2025 மே 19, திங்கட்கிழமை

"சோனியாவை பிரதமர் வேட்பாளராக அறிவியுங்கள்": கருணாநிதி

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 10 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்

அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் பிறந்தநாள் வாழ்த்தில் முக்கியமான செய்தியை விடுத்திருக்கிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. "தற்போதைய நெருக்கடியான காலகட்டத்தில் மதசார்பற்ற நிலையான அரசை மத்தியில் வழங்க இந்த நாடு உங்களைத்தான் எதிர்நோக்கி இருக்கிறது" என்ற செய்தியை முன்னிலைப்படுத்தி 9.12.2012 அன்று பிறந்த நாள் கண்ட சோனியா காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பிரதமராக இருக்கும் மன்மோகன்சிங்கிற்கும், காங்கிரஸ் கட்சியின் தலைவியாக இருக்கும் சோனியா காந்திக்கும் பொருளாதார சீர்திருத்த விடயங்களில் கருத்தொற்றுமை இருப்பதாகத் தெரியவில்லை. பிரதமரின் டீம், சோனியாவின் டீம் என்ற இரு டீம்கள் மத்திய அரசில் அவரவர் அஜெண்டாப்படியே செயல்படுகின்றன என்பதே பரவலான பேச்சாக இருக்கிறது.

குறிப்பாக சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு என்ற கொள்கை நிலைப்பாட்டை குஜராத் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நேரத்தில் பிரதமர் அறிவித்தது காங்கிரஸ் கட்சிக்கு பதற்றத்தைக் கொடுத்தது. இதே மாதிரி உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தல் நடைபெற்றபோதுதான் இதே அந்நிய முதலீட்டுப் பிரச்சினை பெரிய அளவில் பேசப்பட்டு முதலில் பரபரப்பானது. அப்போது அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கவே "சம்பந்தப்பட்டவர் அனைவரிடமும் ஆலோசித்து முடிவு செய்யப்படும்" என்று ஒத்தி வைக்கப்பட்டது. அந்த அந்நிய முதலீடு விவகாரம் சரியாக குஜராத் தேர்தலின் போது கொண்டு வரப்பட்டதால், வர்த்தகர்கள், விவசாயிகள் மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கு சோதனை ஏற்பட்டுவிட்டது.

"நிலக்கரி ஒதுக்கீடு முறைகேடுகளும், நஷ்டங்களும்" அம்பலத்திற்கு வந்தபோது வெளியான சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு என்ற கொள்கை முடிவே காங்கிரஸ் கட்சி தலைமைக்கும், பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும் இடையே நடைபெறும் பனிப்போரை படம்பிடித்துக் காட்டியது. "பொருளாதார சீர்திருத்தத்தில் உறுதியாக இருந்தேன். அதனால் பதவியை இழந்தேன் என்று இருக்கட்டும். நிலக்கரி முறைகேட்டுப் புகாரால் ஆட்சியை இழந்தேன் என்று அல்ல" என்பதை காங்கிரஸ் கட்சி தலைமைக்கு அறிவிக்கவே பிரதமர் மன்மோகன்சிங் அந்நிய முதலீடு உள்ளிட்ட பொருளாதார சீர்திருத்தத்தை திடீரென்று கையிலெடுத்தார் என்பதில் சந்தேகமில்லை.

காங்கிரஸ் கட்சிக்கும், பிரதமருக்கும் உள்ள இடைவெளி சமையல் கேஸ் சிலிண்டர் விடயத்திலேயே வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. "மானிய விலையில் வருடத்திற்கு ஆறு சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படும்" என்ற கொள்கை முடிவு அறிவிக்கப்பட்டது. அதற்கு எல்லா மாநிலங்களும் எதிர்ப்பு தெரிவித்தன- காங்கிரஸ் ஆட்சிகள் உள்ள மாநிலங்கள் உள்பட! பன்னிரெண்டு சிலிண்டர்கள் என்று இருந்ததை ஆறு சிலிண்டர்களாக குறைத்தது தாய்மார்கள் மத்தியில் கடும் எதிர்ப்பைக் கிளப்பியது. கூட்டணிக் கட்சியாக இருந்த மம்தா பாணர்ஜி வெளியேறியதற்கு அதுவும் ஒரு முக்கிய காரணம். இந்நிலையிலேயே அமைச்சரவை மாற்றம் மத்தியில் மேற்கொள்ளப்பட்டது. புதிய அமைச்சராக பெட்ரோலியத்துறைக்கு வீரப்பமொய்லி நியமிக்கப்பட்டார். புதிய அமைச்சர்களை அழைத்துப் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், "நாமெல்லாம் தேசத்தை உருவாக்குவதில் ஈடுபட்டிருக்கிறோம். ஆகவே நம் நோக்கங்களும், பொறுப்புகளும் "மற்ற விடயங்களை" கடந்து இருக்க வேண்டும்" என்று ஆலோசனை வழங்கினார். அவர் குறிப்பிட்ட "மற்ற விடயங்கள்" என்பது, "நீங்கள் எல்லாம் பிரதம அமைச்சரின் உத்தரவுக்கு கட்டுப்பட்டே செயல்பட வேண்டும்" என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டிய விடயம் என்கிறார் ஒரு மூத்த காங்கிரஸ் தலைவர். அவர் பேசி முடித்த பிறகு ஒரு பேட்டியில், "மானிய சிலிண்டர்களை ஆறில் இருந்து ஒன்பதாக உயர்த்துவது பற்றி முடிவு எடுக்கப்படும்" என்று ஓப்பனாகவே அறிவித்தார் வீரப்பமொய்லி. அது மட்டுமின்றி, நிதியமைச்சர் சிதம்பரம் கூட, "பெட்ரோலியம் அமைச்சகத்திலிருந்து வேண்டுகோள் வந்தால் அது பற்றி பரிசீலிக்கப்படும்" என்றும் கூறினார். ஆனால் இதெல்லாம் நடைபெற்று ஒரு மாதத்திற்கும் மேலாகி விட்டது. ஆனால் இன்னமும் மானிய விலையிலான ஆறு சிலிண்டர்களை ஒன்பது சிலிண்டர்களாக உயர்த்தும் அறிவிப்பு வெளியாகவில்லை. ஆளுகின்ற பிரதமர் சிலிண்டர்கள் விடயத்தில் தான் எடுத்த பொருளாதார சீர்திருத்த முடிவை மாற்றிக் கொண்டு கட்சி தலைமையுடன் சமாதானமாகப் போவதற்கு இன்னும் தயங்கியபடியே நிற்கிறார் என்பதை இது எடுத்துக் காட்டுகிறது.

இப்படியொரு இக்கட்டான சூழ்நிலையில் வருகின்ற ஜனவரி 18, 19 ஆகிய திகதிகளில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் அகில இந்திய காங்கிரஸின் "சிந்தனை அரங்கம்" நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது முடிந்த மறுநாள் அதாவது 20ஆம் திகதி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் ஜெய்பூரிலேயே நடைபெறுகிறது. அது பெரும்பாலும் காங்கிரஸ் கட்சிக்குள் ராகுலின் உயர் பதவியையும், அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கான "அஜெண்டா" மற்றும் கூட்டணி பற்றிய முடிவினையும் எடுப்பதற்கு முன்னோட்டமாக இருக்கும் என்றே அரசியல்பார்வையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். இது மாதிரி நிலைமையில்தான் தி.மு.க. தலைவர் கருணாநிதி, "மதசார்பற்ற அரசை வழங்க உங்களைத்தான் நாடு எதிர்நோக்கி காத்திருக்கிறது" என்று சோனியா காந்திக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதன் பின்னணி என்னவென்றால், பாரதீய ஜனதா கட்சி ஏறக்குறைய நரேந்திரமோடியே பிரதமர் வேட்பாளர் என்ற முடிவினை எட்ட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம். அந்த நேரத்தில் ஏற்கனவே இருமுறை பிரதமராக இருந்து, அவ்வளவு பொப்புலராக இல்லாத பிரதமர் மன்மோகன்சிங்கை வேட்பாளராக நிறுத்துவது காங்கிரஸுக்கு தேர்தலில் சிக்கலை ஏற்படுத்தும். மூன்றாவது முறையும் மன்மோகன்சிங்தான் பிரதமர் வேட்பாளர் என்றால் காங்கிரஸுக்கு புதிய கூட்டணிக் கட்சிகளும் கிடைக்காது. இருக்கின்ற கூட்டணிக் கட்சிகளும் விலகிச் சென்று விடும். நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளர் என்று பா.ஜ.க. அறிவித்தால், அந்தக் கட்சிக்கும் இதே நிலைதான் ஏற்படும். ஆனால் தேர்தலில் கிடைக்கும் லாபம் என்பது காங்கிரஸை விட, பா.ஜ.க.விற்கு அதிகமாக இருக்க வாய்ப்பு உண்டு. "ஊழலுக்கு எதிராக இயக்கம்" ஆரம்பித்து "ஆம் ஆத்மி கட்சியை" தொடக்கி பிரசாரத்தில் இறங்கியுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் மட்டுமே இப்போதைக்கு பா.ஜ.க.வின் வாக்கு வங்கிக்கு ஆபத்தாக காட்சியளிக்கிறார். மற்றபடி காங்கிரஸை விட பா.ஜ.க.விற்கு இப்போதுள்ளதை விட அதிக எம்.பி.க்களை பெறும் வாய்ப்பு 2014 நாடாளுமன்றத் தேர்தலிலோ, அல்லது நாடாளுமன்றத் தேர்தல் முன்கூட்டியே வந்தாலோ உருவாகலாம்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கணிசமான எம்.பி. தொகுதிகளைப் பெற்றால், நரேந்திரமோடி பிரதமராகும் சூழ்நிலை உருவாகலாம். ஆகவேதான் இப்போதே சோனியாவிற்கு கருணாநிதி வேண்டுகோள் விடுக்கிறார். "மதசார்பற்ற அரசை வழங்க உங்களைத்தான் நாடு எதிர்நோக்கி காத்திருக்கிறது" என்று! ஒரே கல்லில் இரு மாங்காய்கள் அடிக்கும் அரசியல் இது. ஒன்று தன்னைப் பிடிக்காத, சென்னை வந்த போதெல்லாம் தன்னை சந்திக்காத ராகுல் காந்தியை பிரதமர் பதவிக்கு இன்றைய சூழலில் முன்னிறுத்துவது பிரயோஜனமில்லை என்ற அறிவிப்பை வெளிப்படையாகச் செய்கிறார். அதுவும் ஜெய்ப்பூர் காங்கிரஸ் கூட்டத்திற்கு முன்பே செய்கிறார். இன்னொன்று "நரேந்திரமோடியை எதிர்கொள்ள நீங்கள் மட்டுமே தகுந்த வேட்பாளர். நீங்கள் பிரதமர் வேட்பாளராக களமிறங்கினால்தான் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. தொடருவதற்கு வாய்ப்பாக இருக்கும்" என்ற செய்தியையும் விடுக்கிறார். ஏற்கனவே சோனியா வெளிநாட்டுக்காரர் என்ற கோஷம் எழுந்த போது, "அவர் பிரதமராக தடையில்லை" என்று முதலில் அறிவித்தவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது. அதே பாணியை இப்போதும் பிரகடனப்படுத்தியிருக்கிறார். ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸிற்குள் கோரிக்கை வலுத்து வருகின்ற சூழ்நிலையில், சோனியா பிரதமர் வேட்பாளராக நிற்க வேண்டும் என்ற விருப்பத்தை வெளியிட்டிருக்கிறார் கருணாநிதி. வருகின்ற ஜனவரி மாதத்தில் கூடப்போகும் காங்கிரஸ் கட்சியின் "சிந்தனை அரங்க" கூட்டத்தில் தி.மு.க. தலைவரின் கருத்து ஏற்கப்படுமா? அல்லது ராகுல் காந்திதான் அடுத்த பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X