2026 மார்ச் 26, வியாழக்கிழமை

அரசாங்கம் குப்பி விளக்கையா வழங்கப்போகின்றது?

Lenin Raj   / 2026 மார்ச் 26 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு மத்தியில், முக்கிய நீர்மின் தேக்கங்கள் அமைந்துள்ள பகுதிகளில் போதிய மழை பெய்யாவிட்டால், இலங்கையில் மின்சார உற்பத்தியை மேற்கொள்வது கடினமான பணியாக அமையும் என நீர்மின் உற்பத்தி தொடர்பான பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் நீர்மின் உற்பத்தி, வெப்ப மின் உற்பத்தி, நிலக்கரி மற்றும் எரிபொருள் ஆகியவற்றின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. அடுத்தபடியாகப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியான காற்று, சூரியசக்தி, உயிர்த்திரள் மற்றும் சிறிய அளவிலான நீர்மின் திட்டங்கள் வாயிலாகவும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது.

சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, நாட்டின் மின்சார உற்பத்தியில் 59% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்தும், மீதமுள்ள 41% நிலக்கரி மற்றும் எரிபொருள் சார்ந்த வெப்ப மின் நிலையங்களிலிருந்தும் பெறப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது நாடு இரண்டு முக்கிய சவால்களை எதிர்நோக்க வேண்டிய சூழல் காணப்படுகின்றது. நாட்டின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையமான நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியானது, தரமான வெப்ப அளவீடுகளைக் கொண்டிருக்கவில்லை எனப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளதோடு, அது அந்த நிலையத்தின் உற்பத்தித் திறனைப் பாதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக, மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் அரசாங்கம் சிரமங்களை எதிர்நோக்கி வருகிறது.

"மழை பெய்தால், நாம் நீர்மின் உற்பத்தியில் தங்கியிருக்க முடியும். மழை இல்லையெனில், வெப்ப மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அதற்குத் தேவையான எரிபொருளை விநியோகிப்பதே பெரும் சவாலாகக் காணப்படுவதாக," இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

விக்டோரியா, கொத்மலை, ரந்தெனிகல, ரந்தெம்பே, சமனலவெவ, நோட்டன் பிரிட்ஜ் மற்றும் மேல் கொத்மலை ஆகிய நீர்த்தேக்கங்களிலிருந்து நாம் நீர் மூலமான மின் உற்பத்தியைப் பெற்றுக்கொள்கின்றோம். தற்போது நிலவி வரும் வறட்சியான காலநிலை காரணமாக, நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் குறைவடைந்துள்ளது. இந்த நிலையில் நீர்மின் உற்பத்தியின் அளவும் குறைந்துள்ளது.

இதேவேளை, முன்னாள் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இது குறித்துக் கூறுகையில், "நுரைச்சோலை மின் நிலையத்தில் பயன்படுத்தப்படும் தரமற்ற நிலக்கரி காரணமாக தேசிய மின் கட்டமைப்பிற்கு நாளொன்றுக்கு 130-160 மெகாவாட் இழப்பு ஏற்படுகிறது" எனக் குற்றம் சாட்டியுள்ளார். இதனை ஈடுகட்ட, அதிகச் செலவு கொண்ட எரிபொருள் மூலமான வெப்ப மின் உற்பத்தியை அரசாங்கம் நம்ப வேண்டியுள்ளதாகவும் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .