2025 மே 19, திங்கட்கிழமை

"டெசோ" பந்திற்கு ரெடியாகும் தமிழ்நாடு

A.P.Mathan   / 2013 மார்ச் 11 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தமிழருக்கு ஆதரவான போராட்டம் மாணவர் போராட்டமாக மீண்டும் "விஸ்வரூபம்" எடுக்கிறது. சென்னையில் பிரபலமான லயோலா கல்லூரி மாணவர்கள்  எட்டுப் பேர் "சாகும்வரை உண்ணாவிரதத்தை" கோயம்பேடு பஸ்நிலையத்திற்கு அருகில் உள்ள "செங்கொடி அரங்கத்தில்" திடீரென்று ஆரம்பித்தார்கள். "போர்க் குற்றங்களுக்காக இலங்கை ஜனாதிபதி மீது சர்வதேச விசாரணை, தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க ஐக்கிய நாடுகள் சபையின் பொதுவாக்கெடுப்பு" போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் அமர்ந்தனர். மார்ச் 8ஆம் திகதி தொடங்கிய இந்த சாகும்வரை உண்ணாவிரதத்திற்கு அனைத்து தரப்பினரும் வாழ்த்தி, ஆதரவு வழங்கினார்கள். திலீபன், ஜோப் பிரிட்டோ, அந்தோணி ஜோர்ஜ், பார்வைதாசன், பால் கென்னத், மணி, சண்முகப்பிரியன், லியோ ஸ்டாலின் உள்ளிட்ட இந்த எட்டுப் பேரின் உண்ணாவிரதம் எல்லா திக்குகளிலும் உள்ள அரசியல் தலைவர்களை உண்ணாவிரதப்பந்தல் நோக்கி வர வைத்தது.
உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வாழ்த்தினார். பிறகு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் எல்லாம் சென்று மாணவர்களின் இந்த உண்ணாநோன்புக்கு நேசக்கரம் நீட்டி, "போர்க் குற்றங்களுக்காக இலங்கை ஜனாதிபதி மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்ற கோரிக்கையை வலிறுத்திப் பேசினர். இந்த உண்ணாவிரதத்திற்கும் தி.மு.க. போராட்டங்களுக்கும் ஒரு தொடர்பு உண்டு. மார்ச் 5ஆம் திகதி இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்தது தி.மு.க. உடனே அவசர அவசரமாக வைகோ உள்ளிட்டோர் மார்ச் 4ஆம் திகதியே இலங்கை தூதரக முற்றுகை போராட்டத்தை நடத்தினர். பிறகு 7ஆம் திகதி டெல்லியில் டெசோ கருத்தரங்கம் நடத்தியது தி.மு.க. அந்த கூட்டத்தில் காங்கிரஸின் சார்பில் அதன் அகில இந்திய செயலாளர் குலாம் நபி ஆசாத், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள். டெசோ ஆரம்பித்த பிறகு முதன் முதலில் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டம் இந்த டெல்லி கூட்டம்தான். அதேபோன்று டெல்லி நாடாளுமன்றத்திலும் இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பான விவாதங்கள் ராஜ்ய சபையிலும், பிறகு லோக்சபாவிலும் நடைபெற்று, அதில் குறிப்பாக பா.ஜ.க.வின் சார்பில் பேசிய யஷ்வந்த் சின்காவும், வெங்கய்யா நாயுடுவும் இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்திய அரசின் "பாராமுக"க் கொள்கையை கடுமையாகவே விமர்ச்சித்து விட்டார்கள்.

இந்த லோக்சபா பேச்சில் தி.மு.க.வின் சார்பில் பேசிய டி.கே.எஸ். இளங்கோவன், "நாம் நண்பர்கள். இருவரும் காங்கிரஸ் கொடியையும், தி.மு.க. கொடியையும் ஏந்தி சென்று வாக்கு கேட்டோம். மக்களுக்கு பல வாக்குறுதிகளை கொடுத்தோம். காங்கிரஸ் கொடியில் மூன்று கலர் இருக்கிறது. ஒன்று பச்சை, இன்னொன்று வெள்ளை. மூன்றாவது கலர் சப்ரான். இதில் விவசாய வளர்ச்சி பெருகிவிட்டது என்று கூறி உங்கள் பச்சைக் கலருக்கு திருப்தி பட்டுக்கொள்கிறீர்கள். பால் உற்பத்தி பெருகிவிட்டது என்று சொல்லி வெள்ளைக் கலருக்கு திருப்திப்பட்டுக் கொள்கிறீர்கள். சேது சமுத்திரத்திட்டத்தை நிறுத்தி "சப்ரான்" கலரை திருப்திப்படுத்தியுள்ளீர்கள். ஆனால் தி.மு.க. கொடியில் உள்ள கருப்பும், சிவப்பும்தான் இன்றைக்கு இலங்கை தமிழர்களின் நிலை. ஆனால் அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி உங்களுக்கு அக்கறையில்லை. உங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொண்ட நீங்கள், தி.மு.க. கொடுத்த வாக்குறுகிகளை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எங்களை கஷ்ட காலத்தில் விட்டிருக்கிறீர்கள்" என்று மிகவும் ஓப்பனாகவே காங்கிரஸை "அட்டாக்" பண்ணினார்.

இந்த பரபரப்பான பேச்சுகளால் தமிழகத்திலிருந்து சென்ற காங்கிரஸ் எம்.பி.க்களே இலங்கை தமிழர் பிரச்சினையில் ஆதரவாக பேச வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள். தமிழக காங்கிரஸ் எம்.பி. கே.எஸ். அழகிரி பேசும் போது, "டெல்லியில் தி.மு.க. நடத்தும் டெசோ மாநாட்டை தமிழக காங்கிரஸ் எம்.பி.க்களாகிய நாங்கள் வரவேற்கிறோம். இலங்கையில் தமிழர்கள் மாவட்ட அளவில் உள்ள அதிகார அமைப்புகளில்தான் இருக்கிறார்கள். மாநில அதிகார அமைப்புகளில் இல்லை. ஆகவே அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். சோனியா காந்திதான் நளினிக்கு தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதினார். இலங்கை தமிழர் நல்வாழ்விற்காக காங்கிரஸ் பிரதமர்தான் 1000 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்" என்றார். மேலும் தொடர்ந்த அழகிரி, "இலங்கை தமிழர் நலனில் மற்ற சூப்பர் பவர்களுக்கோ, அண்டை நாடுகளுக்கோ நூறு சதவீதம் அக்கறை இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. ஆகவே இந்திய பிரதமரும், இலங்கை ஜனாதிபதியும் அமர்ந்து பேச வேண்டும். அதுதான் தீர்வுக்கு வழி. ஏனென்றால் இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க இந்தியா பாடுபட வேண்டும். "இந்திய அழுத்தத்தை" பயன்படுத்தி இலங்கை பிரச்சினையை தீர்க்க வேண்டும். அப்போதுதான் அங்கு தமிழர்கள் சிங்களவர்களுக்கு இணையாக வாழ முடியும்" என்று கூறியவர், "இலங்கை என்றுமே இந்தியாவுக்கு நட்பு நாடாக இருந்ததில்லை. அப்படியிருந்தால் எப்படி அவர்கள் ராஜீவ் காந்தி அங்கு சென்றபோது தாக்கியிருப்பார்கள்? அவர்கள் நமக்கு நண்பர்கள் என்றால் எப்படி இலங்கையில் வாழும் நம் தமிழ் சகோதரர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துவார்கள்" என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் தமிழக காங்கிரஸ் எம்.பி.யின் இந்த பேச்சு மற்ற கட்சிகளை எல்லாம் சற்று நேரம் யோசிக்க வைத்தது.

இப்படி இந்திய நாடாளுமன்றத்தில் நான்கு மணி நேரத்திற்கு மேல் இலங்கை தமிழர் பிரச்சினை விவாதிக்கப்பட்டது இப்போதுதான் முதல் முறையாக நடைபெற்றது. இது தி.மு.க. "டெசோ" அமைப்பின் மூலம் கொடுத்த அழுத்தத்தால் ஏற்பட்ட விளைவு என்று தமிழகத்தில் இதுவரை இலங்கை தமிழருக்காக போராடி வந்த வைகோ, சீமான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பாண்டியன் உள்ளிட்டோர் நினைக்கத் தொடங்கினார்கள். இந்த கட்டத்தில் தி.மு.க. சார்பில் 12ஆம் திகதி முழு அடைப்பிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. முழு அடைப்பை வெற்றிகரமாக்க வேண்டும் என்று தி.மு.க. சார்பில் தீவிர முயற்சிகள், பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் "பிஸ்கட்" சாப்பிடும் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் படம் மற்றும் பாலச்சந்திரன் சுட்டுக்கொல்லப்பட்ட படம் இரண்டையும் போட்டு நோட்டீஸ் அச்சடித்து வீடு வீடாக ஒவ்வொரு மாவட்டத்திலும் விநியோகிறார்கள். தெருப்பிரசாரங்கள் செய்கிறார்கள். இதனால் தமிழகத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இலங்கை தமிழர்களுக்கான ஆதரவு அலை தமிழகத்தில் "மீண்டும்" வீசத் தொடங்கியுள்ளது. தி.மு.க. அழைப்பு விடுத்துள்ள பந்தில் தமிழர்கள், தமிழ் ஆர்வளர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. போர்குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தீக்குளித்த "கடலூர் மணி" மாண்டு போக, அவரின் உடலிற்கு மலர்வளையம் வைத்த பழ.நெடுமாறன், "ஈழத்தமிழர்கள் விடயத்தில் அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்" என்ற கோரிக்கையை வைத்தார். இந்த கோரிக்கை வைத்த தினத்தன்றுதான் "தமிழக வேலைநிறுத்தம்" அறிவித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, "தமிழ் ஆர்வளர்கள் எல்லாம் இந்த பந்திற்கு கட்சி வித்தியாசமின்றி ஆதரவு தர வேண்டும்" என்று அழைப்பு விடுத்தார்.

இந்த அழைப்புக்கு உடனடியாக "காரசாரமாக" பதிலடி கொடுத்தது வைகோ. "நாங்கள் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பந்த் அறிவித்த போது தலைமைச் செயலாளரை (அப்போது தி.மு.க. ஆட்சி நடைபெற்றது) வைத்து எங்களுக்கு எல்லாம் கடிதம் எழுதி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தவர் இன்று பந்த் நடத்துகிறேன் என்று திசை திருப்பும் செயலில் ஈடுபடுகிறார். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக உலகமே திரண்டு ஆதரவு கொடுக்கின்ற நிலையில் இப்படி நாடகமாடுகிறார்" என்று அறிக்கை விட்டார் வைகோ. அடுத்ததாக, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இதே மாதிரி "திசை திருப்பம் செயல்" என்று தி.மு.க.வைச் சாடினார். இருவரும் பந்திற்கு எதிராக அறிக்கை விட்டார்கள். அதே நேரத்தில் பழ. நெடுமாறன் நேற்றுவரை அமைதியாக இருந்தார். இன்று "காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளிவந்து பந்தை நடத்துங்கள். பந்துக்கு ஆதரவு தருகிறோம்" என்று அறிவித்துள்ளார். ஆனால் தி.மு.க. தலைவர் கருணாநிதியோ இது பற்றியெல்லாம் கவலைப்படாமல் "காங்கிரஸ் அட்டாக்" கை தொடர்ந்தார். "அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்கும் முடிவை ஒரு நொடி கூட தாமதிக்காமல் மத்திய அரசு வெளியிட வேண்டும்" என்றார். பிறகு "காங்கிரஸும், இந்திய அரசும் இலங்கை தமிழர் பிரச்சினையில் வெவ்வேறு கருத்துக்களை கொண்டிருப்பது கவலையளிக்கிறது. இது போன்ற நிலைமையை மேலும் பொறுத்துக் கொண்டு மவுனமாக இருக்க இயலாத சூழ்நிலை நெருங்கிக் கொண்டிருக்கிறது" என்றார். "நம் இராணுவத்துடன் நிற்க வேண்டிய தளபதி எதிர் ராணுவத்தின் பக்கம் நின்று கொண்டு ஆலோசனை வழங்குவது போலிருக்கிறது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் பேட்டி" என்று கடுமையாக சாடினார். "பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு ஏற்படுத்தும்படி இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சரிடம் கூறியிருக்கிறேன்" என்று சல்மான் குர்ஷித் பேட்டியளித்ததற்கே இப்படியொரு சாட்டையடி பதிலை கொடுத்தார் தி.மு.க. தலைவர் கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியொரு பரபரப்பான சூழ்நிலையில்தான் லயோலா கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப்பட்டு சூடுபிடித்தது. அனைத்து தலைவர்களும் சென்று வாழ்த்தியதோடு மட்டுமல்லாமல், டெசோவின் சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன், சுப. வீரபாண்டியன், தொல் திருமாவளவன் ஆகியோர் உண்ணாவிரதப்பந்தலுக்கு சென்றார்கள். மாணவர்களிடம் பேசினார்கள். "நீங்கள் உடம்பை வருத்திக் கொண்டு உண்ணாவிரதம் இருக்க வேண்டாம். வேறு வழியான அறப்போராட்டங்களில் ஈடுபடலாம். உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள்" என்று கோரிக்கை வைத்தார்கள். அங்கு சென்ற தி.மு.க. எம்.பி. இளங்கோவனனுக்கு போராட்டக்காரர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் எம்.பி. தொல்திருமாவளவன் அவர்களை சமாதானம் செய்து, பிறகு அனைவருமே உண்ணாவிரதம் இருந்தோருடன் அமர்ந்து பேசினார்கள். இதற்கு முன்பு தி.மு.க. தலைவர் கருணாநிதி, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோர் "உண்ணாவிரத்ததை வாபஸ் வாங்கி விட்டு வேறு வழியான அறப்போராட்டங்களில் ஈடுபடுங்கள்" என்று மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்தே டெசோ உறுப்பினர்கள் மாணவர்களை சந்தித்தார்கள். அதேபோல் வேறு சில லயோலா கல்வி நிறுவன உயரதிகாரிகள், ஜெகத்கஸ்பர் போன்றோர் மூலம் இந்த உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சியும் மேற்கொண்டார்கள். ஆனால் மாணவர்கள் தரப்பில் அதற்கு ஆதரவு இல்லை. முழு அடைப்பு நடைபெறும் நேரத்தில் மாணவர்கள் உண்ணாவிரதமும் தொடர வேண்டியதில்லை என்பதே டெசோ உள்ளிட்ட தி.மு.க. தரப்பின் எண்ணமாக இருந்தது.

அதே நேரத்தில் வைகோ, சீமான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்ற தலைவர்கள் எல்லோருக்கும் முழு அடைப்பு முடியும் வரையாவது மாணவர்களின் உண்ணாவிரதம் தொடர வேண்டும் என்று விருப்பம். அதனால்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய செயலாளர் டி.ராஜாவே உண்ணாவிரதப் பந்தலுக்குச் சென்று "நாங்கள் வாழ்த்த வந்திருக்கிறோம்" என்று அறிவித்தார். மாணவர்களின் உண்ணாவிரதம் தொடரக்கூடாது என்பது டெசோவின் விருப்பம். ஆனால் அது தொடர வேண்டும். குறைந்த பட்சம் டெசோவின் முழு அடைப்பு முடியும் வரையாவது மாணவர்கள் போராட்டம் உச்சத்திற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் வைகோ உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் அடுத்தடுத்துச் சென்று வாழ்த்தி வந்தார்கள். அதற்கு தகுந்தாற் போல் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் உண்ணாவிரதப் பந்தலுக்கு போனால், அவர்களுக்கு எதிராக மட்டும் "குரல்" கொடுத்தார்கள். இதில் அதிகமாக வம்பில் மாட்டிக் கொண்டது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலுதான். "நானும் வாழ்த்தப் போகிறேன்" என்று அவரும் உண்ணாவிரதப் பந்தலுக்குப் போக, அங்கிருந்த மாணவர்கள், "நீ வராதே. காங்கிரஸ்காரர்கள் யாரும் வரக்கூடாது" என்று எதிர்த்துக் கோஷம் போட்டு கல்வீச்சிலும் ஈடுபட்டு விட்டார்கள். கல்வீச்சில் அவருடன் சென்ற முன்னாள் எம்.எல்.ஏ. தாமோதரனுக்கு மண்டை உடைந்தது. இந்த சர்ச்சைகளுக்கு இடையில், தமிழகமெங்கும் உள்ள கல்லூரி மாணவர்கள் ஆங்காங்கே இதே மாதிரி போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும் உண்ணாவிரதம் இருந்த லயோலா கல்லூரி மாணவர்கள் அறிவித்தார்கள்.

முன்பு இந்தி எதிர்ப்பு போராட்டம் உணர்ச்சி பூர்வமான போராட்டமாக மாறியதுபோல் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான மாணவர்கள் போராட்டமும் மாறி விடுமோ என்ற அச்ச உணர்வு காவல்துறைக்கு ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் "சட்டம்-ஒழுங்கை" நிலைநாட்ட மார்ச் 11ஆம் திகதி அதாவது ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு திடீரென்று 200 காவலர்கள் கொண்ட "பொலிஸ் படை" லயோலா கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்த பந்தலுக்குள் நுழைந்தது. திபுதிபுவென புகுந்த அந்த காவல்துறையினர் மாணவர்களை குண்டுக் கட்டாக தூக்கி சமூக நலக்கூடம் ஒன்றில் கொண்டு போய் அடைத்தார்கள். உண்ணாவிரதம் இருந்து உடல் நலம் குன்றிய மாணவர்களை மருத்துமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினார்கள். "எங்கள் போராட்டத்தை அராஜகமாக முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது காவல்துறை" என்று மாணவர்கள் தரப்பில் கோபம் கொப்பளித்தார்கள். தமிழகம் முழுவதும் "ப்ளாஷ் ஸ்டிரைக் போல்" ஆங்காங்கே, கல்லூரிகளில் மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்கள். குறிப்பாக சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் இப்படியொரு போராட்டத்தை அறிவித்தார்கள். பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் செய்தார்கள். லயோலா கல்லூரி மாணவர்களே, "கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும்" என்ற கோரிக்கையை முன் வைத்து, "உள்ளிருப்பு போராட்டம்" நடத்தினார்கள். வைகோவும் இந்த கைது நடவடிக்கையை கடுமையாக கண்டித்து "கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்" என்றார்.

தி.மு.க. வின் பந்திற்கு போட்டியாக தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டம் அரசுக்கும், உண்ணாவிரதம் இருந்தவர்களுக்கும் இடையிலான போட்டியாக மாறியது. பந்திற்கு "தமிழக அரசு ஆதரவு அளிக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. அதற்கு அரசு தரப்பில் எந்த பதிலும் சொல்லவில்லை. முதல்வர் ஜெயலலிதாவும் இந்த பந்த்திற்கு எதிரான கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கவே இந்த பந்த் என்று தி.மு.க. அறிவித்திருந்தாலும், இந்த பந்த் அறிவிப்பு அ.தி.மு.க.விற்கு விரிக்கப்பட்ட வலை. "பந்த் நடத்தக்கூடாது" என்றோ, "பந்த் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்" என்றோ தமிழக முதல்வர் அறிவித்தால், "பார் பார். இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழக அரசுக்கு எவ்வளவு அக்கறை பார்" என்று பிரசாரத்தை தொடக்கலாம் என்பதும் தி.மு.க.வின் வியூகங்களில் ஒன்று. ஆகவே அ.தி.மு.க. தலைமையிலான அரசு தி.மு.க. விரித்த அந்த வலையில் சிக்காமல் இருந்தது. ஆனால் லயோலா கல்லூரி மாணவர்கள் மீது எடுக்கப்பட்ட "திடீர் நடவடிக்கையால்" இலங்கை தமிழர்களுக்காக நடக்கும் போராட்டங்களை தமிழக அரசு நசுக்கப் பார்க்கிறது என்ற குற்றச்சாட்டிற்கு தமிழக அரசு ஆளாக வேண்டிய சூழல் உருவானது. இது தவிர, "பந்த்" நடத்த தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க. வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். ஆனால் உயர்நீதிமன்றமோ, "பந்தை தடை செய்ய முடியாது" என்று அறிவித்து விட்டது.

லயோலா கல்லூரி மாணவர்களை கைது செய்தது, பந்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்தது போன்ற விடயங்களை கையில் எடுத்துக் கொண்டு தி.மு.க. பிரசாரத்தை தொடக்கும் என்றே தெரிகிறது. இதன் மூலம் இலங்கை தமிழர் பிரச்சினையில் அ.தி.மு.க.வினருக்கு அக்கறை இல்லை என்ற பிரசாரத்தை மேற்கொள்ள வாய்ப்பு கிட்டியுள்ளது. அதே நேரத்தில் "லயோலா மாணவர்கள்" மீது எடுக்கப்பட்ட "கறார் நடவடிக்கை" மார்ச் 12ஆம் திகதி தி.மு.க.வினர் நடத்தும் பந்திற்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை. சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு செயல்பட தி.மு.க. எண்ணினால், அதன் மீது தகுந்த  நடவடிக்கைகளை பொலிஸ் எடுக்கும் என்பதை அறிவிப்பதும் இதன் பின்னணிகளில் ஒன்று. இதற்கிடையில் மாணவர்கள் போராட்டம் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே வெடிக்கவே, உடனடியாக லயோலா கல்லூரி மாணவர்களை சமாதானம் செய்யும் பணியில் அரசும், அந்த மாணவர்களை களத்தில் இறக்கி விட்டவர்களும் கடைசி கட்ட முயற்சிகளில் இறங்கினார்கள். அதைத் தொடர்ந்து "எங்கள் உண்ணாவிரதத்தையும், போராட்டத்தையும் முடித்துக் கொள்கிறோம்" என்று லயோலா கல்லூரி மாணவர்கள் அறிவித்துள்ளார்கள். மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள இந்த சமாதானம் நாளைய பந்தில் தி.மு.க. தரப்பு மேலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியிருக்கிறது. அதே நேரத்தில் ஆளும் அ.தி.மு.க.விற்கு இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பான போராட்டங்களை சமாளிப்பது இனிமேல் சவால் நிறைந்த காட்சிகளாகவே அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X