2025 மே 20, செவ்வாய்க்கிழமை

இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து கூட்டமைப்பு பேச்சு

Gavitha   / 2015 நவம்பர் 03 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிகாரப் பகிர்வை அடிப்படையாகக் கொண்டு, தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வொன்றைக் காண்பது தொடர்பில் அரசாங்கத் தலைவர்களுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக அறிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதித் தலைவரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா, ஜனவரி 8ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலிலிருந்து, அரசாங்கத்துடன் தொடர்பில் காணப்படுவதாகத் தெரிவித்தார்.

அரசியலமைப்பு மாற்றங்கள் பற்றிக் கலந்துரையாடுவதற்காக எதிர்காலத்தில், நாடாளுமன்றமானது அரசியலமைப்புச் சபையாக மாற்றப்படுமெனத் தெரிவித்த அவர், இந்த விடயம் பற்றி ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடுவதற்காக அரசாங்கமானது, அனைத்துக் கட்சி மாநாடுகளை நடாத்தி வந்ததாகத் தெரிவித்தார்.

'நேரம் சரியாக வரும் போது, எங்களுடைய முன்மொழிவுகளை நாம் வெளிப்படுத்துவோம். சில காலங்களாகவே நாம், அரசாங்கத்துடன் பேசி வந்தோம்' என மாவை தெரிவித்தார்.

தங்களது முன்மொழிவுகளை, அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளின் செயற்குழுவிலும் இதுவரை சமர்ப்பித்திருக்கவில்லை என, அவர் இதன்போது தெரிவித்தார்.

'பல்வேறுபட்ட பிரேரணைகள், முன்னர் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. நடப்புச் சூழ்நிலையில், அவை பற்றி நாம் கலந்துரையாட முடியும். கடந்த அரசாங்கத்தின் போது, அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளின் செயற்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை எம்மிடமுள்ளது. வேறு செயற்குழுக்களும் காணப்பட்டன' என அவர் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில், அனைத்துக் கட்சி மாநாடொன்றுக்கு அழைப்பு விடுத்ததோடு, தங்களது முன்மொழிவுகளை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு கோரியிருந்தார்.

நாடாளுமன்றத்தில் 15 உறுப்பினர்களைக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பிரதான எதிர்க்கட்சியாக உள்ளதுடன், எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X