2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு மோடிக்கு கடிதம்

George   / 2017 ஜனவரி 09 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 10 மீனவர்கள் உட்பட இலங்கை சிறைகளில் உள்ள 20 மீனவர்களையும்,  118 படகுகளையும் தாமதமின்றி விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடிதம் எழுத்தியுள்ளார்.

அதில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த 51 மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்த பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம், நேற்று இருவேறு சம்பவங்களில், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 6 மீனவர்களும், இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்களும் இலங்கைக் கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார் பன்னீர்செல்வம்.

கடந்த ஆண்டு மட்டும் 290 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாகவும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கையால் இவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மீனவர்கள் விடுவிக்கப்பட்டபோதிலும், அவர்களது படகுகளும், மீன்பிடி உபகரணங்களும் தொடர்ந்து இலங்கை வசமே இருந்து வருகின்றன - படகுகள் இல்லாமல் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள 118 படகுகளும் பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து வருகின்றன. எனவே, அவற்றைப் புதுப்பித்து மீனவர்களிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்று ஜெயலலிதா தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

இந்நிலையில், நேற்று பிடித்துச் செல்லப்பட்ட 10 மீனவர்கள் உட்பட இலங்கை சிறையில் உள்ள 20 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவு அமைச்சகத்துக்கு பிரதமர் உத்தரவிட வேண்டும்.

அந்நாட்டில் உள்ள தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 118 மீன்பிடி படகுகளையும் மேலும் காலதாமதமின்றி விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியபடி, ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு என தமிழகத்துக்கு ஆயிரத்து 650 கோடி இந்திய ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் ஓ. பன்னீர்செல்வம், தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .