாளர்களில் தொகுதி வாரியாக கூடுதலான வாக்கு சதவீதத்தை பெற்ற நான்கு வேட்பாளர்கள் அந்த நான்கு ஆசனங்களுக்கு தெரிவு செய்யப்படுவர்.
அக் கட்சி வெலிமடை, ஊவா-பரணகம, ஹாலிஎல, பதுளை, பண்டாரவளை. ஹப்புத்தளை மற்றும் வியலுவ ஆகிய தொகுதிகளில் இருந்து முறையே 15,14,13,12.11, 10 மற்றும் 9 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது என்று வைத்துக் கொள்வோம்.
அவ்வாறாயின் ஆகக் கூடுதலான சதவீதத்தை பெற்ற வெலிமடை, ஊவா-பரணகம, ஹாலிஎல மற்றும் பதுளை ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்கள்; எம்.பிக்களாக தெரிவு செய்யப்படுவர்.கட்சி தொகுதிகளில் இழந்ததை மாவட்ட முடிவு ஈடு செய்யும்.
ஐ.தே.க அதற்கு விகிதாசாரப்படி பதுளை மாவட்டத்திலிருந்து கிடைக்க வேண்டிய ஆசன எண்ணிக்கையை விட கூடுதலான ஆசனங்களை தொகுதி வாரியாக பெற்றிருக்கலாம். அவ்வாறாயின் அக்கட்சிக்குரிய தேசிய பட்டியல் உறுப்பினர் எண்ணிக்கையில் அந்த மேலதிக உறுப்பினர் எண்ணிக்கை குறைக்கப்படும். இது தான் புதிய முறையின் சாரம்.
இதன் படி ஒரு கட்சி மாவட்ட ரீதியாக விகிதாசார முறைப்படி பெற்ற வாக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அக் கட்சிக்கு நாடாளுமன்ற ஆசனங்கள் கிடைக்கும். அதேவேளை தொகுதிகளுக்கு வகைச் சொல்லும் எம்.பிக்களும் இருப்பர்.
பார்த்தால் இந்த முறை நியாயமானதாகத் தான் இருக்கிறது. ஆனால், இதில் நடைமுறைப் பிரச்சினைகள் இருப்பதாகவே சிறுபான்மை கடசிகள் கூறுகின்றன. இப்போது தொகுதி வாரியாக வேட்பாளர்கள் நிறுத்தப்படாததினால் குறிப்பிட்டதோர் மாவட்டத்தில் வாழும் ஒரு கட்சியின் ஆதரவாளர்கள் எல்வோரும் அக் கட்சிக்கே வாக்களிப்பர்.
ஆனால், தொகுதி வாரியாக வேட்பாளர்கள் நியமிக்கப்பட்டபோது சில வாக்காளர்கள் தமது கட்சிக்கு வாக்களிப்பதை விட வெற்றி வாய்ப்பு உள்ள வேட்பாளருக்கு வாக்கவே விரும்புவர். இது சிறுபான்மை மக்களை பாதிக்கலாம்.
உதாரணமாக பதுளை தொகுதியில் வாழும் ஒருவர் தற்போதைய விகிதாசார தேர்தல் முறையின் படி தேர்தல் நடந்தால் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு வாக்களிப்பார் என்று வைத்துக் கொள்வோம்.
ஆனால்,புதிய முறைப் படி அத் தொகுதிக்கு ஐ.தே.க சார்பில் தற்போதைய ஊவா மாகாண முதலமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ போட்டியிட்டால் அதே வாக்காளர் ஹரீனுக்கு வாக்களிக்க முற்படலாம். இதனால், ஜனநாயக மக்கள் முன்னணி, பதுளை தொகுதியிலிருந்து பெறும் வாக்குகள் மட்டுமன்றி பதுளை மாவட்டத்திலிருந்து பெறும் வாக்குகளும் குறையும்.
எமது மேற்படி உதாரணத்தை மீண்டும் எடுத்துக் கொண்டால் இவ்வாறு பல தொகுதிகளில் வாக்குகள் குறைவதால் விகிதாசார தேர்தல் முறைப் படி பதுளை மாவட்டத்தில் இருந்து 4 ஆசனங்களைப் பெற வேண்டிய ஜனநாயக மக்கள் முன்னணி புதிய முறைப் படி 4 ஆசனங்களுக்கு குறைவாக பெறலாம்.அக் கட்சி,தொகுதிகளில் இழந்ததை மாவட்டம் ஈடு செய்யும் என்றாலும் மாவட்டம் குறைவாகவே ஈடு செய்யும்.
இதற்காகத் தான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இரட்டை வாக்குச் சீட்டு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என ஆரம்பத்தில் கூறியது. இப்போது அந்தக் கருத்தை பல சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகள் ஏற்றுக் கொண்டுள்ளன. அந்தயோசனையின் படி மேற்படி பதுளை தொகுதி வாக்காளர், ஹரீனுக்கு ஒரு வாக்கையும் தாம் விரும்பும் கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணிக்கு ஒரு வாக்கையும் அளிக்க முடியும்.
புதிய முறைப் படி சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகள் எதிர் நோக்கும் பிரச்சினைக்கு இது ஓரளவுக்குத் தான் பரிகாரமாகலாம்.
ஏனெனில், தமது கட்சியை விட்டு ஹரீனுக்கு வாக்களிக்க முற்பட்ட ஒருவர் அத்தோடு தமது இரண்டாவது வாக்குச் சீட்டை பாவித்து ஹரீனின் கட்சிக்கும் வாக்களிக்க முற்படலாம். தேர்தல் சூட்டோடு அவரது மனதில் இவ்வாறானதோர் மாற்றம் ஏற்பட இடமுண்டு.
எந்தத் தேர்தல் முறையில் தேர்தல் நடைபெற்றாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கிலும் கிழக்கிலும் தமக்குரிய ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும். முஸ்லிம் காங்கிரஸூம் கிழக்கில் தமக்குரிய ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும். சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் பார்த்தால் அந்த இரு மாகாணங்களில் தமிழ் முஸ்லிம் பிரதிநிதித்துவம் அவ்வளவாக குறையாது.
புதிய சனத்தொகை கணிப்பீட்டின் படி தொகுதி எல்லை நிர்ணயத்தின் போது வடக்கில் தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்தால் அது தமிழர்களுக்கு ஒரு பாதிப்பாக அமையும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே இயங்கும் சிறிய மற்றும் சிறுபான்மைக் கட்சிகள் தான் புதிய முறையினால் வெகுவாக பாதிக்கப்படப் போகின்றன. எனவேதான் புதிய முறையினால் இரு பிரதான கட்சிகள் மட்டுமே எதிர்க்காலத்தில் அரசியல் களத்தில் மீதமாகியிருக்கும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க அண்மையில் கூறியிருந்தார்.
ஐ.தே.க ஆட்சியில் இருக்கும் போது 2003 ஆம் ஆண்டு தேர்தல் முறையை சீர்த்திருத்துவதற்காகவென மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. அக் குழு பல ஆண்டுகளாக அந்த விடயத்தைப் பற்றி ஆராய்ந்தது.
ஆனால், பொது இணக்கப்பாடொன்றை ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை. அவ்வாறிருக்கத் தான் தற்போது அரசாங்கமும் எதிர்க் கட்சிகளும் நாடாளுமன்றத்தைக் கலைக்க முன் ஓரிரு மாதங்களுக்குள் அவ்வாறானதோர் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றன.
இந்த விடயத்தில் தேர்தல் சீர்த்திருத்தம் என்பதை விட வௌ;வேறு கட்சிகளுக்கு வௌ;வேறு நோக்கங்கள் இருப்பதாக தெரிகிறது. நாடாளுமன்றத்தை ஜனாதிபதி விரைவில் கலைக்காதிருக்க சர்ச்சைக்குரிய இந்த அரசியலமைப்புத் திருத்தத்தை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாவிக்க முற்படுகிறது. இது நீண்ட காலம் எடுக்கக் கூடிய விடயம் என்பதால் இதனை குழப்பி விரைவில் நாடாளுமன்றத்தை கலைக்கச் செய்வதற்காக ஐ.தே.க., தொகுதி வாரியாக 125 எம்.பிக்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற நடக்க முடியாததை பிரேரிக்கிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தேர்தல் சீர்த்திருத்தமும் ஒரு வாக்குறுதி என்பதால் ஏதோ ஒன்றை முன்வைக்க வேண்டும் என்ற நிலையில் செயற்படுகிறார் போலும்.
இரு பிரதான கட்சிகளும் தேர்தல் சீர்த்திருத்தம் தேவை என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக இருந்தால் ஏனைய கட்சிகளும் அதனை விரும்புவதாக இருந்தால் ஒரு சட்டமூலத்தையாவது நிறைவேற்றிக் கொள்ள முடியாத அளவு குழப்பத்தில் உள்ள இந்த நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்தி அடுத்த நாடாளுமன்றத்தில் ஆறுதலாக இந்த தேர்தல் சிர்த்திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்ளலாமே.
அதனை விடுத்து ஒவ்வொரு கட்சியும் தத்தமது அரசியல் நோக்கங்களுக்காக 20 ஆவது திருத்தத்தை பாவிக்கின்றன. அது தான் உண்மை.
54 minute ago
7 hours ago
28 Mar 2026
28 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
7 hours ago
28 Mar 2026
28 Mar 2026