Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜூலை 29 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி திசாநாயக்கவையும் அவரது தூதுக்குழுவையும் மாலைதீவிற்கு வரவேற்பது எனக்குக் கிடைத்த பெரும் மரியாதை மற்றும் பாக்கியம் ஆகும். உங்கள் வருகை நமது நீண்டகால நட்பின் அடையாளம் என்பதோடு நமது பொதுவான நோக்கங்களை மீண்டும் உறுதிப்படுத்துவதோடு நமது இரு நாடுகளுக்கும் இடையிலான பிணைப்புகளை மேலும் வலுப்படுத்த ஒரு வாய்ப்பாகும். மாலைதீவும் இலங்கையும் இந்து சமுத்திரத்தினால் சூழப்பட்ட இரண்டு சகோதர நாடுகள்.
நமது வரலாறு சாட்சியமளிக்கும் விதமாக, நமது புராணக்கதைகள் பின்னிப் பிணைந்துள்ளதோடு பல நூற்றாண்டுகள் பழமையான நட்பை நாம் பகிர்ந்து கொள்கிறோம். ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் இரு நாடுகளுக்கும் இடையே முறையான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதன் மூலம் அந்த நெருங்கிய உறவுகள் மேலும் வளர்ச்சியடைந்தன.1965 ஜூலை 26 ஆம் திகதி மாலைதீவுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திய முதல் நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.
நாம் சுதந்திரத்தின் 60 ஆண்டுகளைக் கொண்டாடும் வேளையில், பரஸ்பர மரியாதை மற்றும் பொதுவான அபிலாஷைகளின் அடிப்படையில் நீரந்தர மற்றும் நீடித்த நட்பின் 60 ஆண்டுகளையும் கொண்டாடுகிறோம். மாலைதீவுக்கான உங்கள் விஜயம் நமது நெருங்கிய அண்டை நாடுகளுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்பதோடு நமது ஒத்துழைப்பின் நோக்கத்தை விரிவுபடுத்தும் என்று நான் நம்புகிறேன். இன்றைய எங்கள் கலந்துரையாடல்களில், ஜனாதிபதி திசாநாயக்கவும் நானும் வர்த்தகம், பாதுகாப்பு, கல்வி மற்றும் தொழில் பயிற்சி, இளைஞர்கள் மற்றும் விளையாட்டு, சுற்றுச்சூழல், மீன்பிடி மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து கவனம் செலுத்தினோம்.
இலங்கை அண்மையில் எதிர்கொண்ட பொருளாதார சவால்களை சமாளிப்பதில் அடைந்துள்ள முன்னேற்றத்திற்காக ஜனாதிபதி திசாநாயக்கவிற்குப் பாராட்டுத் தெரிவித்தேன். உங்கள் திறமையான தலைமைத்துவத்தின் கீழ், இலங்கை ஒரு வலுவான பொருளாதாரத்தை நோக்கி நகரும் என்று நாங்கள் நம்புகிறோம். இன்று பரிமாறிக்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் நமது நெருங்கிய உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான நமது பொதுவான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
பரஸ்பர சட்ட உதவிக்கான ஒப்பந்தம் சட்ட விடயங்களில் ஏற்படும் எந்தவொரு நடைமுறை தாமதங்களையும் தீர்க்க உதவும். மாலைதீவு வெளியுறவு சேவை நிறுவனம் (FOSIM) மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் நமது இராஜதந்திரிகளுக்கு பயிற்சி வாய்ப்புகள் மற்றும் திறன் மேம்பாட்டிற்கு வழி வகுக்கும். நமது இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை திறம்பட செயல்படுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் நாம் உடன்பாடு கண்டுள்ளோம்.
நமது மக்களுக்கு இடையேயான வலுவான உறவுகள், மாலைதீவு மற்றும் இலங்கை இடையேயான நெருங்கிய அண்டை நாடு உறவுகளுக்கு அடிப்படையாக அமைகின்றன. எங்கள் சந்திப்பின் போது, எங்கள் இரு நாட்டு மக்களுக்கு இடையிலான தொடர்புகளின் முக்கியத்துவத்தை நாங்கள் அடையாளங் கண்டதோடு இரு நாடுகளில் வாழும் எங்கள் சமூகங்கள் செய்த சாதகமான பங்களிப்புகளை அங்கீகரித்தோம். இலங்கையில் மாலைதீவைச் சேர்ந்த பெரிய குழுவுக்கு உபசரிப்பு வழங்கியது தொடர்பில் ஜனாதிபதிக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன்.
எங்கள் பிரஜைகளுக்கு தரமான தூதரக சேவைகளை வழங்குவதன் முக்கியத்துவத்தையும் நாங்கள் உடன்பாடு கண்டுள்ளோம். இலங்கையில் வசிக்கும் மாலைதீவு நாட்டினருக்கு ஒரு வருடத்திற்கு மருத்துவ மற்றும் வாழ்க்கைத் துணை விசாக்களை வழங்க இலங்கை அரசாங்கம் அண்மையில் எடுத்த முடிவுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.
இளைஞர் வலுவூட்டல் மற்றும் தொழில் பயிற்சியில் முதலீடு செய்வது எனது அரசாங்கத்தின் முன்னுரிமைகளில் ஒன்றாகும். இந்தத் துறையில் இலங்கையுடன் ஒத்துழைப்பதற்கான பாரிய மூலங்கள் இருப்பதை நாம் அடையாளங் கண்டுள்ளோம்.
இலங்கை கல்வியியலாளர்கள் கடந்த காலங்களில் மாலைதீவு கல்வித் துறைக்கு விலைமதிப்பற்ற பங்களிப்பைச் செய்துள்ளனர். உயர்கல்வி மற்றும் தொழில் பயிற்சிக்காக மாலைதீவு மாணவர்களுக்கு இலங்கை உகந்த இடமாக உள்ளது.
திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், அறிவுப் பகிர்வு முயற்சிகள் மற்றும் எங்கள் கல்வி நிறுவனங்களுக்கு இடையே நெருக்கமான ஒத்துழைப்பை உருவாக்க நாங்கள் உடன்பட்டுள்ளோம். மாலைதீவில் மனிதவள அபிவிருத்தியில் இலங்கை ஆற்றும் முக்கிய பங்கிற்காக இலங்கை மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். தீவு நாடுகளாக, மாலைதீவு மற்றும் இலங்கை இரண்டும் இந்துசமுத்திரத்தில், குறிப்பாக மீன்பிடித் துறையை பெரிதும் சார்ந்துள்ளன. குறிப்பாக, இது எங்கள் இரு நாடுகளிலும் உள்ள பலருக்கு பிரதான வருமான ஆதாரமாகும்.
சட்டவிரோத, அறிக்கையிடப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத மீன்பிடித்தலின் சவால்களை எதிர்கொள்வதற்கான எங்கள் பொதுவான உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்தினோம். நிலையான மீன்பிடி நடைமுறைகளை மேம்படுத்துவதில் அறிவு மற்றும் நிபுணத்துவத்தைப் பரிமாறிக்கொள்வது குறித்தும் ஆராய்ந்தோம். எங்கள் கடல்சார் வலயங்களின் பாதுகாப்பிற்காக மாலைதீவுகள் இலங்கையுடன் நெருக்கமான ஒத்துழைப்பைத் தொடர்ந்து பேணும். கூட்டுப் பயிற்சிகள், பல்வேறு திறன்கள் மற்றும் தொழில்முறை பயிற்சி மூலம் இலங்கை வழங்கும் தொடர்ச்சியான விலைமதிப்பற்ற ஆதரவிற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
எங்கள் கடல்சார் பாதுகாப்பு முகாமைத்துவத்தை வலுப்படுத்த மாலைதீவுகள் இலங்கையுடன் தொடர்ந்து பணியாற்றும். காலநிலை மாற்றம் என்பது எங்கள் இரு நாடுகளையும் பாதிக்கும் மற்றொரு முக்கிய பிரச்சினையாகும். இது அவசர, கூட்டு மற்றும் துணிச்சலான நடவடிக்கை தேவைப்படும் பொதுவான அச்சுறுத்தலாகும். பொதுவான முன்னெடுப்புகள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு மூலம் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்த எங்கள் அரசாங்கங்கள் எடுத்த முயற்சிகள் குறித்து நாங்கள் கருத்துப் பரிமாறிக் கொண்டோம்.
நெருங்கிய நண்பர்கள் மற்றும் அண்டை நாடுகளாக, மாலைதீவு மற்றும் இலங்கை சர்வதேச அரங்கில் நெருக்கமாக பணியாற்றியுள்ளன. இந்த கூட்டுச் செயற்பாட்டை மேலும் வலுப்படுத்தவும், பரஸ்பர சவால்களை நிவர்த்தி செய்ய பிராந்திய மற்றும் பலதரப்பு அரங்குகளில் நெருக்கமாக பணியாற்றவும் எங்கள் உறுதிப்பாட்டை ஜனாதிபதி திசாநாயக்கவும் நானும் மீண்டும் வலியுறுத்தினோம்.
மாலைதீவுக்கு உங்கள் தொடர்ச்சியான நட்பு, அசைக்க முடியாத ஆதரவு மற்றும் தாராள உதவிக்காக உங்களுக்கும், உங்கள் அரசாங்கத்திற்கும், இலங்கை மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இலங்கையுடன் இணைந்து நிற்பதற்கும் இரு நாடுகளின் செழிப்புக்காகப் பாடுபடுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்த இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துகிறேன். எதிர்காலத்தை நோக்கி நாம் பார்க்கும்போது, மாலைதீவு மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவுகள் தொடர்ந்து வலுப்பெறும் என்று நான் நம்புகிறேன்.
நாம் புவியியல் ரீதியாக ஒன்றுபட்டுள்ளோம், வரலாற்றால் பிணைக்கப்பட்டுள்ளோம், மேலும் இந்து சமுத்திரப் பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கான பொதுவான பார்வையால் உத்வேகம் பெற்றுள்ளோம்.
4 minute ago
28 minute ago
28 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
28 minute ago
28 minute ago
48 minute ago