2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

’தமிழர்களை அனுர அரசும் ஏமாற்றியுள்ளது’

Freelancer   / 2025 செப்டெம்பர் 24 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களை அனுரகுமார அரசு நம்ப வைத்து ஏமாற்றியுள்ளது தமிழ் மக்களின் நிலைமை முன்பு இருந்ததைவிட மோசமாக்கியுள்ளது என  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்  தெரிவித்தார்.

ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க, பதவியேற்று  ஒரு வருடம்  நிறைவடைந்துள்ள நிலையில், தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை .தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்குக் கூட எவ்வித தீர்வும் வழங்கப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார். 

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23) அன்று  இடம்பெற்ற   தேசியக் கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே  இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், ஜனாதிபதியின்  பதவிக் காலத்தில் ஒருவருடம் நிறைவடையும் போது,  ஒரு வருடத்தில் என்ன செய்தீர்கள் என்று எவரும் கேள்வி கேட்கக் கூடாது என்பதற்காகவே இம்மாதம் முதல் வாரத்தில் வடக்கு மற்றும்  ஏனைய மாகாணங்களில் அவசர அவசரமாக அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அவமானப்படக்  கூடாது என்பதற்காகவே அவசரமாக ஒருசில அபிவிருத்திகள் ஆரம்பிக்கப்பட்டன.

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும்  அடிப்படை பிரச்சினைக்கு  நிலையான தீர்வு வழங்குவதற்கு அரசாங்கம் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளைக் கூட மேற்கொள்ளவில்லை. காணி விடுவிப்பு பிரச்சினைக்குத் தீர்வு வழங்குவதாக அரசாங்கம் குறிப்பிட்டது. ஆனால், இதுவரையில் அந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் மேய்ச்சல் தரை பிரச்சினைக்கும் தீர்வு வழங்கப்படவில்லை. மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் பிரச்சினைக்குத் தீர்வு வழங்குவதற்கு இந்த அரசாங்கம் எவ்வித கலந்துரையாடலையும் மேற்கொள்ளவில்லை.அத்துமீறிய மேய்ச்சல்காரர்கள் எமது மக்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ளார்கள். இந்த பிரச்சினைக்கு வர்த்தமானி அறிவித்தல் ஊடாக தீர்வு காணுமாறு தொடர்ந்து கோரிக்கை விடுக்கிறோம்.

இராணுவ கட்டுப்பாட்டுக்குள் உள்ள காணிகளை விடுவிப்பதாக வாயால் உறுதி வழங்கப்படுகின்றது. ஆனால், செயலில் ஒன்றுமில்லை. வளவளத்துறை திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள  பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதாகச் சுற்றாடல் துறை அமைச்சர் வடக்குக்கு வந்து குறிப்பிட்டார்.மூன்று மாதங்கள் கடந்தும் எதுவும் நடக்கவில்லை என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .