2025 ஜூலை 07, திங்கட்கிழமை

‘கொரோனா மரணங்கள் 20,000 பதிவாகலாம்’

Niroshini   / 2021 மே 10 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனாவின் மூன்றாம் அலையைக் கட்டுப்படுத்தாவிடின், எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் 20,000க்கும் அதிகமான கொரோனா மரணங்கள் இலங்கையில் பதிவாகலாமென, ஐக்கிய அமெரிக்காவின் வொஷிங்டன் பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளதென முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

நாட்டின் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு, தெளிவான தீர்வொன்றை அரசாங்கம் எடுப்பது அவசியமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் வொஷிங்டன் பல்கலைக்கழகமானது, குறித்த தொற்றுத் தொடர்பில் ஆழமாக ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளது எனத் தெரிவித்த அவர், இலங்கையின் தற்​போதைய நிலை குறித்தும் இங்கு ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.

எனவே, குறித்த பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ள இவ்விடயம் தொடர்பில், இலங்கை அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். இத்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக தெளிவான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவும் வேண்டுமென வலியுறுத்தினார்.  

நெருக்கடி நிலைமைக்கு முகங்கொடுப்பதற்கு நாட்டில் எவ்விதத் தயார்படுத்தல்களும் இல்லையெனத் தெரிவித்த அவர், நாட்டில் ஏற்படும் மோசமான நிலையைத் தடுக்கும் பணியை அரசாங்கம் மேலும் தாமதப்படுத்துவதாகவே தெரிகிறது என்றார்.

​அதிக கொ​​ரோனா மரணங்கள் இடம்பெற்ற ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகள், கொரோனாவைக் கட்டுப்படுத்தியுள்ளமையை முன்னுதாரணமாகக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

குறித்த நாடுகள் கொரோனா தடுப்பூசியை வேகமாக ஏற்றியதன் காரணமாகவே, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தியுள்ளன என்றும் அதேபோல் இங்கிலாந்தும் ஜூன், ஜூலை மாதங்களில் பழைய நிலைக்குத் திரும்புமென நம்பப்படுவதாகவும் தெரிவித்தார்.

தடுப்பூசி விநியோகிக்கும் நடவடிக்கையில் தனியார் பிரிவினரையும் இணைத்துக்கொண்டு, விரும்பியவர்கள் விலைக்குப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தினால், நாட்டில் 70 சதவீதமானவர்கள் தடுப்பூசியை ஏற்றியிருப்பர் என்றார்.

சர்வதேச நாடுகள் பல இலங்கைக்கு தடுப்பூசியை விநியோகிக்க தயாராகவிருக்கின்றன. இலங்கைக்கான தூதுவர்கள் மற்றும் ஏனைய நாடுகளைப் பகைத்துக்கொள்ளாமல், இந்த விடயத்தில் உலக நாடுகளின் ஒத்துழைப்பைப் பெறுவது அவசியம் என்றார்.

இவ்வாறான  சந்தர்ப்பங்களில் எமக்கு அமெரிக்கா, சீனா, பிரித்தானியா, ரஷ்யா ஆகிய நாடுகளைப் போல உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஒத்துழைப்பும் அவசியம் என்றார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .