2025 மே 20, செவ்வாய்க்கிழமை

"காதல் திருமணம்" பற்றி விசாரிக்க "நீதிவிசாரணை": தமிழகம் காணும் வித்தியாசமான அரசியல் களம்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 03 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தின் வடக்குமாவட்டமான "தர்மபுரி" மாவட்டத்தில் நடைபெற்ற "காதல் திருமணம்" தமிழகத்தின் அரசியலை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த மாவட்டம் இயற்கையாகவே பா.ம.க. தலைவர் ராமதாஸுக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனுக்கும் இடையே "பனிப்போரை" உச்சகட்டத்திற்கு கொண்டு போகும் மாவட்டம். அப்படியொரு மாவட்டத்தில் உள்ள நாயக்கன்கோட்டை என்ற கிராமத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயமான வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த திவ்யா என்ற பெண்ணிற்கும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இளவரசன் என்ற இளைஞனுக்கும் இடையே நடந்த காதல் திருமாணம் பெரும் கலாட்டாவில் முடிந்து விட்டது. மணமகனின் பெற்றோரை அவரது சொந்தங்கள் தொடர்ந்து இம்சைப்படுத்தியதாலும், தன் மகள் திவ்யா தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மணமகனை தேர்வு செய்ததாலும் நொந்துபோன அவரது தந்தை நாகராஜன் மனமுடைந்து திடீரென்று தற்கொலை செய்து கொண்டார்.

இந்த தற்கொலை "தர்மபுரி" மாவட்டத்தில் "தகதகவென" ஜாதி அரசியலை கொதிக்க வைத்தது. வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் - தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் வசிக்கும் நத்தம், கொண்டாம்பட்டி, அண்ணாநகர் உள்ளிட்ட கிராமங்களை சூறையாடினார்கள். அவர்கள் வீடுகளில் இருந்த பொருள்களை அடித்து நொறுக்கினார்கள். மாணவர்கள் வைத்திருந்த "மடிக்கணினிகள்" கூட அந்த மல்போரில் தப்பிக்கவில்லை. சுமார் 403இற்கும் மேற்பட்ட வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டு அங்கிருந்த மக்கள் பாதிக்கப்பட்டதாக மனித உரிமைகள் ஆர்வலர் ஹெண்றி டிபேன் - தர்மபுரி மாவட்டத்திற்கு விஸிட் செய்து விட்டு வந்து அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இந்த கலவரம் ஏற்பட்டவுடன் பொலிஸ் அதிரடியாக செயல்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்டவர்களை கைது செய்து, அவர்கள் மீது தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான "வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ்" 180இற்கும் மேற்பட்ட வன்னிய சமுதாய பிரமுகர்களை கைது செய்தார்கள். இந்த சட்டத்தின்படி கைது செய்யப்படுபவர்கள் உடனடியாக ஜாமினில் வெளிவர முடியாது. அது மட்டுமின்றி, இந்த சட்டத்தின்படி யார் மீதாவது வழக்குப் பதிவு செய்யப்பட்டால், அவர்கள் தங்களை கைதுசெய்யாமல் இருக்க "முன் ஜாமினும்" நீதிமன்றங்களில் பெற முடியாது. அவ்வளவு கடுமையான சட்டம் இந்த "வன்கொடுமை தடுப்புச் சட்டம்"! இந்த சட்டத்தை எதிர்த்து தாழ்த்தப்பட்டோர் இல்லாத அமைப்புகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் போராடி வந்திருக்கின்றன. ஒரு காலத்தில் தமிழகத்தின் மேற்கு மாவட்டமான கோவை கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த, மறைந்த எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பராக இருந்த "கோவை செழியன்" இந்த சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று பெரிய போராட்டத்தையே நடத்தினார். பிற்படுத்தப்பட்ட சமுதாய இயக்கங்களை எல்லாம் சேர்த்து அதற்கு என்று தனியாக ஒரு கூட்டமைப்பையே நடத்தி, "தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை" ரத்து செய்ய வேண்டும் என்று பேரணிகள், பொதுக்கூட்டங்கள் எல்லாம் நடத்தினார். இந்த தர்மபுரி "காதல் திருமண" கலவரத்தால் போடப்பட்ட வழக்குகளை எதிர்த்து இப்போதும் கொங்கு மண்டலத்தில் "தலித் அல்லாதோர் பாதுகாப்பு அமைப்பு" ஒன்று உருவாக்கப்பட்டு விட்டது இதன் தாக்கம்தான்.

இந்த கவலரத்தைத் தொடர்ந்து தர்மபுரிக்குச் சென்ற அரசியல் கட்சிகள் அனைத்துமே பெரும்பாலும் டாக்டர் ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சியை குறை சொன்னார்கள். பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸும், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனும் தங்களின் சமுதாயத்திற்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்தார்கள். இந்நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒரு குழுவை அனுப்பி "காதல் கலவரம்" நடந்த பகுதியில் விசாரித்தார்கள். அந்தக் குழுவும் அறிக்கை கொடுத்தது. அதில், "பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் சிலர்தான் இந்த வன்முறைக்கு காரணம்" என்று தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் அறிக்கை சமர்பித்தது. அந்த அறிக்கைக்குப் பிறகு வெகுண்டெழுந்தார் டாக்டர் ராமதாஸ். "தர்மபுரி காதல் திருமணத்தால் கஷ்டப்படுபவர்கள் வன்னியர் சமுசாயத்தினர் மட்டுமல்ல, தலித் அல்லாத மற்ற சமுதாயத்தினரும்தான். எங்கள் சமுதாயத்தினர் வன்முறையில் ஈடுபடவில்லை" என்று அறிவித்தார். அதுமட்டுமல்ல, "காதலாவது, கத்தரிக்காயாவது. இந்த காதல் திருமணங்கள் எல்லாம் ஜீன்ஸ் போட்டு, ஷர்ட் போட்டு, கூலிங்க் கிளாஸ் போட்டுக்கொண்டு பெண்களை கவரும் விஷயம். பள்ளிக்குழந்தைகளின் மனதைக் கெடுத்து செய்யப்படும் திருமணங்கள். ஆகவே பெண்ணுக்கு திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும்" என்று ஆக்ரோஷமாகப் பேசினார். "ஆணும், பெண்ணும் சட்டத்தின் முன்பு சமம் என்று சொல்லும் நாட்டில் ஆண்களுக்கு திருமண வயது 21. பெண்களுக்கு திருமண வயது 18. ஏன் இந்த பாரபட்சம். பெண்களுக்கும் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.

இத்துடன் நிற்கவில்லை பிரச்சினை! வடமாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள் போன்ற பகுதிகளில் அடிக்கடி கூட்டம் போட்டு, "காதல் திருமணத்திற்கு" எதிராக ஒரு பிரசாரத்தையே முடுக்கி விட்டுள்ளார் ராமதாஸ். தலித் அல்லாத ஜாதியினரை அழைத்து டிசெம்பர் 2ஆம் திகதி சென்னையில் கூட கூட்டம் போட்டிருக்கிறார். அக்கூட்டத்தின் முடிவில், "நாமக்கல் மாவட்டத்தில் இது போன்ற காதல் திருமணங்கள் (தாழ்த்தப்பட்ட சமுதாய இளைஞர்களுக்கும், மற்ற சமுதாய பெண்களுக்கும் இடையே நடந்த திருமணங்கள்) 955 நடந்திருக்கின்றன. அதில் 712 திருமணங்கள் தோல்வியில் முடிந்துள்ளன. இதுபோன்ற காதல் திருமணங்களால் 37 பெற்றோரும், 32 இளம் பெண்களும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்" என்று ஒரு புள்ளிவிவரத்தையும், "தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகள் 98 சதவீதம் பொய்யானவை" என்றும் அதிர்ச்சி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். முடிவில் இதுபோன்று நடக்கும் காதல் திருமணங்கள் பற்றி ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இதற்கு போட்டியாக திருமாவளவன் கம்யூனிஸ்ட் இயக்கங்களின் ஆதரவை தேடுகிறார். இதற்காக சென்னையில் எதிர்ப்பு ஆர்பாட்டம் ஒன்றை இன்று (3.12.2012) திங்கட்கிழமை நடத்துகிறார். அதில் தொல். திருமாவளவன், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், டெசோ இயக்க உறுப்பினர் சுப. வீரபாண்டியன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். காதல் திருமணத்திற்கு "நீதிவிசாரணை" கேட்கும் வித்தியாசமான சூழ்நிலை தமிழகத்தில் ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் காதல் திருமணங்கள் புதிதல்ல. அதேபோல் ஜாதி மறுப்புத் திருமணங்களுக்கும் புதிதல்ல. தமிழகத்தில் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் எல்லாமே "சுயமரியாதை திருமணங்கள்" என்ற வரிசையில் இதுபோன்ற ஜாதி மறுப்புத் திருமணங்களுக்கு ஊக்கம் அளித்தவர்கள்தான். அதுபோன்ற திருமணங்கள் செல்லும் என்று தமிழக சட்டமன்றத்தில் சட்டமே இயற்றப்பட்டுள்ளது. அதை விட சமூக நீதிக்காக போராடிய பெரியார் காலத்திலேயே, அதாவது 1925ஆம் வருடங்களிலேயே இதுபோன்ற "காதல் திருமணங்களும்" அடங்கிய சுயமரியாதை திருமணங்கள் போற்றப்பட்டன. ஆனால், இப்போது இருவேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் செய்து கொண்ட காதல் திருமணத்தை முன் வைத்து, பெரியதொரு கலவரமே தர்மபுரி மாவட்டத்தில் நடந்து விட்டது. இதன் தாக்கம் வேறு சில அண்டை மாவட்டங்களிலும் எதிரொலிக்கிறது. இதுபற்றி திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் 80ஆவது பிறந்த நாள் விழாவில் பேசிய தி.மு.க. தலைவர் கருணாநிதி, "ஜாதியை மறுத்து நடைபெற்ற திருமணத்தால்தான் தர்மபுரியிலே இவ்வளவு பெரிய கலவரம் நடைபெற்றது. இதற்கெல்லாம் காரணம் பெரியாரும் இல்லை. பெரியார் போதித்த கொள்கைகளை பரப்புவர்களும் ஆட்சியில் இல்லை" என்று குறிப்பிட்டு விட்டு, "நான் இந்த நேரத்தில் தந்தை பெரியார் அவர்களுடைய பெயரால் இந்த மன்றத்தில் அமர்ந்து சொல்கிறேன். இனி பத்தாண்டு காலத்திற்கு மேல் ஜாதியை வைத்து எவரும் தமிழ்நாட்டிலே யாரையும் ஏமாற்ற முடியாது" என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸை கடுமையாக சாடியிருக்கிறார். அதாவது "ஜாதியை" வைத்து இனிமேல் அரசியல் பண்ணமுடியாது என்று ஓர் எச்சரிக்கை போலவே டாக்டர் ராமதாஸுக்கு விடுத்திருக்கிறார் கருணாநிதி.

திராவிடர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் "காதல் திருமணங்களுக்கும்" "ஜாதி மறுப்புத் திருமணங்களுக்கும்" பெரும்பாலும் கை கொடுத்துள்ளார்கள். அதை வலியுறுத்தி பிரசாரங்களும் செய்திருக்கிறார்கள். இப்போதும் செய்து வருகிறார்கள். ஏறக்குறைய முக்கால் நூற்றாண்டுக்கு முன்பிலிருந்து இந்த இயக்கங்கள் முயற்சி செய்து ஏற்படுத்த முயன்ற ஜாதி ஒழிப்பிற்கு இப்போது சவால் பிறந்திருக்கிறது. "காதல் திருமணங்களை" தடைசெய்ய வேண்டும் என்று வட மாவட்டங்களில் பெரும்பான்மையாக இருக்கும் வன்னியர் சமுதாயத்தின் வாக்கு வங்கியை கணிசமாக வைத்திருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக குரல் எழுப்புகிறது. அத்துடன் நில்லாமல் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு எதிராக மற்ற ஜாதித் தலைவர்களையும் ஒன்று சேர்த்து போராட்டக் களத்திற்கு அழைத்து வந்துள்ளார் டாக்டர் ராமதாஸ். "காதல் திருமணத்திற்கு" தடா போட வேண்டும் என்ற கோணத்தில் "திராவிட இயக்கங்கள்" முளைத்த தமிழக மண்ணில் இப்போது ஜாதி "மீண்டும்" விஸ்வரூபம் எடுக்கிறது. இது தமிழக அரசியலில் வடமாவட்டங்களில் உள்ள 100இற்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் தங்கள் செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்ள நினைக்கும் டாக்டர் ராமதாஸுக்கும், திருமாவளவனுக்கும் இடையேயான போராட்டத்தால் வந்த விளைவு. முதல் ரவுண்டில், அதாவது 1990களில் இரு தரப்பும் மோதிக் கொண்டார்கள். வட மாவட்ட அரசியலில் பிரிந்து நின்றார்கள். பிறகு இருவரும் 2000 இணைந்து திரிந்து ஒவ்வொரு ஊராகப் போனார்கள். "தமிழ் பாதுகாப்பு இயக்கம்" என்று ஆரம்பித்து ஆங்காங்கே மேடையில் தோன்றினார்கள். சேலத்தில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் "தலித் சமுதாயத்தை சேர்ந்த திருமாவளவனை முதல்வராக்கி அழகு பார்ப்பதே என் பணி" என்றே டாக்டர் ராமாதாஸ் உணர்ச்சிகரமான உரை நிகழ்த்தினார்.

ஆனாலும் தேர்தல் அரசியல் என்று வந்தால் இருவருமே வெவ்வேறு தேர்தல் அணியில் இடம்பெறுவார்கள். ஏனென்றால் இந்த இரு தலைவர்கள் மட்டத்தில் உருவாகிய இணைப்பு அந்த சமுதாய அளவில் உருவாகவில்லை என்பதே. இந்நிலையில் 2011 சட்டமன்ற தேர்தலில் அதிரடியான முடிவை இருவரும் எடுத்தார்கள். டாக்டர் ராமதாஸும், திருமாவளவனும் ஒரே பக்கமாக நின்று தி.மு.க. அணியில் சட்டமன்ற தேர்தலை சந்தித்தார்கள். வன்னியர் சமுதாயமும், தாழ்த்தப்பட்ட சமுதாயமும் தி.மு.க. அணியில் இருந்ததால் தேர்தல் களத்தில் மகத்தான வெற்றி கிடைக்கும் என்று அரசியல் ஆரூடங்கள் வலம் வந்தன. ஆனால் தேர்தல் முடிவுகள் வேறுவிதமாக அமைந்தன. தி.மு.க., டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் ஓரணியில் நின்றும் அந்த "தி.மு.க. அணியே" மொத்தம் 7 எம்.எல்.ஏ.க்களை மட்டுமே நூறு தொகுதிகளில் இருந்து வென்று எடுக்க முடிந்தது. தி.மு.க. கூட்டணியில் 30 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி இந்த மொத்த ஏழு எம்.எல்.ஏ.க்களில் மூன்றை மட்டுமே பெற்றது. 10 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் அமைப்பு ஒரு எம்.எல்.ஏ. கூட பெற முடியவில்லை. "தானும், திருமாவளவனும் கைகோர்த்து ஓரணியில் நின்றும் பிரயோஜனமில்லை" என்பதை சென்ற 2011 சட்டமன்ற தேர்தல் டாக்டர் ராமதாஸுக்கு உணர்த்தியது. அதனால்தான், "இனி எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை. தனியாகவே தேர்தலை சந்திக்கும் பா.ம.க." என்று அறிவித்து செயல்பட்டு வருகிறார் டாக்டர் ராமதாஸ். இப்போது "எதிர்காலத்தில் திருமாவளவனுடனும் கூட்டணி இல்லை" என்பதை பகிரங்கப்படுத்த, "தர்மபுரி காதல் திருமண கலவரம்" அவருக்கு கைமேல் கிடைத்த யுக்தியாக அமைந்து விட்டது. இதன் மூலம் வன்னியர் வாக்கு வங்கியை தன் பக்கமாக ஒருங்கிணைத்து, தலித் அல்லாத மற்ற ஜாதியினர் மத்தியில் உள்ள "வன்னியர் எதிர்ப்பை" பிசுபிசுக்க வைக்க முடியும் என்று டாக்டர் ராமதாஸ் திடமாக நம்புகிறார். இவருடைய யுக்தியை, திருமாவளவனும் உணர்ந்தே இருக்கிறார். அதனால்தான்  இந்த போராட்டத்தில் தி.மு.க. எந்த அளவிற்கு கைகொடுக்கும் என்பதில் சந்தேகப்பட்டு, அவர் இப்போதே இடது சாரி கட்சிகளின் துணையே தேடுகிறார். சென்னையில் நடக்கும் ஆர்பாட்டத்திற்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் உதவியை நாடியுள்ளார். தர்மபுரி காதல் திருமண கலவரத்தை தங்களின் அடுத்த கட்ட அரசியல் வெற்றிக்கு படிக்கட்டாக அமைக்க டாக்டர் ராமதாஸும், திருமாவளவனும் தீவிரமாக போராடுகிறார்கள். இதனால் வடமாவட்டங்களில் அமுங்கிக் கிடந்த "ஜாதி அரசியல்" "அசுர" முகம் காட்டுகிறது. ஜாதி இல்லை என்ற பிரசாரத்தை முன்னெடுத்துச் சென்ற திராவிட இயக்கங்களின் தமிழக அரசியல் களத்தில், இவர்களின் "புது வடிவம்" பெற்ற போராட்டம் சற்று வித்தியாசமான போக்கை புகுத்தியுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X