Niroshini / 2021 மே 24 , மு.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
“தற்போது சமூக ஊடகங்களில் உலாவும் தமிழ் இல்லாத, சிங்களம், சீனம், ஆங்கிலம் ஆகிய மொழிகள் மட்டும் கொண்ட ஒரு பெயர்ப் பலகையின் படம், ஒரு வருடத்துக்கு முன்பே அகற்றப்பட்டு விட்டது என சீன தூதரகம் எனக்குத் தெரிவித்துள்ளது. எனினும் இதுபற்றி யோசித்துப் பார்த்தால், தமிழ் மொழியைப் புறக்கணிக்க சீனர்கள், இலங்கை அரசிடம்தான் பாடம் படித்துள்ளனர் போல் தெரிகிறது” என, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் குறிப்பிட்டுள்ள அவர், “சட்டத்துக்கு வரைவிலக்கணம் தரும் பொறுப்பைக் கொண்டிருக்கும் சட்ட மா அதிபர் திணைக்களத்தில், மொழிச் சட்டத்தை மீறும் வகையில், தமிழுக்கு பதில் சீன மொழியை எழுதி, திறன் நூலகத்தைச் சட்ட மா அதிபரே திறந்து வைக்கிறார். இப்போது, எமது எதிர்ப்புகளின் பின் அது மாற்றப்படுவதாக சொல்லப்படுகிறது. ஆனால், நடந்த குளறுபடிக்கு காரணம் யார், சட்ட மா அதிபர் திணைக்களமா, சீனத் தூதரகமா, இலங்கை அரசா?”எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
“எங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. இந்நிலை தொடருமானால், இலங்கை-சீன அரசுகளுக்கு எதிராக நாம் மொழிப் போராட்டத்தை கொழும்பு தெருக்களில், துறைமுக நகருக்குள்ளேயே சென்று ஆரம்பிக்க வேண்டிவரும் எனக் கூறிவைக்க விரும்புகிறேன்.
“தமிழ் மொழியை தவிர்ப்பதன் மூலம், சீனர்கள் நம் நாட்டின் மொழி சட்டத்தை மீறுகிறார்கள். சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளையும் தவிர்த்த சீன மொழி மட்டும் உள்ள பெயர் பலகைகளும் இந்நாட்டில் உள்ளன. நான் சீன தூதுவரை சந்தித்து இதுபற்றி விளக்கி கூறியுள்ளேன்.
“தற்போது துறைமுக நகர் நிர்வாகத்தில் பெரும் பங்கு வகிக்கப் போகும் சீன நிறுவனங்கள், இதுபற்றி மிக கவனமாக இருக்க வேண்டும் எனக் கூறினேன். சீன தூதரகத்தில் ஒரு தமிழ் மொழிப் பெயர்ப்பு பிரிவை அமைத்து, இலங்கை வரும் சீன நிறுவனங்களுக்கு பெயர் பலகைகளில் தமிழ் மொழியையும் எழுதும் விடயங்களில் ஒத்துழைப்பு வழங்கும்படி கூறினேன்” என்று, மனோ எம்.பி மேலும் தெரிவித்துள்ளார்.
19 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
35 minute ago