Editorial / 2025 ஒக்டோபர் 27 , பி.ப. 02:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

"அஸ்வெசும" சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்குத் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுக்கும்போது புதுப்பிக்கப்பட்ட மற்றும் துல்லியமான தரவுக் கட்டமைப்பு அவசியம் என உலக வங்கியின் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். இதற்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் சர்வதேச அனுபவத்தை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள், பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள், உலக வங்கியின் பிரதிநிதிகள், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் ஆகியோருக்கிடையில் பாராளுமன்றத்தில் கடந்த 22ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்திலேயே ‘அஸ்வெசும திட்டம்’ குறித்து இவ்வாறு கருத்துத் தெரிவிக்கப்பட்டது.
கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் (கலாநிதி) உபாலி பன்னிலகே, பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோரின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், உலக வங்கியின் சமூகப் பாதுகாப்புத் தொடர்பான சிரேஷ்ட பொருளாதார நிபுணர் பிரான்செஸ்கா லமன்னா (Francesca Lamanna) மற்றும் சிரேஷ்ட பாதுகாப்பு நிபுணர் ஸ்ரீனிவாஸ் வரதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சமூகப் பாதுகாப்புக்கான தரவுத்தளத்தை உருவாக்குவதன் மூலம், உண்மையிலேயே வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய தனிநபர்கள், குடும்பங்களை அடையாளம் காண முடியும் என உலக வங்கியின் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். பிரஜைகளின் தகவல்களை சமூகப் பாதுகாப்பு தரவுத்தளத்தில் உள்ளிடுவது அவர்களை அஸ்வெசும அல்லது பிற தொடர்புடைய சலுகைகளுக்கு தகுதியுடையவர்களாக மாற்றாது என்றும், உள்ளிடப்பட்ட தரவைச் சரிபார்க்க முடியும் என்றும், தொடர்புடைய சலுகைகளை துல்லியமாக அடையாளம் காண முடியும் என்றும் இந்தக் குழு வலியுறுத்தியது. இந்தச் சமூகப் பாதுகாப்பு அமைப்பு ஒரு நாட்டிற்கு ஒரு உற்பத்தி முதலீடாகும், எனவே தரவுத்தளத்தைப் புதுப்பிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினர்.
"அஸ்வெசும" சலுகைகளை வழங்குவதில் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். அதன்படி, கிராம ரீதியாக அமைக்கப்படும் குழுக்களின் மூலம் அஸ்வெசும பயனாளிகளைத் தேர்ந்தெடுத்து, சம்பந்தப்பட்ட கிராமத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளின் பெயர்களைக் காண்பிப்பதன் மூலம் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய முடியும் என உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
இங்கு கருத்துத் தெரிவித்த, "அஸ்வெசும" திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அலுவலர்களுக்கு இந்தத் திட்டம் குறித்து போதுமான தகவல்கள் இல்லாததால் சில தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களின் வகிபாகம் குறித்து முறையான தெளிவுபடுத்தல்களை வழங்குவதன் ஊடாக இத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தத் தாம் ஒத்துழைப்பு வழங்கிவருவதாகவும் தெரிவித்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உலக வங்கி ஆலோசகர் ஷாலிகா சுபசிங்க மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago