2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ஜப்பானின் 11 திட்டங்கள் விரைவாக ஆரம்பிக்கப்படும்

Editorial   / 2024 செப்டெம்பர் 27 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பான் அரசாங்கத்தின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது இடைநடுவில் நிறுத்தப்பட்டிருக்கும் 11 திட்டங்கள் விரைவாக ஆரம்பிக்கப்படும். ஊழல் மற்றும் முறைகேடுகளை ஒழிப்பதற்கான புதிய அரசாங்கத்தின் திட்டத்திற்கு  ஜப்பான் முழு ஆதரவு அளிக்கப்படும் என உறுதியளித்துள்ளது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. 

 ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் முதன்மை  பணியாக கருதப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகளை இல்லாதொழிக்கும் வேலைத்திட்டத்திற்கு ஜப்பான் அரசாங்கம் முழு ஒத்துழைப்பு வழங்குவதோடு இலங்கையுடன் தொடர்ந்தும் நெருக்கமாக செயற்பட தயாராக இருப்பதாகவும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி (MIZUKOSHI Hideaki) தெரிவித்தார். 

ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை நேற்று (26) பிற்பகல் சந்தித்த போதே இதனைக் குறிப்பிட்டார்.

ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டு தற்போது இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள 11 திட்டங்கள் உடனடியாக ஆரம்பிக்கப்படும் எனவும் ஜப்பான் தூதுவர் உறுதியளித்தார். 

அதன்படி, கண்டி நகர நீர் முகாமைத்துவத் திட்டம், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அபிவிருத்தித் திட்டத்தின் இரண்டாம் கட்டம், தொலைக்காட்சி ஒலிபரப்பை டிஜிட்டல் மயமாக்கல், தேசிய ஒலிபரப்பு மற்றும் விநியோக வலையமைப்பு அபிவிருத்தித் திட்டம், அனுராதபுரம் வடக்கு நீர் திட்டத்தின் இரண்டாம் கட்டம், கிராம உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், களு கங்கை நீர் வழங்கல் திட்டம், சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவைகள் மேம்பாட்டுத் திட்டம் ஆகியன விரைவில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. 

அத்துடன், ஜப்பானிய உதவியின் கீழ் இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களில் இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் ஹபரண- வெயங்கொட மின் கடத்தல் வலயமைப்பு மற்றும் அனுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டம் என்பவற்றை நிறைவு செய்ய எதிர்பார்த்திருப்பதோடு, முழுமைப்படுத்தப்பட்டிருக்கும் களனி கங்கை புதிய பாலத்தின் நிர்மாணப் 

பணிகளுக்கான கொடுப்பனவுகளை நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி இதன்போது தெரிவித்தார். 

இந்நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் பிரதித் தலைவர் நயோக்கி கமோஷிடா மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரொஷான் கமகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X