Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Simrith / 2025 செப்டெம்பர் 03 , பி.ப. 07:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
“ஒரு பொறுப்புமிக்க அரசாங்கம் என்ற வகையில், குழந்தைகளின் உரிமைகளை மேம்படுத்துவதற்கும் அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும் அரச நிதியைப் பயன்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும்.” - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
குழந்தைகளுக்கான நிதி ஒதுக்கீட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், “அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டம், குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சிறுவர்களின் உரிமைகள் மற்றும் நலனை உறுதிப்படுத்துவதற்கான ஒரு சக்திவாய்ந்த காரணியாகும். ஒரு பொறுப்புள்ள அரசாங்கமாக, குழந்தைகளின் உரிமைகளை மேம்படுத்துவதற்கும் அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும் பொது நிதியைப் பயன்படுத்துவதை நாம் உறுதிசெய்ய வேண்டும்,” எனத் தெரிவித்தார்.
கொழும்பில் NH Collection Hotel-லில் செப்டம்பர் 3 மற்றும் 4ஆம் திகதிகளில் நடைபெறும் “Financing What Matters: Strengthening Public Financial Management for Inclusive Social Outcomes for Children and Families” என்ற தலைப்பிலான பிராந்திய அறிவுப் பரிமாற்றத் திட்டத்தின் தொடக்க விழாவில் உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் UNICEF ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்ச்சி, ஆசியாவில் அரச நிதி மேலாண்மை, வரவுசெலவுத் திட்டம் மற்றும் செலவின மேலாண்மை ஆகியவை தொடர்பான கொள்கை வகுப்பாளர்களுக்கும் சர்வதேச பங்குதாரர்களுக்கும் இடையே அறிவைப் பரிமாறிக்கொள்வதற்கான ஒரு தளமாகச் செயல்படுகிறது.
தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், “நமது அனைத்து அரச கொள்கைகளும் குழந்தைகளின் மிக உயர்ந்த தேவைகளைப் பிரதிபலிக்கின்றன. நமது அரசாங்கம் குழந்தைகளை நமது பொறுப்புகளின் மையமாக வைத்திருக்கிறது. எனவே, அதிகமாகப் பாதிக்கப்படுகின்ற பிள்ளைகள் உள்ளிட்ட கூடுதலான இடர்களுக்கு முகம் கொடுத்திருக்கும் சிறுவர்களுக்கு ஏற்படும் பொருளாதாரத் தாக்கம் குறித்த விழிப்புணர்வுடன், அரச நிதி மேலாண்மையில் முன்னுரிமை கொடுத்துச் செயல்படுகிறோம்,” எனத் தெரிவித்தார்.
இதற்கமைய, 2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் குழந்தைகளை மையமாகக் கொண்ட பல நிதி உதவித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஆதரவற்ற குழந்தைகள் அல்லது பாதுகாவலரின் பராமரிப்பில் உள்ள குழந்தைகளுக்கு மாதாமாதம் ரூ. 5,000 உதவித்தொகை வழங்குதல். இதற்காக ஒரு பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 2,000 குழந்தையின் வங்கிக் கணக்கிலும், மீதி ரூ. 3,000 குழந்தையின் பராமரிப்பிற்காகவும் வழங்கப்படுகிறது.
அங்கீகரிக்கப்பட்ட 379 சிறுவர் இல்லங்களின் அடிப்படை வசதிகள், கட்டமைப்பு வசதிகள் மற்றும் மனிதவளத்தை மேம்படுத்துவதற்காக ரூ. 500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
18 வயது பூர்த்தியான பிறகு திருமண பந்தத்தில் இணையும் ஆதரவற்ற குழந்தைகளாக இருந்தவர்களுக்கு நீண்டகாலப் பாதுகாப்பு மற்றும் நிலையான வீட்டை அமைத்துக்கொள்வதற்கு நிதி உதவி வழங்குவதற்காக ஒரு பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட வேண்டிய ஆதரவற்ற குழந்தைகளுக்காக உகந்த போக்குவரத்து வசதியை ஏற்படுத்த 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
நரம்பியல் வளர்ச்சி குறைபாடுகளால் (உதாரணமாக autism) பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு Lady Ridgeway சிறுவர் மருத்துவமனையில் ஒரு சிறப்புச் சிகிச்சை பிரிவை அமைப்பதற்கு 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்தகைய குழந்தைகளின் ஆரம்பகால வளர்ச்சிக்காக, மாதிரி பகல்நேரப் பராமரிப்பு மையம் ஒன்றை அமைப்பதற்கு 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது, எனப் பிரதமர் தெரிவித்தார்.
இந்த வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடானது சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளுக்காக வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் வரலாற்றில் இதுவரை ஒதுக்கப்படாத மிகப்பெரிய ஒதுக்கீடாகும். பாதிப்புகளுக்கு உள்ளாகக்கூடிய குழந்தைகளைப் பாதுகாத்தல், குடும்பங்களைப் பலப்படுத்துதல், மற்றும் இலங்கையின் ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி, ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் மன அமைதி ஆகியவை கிடைப்பதை உறுதிசெய்வதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பைச் சுட்டிக்காட்டிய பிரதமர், “புத்தாக்கங்களை ஏற்றுக்கொண்டு, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகளைப் பெற்றுக்கொடுத்து, நிலையான தன்மையைக் குறியாகக் கொண்ட நிதிக் கொள்கைக்கமையச் செயல்படுவதன் மூலம், இன்றைய சவால்களை நாளைய வளர்ச்சி மற்றும் மறுசீரமைப்புக்கான வாய்ப்புகளாக மாற்றி அமைப்பதை நமது அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளது,” எனவும் அவர் மேலும் கூறினார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய UNICEF-இன் கிழக்காசிய மற்றும் பசிபிக் பிராந்திய துணை இயக்குனர் Myo Zin Nyunt, “தொழில்நுட்ப ஆலோசனைகள், பயிற்சி மற்றும் கொள்கை விவாதங்களுக்கான வாய்ப்புகளை வழங்குவதன் மூலம், இந்த வசதி இலங்கை போன்ற நாடுகளுக்குச் சிறந்த வரவுசெலவுத் திட்ட முடிவுகளை எடுக்கவும், சேவைகளை மிகவும் திறமையாக வழங்கவும், இளைஞர்கள் உட்பட நாட்டின் குடிமக்களை முடிவெடுக்கும் செயற்பாட்டில் ஈடுபடுத்தவும் உதவும்,” என குறிப்பிட்டார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான தூதுவர் Carmen Moreno உரையாற்றுகையில், சமூகத் துறைகளில் முதலீடு செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதோடு, இத்தகைய முதலீடுகள் இல்லாத சமூகங்கள் எதிர்காலச் சவால்களை எதிர்கொள்வது கடினம் எனக் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் ஐக்கிய நாடுகளின் தலைமை அலுவலகத்தின் தலைவர் Marc-André Franche, UNICEF-இன் இலங்கை பிரதிநிதி Emma Brigham, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, பேங்கொக் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய UNICEF பிராந்திய அலுவலகங்களின் அதிகாரிகள், மற்றும் இலங்கையின் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மூத்த அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு
2025.09.04
43 minute ago
48 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
48 minute ago
5 hours ago