2026 ஜனவரி 01, வியாழக்கிழமை

சம்பந்தன் பதவி விலக வேண்டும்:சுமந்திரன்

Simrith   / 2023 ஒக்டோபர் 25 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும்,  திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவருடைய முதுமையின் பொருட்டு  நடைடுறை அரசியலில் பங்களிப்புச் செய்யமுடியாதிருப்பதனால் அவர் தனது பதவியைத் துறக்க வேண்டுமென அக்கட்சியின் பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பகிரங்கமாக கோரியுள்ளார்.

288 பாராளுமன்ற நாட்களில் வெறுமனே 39 நாட்களில் தான் பாராளுமன்றத்துக்கு இரா.சம்பந்தன் வருகை தந்திருக்கின்றார் என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக பெறப்பட்டுள்ள தகவல்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

அதனடிப்படையில், அவருடைய வருகை வீதம் 13.6சதவீதமாக  உள்ளது. அவ்வாறான நிலையில் அவருக்கு பாராளுமன்ற சம்பளம்,  எரிபொருள், தொலைபேசி மற்றும் போக்குவரத்து கொடுப்பனவுகள் என மொத்தமாக 4இலட்சத்து 19ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

இதுமக்களின் வரிப்பணமாக உள்ளது. ஊழல் தடுப்புப் பற்றி பேசப்படுகின்ற இக் காலகட்டத்தில் இதுவொரு மாற்றுவடிவமாக அமைகின்றதா? என்று சுமந்திரன் தனியார் தொலைக்காட்சியொன்றில் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்ற வேளையில், வினவப்பட்டபோதே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

”சம்பந்தனின் முதுமை காரணமாக அவர் தொடர்ச்சியாக பாராளுமன்றத்துக்கு வருகை தரமுடியாதிருக்கின்றமை தொடர்பில் நாங்கள் கரிசனைகளைக் கொண்டிருக்கின்றோம். விசேடமாக நான் அந்த விடயத்தில் கரிசனைகளைக் கொண்டிருக்கின்றேன்.

அந்தவகையில் நான் ஒருவிடயத்தினை இந்தச் சந்தர்ப்பத்தில் பகிரங்கமாக தெரிவிக்க விரும்புகின்றேன். சில ஆண்டுகளுக்கு முன்னதாக அவரால் பாராளுமன்றத்துக்கு சமூகமளிக்க முடியாத நிலைமைகள் ஏற்பட ஆரம்பித்த சந்தர்ப்பத்தில் நான் சம்பந்தனிடத்திலேயே நேரடியாக பதவி விலகுமாறு கோரினேன். அதன்போது சம்பந்தன் அதனை நிராகரித்திருந்தார். அத்துடன், அவர் அதற்கான காரணத்தினையும் தெளிவு படுத்தினார். 

”2020ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின்போது திருகோணமலை மக்கள் தன்னை அந்த மாவட்டத்தின் முதலாம் நபராக தெரிவு செய்திருக்கின்றார்கள். அவர்கள் எனது உடல்நிலைமைகளை அறிந்தே தெரிவு செய்திருக்கின்றார்கள் ”  என்று குறிப்பிட்டார். அதனை சம்பந்தன் மீண்டும் நினைவு படுத்தினார்.

எனினும், திருகோணமலை மக்களை பிரதிநிதித்துவம் செய்து செயற்படத்தப்பட வேண்டிய பல விடயங்கள் உள்ளன. பிறிதொரு பிரதிநிதியை நாங்கள் நியமித்தாலும் அவர் முழுமையான செயற்பாடுகளை ஆற்றுவரா என்பது பற்றிய பல கரிசனைகள் உள்ளன.

எவ்வாறாயினும், சம்பந்தனின் முதுமை காரணமாக அவரால் செயற்பாட்டு ரீதியான விடயங்களை முன்னெடுக்க முடியாதுள்ளது. ஆகவே, அவர் பதவியைத் துறக்க வேண்டும் என்பது தான் எனது தனிப்பட்ட கருத்தாகவுள்ளது. அடுத்துவரும் காலத்தில் அதுதொடர்பான சில நடவடிக்கைளை எடுப்போம் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X