Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2015 ஜூலை 17 , மு.ப. 08:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹமட் பாதுஷா
சிறுபான்மை முஸ்லிம் அரசியல்வாதிகள், என்னதான் தங்களது சமய போதனைகளை அடிப்படையாகக் கொண்டு செயற்படுவதாக கூறிக் கொண்டாலும், நூற்றுக்கு நூறுசதவீதம் சமூக நலனை கருத்திற் கொண்டு அவர்கள் தீர்மானங்களை எடுப்பதில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் தேர்தல் காலத்தில் ஒரு வியூகம் வகுப்பார்கள். சாதக, பாதக நிலைமைகளை கூட்டிக் கழித்துப் பார்த்து அவர்கள் ஒரு கணக்குப் போடுவார்கள். அதை வைத்துத்தான் அவர்களது எந்தக் காய் நகர்த்தலும் அமையும்.
முஸ்லிம்கள் செறிவாக வாழும் பிராந்தியம் என்ற அடிப்படையில் வடக்கில் ஒரு பகுதியையும் கிழக்கையும் மையமாகக் கொண்டதாக முஸ்லிம்களின் அரசியல் மாறிக் கொண்டிருக்கின்றது. வடக்கு, கிழக்குக்கு வெளியேயுள்ள அதிகளவான முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு தனியொரு கட்சி அடையாளமும் இல்லை, தம்முடைய சமூக விடுதலைக்காக தனித்து நின்று அரசியல் செய்ய வேண்டிய நிர்ப்பந்தமும் அவர்களுக்கு இல்லை. ஆனால், 'காங்கிரஸ்களின்' சொந்தக்காரர்களும் அக்கட்சிகளின் தலைவர்களுமான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், அதாவுல்லா ஆகியோர் இதிலிருந்தும் சற்று வேறுபடுகின்றனர்.
ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெற இருக்கும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்- அம்பாறை (திகாமடுல்ல) மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடுவதற்கு வேட்புமனுவை தாக்கல் செய்திருக்கின்றது. இது ஒருவிதத்தில் துணிச்சலான முடிவு என்றாலும் மறைமுகமாக வாக்குகளை குழப்பியடித்து, முஸ்லிம் காங்கிரஸ் வாக்குகளை தட்டிப்பறிக்கும் ஒருவித யுத்தியாகும்.
எப்படியெனில் கண்டியிலும் அம்பாறையிலும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து கேட்கின்றது. எனவே, அங்கு ஏற்படும் முஸ்லிம் கட்சிக்கான வெற்றிடத்தை ரிஷாட் பதியுதீன் நிரப்பப் பார்க்கின்றார். குறிப்பாக தம்முடைய கோட்டையான அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் எடுத்த அதி முட்டாள்தனமான முடிவை ரிஷாட் தனக்குச் சார்பாக பாவித்திருக்கின்றார் எனலாம்.
இந்த பரீட்சார்த்த முயற்சிக்காக இரண்டு கட்சி தாவிகளும் ஒரு கல்விமானும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருக்கின்றனர். தனித்துவம் பேசுகின்ற கட்சி, யானையில் சவாரி செய்வதன் காரணமாக கோபமுற்ற வாக்காளர்களும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ§க்கு வாக்களிப்பார்கள். குறைந்த பட்சம் ஒரு நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை ம.கா. பெறக்கூடும்.
அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் பi0ழய வியூகத்தையே புதிய விளக்கக் குறிப்புக்களுடன் வகுத்திருக்கின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு என்ற கூட்டணியை விடவும் மஹிந்த ராஜபக்ஷ என்ற முன்னாள் ஆட்சியாளருக்கே தேசிய காங்கிரஸ் விசுவாசமாக இருந்திருக்கின்றது என்றால் மிகையில்லை. ஆனால்,இன்று மஹிந்தவிடம் சுதந்திர கட்சி இல்லை என்பதாலேயே, தாம் மைத்திரியின் ஆட்கள் என்று தேசிய காங்கிரஸ் வெளியுலகுக்கு காண்பிக்க முனைகின்றது. இதனடிப்படையில் 3 வேட்பாளர்களை அதாவுல்லா நிறுத்தியிருக்கின்றார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைவராக இருக்கின்றார் என்ற காரணத்தை கூறிக் கொண்டு, ஐ.ம.சு.மு.வுக்கு ஆதரவளிக்கும் முடிவை தேசிய காங்கிரஸ் எடுத்திருக்கின்றது. ஆனால், இது மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடும் கட்சி என்ற நம்பிக்கையில் எடுக்கப்பட்ட முடிவுபோல்தான் விளங்குகின்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்களின் மனநிலை எப்படியிருந்தது என்பதில் இன்னும் படிப்பினை பெறவில்லை என்பதையே இது காட்டுகின்றது. அத்தேர்தலில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பெரும்பாலான முஸ்லிம்கள் வெறுத்தனர். இப்போது மஹிந்தவை மீளப் பிரதமராக்கும் எண்ணம் எந்தப் பொது மகனுக்கும் இல்லை. மஹிந்தவை வெறுத்தகாலம் முடிவடைந்து, இப்போது மைத்திரிபால மீதே முஸ்லிம்களுக்கு மனக் கசப்பு ஏற்பட்டிருக்கின்ற ஒரு சூழலில், ஐ.ம.சு.கூட்டமைப்பில் களமிறங்க எடுத்த முடிவு அரசியல் ரீதியாக தற்பெருமைக்குரியதாக இருக்கலாம். ஆனால், அது மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் ஒன்றல்ல.
எவ்வாறிருப்பினும் தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லாவின் வியூகம் பலிப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. முதன்மை வேட்பாளர் என்ற அடிப்படையிலும் தொழில் வழங்கியோரிடமிருந்து கிடைக்கும் சில ஆயிரக்கணக்கான வாக்குகளாலும் மற்றைய வேட்பாளர்களின் ஊர்களில் இருந்து கிடைக்கும் விருப்பு வாக்குகளாலும் அவர் வெற்றி பெறுவார். அதேபோல் அவர் தமது கட்சி சார்பில் நிறுத்தியுள்ள ஏனைய இரு வேட்பாளர்களின் பிரதேசங்களும் அரசியல் ரீதியாக கைவிடப்பட்ட ஊர்களாகும். எனவே, அந்த ஊர் மக்கள் அதிக வாக்குகளை அளிப்பார்கள். அந்த வாக்குகள் ஐ.ம.சு.கூ.வின் ஏனைய சிங்கள வேட்பாளர்களுக்கு கிடைப்பதை காட்டிலும் அதிகம் என்றால், இன்னுமொருவரும் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படும் நிலைமை இருக்கின்றது.
முஸ்லிம் அரசியல் என்று வரும்போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பற்றி குறிப்பிட்டேயாக வேண்டும். மு.கா. இம்முறை போட்டியிடும் இரு மாவட்டங்களில் மாத்திரமே தனித்து களமிறங்கியுள்ளது. ஏனைய இடங்களில் ஐக்கிய தேசிய கட்சியுடன் (நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியுடன்) சேர்ந்தே தேர்தலில் குதித்திருக்கின்றது. ஆனால், முஸ்லிம் காங்கிரஸின் தாரக மந்திரமான தனித்துவம் இங்கு கவனத்திற் கொள்ளப்படவில்லை. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடாததால் மக்கள் தரப்பில் இருந்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. கண்டியில் தலைவர் ஹக்கீம், ஐ.தே.மு.வில் போட்டியிட வேண்டும் என்பதற்காக அம்பாறை மாவட்டத்தை பலிக்கடாவாக்கியுள்ளதாக ஆதரவாளர்களே பேசிக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.
அம்பாறையில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து களமிறங்கும் என்று ஆதரவாளர்கள் நம்பியிருந்தனர். சிறந்த வேட்பாளர்களை பரவலாக களமிறக்கும் என்ற எதிர்பார்ப்பும் மக்களுக்கு இருந்தது. ஆனால், அது விடயத்தில் மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள் என்றே சொல்ல வேண்டும்.
இப்போது ஐ.தே.முன்னணியில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டால் காலகாலமாக மு.கா.வுக்கு எத்தனை பேர் வாக்களிப்பார்களோ அதைவிட குறைவான மு.கா. ஆதரவாளர்களே அக்கட்சிக்கு வாக்குப் போடும் மனநிலைக்கு உள்ளாகியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
முஸ்லிம்களுக்கு தனியாக ஓர் அரசியல் அடையாளம் இருக்க வேண்டும் என்பதற்காகவே முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. அக்கட்சி- தேசிய காங்கிரஸ் போல, மக்கள் காங்கிரஸ் போல பொறுப்பற்று செயற்பட இயலாது. ஆனால், இது தெரிந்திருந்தும் ஹக்கீம் இப்படியான ஒரு முடிவை எடுத்திருப்பதால் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் மனமுடைந்து போயுள்ளனர்.
ஆனால், இது தனியே ஹக்கீமின் முடிவென்றும் சொல்லி விட முடியாது. ஏனென்றால் தயா கமகே போன்ற புதிய இனவாதிகளின் அழுத்தமும் இதற்கு காரணமாக அமைந்திருக்கலாம். முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் நான்கு பேரை வேட்பாளராக நிறுத்துவதற்கு தயாகமமே கடுமையாக எதிர்த்துள்ளார். ஏனென்றால் தயா கமகே போன்றோருக்கு அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியை பலம் பெறச் செய்வதற்கு இதை விட்டால் நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது. எனவேதான் மு.கா.சார்பு முஸ்லிம் வேட்பாளர் நிறுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த கமகே, கொஞ்சம் மனமிரங்கி தமது கட்சியின் செயற்பாட்டாளரான ஆதம்லெப்பையை வேட்பாளராக போட்டிருக்கின்றார். அவ்வாறு ஒரு முஸ்லிம் நியமிக்கப்பட்டதும் நலவுக்கே.
சரி, அம்பாறை மாவட்டத்தில், ஐ.தே.முன்னணயில்தான் போட்டியிடுவது என்ற முடிவை மு.கா. எடுத்தாலும்; சிறந்த வேட்பாளர்களை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவலாக நிறுத்தியிருக்கலாம். அதிலும் ஹக்கீமின் சாணக்கியம் சறுக்கியுள்ளது என்றே சொல்ல வேண்டியுள்ளது. ஏனெனில், ஒலுவில் களியோடை பாலத்துக்கு அப்பால் உள்ள ஊர்களைச் சேர்ந்த எவரும் வேட்பாளர்களாக பெயரிடப்படவில்லை.
மு.கா.வின் வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்துக்கொள்ள கிட்டத்தட்ட எல்லா உறுப்பினர்களும் ஆறேழு மாதங்களாக கனவு கண்டு கொண்டிருந்தனர். ஆனால், நிஜத்தில் எல்லோருக்கும் இடமளிக்க முடியாது. அவ்வாறே ஊருக்கு ஒருத்தரை வேட்பாளராக நிறுத்தவும் முடியாது. மூன்று பேருக்குத்தான் வாய்ப்பு கிடைக்கின்றது என்றால் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரதிநிதிகளை நிறுத்திருக்க வேண்டும். ஆனால், அவ்வளவாக ஆதரவு இல்லாத பைசல் காசிம் நிறுத்தப்பட்டிருக்கின்றார். மாகாண அமைச்சராகவும் இருந்து கட்சியின் வரப்பிரசாதங்களை அனுபவித்த எம்.ஐ. மன்சூருக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான அனுமதியும் கிடைத்துள்ளது. கூடவே கல்முனை மற்றும் சாய்ந்தமருது வாக்குகளுக்காக எச்.எம்.எம்.ஹரீஸ் மீண்டும் போட்டியிடுகின்றார்.
இது தவிர பொத்துவிலில் எந்த வேட்பாளரும் நிறுத்தப்படவில்லை. அதேபோல் நீண்டகாலமாக நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் தருவதாக சொல்லி ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் அட்டாளைச்சேனையில் இருக்கின்ற மாகாண சபை உறுப்பினரோ அதாவுல்லாவின் ஊரான அக்கரைப்பற்றில் உள்ள ஏ.எல்.தவத்துக்கோ வேட்பாளர் பட்டியலில் இடம் கிடைக்கவில்லை.
இவர்களில் ஒருவரை போட்டிருக்கலாம். அல்லது கிழக்கு சுகாதார அமைச்சுப் பொறுப்பை மன்சூரிடம் இருந்து வாங்கி நஸீருக்கோ தவத்துக்கோ கொடுத்து சமப்படுத்தியிருக்கலாம். அவ்வாறான ஒரு நடவடிக்கையை மேற்கொண்டு மாகாண அமைச்சுப் பொறுப்பை தவத்துக்கு வழங்கப் போவதாக ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால், பின்னர் அது கைவிடப்பட்டது போலுள்ளது. ஒருவேளை அவ்வாறு வழங்கப்பட்டாலும் அது அட்டாளைச்சேனைக்கே செல்லும் சாத்தியம் கூடுதலாக உள்ளது.
கடந்த மாகாண சபை தேர்தலில் அதாவுல்லாவுக்கு எதிராக தவம் களத்தில் நின்றமையால் வெளியூர் மக்களும் அவருக்கு வாக்களித்தனர். இது அதாவுல்லாவுக்கு எதிரான வாக்குகள் என்பதை புரிந்திருக்காத தவம், தன்னை ஒரு மிகையாக எடை போட்டுக் கொண்டார். ஆனால், மக்களிடையே பிரபலமாகியிருந்தார் என்பதை மறுக்க முடியாது. அந்த அடிப்படையில் அவருக்கு பெரிய பொறுப்புக்கள் வழங்கப்படும் என்று மக்கள் பேசிக் கொண்டதை தேர்தல் காலத்தில் கிழக்கிற்கு சென்ற போது அவதானிக்க முடிந்தது. ஆனால், தலைவர் ஹக்கீம் ஒரு மாகாண அமைச்சுப் பொறுப்பைக் கூட அவருக்கு வழங்கவில்லை.
இப்போது அந்த மாகாண சபை உறுப்பினரின் எம்.பி. கனவும் நனவாகவில்லை. ஒன்றில் - மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் தவத்துக்கு 'எதையாவது' தருவதாக சொல்லி சமாளித்திருக்க வேண்டும். அல்லது அவரை மட்டம்தட்டும் உத்தியை கைக்கொண்டிருந்தாலும் ஆச்சரியப்பட முடியாது. அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தில் ஒரு பகுதியில் மட்டுமே மு.கா. வேட்பாளர்கள் குவிக்கப்பட்டுள்ளார்கள். ஆதலால் இரண்டு உறுப்பினர்களை தெரிவு செய்வது என்றால் கூட கடுமையாக மு.கா. உழைக்க வேண்டியிருக்கும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
17 May 2025
17 May 2025