Editorial / 2026 ஏப்ரல் 09 , பி.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.சியாஜ்
இணையவழி நிதி மோசடி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட 152 வெளிநாட்டவர்களையும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கச் சிலாபம் மாவட்ட நீதிபதியும் நீதவானுமான ஜே. எஸ். டி. வீரசிங்க, வியாழக்கிழமை (09) அன்று உத்தரவிட்டார்.
சிலாபம் – அம்பகடவில பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த போதே இவர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கடந்த ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி மாலை கைது செய்யப்பட்டனர். சுமார் மூன்று மாதங்களாக அந்த விடுதியில் தங்கியிருந்த இவர்கள், தாம் உள்ளூர் வர்த்தகர்களுக்குப் பயிற்சித் திட்டங்களை நடத்துவதாக விடுதி நிர்வாகத்திடம் கூறி வந்துள்ளனர்.
சந்தேக நபர்கள் குறித்த விடுதியிலிருந்து கணினி ரீதியான குற்றங்களில் ஈடுபடுவதாகப் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டது. இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து 99 டெஸ்க்டாப் கணினிகள், 26 மடிக்கணினிகள் மற்றும் 259 கையடக்கத் தொலைபேசிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்களில் 131 சீனப் பிரஜைகள் (6 பெண்கள் உட்பட), 10 வியட்நாம் பிரஜைகள் (3 பெண்கள் உட்பட), தாய்வான் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் மற்றும் ஒரு மலேசியப் பிரஜையும் அடங்குவர். இவர்கள் அனைவரும் சுற்றுலா மற்றும் வர்த்தக விசாக்களின் அடிப்படையில் இலங்கைக்கு வந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 3ஆம் திகதி சிலாபம் மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள், வியாழக்கிழமை (09) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். நீதிமன்றம் இவர்களுக்குப் பிணை வழங்கிய போதிலும், பிணை நிபந்தனைகளை நிறைவேற்ற எவரும் முன்வராத காரணத்தால், அவர்கள் மீண்டும் சிறைச்சாலை அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டனர். பிணை நிபந்தனைகள் பூர்த்தியாகும் வரை இவர்களை வெலிசரையில் உள்ள வெளிநாட்டவர் தடுப்பு முகாமில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் எதிர்வரும் அக்டோபர் மாதம் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
26 minute ago
59 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
59 minute ago
3 hours ago
3 hours ago