2026 ஜனவரி 28, புதன்கிழமை

சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

Janu   / 2026 ஜனவரி 28 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக நாட்டிற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

கடந்த 22 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தந்த இந்தப் பிரதிநிதிகள் குழு, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்களை நேரில் பார்வையிட்டதுடன், அனர்தங்களினால்  பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்தனர்.

இலங்கைப் பொருளாதாரம் சீரடைந்து வரும் நிலையில் ஏற்பட்ட இந்தப் பேரிடர் குறித்து தமது வருத்தத்தை தெரிவித்த பிரதிநிதிகள் குழு, சவால்களுக்கு மத்தியிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் உட்கட்டமைப்புகளை சீரமைக்கவும் அரசாங்கம் எடுத்த விரைவான நடவடிக்கைகளைப் பாராட்டினர்.அனர்த்தத்தின் போது அரசாங்கம் செயற்பட்ட விதம், தம்முடன் உரையாடிய பெரும்பாலான மக்களால் பாராட்டப்பட்டதாக இங்கு பிரதிநிதிகள் குழு சுட்டிக்காட்டியதுடன், இது அரசாங்கம் ஈட்டிய  முக்கியமான வெற்றியாகும் எனவும்  பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

அத்துடன், கடந்த ஆண்டில் அரசாங்கம் பேணிய உயர் நிதி ஒழுக்கம் இந்த சவாலை எதிர்கொள்வதில்  பிரதான காரணி என்று சுட்டிக்காட்டிய பிரதிநிதிகள் திறைசேரியில் மேலதிக நிதியை பேணியதாலே அதற்காக  அரசாங்கத்தினால் 500 பில்லியன் ரூபா மேலதிக நிதி ஒதுக்கீட்டை  சமர்ப்பிக்க  முடிந்துள்ளது எனவும் இது மிகவும் பாராட்டுக்குரிய  விடயம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

கடுமையான பேரிடர் நிலைமையிலும் கூட தற்பொழுது உரிய பொருளாதார திசையில் பயணிப்பதாக சுட்டிக்காட்டிய சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இலங்கையுடன் முன்னெடுக்கப்படும் நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் மேற்கொள்ளாமல், அதன் 6 வது தவணையை வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் மார்ச் மாதம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் மேலும் தெரிவித்தனர்.

இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இந்தப் பேரிடரால் வறுமையில் உள்ள கிராமப்புற மக்களே கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகவும் அவர்களின் வாழ்வாதாரத்துடன் நேரடியாக தொடர்புபடும் உட்கட்டமைப்பு வசதி மற்றும் வாழ்வாதாரம் பெரிதும் வீழ்ச்சியடைந்ததாகவும் இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, கிராமிய மக்களின்  அன்றாட வாழ்வை மீளக் கட்டியெழுப்புவதற்காக 500 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

இந்த நடவடிக்கைகள் எவ்வகையிலும் முறையான நிதி முகாமைத்துவத்திலிருந்து விலகி, பொறுப்பற்ற ஒரு பொறி முறையொன்றை முன்னெடுப்பதைக் குறிக்காது என்பதையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

  புள்ளிவிவரங்கள் மூலம் காட்டப்படும் பொருளாதார வெற்றிகள் உண்மையாகவே சாதாரண மக்களைச் சென்றடைவதை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் கடந்த கால பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட நிலைமைகளால் நீண்டகாலமாக பாதிக்கப்பட்டிருக்கும் இந்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி, அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் அனைத்தும் அந்த திசையிலேயே திட்டமிடப்பட்டுள்ளன என்றும், அதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதித் திட்டம்  தொடர்பான ஒப்பந்தத்தில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளாமல், அதனைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கு இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர்.

இந்தச் சந்திப்பில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். சர்வதேச நாணய நிதியத்தின் சார்பில் கிருஷ்ணா சீனிவாசன் (Krishna Srinivasan), சஞ்சய பாந்த் (Sanjaya Panth) உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X